உணவின்றி அமையாது உலகு - 5

நம்முடைய அன்றாட வாழ்க்கையில் மிகப் பழகிய உணவு, பரோட்டா. இன்றைய நகரவாசிகள் முதல் கிராமத்து மக்கள் வரை பரோட்டாவைத் தவிர்த்து யோசிக்க முடியாத அளவுக்கு நம்மோடு ஒன்றிப்போய்விட்ட அசத்தல் டிபன் வகை.
தமிழகத்தின் பல பகுதிகளில் பரோட்டா என்பது கோதுமை மாவில் செய்யப்படும் பதார்த்தமாகவே இருந்துவந்தது. ஆனால், மைதாவில் தயாரிக்கப்படும் புதிய பரோட்டா வருகைக்குப் பின்பு, கோதுமையில் செய்யும் உணவு, கோதுமை ரொட்டியாக மாறிவிட்டது. நம் உணவுப்பழக்கத்தில் தவிர்க்க முடியாத அளவுக்கு இணைந்திருக்கிறது பரோட்டா.
மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் இன்று கால் பதிக்கத் துடிக்கும் மிக முக்கியமான, லாபகரமான தொழில் மருத்துவம். ஓர் அமெரிக்க நிறுவனம், ‘இந்தியாவில் எந்தவிதமான மருத்துவமனைகள் எதிர்காலத்தில் தேவை?’ என சர்வே செய்தது. எதிர்கால மருத்துவமனைகளின் தேவையை இப்போது எப்படிக் கணிக்க முடியும் என்கிறீர்களா?
ஒரு நகரத்தின் இன்றைய உணவுப்பழக்கத்தைவைத்து, எதிர்காலத்தில் எந்தவிதமான மருத்துவமனைகள் அங்கு தேவைப்படக்கூடும் என்பதைக் கணிக்கின்றன பன்னாட்டு நிறுவனங்கள். உதாரணமாக, நம் தமிழ்நாட்டின் இன்றைய வாழ்க்கைமுறையில் டாஸ்மாக் விற்பனை சிறப்பாக இருக்கிறது என்றால், அடுத்த 10 ஆண்டுகளில் கல்லீரல் சிறப்பு மருத்துவமனைகளின் தேவை, மிக அதிகமாக இருக்கப்போகிறது என்பதை அறிந்துகொள்ளலாம்.

இதுபோல, நம்முடைய அன்றாட உணவுப்பழக்கங்களைக் கொண்டு, நமக்கு எதிர்காலத்தில் தேவைப்படப்போகிற சிறப்பு மருத்துவமனைகளைப் பட்டியல் எடுத்துவிடலாம். அப்படி ஒரு பட்டியலை தயார் செய்துகொண்டு, முதலீட்டுக்கு ரெடியாக இருக்கின்றன பல பன்னாட்டு நிறுவனங்கள்.
இந்த அடிப்படையில் நம் உணவுப்பழக்கத்தை நாமே ஆராய்வோம். நம்முடைய இரவு உணவுகளில் ஆகப்பெரிய சதவிகிதத்தை பரோட்டாக்கள் பிடித்துக்கொண்டன என்பது நமக்குத் தெரியும். மிகச் சமீபமாக பல்வேறு ஊடகங்களிலும் மிக முக்கிய இடத்தை பரோட்டாக்கள் பிடித்துக்கொண்டாலும், மறுபடி மறுபடி அதன் விளைவுகளைப் பேச வேண்டிய அவசியம் இருக்கிறது.
கேரளாவில் பல அமைப்புகளால் நடத்தப்பட்ட பரோட்டா எதிர்ப்புப் போராட்டங்கள், இப்போது தமிழ்நாட்டில் கோவில்பட்டி பசுமை இயக்கம், கோவை பரோட்டா எதிர்ப்பு இயக்கம் எனப் பரவியிருக்கின்றன. மலையாளத் தொலைக்காட்சிகளின் விவாத அரங்குகளில் பல முறை பரோட்டா பற்றிய விவாதம் கிளம்பியிருக்கிறது.
கோதுமையிலிருந்து தோல் நீக்கப்பட்டு எஞ்சியுள்ள கழிவுப் பொருட்களால் மஞ்சள் நிற மைதா மாவு தயாராகிறது. இது நீண்ட காலமாகப் பசையாகப் பயன்படுத்தப்பட்டுவந்தது. தெற்காசிய நாடுகளில் கோதுமைக் கழிவுகளில் இருந்து மட்டும் அல்லாமல், மரவள்ளிக் கிழங்கிலிருந்தும் மைதா தயாரிக்கப்படுகிறது.
மைதாவை வெள்ளையாக்குவதற்காக பென்ஸாயில் பெராக்சைடு என்ற ரசாயனம் பயன்படுத்தப்படுகிறது. இந்த பென்சாயில் பெராக்சைடு பயன்படுத்தப்படும் மைதா போன்ற உணவுப் பொருட்களை இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள், சீனா ஆகியவை தடை செய்துள்ளன. ரசாயன மருந்துகள் அதனுடைய பக்கவிளைவு காரணமாக தடைசெய்யப்படுவது வழக்கம்தான். ஆனால், ஓர் உணவுப் பொருள் அதன் விளைவுகள் காரணமாக தடை செய்யப்படுகிறது என்றால், அதனுடைய பாதிப்புகளைப் புரிந்துகொள்ள வேண்டும்.
மைதாவில் இது மட்டும் பிரச்னை அல்ல. இதைவிட மிக முக்கியமான விஷயம் மைதா மாவை மிருதுவானதாக மாற்றப் பயன்படும் இன்னொரு ரசாயனம்தான். கோதுமை கெட்டியான மாவாக இருக்கிறது. அதிலிருந்து தயாரிக்கப்படும் மைதா எப்படி மென்மையாக இருக்கிறது? நமக்கு கோதுமை ரொட்டியைவிட மைதாவால் தயாரிக்கப்படும் நாண், பரோட்டா போன்ற பொருட்கள் பிடித்துப்போனதற்கு அதன் மென்மைதான் காரணம்.
இவ்வாறு, கெட்டியாக இருக்கும் மைதாவை மென்மையானதாக மாற்ற அலோக்சான் என்ற ரசாயனம் பயன்படுகிறது. அலாக்சான் எங்கு பயன்படுகிறது தெரியுமா? மருந்துகளைப் பரிசோதனை செய்யும் ஆய்வுக்கூடங்களில். அதை வைத்து அங்கு என்ன செய்கிறார்கள்?
ஆங்கில மருத்துவத்தில் ஒரு நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க வேண்டுமானால், விலங்குகளுக்கு அந்த நோயை வரவழைத்து, பின்பு மருந்து கொடுத்துப் பரிசோதிப்பார்கள். வலிக்கு மருந்து கண்டுபிடிக்க வேண்டுமென்றால் எலி, முயல் போன்ற விலங்குகளைக் காயப்படுத்தி அல்லது அவற்றுக்கு வலியை வரவழைத்து, அதற்குப் பிறகு மருந்துகளைக் கொடுத்து சோதனை செய்வார்கள்.

இந்த ஆய்வுக்கூடங்களில் எலிகளுக்கு சர்க்கரை நோயை வரவழைப்பதற்காக, ஒரு ரசாயனத்தைப் பயன்படுத்துகிறார்கள். அந்த ரசாயனம் எலிகளின் கணையத்தில் உள்ள இன்சுலின் சுரக்கும் செல்களை அழித்துவிடுகிறது. இன்சுலின் சுரப்பு படிப்படியாகக் குறைந்து எலிகள் ‘டயாபடிக் எலிகள்’ ஆக மாறுகின்றன. இவ்வாறு சர்க்கரை நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆய்வு செய்யப்படுகிறது. சர்க்கரை நோயை எலிகளுக்கு வரவழைக்கும் ரசாயனம்தான் அலோக்சான். நாம் இதே பொருளைப் பயன்படுத்தி மைதா மாவை மென்மையாக்குகிறோம்.
அலோக்சானின் ரசாயனப் பாதிப்புகளோடு தயாராகும் மைதா, ஏற்கெனவே உள்ள பென்சாயில் பெராக்சைடு நஞ்சோடு இணைந்து, நம் உடலைப் பதம்பார்க்கிறது. மைதா அறிமுகமான காலத்தில் முதல் இப்போது வரை நாள்தோறும் உயர்ந்துகொண்டிருக்கும் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கையில், மைதாவின் பங்கு மகத்தானது. பல நோய்களுக்கான காரணங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை. அவற்றில் ஒன்றுதான் சர்க்கரை நோய். உடலில் இன்சுலின் சுரக்கவில்லை அல்லது குறைவாகச் சுரக்கிறது என்பது சர்க்கரை நோய்க்குக் காரணம் என்று நமக்குத் தெரியும். ஆனால், இந்த இன்சுலின் ஏன் குறைந்துபோகிறது என்பது கண்டுபிடிக்கப்படவில்லை.
நம்முடைய அன்றாடப் பழக்கவழக்கங்களில், தினசரி உணவுகளில் கலந்துள்ள ரசாயனங்களை, நோய்க்காரணிகளை நாம் ஆய்வுக்கு உட்படுத்தாமல், எந்த ஆராய்ச்சியும் நிறைவு பெறப்போவது இல்லை. இவ்வளவு பிரச்னை உள்ள மைதாவை நாம் அப்படியே சாப்பிடுவது இல்லை. நாம் ஏற்கெனவே பார்த்த, உடல் நலத்தைக் கெடுக்கும் ரீஃபைண்டு ஆயிலோடு சேர்த்துத் தயாரிக்கிறோம். நச்சு ரசாயனங்களின் கூட்டணியை ஏற்படுத்துகிறோம்.
நம் உடலில் ஆரோக்கியத்தைச் சீர்குலைப்பதற்கு இதைவிட வேறு காரணங்கள் தேவையா என்ன?
பரோட்டாவுக்கு மாற்றாக, சிறுதானியங்களில் வகைவகையான ரொட்டிகளைச் செய்து தரலாம். கேழ்வரகு, கோதுமை போன்றவை ரொட்டி வகைகளுக்குச் சிறந்தவை. இவ்வளவு நாள் விளைவுகளை அறியாமல் பரோட்டாவைச் சாப்பிட்டுவந்திருக்கிறோம். ஆனாலும், நம் உடல் எதிர்ப்பு சக்தி்யால் நமக்கு ஒன்றும் ஆகவில்லை. இப்போது பரோட்டா பற்றி தெரிந்ததும் குழந்தைகள் சாப்பிடும் பரோட்டாவை அச்சுறுத்தி உடனடியாகப் பிடுங்கிவிடாமல், படிப்படியாக மாற்று உணவுகளை அறி்முகம் செய்து நிறுத்திவிடலாம். குழந்தைகள் உணவைப் பொறுத்தவரை, காய்ச்சல் வயிற்றுப்போக்கு போன்ற தொந்தரவுகள் ஏற்பட்டு, குழந்தைகள் அவற்றிலிருந்து குணமாகும்போது, உணவுமுறை மாற்றத்தைச் செய்வது, சிறப்பான பலன் தரும்.
- பயணம் தொடரும்
படங்கள்: எம்.விஜயகுமார்
மைதாவின் அறிமுகம்
பரோட்டா தயாரிக்கப்படும் மைதா மாவு 1930-களில்தான் அமெரிக்காவிலிருந்து அறிமுகமானது. அங்கு மைதாவின் பெயர் ‘பேஸ்ட்ரி பெளடர்.’ அதாவது பசைமாவு. ஒட்டும் பயன்பாட்டிலிருந்து மெள்ள மெள்ள உணவுப்பொருளாக மாறிய மைதா, சில ரசாயன சுத்திகரிப்புகளுக்குப் பிறகு, அழகான பொருளாக, பார்ப்போரை ஈர்க்கும்விதத்தில் பளிச்சென வெள்ளையானது.
உணவுப் பொருள் ப்ளீச்சிங்
இன்றைக்குப் பல உணவுப் பொருட்கள் ரீஃபைண்டு, ப்ளீச் செய்யப்படுகின்றன. இதற்கு, பலவகையான ப்ளீச்சிங் ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. நாகரிகமாகச் சொன்னால் அவற்றின் பெயர் ‘ப்ளீச்சிங் கெமிக்கல்’. புரியும்படி சொன்னால், ‘பினாயில்.’ எதைப் பயன்படுத்திக் கழிவறையைச் சுத்தம் செய்கிறோமோ, அதில் உள்ள ரசாயனப் பொருளோடு சேர்ந்ததுதான், எல்லா வெளுப்பான்களும். ‘பளிச்’ வெள்ளையோடு எந்தப் பொருள் இருந்தாலும், அது இந்த ப்ளீச்சிங் கெமிக்கலின் உதவியோடு வெளுக்கப்பட்டிருக்கிறது எனப் புரிந்துகொள்ளலாம்.