Published:Updated:

உணவின்றி அமையாது உலகு - 6

உணவின்றி அமையாது உலகு - 6

உணவின்றி அமையாது உலகு - 6

ம் தினசரி உணவுகளில் ஒன்றாக இருப்பது பால். பாலில் செய்யப்படும் கலப்படம் பற்றி இப்போது பேசப்போவது இல்லை. ஆனால், பால் பவுடர்கள் பற்றித் தெரிந்துகொள்வோம். பாலை, தினமும் நாம் எடுத்துக்கொள்வதுடன், குழந்தைகளுக்கு கட்டாயப்படுத்திக் கொடுப்பதன் காரணம்... அதில் இருப்பதாகக் கூறப்படும் கால்சியம் சத்து. பால் பொருட்களைப் பயன்படுத்தாமல் இருந்தால் கால்சியம் குறைவு ஏற்படும். அது ஏற்பட்டால், எலும்பு வளர்ச்சி, உறுதித்தன்மை உட்பட பல பாதிப்புகள் உருவாகும். குறிப்பாக, பெண்களுக்கு கால்சியம் குறைவால், 40 வயதுக்கு மேல் ஆஸ்டியோபொரோசிஸ் என்ற எலும்பு அடர்த்திக் குறைதல் பாதிப்பு ஏற்படும் என்றெல்லாம் கேள்விப்படுகிறோம்.

‘கால்சியம் சத்து குறைந்தால் இந்தப் பாதிப்புகள் ஏற்படும்’ என மருத்துவ உலகம் கூறுவது உண்மைதான். எந்த ஒரு பொருள் உடலில் கூடினாலும் குறைந்தாலும் பாதிப்பு ஏற்படும் என்பது அடிப்படை உண்மை. கால்சியம் குறைவைப் பற்றிப் பேசுபவர்கள், அதிகரித்தலைப் பற்றிப் பேசுவதே இல்லை. குழந்தைக்கு கால்சியம் குறைந்துவிட்டது என்றால் கம்பெனிகள் மருந்து விற்கலாம். கால்சியம் கூடுதல் என்றால் எப்படி மருந்து விற்க முடியும்? எனவேதான் மருந்து நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் அனைத்தும் சத்துக்குறைவை மட்டுமே பேசுகின்றன. நாமும் பால் பொருட்களை கிலோ கணக்கில் வாங்கி வாங்கி குழந்தைகளுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

உணவின்றி அமையாது உலகு - 6

அமெரிக்காவில் 2003-ம் ஆண்டு ஐந்து மருத்துவர்களைக் கொண்ட குழு ஒன்று டாக்டர் கேரி நல் தலைமையில் ஆய்வு மேற்கொண்டது. அதில், சத்துப்பொருட்களால் ஏற்படும் மரணம் பற்றிய ஆய்வும் செய்யப்பட்டது. அதன் முடிவு என்ன தெரியுமா?

கடந்த 10 ஆண்டுகளில், தவறான சத்துப் பிரயோகங்களால் மரணம் அடைந்தோர் மட்டும் 10 லட்சத்து 9,000 பேர். இதில் சத்துக் கூடுதலால் நிகழ்ந்த மரணங்களும் அடக்கம். இந்த ஆய்வுக்குப் பின்னால், சத்துக்கள் குறித்த பல்வேறு ஆய்வுகள் நடந்துகொண்டு இருக்கின்றன. அவற்றில் முக்கியமான இரண்டு ஆய்வுகள், மார்ச் 2003-ம் ஆண்டில் வெளியான ‘பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல்’ ஆய்வும், 2005-ம் ஆண்டு ஏப்ரலில் வெளியான ‘லேன்செட்’ ஆய்வும்தான்.

இந்த ஆய்வுகள் ஹார்வார்டு நர்ஸுகள் 78,000 பேரைப் பயன்படுத்தி, 12 ஆண்டுகளாகச் செய்யப்பட்டன. இந்த ஆய்வுகளின் முடிவு என்ன தெரியுமா?

கால்சியம் கிடைக்க வேண்டும் என, அளவுக்கு அதிகமாக நாம் குடிக்கும் இயற்கை மற்றும் செயற்கைப் பாலால்,  எலும்புகளில் வளர்ச்சிக் குறைவும், ஆஸ்டியோபொரோசிஸ் பாதிப்பும் ஏற்படுகிறதாம். எந்த நோய் வரும் எனக் கூறி நம்மைப் பால் பொருட்களை வாங்கவைத்தார்களோ, அதே நோய்கள் பால் பொருட்களைக் கூடுதலாகப் பயன்படுத்தினாலும் ஏற்படும்.

கால்சியம் குறைந்த நபர்களுக்குச் செயற்கையான சத்துப்பொருட்களை, பால் பவுடரைக் கொடுக்கும்போது செயற்கை கால்சியம் அதிகமாகிறது. இவை, உடலுக்குப் பயன்படுமா என்பதே இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இவை ஆய்வுக்கூடங்களில் செயற்கையாகத் தயாரிக்கப்படும் ரசாயனம் என்பதை மனதில்கொள்ள வேண்டும். உடலே தனக்குத் தேவையான கால்சியத்தைத் தயாரித்துக்கொள்ளுமானால்... நாம் வெளியில் இருந்து செயற்கைச் சத்துக்களை அள்ளி உள்ளே கொட்டினால் உடல் என்ன ஆகும்?

உணவின்றி அமையாது உலகு - 6

சரி... கால்சியத்தை விடுங்கள். ‘நாங்கள் கால்சியத்துக்காக குழந்தைகளுக்குப் பால் கொடுக்கவில்லை. உணவாகத்தான் பால்பவுடர்களைப் பயன்படுத்துகிறோம்’ எனச் சொல்பவரா நீங்கள்?

பால்பவுடர்களில் ‘மெலமைன்’ என்ற நச்சுப்பொருள் கலந்துள்ளது. பாலை, செயற்கைமுறையில் பவுடராகத் தயாரிக்கும்போது ‘மெலமைன்’ அதில் இருந்தே தீரும். அதனால் உலக அரசாங்கங்கள் ‘மெலமைன்’ அளவுக்குக் கட்டுப்பாடு விதித்துள்ளன. 2009-ம் ஆண்டு சீனாவில் விற்கப்படும் பால் பவுடர் கள் சோதனை செய்யப்பட்டன. அவற்றில், ‘மெலமைன்’, நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட மிக அதிகமாக இருப்பதைக் கண்டுபிடித்தார்கள். உடனே சீனா, பல பால் பவுடர் கம்பெனிகளைத் தடைசெய்தது.

திடீரென சீன அரசு ஏன் பால் பவுடர்களை ஆய்வு செய்தது? 2008 - 09-ம் ஆண்டுகளில் சீனக் குழந்தைகள் நூற்றுக்கணக்கில் மருத்துவமனைக்கு வந்தன. அந்தக் குழந்தைகளுக்குச் சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருந்தது. டயாலிசிஸ் என்ற செயற்கைச் சுத்திகரிப்பு செய்யும் அளவுக்கும், சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்யும் அளவுக்கும் குழந்தைகளின் சிறுநீரகங்கள் பழுதடைந்துபோனதாக, சீன மருத்துவர்கள் அரசுக்கு அறிவித்தார்கள். அந்த சிறுநீரகப் பாதிப்பு ஏன் ஏற்பட்டது என ஆய்வு செய்தபோதுதான் ‘மெலமைன்’ அதிக அளவு இருந்ததைக் கண்டறிந்தார்கள்.

எந்த கம்பெனி பால் பவுடர்களைச் சீன அரசு தடை செய்ததோ, அதே கம்பெனி இந்தியாவில் தன்னுடைய விளம்பரங்களையும், விற்பனையையும் நிறுத்தவே இல்லை. 1980-களில் அதே நிறுவனம் பாகிஸ்தானில் தடை செய்யப்பட்டிருந்தபோதும் இந்தியாவில் அதன் பால் பவுடர் விற்பனை அமோகமாக இருந்தது. இப்போதும் இருக்கிறது.

அந்த கம்பெனி எது எனத் தெரிந்துகொள்வதைவிட செயற்கைப் பால் பவுடர்கள் பற்றிய எச்சரிக்கைதான் நமக்கு முக்கியம். முடிந்தவரை செயற்கையான பாலைத் தவிர்ப்பதுதான் நல்லது. ஏனெனில், செயற்கையான சத்துக்களால் ஒருபோதும் இயற்கையான கால்சியத்தைக் கொடுத்துவிட முடியாது.

- பயணம் தொடரும்

• குழந்தைகளுக்கான பிரத்யேகமான உணவு, தாய்ப்பால்தான். அதற்கு மாற்று என்று எதுவும் இல்லை.

உணவின்றி அமையாது உலகு - 6

குழந்தைகளுக்கு பல் முளைக்கும் வரை தாய்ப்பால் கட்டாயம் தர வேண்டும். பல் முளைப்பதே குழந்தையின் உடல் திடப் பொருள் சாப்பிடத் தயார் என்பதை அறிவிப்பதற்குத்தான். கொஞ்சம் கொஞ்சமாகத் தாய்ப்பாலைக் குறைத்து, பிற திரவ வடிவ உணவுகளைக் கொடுத்து, பின்பு திட உணவுகளைச் சேர்க்கலாம்.

• தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு என்ன செய்வது? வேறு வழி இல்லை... பசும்பால்தான் தர வேண்டும். ஆனால், பசும்பாலில் அதிக அளவு தண்ணீர் கலந்து, நீர்த்த நிலையில் தருவது நல்லது.

• குழந்தையின் நான்காம் மாதத்துக்குப் பின், லேசான அளவில் உப்பு, இனிப்பு சேர்க்கப்பட்ட சூப்களையும், சிறுதானியக் கஞ்சிகளையும் தயாரித்துக் கொடுத்துப் பழக்கலாம். குழந்தைகளுக்குப் புதிய உணவை அறிமுகம் செய்யும்போது, பல புதிய உணவுகளை ஒரே நாளில் கொடுத்துவிடக் கூடாது. புதிய உணவை அறிமுகம் செய்யும்போது, அதனைச் செரித்து, ஆற்றலாக மாற்றுவதற்கு குழந்தையின் உடல் தன்னைத் தகவமைத்துக்கொள்ள நேரம் தேவைப்படும்.