உணவின்றி அமையாது உலகு - 7

பால் பவுடரில் இருக்கும் மெலமைன் பற்றியும், அதன் பாதிப்புகள் பற்றியும் பார்த்தோம். இப்போது, பாக்கெட் பால் பற்றி பார்க்கலாம்.
பால், குளிர்ச்சியான பொருள். உடலுக்கு கால்சியம் சத்தை வழங்கும் என்ற கருத்து பரவலாக நம்மைச் சுற்றிப் பரப்பப்பட்டுள்ளது. பாலில் கால்சியம் சத்து இருப்பது உண்மைதான். அது உடலில் சென்று சேர்கிறதா என்று எவ்வாறு அறிவது?
நம்முடைய உடலில் ஒரு சத்துப் பற்றாக்குறை இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த குறிப்பிட்ட சத்தைச் சாப்பிடுமாறு மருத்துவர் நம்மைப் பரிந்துரைக்கிறார். எவ்வளவு நாள் சாப்பிட வேண்டும் என்பதையும், என்ன அளவு சாப்பிட வேண்டும் என்பதையும் அவர் பரிந்துரைப்பார் அல்லவா? அல்லது அந்த சத்துப்பொருளை நாம் உயிரோடு இருக்கும் காலம் வரை சாப்பிட்டுவர வேண்டுமா... குறைவான சத்து, சரியான அளவுக்கு வந்தவுடன் சாப்பிடுவதை நிறுத்திவிடலாம் அல்லவா?

நாம் சத்துக்காக சாப்பிடும் எந்த உணவுக்காவது இப்படி அளவுமுறைகள் உண்டா? கால்சியம் சத்துள்ள பால் பவுடரை அல்லது சத்து பானத்தை குழந்தையில் இருந்து கொடுத்து வருகிறோம். தொலைக்காட்சி விளம்பரங்கள் சொல்கிற அடிப்படையில் குழந்தைகளுக்கு ஒரு சத்து பானம், டீன் ஏஜ் உள்ளவர்களுக்கு ஒரு சத்து பானம், பெண்களுக்குத் தனி சத்து பானம், கர்ப்பமாக இருக்கும்போது ஒரு சத்து பானம், வயதானவர்களுக்கு ஒரு சத்து பானம் என வாழ்நாள் முழுவதும் ஏதாவது ஒரு சத்து பானத்தைச் சாப்பிட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.
நாம் பிறந்ததில் இருந்து குறைவாக இருக்கும் சத்து, நாம் சாகும் வரைக்கும் குறைந்தேதான் இருக்கும் என்று கம்பெனிகள் சொல்கின்றன. அவர்களுடைய சத்து பானங்களின் விற்பனைக்காகச் சொல்லப்படும் பொய்க்கும் அறிவியலுக்கும் சம்பந்தமே இல்லை.
உண்மையிலேயே, கால்சியம் குறைந்துபோனால், கால்சியம் உள்ள உணவைச் சாப்பிட்டுத்தான் அதைப் பெற முடியுமா... அறிவியல் என்ன சொல்கிறது?
1940--களில் ஃபிரான்சில் வாழ்ந்தவர் விஞ்ஞானி லூயி கேர்வரான். மனிதன் கால்சியத்துக்காகப் பாலைப் பயன்படுத்துகிறான் என்றால் பால் தரும் மாடு, கால்சியத்தை எங்கிருந்து பெறுகிறது? என்பதுதான் கேர்வரானின் கேள்வி. மாடு தன்னுடைய உணவான புல்லில் இருந்து மக்னீசியத்தைத்தான் பெறுகிறது. கால்சியத்தை நேரடியாகப் பெறுவது இல்லை. மாட்டுக்கு எந்த மருத்துவரும் கால்சியம் உணவுகளைப் பரிந்துரைப்பது இல்லை. கால்சியத்தை உணவாகச் சாப்பிடாத மாடு, லிட்டர் லிட்டராக கால்சியத்தை உருவாக்குகிறது. இது எப்படி சாத்தியம்?
தனக்குத் தேவையான எல்லா சத்துக்களையும் உணவில் இருந்து உடலே உருவாக்கிக்கொள்கிறது. மாடு மக்னீசியத்தை கால்சியமாக மாற்றிக்கொள்கிறது. கோழி தன்னுடைய உணவான மைக்காவில் இருந்து, கால்சியத்தை உருமாற்றிப் பெற்றுக்கொள்கிறது. எந்த உயிரினமும் சத்து தேவை என்று நேரடியாகச் சத்துக்களை உண்பது இல்லை.

இப்படித்தான் கால்சியமும். கால்சியத்துக்காகப் பாலைக் குடிக்க வேண்டியது இல்லை. நம்முடைய உணவில் உயிர் சக்தி இருந்தால் போதும். அது எல்லா சத்துக்களையும் உருவாக்கும்.
நம்முடைய உணவுகளில் உயிராற்றல் இருப்பதுதான் முக்கியமே தவிர, சத்துக்கள் இருக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. உயிராற்றலில் இருந்து தேவையான சத்துக்கள் உருவாகும். நாம் பாக்கெட் பாலை கெட்டியாக இருப்பதால் பயன்படுத்துகிறோம். ஆனால், பாலில் எத்தனை சதவிகிதம் தண்ணீர் இருக்கிறது தெரியுமா? 87 சதவிகிதம் தண்ணீரும், 13 சதவிகிதம் இதரப் பொருட்களும் இருப்பதுதான் பால். இயற்கையின் இந்த விகிதத்துக்கு மாற்றாக, கெட்டியான பால் வேண்டும் என நாம் விரும்புகிறோம். கம்பெனிகள் கெட்டியான பாலை தயாரித்துத் தருகின்றன.
பால் பண்ணைகளில் இருந்து பெறப்படும் பால் முதலில் மொத்தமாகச் சேமிக்கப்பட்டு, அதில் இருந்து கொழுப்பு பிரிக்கப்படுகிறது. பின்பு, கொழுப்பு நீக்கப்பட்ட பாலினை உடைத்து, இயந்திரத்தின் மூலம் கலக்குகிறார்கள். அதன் பிறகு, பாலின் தரத்துக்கு ஏற்றவாறு அதன் கெட்டித்தன்மையை அதிகரிக்க, தேவையான அளவுக்குக் கொழுப்பு அல்லது கொழுப்பு பவுடரை கலக்குகிறார்கள். புரதத்தின் அளவைக் கூட்டவும், கொழுப்பின் அளவைக் கூட்டவும் இப்படிச் செய்கிறார்கள். இது வழக்கமானமுறை.
சில நிறுவனங்கள் பாலில் ஸ்டார்ச், மைதா மாவு, குளுக்கோஸ், மரவள்ளிக்கிழங்கு மாவு, ஜவ்வரிசி போன்ற பொருட்களைக் கெட்டியாக மாற்றுவதற்காகக் கலக்கின்றனர். பால் கெடாமல் இருக்க, அமோனியா, சோடியம் ஹைட்ராக்ஸைடு, கார்பன் டிரை ஆக்ஸைடு, பொட்டாசியம் ஹைட்ராக்ஸைடு போன்றவற்றில் ஏதாவது ஒன்றைச் சேர்க்கிறார்கள். யூரியாவில் அமோனியா இருப்பதாலும், மிக எளிதாகக் கிடைப்பதாலும், சிறு வியாபாரிகள் பலரும் இதனைச் சேர்க்கிறார்கள்.
மிக அதிகமான குளிர்ச்சிக்கு உட்படுத்துதல், கிருமிகளை நீக்குதல், செயற்கைச் சுவையை அதிகரித்தல் எனப் பல நிலைகளைக் கடந்து பால், பாக்கெட்டில் அடைக்கப்படுகிறது. பாலின் இயற்கையான உயிராற்றல் ரசாயனக் கலப்பாலும், இயற்கைத்தன்மை மாற்றத்தாலும் பாதிப்படைகிறது.

இதுவரை நாம் பார்த்த நடைமுறைகள் எல்லாம் நியாயமான பால் தயாரிப்பு நிறுவனங்களில் வழக்கமான தயாரிப்பு முறை. இப்போது புதிதாக `செயற்கைப்பால்’ எனப்படும் `சிந்தட்டிக் மில்க்’ தயாரிக்கப்படுகிறது. சிந்தடிக் மில்க் என்பதை நாம் ஆராய்ந்து பார்த்து கண்டுபிடித்துவிட முடியாது. அந்த அளவுக்கு இதன் தயாரிப்பு உத்திகள் உள்ளன. வேதியியல் பரிசோதனைக்கூடங்கள் மட்டுமே செயற்கைப் பாலைக் கண்டுபிடிக்க முடியும். செயற்கைப் பால் தயாரிப்பதற்கு, மாடு அல்லது மாட்டில் இருந்து பெறப்பட்ட பால் இரண்டுமே தேவை இல்லை.
இது மாதிரியான செயற்கைப் பால் என்பது எல்லாம் மேலை நாடுகளில்தான் சாத்தியம். நம் நாட்டில் எல்லாம் இது மாதிரியான தயாரிப்புகள் வரவில்லை என்று நம்புபவரா நீங்கள்? இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் புள்ளிவிவரத்தைப் பார்க்கலாமா?
சத்தீஸ்கர், பீகார், மேற்குவங்கம், ஒடிசா, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் 100 சதவிகிதம் செயற்கைப் பால் புழங்குகிறது. குஜராத் – 89 சதவிகிதம், பஞ்சாப் 81 சதவிகிதம், ராஜஸ்தான் – 76 சதவிகிதம், டெல்லி – 70 சதவிகிதம், மகராஷ்டிரா – 65 சதவிகிதம் என்ற விகிதங்களில் செயற்கைப் பால் விற்பனையில் உள்ளது. தமிழ்நாட்டில் முழுமையான ஆய்வுகள் இன்னும் நடைபெறவில்லை.
சிந்தட்டிக் மில்க் எனப்படும் செயற்கைப் பால் எப்படித் தயாரிக்கப்படுகிறது என்பதை அடுத்த இதழில் பார்க்கலாமா?
- பயணம் தொடரும்