உணவின்றி அமையாது உலகு - 8

இந்தியாவுக்கு வந்திருக்கும் நவீன ஆபத்தின் பெயர்தான் `சிந்தட்டிக் மில்க்.’ இதனை செயற்கைப் பால் என்று சொல்வதைவிட, நச்சுப்பால் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். இந்தியாவில் உள்ள ஓர் அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கைத் தொடர்ந்தது. குழந்தைகளின் அடிப்படை உணவான பாலில் ரசாயனப்பொருட்கள் கலப்பது தொடர்பாக மத்திய அரசு கவனிக்க வேண்டும் என்றும், அது குறித்த விழிப்புஉணர்வை ‘உணவுப் பாதுகாப்பு அமைப்பு’ ஏற்படுத்த வேண்டும் என்றும் கோரியிருந்தது. 2012-ம் ஆண்டு, மே மாதம் உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு உணவுப் பாதுகாப்பு குறித்த கேள்வியை எழுப்பியது. மத்திய அரசின் சார்பாக ஆஜரான வழக்குரைஞர் “உணவுப் பாதுகாப்பு மற்றும் கலப்படத் தடுப்பு என்பது, மாநில அரசுகளின் பிரச்னை. இதில், மத்திய அரசு செய்வதற்கு ஒன்றும் இல்லை” என்று நீதிமன்றத்தை மாநிலங்களின் பக்கம் திருப்பிவிட்டார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற கணக்கெடுப்பில்தான் எந்த அளவுக்கு சிந்தட்டிக் பால் பயன்படுத்தப்படுகிறது என்ற விவரம் வெளியானது.

அப்படி என்னதான் இருக்கிறது இந்த சிந்தட்டிக் பாலில்?
வாஷிங் மெஷின் போன்ற டிரம்மில், வெந்நீருடன் காஸ்டிக் சோடாவையும் யூரியாவையும் கலக்கிறார்கள். டிரம்மை வேகமாகச் சுழலவைக்கும்போது, அதில் இருந்து நுரை பொங்கி வரும். இப்போது, டிடெர்ஜென்ட் பவுடர், ஷாம்பு போன்றவற்றையும் கலக்கின்றனர். கொழுப்புச் சத்துக்காக மட்டரகமான ஆயிலையும், வெண்மை நிறத்துக்காக கிழங்கு மாவையும், இனிப்புக்காக சாக்ரீமையும் கலந்து, 30 நிமிடங்களில் தயாராகிறது நச்சுப்பால்.
இதில் கலக்கப்படும் ஒவ்வொரு பொருளும் விஞ்ஞானபூர்வமாக, வெவ்வேறு பயன்பாட்டுக்காக, பலவிதமான பரிசோதனைகளுக்குப் பின் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றைக்கொண்டு, இந்த செயற்கைப் பாலைத் தயாரிக்கிறார்கள் கலப்படக்காரர்கள். யூரியாவைக் கலப்பதன் மூலம் கொழுப்பு அல்லாத பிற சத்துக்களைக் கூடுதலாகக் காட்ட முடியும். பால் கெடாமல் பார்த்துக்கொள்ளவும் அதன் அமிலத்தன்மையைச் சமன்செய்யவும் காஸ்டிக் சோடாவைக் கலக்கின்றனர். டிடர்ஜென்ட் பவுடரை ஏன் இதில் கலக்கிறார்கள் தெரியுமா? கொழுப்புச்சத்துக்காகக் கலக்கப்படும் எண்ணெய், தண்ணீரில் கரையாது அல்லவா? அதைக் கரையவைக்க டிடர்ஜென்ட் பவுடர் அவசியம். இப்படி, முற்றிலும் ரசாயனங்கள்கொண்டு தயாரிக்கப்படும் ரசாயனப் பாலை அருந்தினால், நம் உள் உறுப்புகள் ஒவ்வொன்றும் பாதிக்கப்படும் என்பது உறுதி. இப்படித் தயாரிக்கப்படும் பாலை, சாதாரணப் பண்ணைகள் மூலம் விநியோகிக்க வாய்ப்பு குறைவு என்பதால், பேக் செய்யப்பட்ட பாக்கெட் பாலில் இது கலக்கப்படுகிறது. மிகப் பெரிய பண்ணைகளிலும் இந்தக் கலப்பு சாத்தியம்தான்.
பாலைப் பற்றிய உண்மைகளை அறிந்துகொள்ளும்போது, அதன் வெள்ளை நிறத்தைப் பார்த்தாலே பயம் வரும் அளவுக்கு அதன் கலப்படம் நம்மை அச்சுறுத்துகிறது. சில மாதங்களுக்கு முன்னால், உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பால் கலப்படம் பற்றிய வழக்கு ஒன்றில், கடந்த ஆண்டு ஜனவரி 30-ம் தேதி நீதியரசர் ராதாகிருஷ்ணன் அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒரு பரிந்துரையை அனுப்பினார். பாலில் கலப்படம் செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என்பதுதான் அந்தப் பரிந்துரை.
ஆயுள் தண்டனை வழங்கும் அளவுக்குப் பாலில் கலப்படங்கள் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளன. இது மனிதர்களின் உடல்நலம் தொடர்பான அதிமுக்கியப் பிரச்னை என்பதால், அரசு ஆய்வுக்கூடங்கள் மிகச் சமீபத்தில் பால் பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டுவருகின்றன. பால் பவுடரிலும் பிரச்னை; பாக்கெட் பாலிலும் சந்தேகம்... இதில் நச்சுப்பால் வேறு. நாம் என்னதான் செய்வது? நேரடியாகப் பால் கறவை செய்யப்படும் இடத்தில் வாங்கலாமா என்று கேட்கலாம். பக்கத்து வீட்டில் பசு வைத்திருக்கிறார்கள். அப்படிக் கிடைக்கும் பசும்பாலைப் பயன்படுத்தலாமா?

ஒரு நாட்டு மாடு, தன்னுடைய கன்றுக்குட்டியின் எடையில் 10-ல் ஒரு பங்குப் பாலை மட்டுமே சுரக்கும். கன்றுக்குட்டியின் எடை 15 கிலோ என்றால், பசு தரும் பால் 1.5 லிட்டர் மட்டுமே. அதிக அளவில் பால் சுரக்கவைப்பதற்காக, எல்லா பசுக்களுக்கும் ஆக்சிடோசின் என்ற ஹார்மோன் ஊசியைப் போட்டுவிடுவார்கள். ஆக்சிடோசின் என்பது, பசுக்களுக்கு இயல்பாகச் சுரக்க வேண்டிய இயற்கை ஹார்மோன். அதே ஹார்மோனை செயற்கை ரசாயனமாக ஆய்வுக்கூடங்களில் தயார்செய்து பசுக்களுக்கு ஊசி மூலம் செலுத்திவிடுவார்கள். இதனால், வழக்கமான பால் அளவைவிட ஊசிப்பால் அதிகமாகக் கிடைக்கும்.
`நாமும்தான் நிறைய ஊசிகளை நம் உடலில் செலுத்திக்கொள்கிறோம். அதுபோல இதுவும் ஒரு மருந்துதானே’ என்று சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. நாம் பயன்படுத்தும் ஊசி, மருந்துகளின் பக்கவிளைவுகளை, ஆய்வுசெய்து, பல மருந்துகளை அரசுகள் தடைசெய்துள்ளன. (தடை செய்யப்பட்ட அந்த மருந்துகள்கூட நம் நாட்டில் மிகச் சுலபமாகக் கிடைக்கும்) நாம் பயன்படுத்தும் மருந்துகளைவிட, ஹார்மோன் ஊசிகள் மிகக் கொடூரமானவை.
ஆக்சிடோசின் என்ற செயற்கை ரசாயனம் பசுவின் வழியாகப் பாலில் கலந்து, நம் உடலுக்கும் செல்கிறது எனச் சில ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது. `மனித உடலில் பெரும் மாற்றங்களை ஆக்சிடோசின் செய்கிறது’ என நிரூபிக்கப்பட்ட பின்பு, அந்த ஹார்மோன் ஊசி தடைசெய்யப்பட்டது. `பசுக்களுக்கு ஹார்மோன் ஊசியைப் போடக் கூடாது’ என எல்லா பண்ணைகளுக்கும் அறிவிக்கப்பட்டது. ஆனால், தடைசெய்யப்பட்ட ஆக்சிடோசின் வழக்கம்போல நம் உள்ளூர் மருந்துக் கடைகளிலேயே இப்போதும் கிடைக்கிறது. அதுதான் பிரச்னையே!
- பயணம் தொடரும்
பாலுக்கு மாற்று என்ன?
பால் பவுடரில், பாக்கெட் பாலில் ஏராளமான பிரச்னைகள் இருக்கின்றன என்பது சரிதான். பாலை நிறுத்திவிட்டு, அதற்குப் பதிலாக என்ன செய்யலாம்? பாலுக்கு மாற்று என்ன? சாதாரணமாக நாம் சுறுசுறுப்பாக இருப்பதற்காகவும், சோர்வை நீக்குவதற்காகவும்தான் பால் கலந்த டீ சாப்பிடுகிறோம். உண்மையில், டீ சுறுசுறுப்பைத் தருகிறதா? டீயில் உள்ள வெப்பம்தான் கொஞ்சமாவது சுறுசுறுப்பைத் தருகிறது. நாம் குடிக்கும் டீயில் பாலை மட்டும் தவிர்த்துவிட்டு, கேரள மக்களைப் போல, கட்டன்சாயா என்னும் பிளாக் டீ சாப்பிடலாம். அதில், புதினாவைப் போட்டு புதினா டீயை அருந்தலாம். சுக்கு மல்லி, இஞ்சி டீ என, பால் இல்லாத டீ பருகலாம்.
இதெல்லாம் பெரியவர்களுக்குச் சரி. குழந்தைகளுக்கு பாலுக்குப் பதிலாக என்ன செய்வது? பால் தரும் சத்துகளை எப்படிச் சரிசெய்வது? உடலுக்கு என்னவிதமான சத்துக்கள் தேவையோ, அதனை நாம் வழக்கமாகச் சாப்பிடும் உணவுகளில் இருந்தே உடல் தயாரித்துக்கொள்கிறது. இயற்கையான கீரைகள், காய்கறிகள் சாப்பிட்டாலே போதும். உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைத்துவிடும். குழந்தைகளுக்குப் பல் முளைத்தவுடன் தாய்ப்பாலை நிறுத்திவிட வேண்டும். உடலின் பால் தேவை அவ்வளவுதான்.குழந்தைகளுக்குப் பல் முளைத்ததும் திட உணவுகளைக் கொடுக்கத் துவங்க வேண்டும். பழச்சாறுகளைக் கொடுக்கலாம். தேங்காய்ப் பால், பசும்பாலுக்கு நல்ல மாற்று உணவு. தாய்ப்பாலுக்கு நிகரான ஆற்றல் தேங்காய்ப் பாலில் இருக்கிறது.