Published:Updated:

உணவின்றி அமையாது உலகு - 9

உணவு

உணவின்றி அமையாது உலகு - 9

ண்ணைப் பாலிலும் ஆக்சிடோசின் பிரச்னை இருக்கிறது என்பதைப் பார்த்தோம். தற்காலத்தில் ஆக்சிடோசின் என்பதே பழைய செய்திதான். இப்போது புதிதாக வந்திருப்பது, துரித வளர்ச்சி ஹார்மோன் (Recombinant Bovine Growth Hormone-RBGH). இந்த ஹார்மோன் ஊசியை, கன்றுக்குட்டியின் மூன்றாம் மாதத்தில் இருந்தே போடத் தொடங்க வேண்டும். அப்படித் தொடர்ந்து போட்டு வந்தால், 15-வது மாதத்தில் இருந்து பால் கறக்கத் தொடங்கும். அதுவும் வழக்கமான பசுக்கள் கறக்கும் பாலைவிட, நான்கு மடங்கு பால் அதிகமாகக் கிடைக்கும்.

இந்த ஹார்மோன் பாலைக் குடிப்பதால், நம் குழந்தைகள் அதீத வளர்ச்சியடைவார்கள். உடலில், பல ஹார்மோன் மாற்றங்கள் உருவாகும். ஹார்மோன் பால் அதிகமாகப் புழக்கத்தில் உள்ள அமெரிக்காவில் ஆண்களுக்கும் மார்பக வளர்ச்சி ஏற்பட்டுவருகிறது.

ஆண்களுக்கான மார்பக அறுவைசிகிச்சை அதிக அளவில் செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க மருத்துவப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதீத வளர்ச்சி என்பது, உடலின் எல்லா பாகங்களிலும் ஏற்படும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

ஹார்மோன்கள் மூலம் பசு வளர்ப்பதையும், பால் கறப்பதையும் ஜப்பான், ஆஸ்திரேலியா, கனடா, ஐரோப்பிய நாடுகள் போன்றவை தடைசெய்துள்ளன. இப்படி, அரசுகள் செய்யும் தடை உத்தரவுகளை நம்மைப்போன்ற சாமானிய மக்கள்தான் கடைப்பிடிப்போம். கோடிகளில் புரளும் கம்பெனிகளை அவை கட்டுப்படுத்துவது இல்லை.

இந்த ஹார்மோன் கலப்புகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும்போதே, அதிகமான பாலைக் கறப்பதற்கான மரபணு மாற்ற உயிரியல் தொழில் நுட்பமும் பசுக்களில் பயன்படுத்தப்படுகிறது. அதிகப் பால் கறக்கும் பசு இனத்தையும், விரைவாக வளரும் பசு இனத்தையும் கலப்பினம்செய்து, தொழில்ரீதியான கறவை மாடுகள் தயாரிக்கப்படுகின்றன.

‘எவ்வளவு அதிகமான பால் கறக்கிறதோ, அந்த அளவுக்கு லாபம். மாடுகளைப் பற்றியும், மனிதர்களைப் பற்றியும் நமக்கென்ன கவலை?’ என்ற வியாபாரத் தந்திரம் எல்லா தொழில்களையும் போலவே பாலையும் பாதித்திருக்கிறது.

உணவின்றி அமையாது உலகு - 9

பாக்கெட் பாலோ, ஹார்மோன் பாலோகூட வேண்டாம். `நாங்கள் வீட்டிலேயே பசு வைத்திருக்கிறோம். அதில் கறந்து குடிக்கலாமா?’ எனச் சிலர் கேட்கலாம்.

‘பால் குடிக்காதீர்கள்’ என்று ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார் ‘ஜான்ஸ் ஹாப்கின்ஸ் ஸ்கூல் ஆஃப் மெடிசின்’ பல்கலைக்கழகப் பேராசிரியரும், டாக்டருமான ஆஸ்கி. ‘பாலில் நிறைய கால்சியம் இருப்பது உண்மைதான். அந்தக் கால்சியத்தை நம் உடலால் பெறவும் முடியும். ஆனால், பாலில் இருக்கும் அமிலத்தன்மையைச் சமன்படுத்துவதற்காக நம் எலும்பில் இருக்கும் கால்சியம் உருகி வெளியேறுகிறது’ என்கிறார் ஆஸ்கி. ஆயுர்வேதமும் இயற்கை மருத்துவமும் ‘பால் ஒரு வெள்ளை விஷம்’ என்ற கருத்தை பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே சொல்லியிருக்கின்றன.

`வீட்டில் பசு வளர்த்து, அதிலிருந்து நாம் பெறும் பால் எப்படி விஷமாகும்?’ என்ற கேள்வி எழலாம்.

பசும்பால் என்பது அதன் கன்றுக்குட்டிக்காக தாய்ப்பசு கறக்கும் உணவு. கன்றின் உணவை நாம் பறித்துக் குடிப்பது மட்டும் அல்லாமல், அதனை விற்பனைக்கும் கொடுக்கிறோம். பசும்பால் கன்றுக்கு மட்டுமேயான உணவு என்பதால்தான், பசுவின் எடையில் இருந்து பத்தில் ஒரு பங்கு பால் மட்டுமே சுரக்கிறது. கன்றுக்குட்டி, தன் ஆயுள் முழுக்க ஆரோக்கியமாக இருப்பதற்கான உயிர்ச்சத்தைப் பசும்பால் கொண்டிருக்கிறது.

தாய்ப்பாலைவிட, பசும்பால் செறிவான உணவு. ஒரு குழந்தையின் வளர்ச்சிக்கான அளவுக்குத் தாய்ப்பாலில் சத்துக்கள் இருக்கும். ஆனால், பசும்பாலில் செறிவூட்டப்பட்ட சத்துக்கள் இருக்கும்.

ஒரு குழந்தைக்குப் பல் முளைக்க, ஒன்பது முதல் 13 மாதங்கள் ஆகின்றன. ஒரு பெண் பூப்பெய்துவதற்கு 13 வயதுக்கு மேல் ஆகிறது (இந்தக் காலத்தில் ஹார்மோன் கலப்பு காரணமாக இளம் வயதில் பூப்பெய்துவது அதிகரித்துள்ளது). இவை, இரண்டும் கன்றுகளில் எப்போது நடக்கிறது?

கன்றுக்குட்டிக்குப் பிறக்கும் போதே பல் இருக்கும். அதே போல, ஒரே வருடத்தில் கன்றுக்குட்டி பசுவாக வளர்ந்துவிடும். இவ்வளவு வேகமான வளர்ச்சியை ஏற்படுத்துவதற்காக பசும்பாலில் அதிகமான சத்துக்கள் காணப்படுகின்றன. இவ்வளவு ஆற்றல் வாய்ந்த பசும்பாலை நாம் பயன்படுத்தும் போது சிக்கல்கள் உருவாகின்றன.

பாம்பு விஷத்தில் இருக்கும் பொருள் என்ன தெரியுமா? புரதம்தான். புரதம் எப்படி விஷமாகும் என்ற சந்தேகம் எழுகிறதா? மிக அதிகமான புரதம்,  செறிவூட்டப்பட்ட புரதம் விஷமாக மாறிவிடும். ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமான புரதம் நம் உடலில் செலுத்தப்பட்டால், அவற்றை எதிர்கொள்ள முடியாமல், கல்லீரல் ஸ்தம்பிக்கும். ரத்தத்தில் கலந்து, சிறுநீரகங்களை அடையும் புரதத்தைச் செரிக்க முடியாமல், ஒரே நேரத்தில் இரண்டு சிறுநீரகங்களும் இயங்கும். தொடர்ந்து, புரதத்தை வெளியேற்ற முடியாமல் செயலிழக்கும். இப்படித்தான், செறிவூட்டப்பட்ட புரதமான பாம்பு விஷம், உயிர்களைக் கொல்கிறது. ‘அளவுக்கு மிஞ்சினால், அமிர்தமும் நஞ்சு’ என்ற நம் முன்னோர்களின் சொற்கள் அற்புதமானவை.

உணவின்றி அமையாது உலகு - 9

அதிக அளவு பாலை நாம் குடிக்கும்போது, நம் உடல் அதனைச் செரிக்க முயல்கிறது. செரிமானத்தின் இறுதியில் பாலில் இருந்து கேஸினோஜன் (Caseinogen) என்ற புரதம் எஞ்சிவிடுகிறது. இந்தப் புரதம் சிலருக்கு அலர்ஜியாக இருக்கும். பலருக்கு, இந்தப் புரதத்தை குடலால் முழுமையாக அழிக்க முடிவது இல்லை. எனவே, அவை குடலிலும், வாய்ப்பு உள்ள இடங்களிலும் படியத் தொடங்குகிறது. இது உடலையும் குடலையும் மந்தப்படுத்துகிறது. வயிற்றுப் பகுதியில் பலமான தசைகளோடு, மந்தத்தை ஏற்படுத்தும் தொங்கு சதைகள் உருவாகின்றன. என்றும் கரைக்க முடியாத தொந்தியோடு நம் உடல் பெருக்கிறது.

பசியைச் சரியாக உணர முடியாதவர்கள், உடல் பெருத்தவர்கள், அடிக்கடி சளிப்பிடிக்கும் இயல்பு உள்ளவர்கள், அடிக்கடி ஏப்பம், அஜீரணம் என செரிமானக்கோளாறுகள் உடையவர்கள், மலச்சிக்கல் , வாயுக்கோளாறுகள் கொண்டவர்கள், ஆஸ்துமா, மூச்சுவிடுவதில் சிரமம் போன்ற சுவாசப் பிரச்னை உள்ளவர்கள் பாலைத் தவிர்த்தால், இந்தப் பிரச்னையில் இருந்து  உடனடியாக மாற்றம் ஏற்படுவதை உணர முடியும்.

நம் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுக்கும் வரை ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பார்கள். பசும்பால் கொடுக்கத் தொடங்கிய பின்னால், கொழுகொழு குழந்தையாகவும், மந்தத்தன்மை மிக்கவர்களாகவும் மாறுவதைக் கண்கூடாகக் காண முடியும்.
பாலில் இருந்து கிடைக்கும் சிறிதளவு நன்மைக்காக, பல்வேறு பிரச்னைகளில் சிக்கவேண்டுமா? என்னவிதமான மாற்று உணவுகளை எடுத்துக்கொண்டாலும், பசும் பாலைத் தவிர்ப்பது முக்கியமானது.  அப்போதுதான் பலவிதமான தொந்தரவுகளில் இருந்து நம்மை நாமே காத்துக்கொள்ளவும் முடியும்.

- பயணம் தொடரும்

ஒவ்வொரு சத்துப் பொருளும் மிக அதிகமாகப் பயன்படுத்தும்போது, நம் உடலால் அவற்றை எதிர்கொள்ள முடியாமல் திணறுகிறது. பல தொந்தரவுகளை ஏற்படுத்துகிறது. இந்தப் புரிதலோடு பாலை யோசியுங்கள். செறிவூட்டப்பட்ட கால்சியம் பாலில் இருக்கிறது. அது கன்றுகளுக்கு மட்டுமேயான உணவு. அதனை நாம் பயன்படுத்தும்போது, நம் தேவைக்கு அதிகமான சத்து உடலில் தொந்தரவுகளை உருவாக்குகின்றன.

பாலை ஒருநாளில் எத்தனை முறை பயன்படுத்துகிறோம் என்று யோசியுங்கள். ஒரு டம்ளர் பாலில் நான்கு முழுச் சாப்பாட்டின் சத்து அடங்கி உள்ளது. வயிறு நிறையச் சாப்பிட்டுவிட்டு, ஒரு டம்ளர் பாலையும் உள்ளே தள்ளுகிறோம். காலை எழுந்தவுடன் ஒரு டீ, 11 மணி அளவில் ஒரு டீ, மாலை மூன்று மணிக்கும், மறுபடியும் ஆறு மணிக்கும் ஒரு டீ, கடைசியாக இரவில் தூங்கும் முன்னர் ஒரு டம்ளர் பால். இப்படி, ஒரு நாளில் பலமுறை பால் அருந்துகிறோம். இப்படியாக அதிகப்படியான சத்துக்கள் உடலில் சேருகிறது. நம்முடைய தாத்தாக்கள் ஒரு டம்ளர் பால் அருந்திவிட்டு, பல மணி நேர உடல் உழைப்பைச் செலவிட்டார்கள். உடல் உழைப்பு குறைந்த, வாக்கிங் போவதையே உடல் உழைப்பு எனக் கருதும் இந்தக் காலத்தில் பல டம்ளர் பால் அருந்துகிறோம்.