
உணவு

பவுடர் பால் தொடங்கி, ஹார்மோன் பால் வரை எல்லாவிதமான பால்களும் நம் உடலை எப்படிப் பாதிக்கின்றன எனப் பார்த்தோம். `ஊசி மூலம் பசுக்களுக்குச் செலுத்தப்படும் ரசாயனங்கள் பசுவைப் பாதிக்கின்றன’ என்று சொன்னால் நியாயம்தான். ஆனால், எவ்வாறு பாலின் வழியாக மனிதர்களைப் பாதிக்கின்றன என்கிற சந்தேகம் இருந்துகொண்டே இருக்கலாம்.
இந்தியாவில் விவசாயத்துக்காகப் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகளின் எண்ணிக்கை சுமார் 250. இவற்றில் `அபாயகரமானவை’ என அமெரிக்காவால் அறிவிக்கப்பட்டவை 109. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் தடைசெய்யப்பட்டவை மட்டும் 66.
நிலத்தில் கொட்டப்படும் ரசாயனத்தை பயிர்கள் எடுத்துக்கொள்கின்றன. பயிர்களின் வழியாக காய், கனிகள், இலை, தண்டு என அனைத்துப் பகுதிகளும் ரசாயனத்தன்மை கொண்டதாக மாறுகின்றன. நாம் நிலத்தில் கொட்டிய அதே அளவு ரசாயன நச்சுகள், நம் உடலைப் பாதிப்பதாக இருந்தால், இந்நேரம் நம் நாட்டில் மனிதர்களே இருந்திருக்க மாட்டார்கள். நிலம் செரித்தது, பயிர்கள் செரித்தது போக தவிர்க்க முடியாத நச்சுக்கள் மட்டுமே உணவுப் பொருட்களில் கலந்து வெளிவருகின்றன.

பஞ்சாப் பல்கலைக்கழக பூச்சியியல் துறையைச் சேர்ந்த முனைவர் பல்விந்தர் சிங், நாம் பயன்படுத்தும் ரசாயனங்கள் எப்படிப் பரவலாகி நச்சுத்தன்மையை அதிகரிக்கின்றன என்பதை பல ஆய்வுகளைக்கொண்டு நிரூபித்துள்ளார்.
``கோதுமை, அரிசி, மக்காச்சோளம் அனைத்திலும் நஞ்சு கலந்திருந்தது. கோதுமையை மாவாக அரைத்தாலும் நஞ்சு குறையவில்லை. மாவை சப்பாத்தியாகச் சுட்டாலும் நஞ்சின் அளவு மாறவில்லை. கடைகளில் விற்பனையாகும் வெண்டைக்காய், உருளைக்கிழங்கு, கேரட், காலிஃபிளவர், முட்டைகோஸ் இப்படி சமையலுக்குப் பயன்படும் காய்கறிகளும் நஞ்சிலிருந்து தப்பவில்லை.
பால், வெண்ணெய், நெய் போன்ற கால்நடை தரும் உணவுப்பொருட்களைச் சோதித்தார்கள். சோதிக்கப்பட்ட 244 மாதிரிகளிலும் நஞ்சு கலந்திருப்பது கண்டறியப்பட்டது. நாம் உண்ணும் உணவில் 10 லட்சம் பாகத்துக்கு 11.4 அளவு நஞ்சு இருந்தாலே, அது உடல்நலத்தைப் பாதிக்கும் காரணியாக மாறும் என்கிறது உலக சுகாதார நிறுவனம். 1,000 லிட்டர் பாலில் 11.4 மில்லி விஷம் இருந்தாலே பால் முழுவதும் விஷத்தன்மையுடன் செயல்படும். பஞ்சாபில் நடத்தப்பட்ட பரிசோதனையில் இதைவிட அதிகமான நஞ்சு இருந்தது கண்டறியப்பட்டது.
பஞ்சாப் மாநிலத்தில் குழந்தை பெற்ற 130 தாய்மார்களின் பால் மாதிரிகளை பரிசோதித்தார்கள். அனைத்திலுமே நஞ்சு கலந்திருந்தது. ஒரு குழந்தை ஒரு நாளைக்கு 600 மி.லி தாய்ப்பால் குடிப்பதாக வைத்துக் கொண்டால், அந்த சிசு மூன்று நாட்களில் ஒரு மில்லி நஞ்சை உட்கொள்கிறது. 1983-ம் ஆண்டிலேயே பஞ்சாபில் தாய் மார்பிலிருந்து நஞ்சு சுரப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
எங்கோ நிலத்தில் கொட்டப்படும் ரசாயனங் களால், பயிர்களின் வழியாக நம் உடலை அடைகிறது விஷம். இதே போன்ற பரவல்தான் வியாபார நோக்கத்துக்காக ரசாயனங்களால் துன்புறுத்தப்படுகிற பசுக்களில் இருந்து நமக்கும் வந்து சேர்கிறது. ஜல்லிக்கட்டு மூலம் காளைகள் துன்புறுத்தப்படுகின்றனவோ இல்லையோ, நம் பால் தேவைக்காக கொடூரமான ரசாயனங்களால் பசுக்கள் தாக்கப்படுகின்றன.
தமிழ்நாட்டில் இருக்கும் ஆங்கில மருத்துவர் ஒருவர் தன் மருத்துவ அட்டையின் பின்புறத்தில் `Avoid Animal milk at all ages for a healthy life’ அதாவது, அனைத்து வயதினரும் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ விலங்குகளிடமிருந்து பெறப்படும் பாலைத் தவிர்த்திடுங்கள்’’ என்று குறிப்பிட்டிருக்கிறார். அவர் குழந்தைநல மருத்துவர் ஜெகதீசன். எதற்காக பாலைத் தவிர்க்க வேண்டும் என அவர் கூறுகிறார் தெரியுமா?
“நான் மரபணுவியல் படிக்கும்போது பால் தொடர்பான மரபணுக்கள் பற்றித் தெரிந்துகொண்டேன். அதன் பிறகு இது குறித்த ஆராய்ச்சியில் இறங்கினேன். எந்த ஓர் உயிரினத்துக்கும் உடல் மற்றும் மூளை வளர்ச்சியடையும் வரைதான் பால் தேவை. அதற்குப் பிறகு உட்கொள்ளப்படும் பால் உபரிதான். பாலில் லாக்டோஸ் என்னும் சர்க்கரை இருக்கிறது. இது சிறுகுடலில் சென்று குளுக்கோஸ் மற்றும் கேலக்டோஸ் என இரண்டாகப் பிரிகிறது. மூளை, கண் மற்றும் நரம்பு மண்டலங்களின் வளர்ச்சிக்கு கேலக்டோஸ் அவசியமானது.

லாக்டோஸை இரண்டாகப் பிரிக்க, சிறுகுடலின் ஒரு நொதி சுரக்கிறது. இது, மூன்று வயதுக்கு மேல் சுரப்பது இல்லை. அதனால், சிறுகுடலுக்கு வரும் லாக்டோஸ் செரிமானம் ஆகாமல் பெருங்குடலுக்குச் செல்கிறது. அங்கு வாழும் பாக்டீரியா இதைப் பயன்படுத்தி, கார்பன் டை ஆக்சைடை வெளியிடுகிறது. இதனால், வாயுத் தொல்லையை ஏற்படுத்தும். கூடுதலாகக் கிடைக்கும் கேலக்டோஸ் கண் லென்ஸிலும், ரத்தக் குழாயிலும் படியும். இதனால் ரத்தக் குழாய் அடைப்பு மற்றும் கண் புரை ஏற்படும்.
கால்சியத்துக்காக பால் அருந்த வேண்டும் என்று சொல்கிறார்கள். பாலில் இருக்கும் கால்சியம் இரண்டாம் தரமானது. முதல் தர கால்சியத்தை கீரையில் இருந்து நம் உடலே உற்பத்தி செய்துகொள்ளும். எனவே, பாலைவிட காய்கறிகள், கீரைகள்தான் அவசியமானவை” என்கிறார் மருத்துவர்.
அமெரிக்க மருத்துவர் சொன்னால், அது ஆய்வு. இந்திய மருத்துவர் சொன்னால் அது கருத்து என்னும் நமது புரிதலால், மருத்துவரீதியாக விழிப்புஉணர்வு ஏற்படுத்தும் பல கருத்துகளை நாம் புறந்தள்ளி வந்திருக்கிறோம்.
பால் பற்றி போதுமான அளவுக்குப் பார்த்துவிட்டோம். குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டுமே உணவு. தாய்ப்பாலுக்குப் பின்பு, மூன்று வயது வரை – திட உணவுகள் கொடுத்துப் பழகும் வரை நல்ல பசும்பாலை அதிகமாக நீர் கலந்து கொடுக்கலாம்.
ஆரோக்கியத்தைப் பதம்பார்க்கும் இன்னும் சில உணவுகளை இனி பார்க்கலாம்.
- பயணம் தொடரும்