
உணவு

பிராய்லர் சிக்கன் ஏன் சிக்கலான உணவாக இயற்கை ஆர்வலர்களால் கருதப்படுகிறது என்பதற்கான காரணங்களை விரிவாகப் பார்த்தோம். இந்த மோசமான உணவை, நம் சமையல்முறை இன்னும் மோசமானதாக மாற்றுகிறது என்றால் நம்புவீர்களா?
சிக்கன் 65 என்றாலே, அதன் சிவப்பு நிறம்தான் நம் நினைவுக்கு வரும். சிக்கனுக்கு சிவப்பு நிறத்தைத் தருவதற்காக ஒரு பவுடரைப் பயன்படுத்துகிறோமே... அது என்ன செய்யும் தெரியுமா? புற்றுநோயை ஏற்படுத்தும் தன்மை அந்த நிறப்பொருளில் இருப்பதாக எச்சரிக்கிறார்கள் ஆய்வாளர்கள். இவ்வளவு மோசமான பொருள் உள்ள நிறமியை உணவில் பயன்படுத்த அரசு தடை செய்யவில்லையா என்ற கேள்வி எழலாம்.

பொன்சியூ (Ponceau), எரித்ரோசின் இரண்டையும் பயன்படுத்தினால், சிவப்பு நிறம் கிடைக்கும். பிரில்லியன்ட் புளூ, இண்டிகோ கார்மைன் பயன்படுத்தினால், ஊதா நிறம் கிடைக்கும். இந்த மாதிரியாகக் கிடைக்கக்கூடிய எட்டு வகையான நிறங்களை ஐஸ்க்ரீம் ஃப்ளேவர்டு மில்க், பிஸ்கட், இனிப்பு வகைகள், டின்களில் அடைக்கப்பட்ட பட்டாணி, பாட்டில் பழ ஜூஸ்கள், குளிர்பானங்கள் என ஏழு வகையான உணவுகளில் மட்டுமே சேர்க்க அனுமதி உண்டு. இதுதான் உணவில் நிறங்கள் சேர்ப்பதற்கான விதிமுறை. அதுவும், `10 கிலோவுக்கு ஒரு கிராம் என்ற அளவில் மட்டுமே சேர்க்க வேண்டும்’ என்ற வரைமுறை உள்ளது. அளவு கூடினால், அதன் நச்சுத்தன்மை உணவுகளைப் பாதிக்கும் என்பதால்தான் இந்த வரைமுறை. ஆனால், நடப்பது என்ன?
நாமே, வீட்டில் சமைக்கும்போது, நிறங்களைப் பயன்படுத்துவதில் உள்ள கட்டுப்பாடுகளைப் பின்பற்றுவது இல்லை. பிறகு எப்படி ஹோட்டல்களில் பின்பற்றுவார்கள்... நிறத்தைக் குறைத்தாலும் நாம் ஒப்புக்கொள்வோமா என்ன?
இந்த உணவுச் சட்டங்களில் முக்கியமானது சிக்கனுடன் எந்த நிறத்தையும் சேர்க்கக் கூடாது என்பதுதான். இப்போது, சிக்கனுடன் சேர்க்கப்படும் சிவப்பு நிறத்தை உருவாக்க, சூடான் டை, மெட்டானில் போன்ற ரசாயனங்களைச் சேர்க்கின்றனர். அதேபோல எரித்ரோசினும் பயன்படுத்தப்படுகிறது. இதில் எரித்ரோசின் அளவு கூடினால், கழுத்துக் கழலை நோயும், ஹார்மோன் தொடர்பான பல்வேறு சிக்கல்களும் வரும் என ஆய்வுகள் நிரூபித்துள்ளன. அதேபோல சூடான் டையை உணவில் பயன்படுத்த கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் தடைவிதித்து உள்ளன.ஏனென்றால், இதன் விளைவால் சிறுநீரகம் மற்றும் கல்லீரலில் புற்றுநோய் உருவாவதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

இவ்வளவு சிக்கலான நிறங்களை, ஏற்கெனவே ரசாயனக் கலப்பு உள்ள, பலவிதமான ஆன்டிபயாட்டிக்குகளைக்கொண்டிருக்கும் சிக்கனுடன் பயன்படுத்தும்போது என்ன ஆகும் என்பதை இன்னும் ஆய்வுகூடச் செய்யவில்லை.
தனித்தனியான ரசாயன உணவுகளைச் சோதனைசெய்து, அதன் பாதிப்புகள் என்னென்ன என்பதை அறிந்துகொள்ள முடியும். ஆனால், ரசாயனக் கலப்பு உள்ள பல உணவுகளின் கூட்டுப் பயன்பாட்டின் விளைவுகளை ஆய்வுக்கூட சோதனைகளால் மட்டும் உறுதிப் படுத்திவிட முடியாது. பயன்பாட்டு ரீதியான பரிசோதனைகளின் மூலம், 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆய்வுசெய்தால் மட்டுமே கண்டுபிடிக்க இயலும்.
மஞ்சள் தூள், மஞ்சள் பொடி ஆன கதையை நாம் கடந்த இதழ்களில் பார்த்தோம். மஞ்சள் பொடி பாக்கெட்டுகளிலேயே ‘வெளிப்புற உபயோகம்’ என்றும், ‘உணவுக்காக’ என்றும் அச்சிட்டு விற்பார்கள். உணவுப் பயன்பாட்டுக்காகத் தயாரிக்கப்படும் மஞ்சள் பொடியில் அதிக அளவு உண்மையான மஞ்சளும் வெளிப்புற உபயோகத்துக்காகத் தயாரிக்கப்படும் பொடியில் அதிக அளவு நிறமியும் கலக்கப்படுகின்றன.
அதேபோலதான் மிளகாய்ப் பொடியும். மிளகாயின் காரத்தையும் நிறத்தையும் செயற்கை ரசாயனங்களால் கொண்டுவர முடிகிறது. அதிகக் காரத்தைத் தரும் ரசாயனப் பொருளுடன் சிவப்பு நிறம் கலந்து, செயற்கை மிளகாய்ப்பொடி விற்கப்படுகிறது.

நாம் உண்ணும் உணவு நமக்கு ஆரோக்கியத்தை வழங்காவிட்டாலும், புதிய புதிய நோய்களை வழங்குவதாக இருக்கக் கூடாது. வீட்டு சமையலுக்குத் தேவையான சின்னச்சின்னப் பொருட்களைக்கூட, பாக்கெட்டுகளில் வாங்கும் பழக்கத்தைக் கைவிட்டு, நாமே தயாரிக்கப் பழகிக்கொள்ள வேண்டும். ரசாயனக் கலப்படங்களில் நம்மை காப்பாற்றிக்கொள்வதற்கான அடிப்படை அம்சமே இயன்ற அளவுக்கு நாமே தயாரித்துக் கொள்வதுதான்.
இன்னும் சில ரசாயனக் கலப்பு உணவுகளை வரும் இதழில் ஆய்வு செய்யலாம்.
- பயணம் தொடரும்
பிராய்லர் கோழியைத் தவிர்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிவருவதால், நாட்டுக்கோழியைப் போல தோற்றம் தரும் பிராய்லர் கோழிகளை உற்பத்தி செய்யத் தொடங்கிவிட்டனர். இன்னும் சில நிறுவனங்கள், நாட்டுக்கோழிகளையே கூட்டமாக வளர்த்தாலும், பிராய்லர் கோழிகளுக்கான செயற்கைத் தீவனங்களைக் கொடுத்து, பெரிய நாட்டுக்கோழிகளை உருவாக்குகின்றனர்.

நாட்டுக்கோழிகள் சுறுசுறுப்பானவை. தேவைக்கு ஏற்ப பறக்கும் தன்மை கொண்டவை. பிராய்லர் கோழிகள் மந்தமானவை. தூக்கி எறிந்தாலும் பறக்காதவை. நாட்டுக்கோழிகள் அதிக இறகுகள் கொண்டவையாக இருக்கும். பிராய்லர் கோழிகள் பெரியதாக, அதிக எடை கொண்டவையாக இருக்கும்.
பிராய்லர் நாட்டுக்கோழிகளைக் கண்டுபிடிக்க இன்னும் ஒரு எளிய வழி உள்ளது. நாட்டுக்கோழிகள் கூட்டாகச் சேர்ந்து வாழும்போது ஒன்றை ஒன்றை கொத்திக்கொள்ளும். இதைத் தடுக்க, பண்ணையில் இவற்றின் அலகு நுனிகளை மொன்னையாக்கிவிடுவர். கோழியின் அலகு மழுங்கியிருந்தால் அது நவீன நாட்டுக்கோழி எனப் புரிந்துகொள்ளலாம்.