Published:Updated:

உணவின்றி அமையாது உலகு - 13

உணவின்றி அமையாது உலகு - 13
பிரீமியம் ஸ்டோரி
News
உணவின்றி அமையாது உலகு - 13

உணவின்றி அமையாது உலகு - 13

உணவின்றி அமையாது உலகு - 13

பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் பிடித்தது குளிர்பானங்கள். `வெயிலுக்கு இதமாக பாட்டில் பானங்களைக் குடித்தால் என்ன ஆகப்போகிறது?’ என்ற நினைப்பில்தான் லிட்டர் லிட்டராகக் குளிர்பானங்களைப் பருகுகிறோம். முதன்முதலில் பழங்களில் இருந்து சாறு பிழிந்து தயாரிக்கப்பட்ட குளிர்பானங்கள் நல்ல உணவாகத்தான் இருந்தன. நம் நாட்டில் பிரபலமான சர்பத், மிக முக்கியமான குளிர்பானமாக ஒரு காலத்தில் இருந்தது. சர்பத், யுனானி மருத்துவத்தின் ஒரு வகைத் திரவ மருந்தாகும். நன்னாரி வேரோடு, இனிப்பைச் சேர்த்துத் தயாரிக்கப்படும் சர்பத் உடல் குளிர்ச்சிக்கான மருந்தாகப் பயன்படுத்துகிறது.

இப்படி, இயற்கையாகத் தயாரிக்கப்படுகிற குளிர்பானங்கள் விரைவாகக் கெட்டுப்போகின்றன என்பதால், பழச்சாற்றுடன் ப்ரிசர்வேட்டிவ் ரசாயனங்களைக் கலந்து, பாட்டிலில் அடைத்து விற்கத் தொடங்கினார்கள். சர்பத்தில் நன்னாரி குளிர்பானங்களின் தேவையும் விற்பனையும் அதிகரித்தபோது, பழச்சாறுகளுக்குப் பதிலாக அதே பழத்தின் மணத்தைத் தரும் செயற்கை வாசனைப் பொருட்கள் (ஃப்ளேவர்கள்) பயன்படுத்தப்பட்டன.

உணவின்றி அமையாது உலகு - 13

நாம் அருந்துகிற குளிர்பானத்தின் பாட்டிலில் `பழம் பயன்படுத்தப்படவில்லை’ என்று ஆங்கிலத்தில் எழுதிவைத்திருப்பார்கள். அது மட்டும் அல்ல; `இதில் செயற்கை வாசனைப் பொருட்கள் பயன் படுத்தப்பட்டுள்ளன’ என்றும் குறிப்பிடப்பட்டிருக்கும். குளிர்பானங்களில் மூன்றுவிதமான தீங்கு விளைவிக்கும் காரணிகள் உள்ளன. முதலில், அதன் குளிர்ச்சி.

குளிர்ச்சி என்ற சொல்லைப் பார்த்தவுடன் `ஐஸ் கட்டிகளையோ, ஃபிரிட்ஜையோ பயன்படுத்தக் கூடாது’ எனச் சொல்லப்போகிறேன் என்று நீங்கள் எதிர்பார்த்தால் அது தவறு. தேவையான அளவு மிதமான குளிர்ச்சியைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இங்கு நாம் பேசுவது, அதீதக் குளிர்ச்சி.

சாதாரண நிலையில், குளிர்பானங்களின் அளவுக்கு அதிகமான குளிர்ச்சியை நம் உடல் தாங்கிக்கொள்ளாது. ஒரு குளிர்பானத்தை எடுத்து வாயில் ஊற்றும்போது, அதன் குளிர்ச்சியைத் தாங்கிக்கொள்ள முடியாமல் நாமே அவசரமாக விழுங்கிவிடுகிறோம். வாயால், பற்களால் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்குக் குளிர்ச்சி அதிகமாக உள்ளது என்றுதானே இதற்கு அர்த்தம். நம் உடலிலேயே மிகவும் திடமான, அனைத்தையும் தாங்கும் உறுப்புகள் கால்சியத்தால் ஆன எலும்புகளும் பற்களும்தான். அப்படிப்பட்ட பற்களே குளிர்பானங்களைத் தாங்க முடியாமல் நடுங்கும்போது, மென்மையான உணவுக்குழாயும் இரைப்பையும் எப்படித் தாங்கிக்கொள்ளும்?

திடீரென உள்ளே நுழையும் அதிகக் குளிர்ச்சியால் உணவுக்குழாயும் இரைப்பையும் தங்கள் இயல்பான வெப்பநிலையில் பெரும் பாதிப்பை அடைகின்றன. தொடர்ந்து, இதே விதமான பாதிப்புகள் நிகழ்ந்தால் இரைப்பையின் செரிமானத்தன்மையும், அதன் உட்புறச் சுவர்களும் பாதிப்பை அடைகின்றன. குளிர்பானங்களில் இருக்கும் இரண்டாவது பிரச்னை, அதில் ஏற்றப்படும் வாயு. குளிர்பானங்களில்,  கார்பன் டை ஆக்ஸைடு ஏற்றப்படுகிறது. எதைக் கழிவாக சுவாசத்தின் மூலம் வெளியேற்றுகிறோமோ, அதையே குளிர்பானத்தின் மூலம் உடலுக்குள் செல்ல அனுமதிப்பது சரியா? இப்படி, குளிர்பானத்தின் காஸ் உடலுக்குள் சென்றதும் அதனை உடல் மறுபடியும் ஏப்பம் மூலமாக வெளியே தள்ளுகிறது. கழிவு என்று வெளிப்படையாக நாம் அறிந்த பொருளை உள்ளே கொடுத்து, மறுபடியும் வெளியேற்றவைப்பது உடலின் ஆற்றலை வீணடிக்கும் வேலைதானே?

காஸ் உள்ள குளிர்பானங்களைக் குடிக்கும் கிராம மக்கள், அதனால் வரும் ஏப்பத்தின் மூலம் `அஜீரணம் சரியாகி விட்டது’ என்று கூறுவார்கள். உண்மையில் குளிர்பானம் மூலம் இரைப்பையை அடையும் வாயு உடனே மறுபடியும் வெளியேறுகிறது. ஆனால், இரைப்பையில் இருந்த காஸ்தான் குளிர்பான கேஸோடு சேர்ந்து வெளியேறுகிறது என நினைத்துக் கொள்வார்கள். இதே போலத்தான் இன்றைய நவீன உணவு விரும்பிகள் உணவு சாப்பிடும்போது குளிர்பானங்களை குடித்துக்கொண்டே சாப்பிடும் பழக்கம் பரவலாக இருக்கிறது. வயிற்றிலிருந்து காஸ் வெளியேறி விடுவதால் நன்றாகச் சாப்பிட முடிகிறது என்பது இவர்களின் கருத்து. குளிர்பானங்கள் பற்றிய கிராமத்து மனிதர்களின் நம்பிக்கைக்கும், நகர மனிதர்களின் கருத்துக்கும் எந்த வேறுபாடும் இல்லை. உடலுக்குள் செல்லும் காஸ் வெளியேற்றப்பட்டது போக, எஞ்சி உள்ள சிறு பகுதி அது தேங்கும் உறுப்புகளைப் பாதிக்கும் தன்மை கொண்டது. மெல்லிய சவ்வு போன்ற உள்ளுறுப்புகளின் உட்புறத்தை காஸ் அரித்து, புண்ணாக மாற்றும். தொடர்ந்து குளிர்பானங்கள் பருகுபவர்களுக்கு இரைப்பை மற்றும் குடற்புண்களுக்கான வாய்ப்பு இருக்கிறது.

உணவின்றி அமையாது உலகு - 13

மூன்றாவது பிரச்னை, அதில் கலக்கப்படும் பொருட்கள். ஏதாவது ஒரு பழத்தின் மணம், செயற்கைச் சுவைக்காகச் சில அமிலங்கள், இனிப்பு, தண்ணீரோடு கார்பன் டை ஆக்சைடு, இதுதான் நாம் குடிக்கும் குளிர்பானத்தின் உள்ளடக்கம். இதில் சில கம்பெனிகள் தங்கள் சீக்ரெட் ஃபார்முலாவுக்காக வேறு சில பொருட்களையும் கலக்கின்றன. உதாரணமாக, கோலா குளிர்பானங்களில் கோக்கெயின் என்ற பொருள் குறைந்த அளவில் கலக்கப்படுகிறது. இந்த கோகெயின் அதிகமானால், அது போதைப் பொருளாக வேலை செய்யும். 1886-ம் ஆண்டில் இருந்து பாதுகாக்கப்பட்ட பிரபல கோலா ரகசியம் மிக சமீபத்தில் அம்பலமானது. அதில், வழக்கமான கலவைகளோடு இன்னொரு பொருளையும் சேர்த்திருந்தது அந்த நிறுவனம். அது ஆல்கஹால்.

ஆல்கஹாலை ஏன் குளிர்பானத்தில் சேர்க்க வேண்டும்? மறுபடி மறுபடி குடிக்கவைக்கத்தான். கோலாவில் ஆல்கஹாலைக் கலந்து ‘சீக்ரெட் ஃபார்முலா’வை உருவாக்கி 125 வருடங்களாக ரகசியம் காத்திருக்கிறார்கள். அமெரிக்காவின் ‘திஸ் அமெரிக்கன் லைஃப்’ என்ற இணைய நிறுவனம், அட்லாண்டா பத்திரிகைகளுடன் இணைந்து  வெளியிட்ட கோலா நிறுவனத்தின் சீக்ரெட் ஃபார்முலாவில் ஆல்கஹால் எட்டு சதவிகிதம் இருப்பது தெரியவந்தது. இனி கோலாவைக் குடித்துக்கொண்டு, `எனக்கு மதுப் பழக்கம் இல்லை’ என்று யாராவது சொல்ல முடியாது.

குளிர்பானத்தின் வழியாக நம் உடலில் சேரும் ஆல்கஹாலின் அளவு குறைவாக இருந்தாலும், ஒரு கட்டத்தில், அதற்கு நம்மை அடிமையாக்கும். தொடர்ந்து குளிர்பானம் குடித்துவரும்போது, நம் செல்களில் தேங்கும் ஆல்கஹால், இன்னும் அதிகமான ஆல்கஹாலைக் கேட்கும். குளிர்பானங்களை அதிகமாகக் குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் படிப்படியாக நேரடியான ஆல்கஹால் பயன்படுத்துபவர்களாக மாறிவிடும் அபாயமும் இருக்கிறது.

இது ஒரு நிறுவனத்தின் சாம்பிள்தான். நாம் தினமும் பயன்படுத்தும் ஒரு குளிர்பானத்திலேயே என்னென்ன கலந்தி ருக்கின்றன என்பதை நாம் அறிந்துகொள்ள சுமார் 125 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதாக உள்ளது. இன்னும் பல சீக்ரெட் ஃபார்முலாக் களோடுதான் நம்முடைய பன்னாட்டுக் குளிர்பான நிறுவனங்கள் சந்தையில் உலா வருகின்றன. இவற்றை இன்னும் விரிவாகப் பார்க்கலாம்.

- பயணம் தொடரும்

குளிர்பானங்களுக்கு மாற்று என்ன?

உணவின்றி அமையாது உலகு - 13

மாற்று நமக்குத் தெரிந்த விஷயம்தான்... இளநீர். கோடை காலத்தில் இளநீர் ஒரு வரப்பிரசாதம். எப்படிப்பட்ட தாகமாக இருந்தாலும், உடல் வெப்பமாக இருந்தாலும் இளநீர் அவற்றை நீக்குகிறது. இப்போது இளநீரோடு கொஞ்சம் ஐஸ் துண்டுகளைச் சேர்த்துக் குடிப்பது புதிய ட்ரெண்டாக இருக்கிறது. லேசான குளிர்ச்சியுடன் இளநீர் குடிப்பதில் தவறு இல்லை. அரசு நிறுவனமான `பனை வாரியம்’ தயாரிக்கும் பதநீர் ஓர் அருமையான தயாரிப்பு. ஃபிரிட்ஜில் வைத்துப் பரிமாறப்படும் பதநீர் கோடை காலங்களில் விற்பனைக்கு வருகிறது. குளிர்பானங்களை நாம் குடிப்பதற்குக் காரணம் குளிர்ச்சியும் இனிப்பும்தான். இந்த இரண்டையும் பழச்சாறுகள் வழங்குகின்றன. மிக அதிகமாக ஐஸ் போடாமல், மிதமான குளிர்ச்சியோடு பழச்சாறுகளை அருந்துவது நல்லது.