Published:Updated:

உணவின்றி அமையாது உலகு - 14

உணவின்றி அமையாது உலகு - 14
பிரீமியம் ஸ்டோரி
News
உணவின்றி அமையாது உலகு - 14

உணவின்றி அமையாது உலகு - 14

உணவின்றி அமையாது உலகு - 14

ன்னாட்டு குளிர்பான நிறுவனங்களின் சீக்ரெட் ஃபார்முலாக்களில் மறைந்திருக்கும் ரகசியங்களைப் பார்த்தோம். குளிர்பானங்களின் சுவையை மேம்படுத்துவதற்காகச் செயற்கை இனிப்பு, புளிப்பைக் கூட்டுவதற்கான அமிலங்கள்… இவற்றோடு கோகைன், காஃபின் போன்ற நரம்பூக்கிகளையும் கலக்கின்றனர். கோகைன், காஃபின் போன்ற பொருட்கள் இயற்கையான கலவையாக அமைந்திருக்கும்போது அவை புத்துணர்ச்சி தருபவையாக இருக்கின்றன. உதாரணமாக, நாம் அருந்தும் காபியில் காஃபின் என்ற வேதிப்பொருள் இருக்கிறது. அளவோடு காபியைப் பயன்படுத்துவதால், கெடுதல் இல்லை. ஆனால், காஃபினை அளவுக்கு அதிகமாகவோ, அல்லது வேதிப்பொருளை மட்டும் செயற்கையாகப் பிரித்து எடுத்தோ நாம் பயன்படுத்தும்போது, அதன் விளைவு மாறுகிறது.

இயற்கையான கலவைகளோடு நாம் பயன்படுத்தும்போது, காஃபின் சுறுசுறுப்பைத் தருகிறது; செயற்கையான வேதிப் பிரிப்பில் நாம் பயன்படுத்தும்போது நரம்பு மண்டலங்களைப் பலவீனமடையச் செய்கிறது. நாம் அருந்தும் தேநீரில் ‘தியா’ என்னும் வேதிப்பொருள் இருக்கிறது. இதனை நாம் அளவோடு பயன்படுத்தினால், உற்சாகத்தைத் தரும். அளவை மீறும்போதும், செயற்கையாக தியாவை மட்டும் பிரித்துப் பயன்படுத்தும்போதும், அது நரம்புகளை வலுவிழக்கச்செய்யும்.

இப்படி இயற்கையான பொருட்களில் இருந்து பிரிக்கப்பட்டு காஃபின், கோகைன் போன்ற வேதிப்பொருட்கள் குளிர்பானங்களில் கலக்கப்படுகின்றன. தொடர்ந்து, குளிர்பானங்களைப் பயன்படுத்தும்போது அவை நம் உடலைப் பாதிப்பதோடு, அவற்றுக்கு நம்மை அடிமையாக்குகின்றன. ஏனென்றால், சுறுசுறுப்புக்காக நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளும், அதன் அளவு கூடும்போது அடிமைப்படுத்துவதற்கான போதைப்பொருளாக மாறிவிடுகிறது.

உணவின்றி அமையாது உலகு - 14

மிகை இனிப்பு

நம் மரபுவழி அறிவியல், `இனிப்பு என்பது அமிலத்தன்மையை ஏற்படுத்தும் சுவைகளில் ஒன்று’ என்கிறது. நமக்குத் தேவையானபோது அளவோடு இனிப்பைப் பயன்படுத்துவதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், இதே இனிப்பு அளவு கூடும்போது, நம் உடலில் அமிலத் தன்மையை ஏற்படுத்துகிறது. இப்படித்தான் குளிர்பானங்களில் கலக்கப்படும் `ஃப்ரக்டோஸ்’ என்னும் இனிப்புப் பொருளும் நம் உடலில் செயல்படுகிறது.

கோடைக் காலங்களில் ஒரே நாளில் நாம் பலமுறை குளிர்பானங்களை அருந்துகிறோம். குளிர்பானங்களின் சுவையைக் கூட்டுவதற்காக புளிப்பான சிட்ரிக், பாஸ்பாரிக் அமிலப் பொருட்களும் கூடுதலாகக் கலக்கப்படுகின்றன. ஏற்கெனவே இனிப்பு எனும் அமிலச்சுவை மூலமாக இரைப்பையில் அமிலத்தன்மை ஏற்படுகிறது. அதோடு, நேரடி அமிலமும் குளிர்பானங்களின் வழியாக உடலில் தேங்குகிறது. நம் உடலில் ஏற்கெனவே உருவாகும் கழிவுகள் இந்த அமிலத்தன்மையால், ஒட்டும் தன்மை உடையவையாக மாறுகின்றன. கழிவுகளின் தேக்கம் உடலின் பல பகுதிகளில் நீடிப்பதற்கு அமிலத்தன்மை உதவியாக இருக்கிறது.

அதேபோல, நம் உடலில் உள்ள ரத்தம் எப்போதும் காரத்தன்மையோடு (அல்கலைன்) இருக்கும். அப்போதுதான், உடல் முழுவதும் தேவையான சத்துக்களைப் பகிர்ந்து கொடுக்கவும், கழிவுகளைச் சுமந்து சென்று வெளியேற்றவும் முடியும். நாம் தொடர்ந்து அமிலத்தன்மையை ஏற்படுத்தும் குளிர்பானங்களைப் பயன்படுத்தும்போது, ரத்தத்தின் இயல்பான காரத்தன்மை பாதிப்படைகிறது. ரத்தச் சுழற்சியின் அன்றாட வேலைகள் முழுமையாக நடைபெற முடியாமல் போகின்றன.

குளிர்பானங்களைத் தொடர்ந்து குடிக்கும் குழந்தைகள் உடல் பெருப்பதையும் நாம் பார்க்க முடியும். இது, உடலில் அமிலத்தன்மை மிகுந்து, கழிவுகள் தேங்குவதைக் காட்டுகிறது. நாம் குடித்துக்கொண்டே இருக்கும் குளிர்பானங்களால் ரத்தத்தில் ஃப்ரக்டோஸ் கலந்துகொண்டே இருக்கிறது. இதனை உடலுக்குத் தகுந்தபடி மாற்றி, செல்களுக்குள் செலுத்துவதற்காக இன்சுலினை கணையம் உற்பத்தி செய்துகொண்டே இருக்கும். இவ்வாறு அதிகப்படியான வேலையைச் செய்து கணையம் களைத்து விடும்போது, நாம் யோசித்துப்பார்க்க முடியாத நோய்களும்கூட உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.

இவற்றை எல்லாம்விட குளிர்பானங்களால் ஏற்படும் மிக முக்கியமான பாதிப்பு ஒன்று உண்டு. அதுதான், `ஆஸ்டியோபொரோஸிஸ்’ எனப்படும் எலும்பு அடர்த்தி குறைதல் நோய். குளிர்பானங்களில் கலக்கப்படும் பாஸ்பாரிக் அமிலம் ஒரு முக்கியமான உடலியல் மாற்றத்தை விளைவிக்கிறது. நம் உடல், நாம் உண்ணும் உணவுகளில் இருந்து தனக்குத் தேவையான சத்துக்களைச் சேகரித்து, ரத்தம் மூலமாக எல்லா பகுதிகளுக்கும் வழங்குகிறது. அப்படி உருவாக்கப்படுகிற சத்துக்களில் ஒன்று கால்சியம்.

உணவின்றி அமையாது உலகு - 14

இவ்வாறு, உணவுகளில் இருந்து பெறப்படுகிற எல்லா சத்துப்பொருட்களும் சிறுகுடலில் அமைந்துள்ள குடலுறிஞ்சிகளால் உறிஞ்சப்பட்டு, அவை ரத்தத்தில் கலக்கின்றன. உணவில் இருந்து பெறப்படும் கால்சியம், சிறுகுடலில் தயாராகிறது. குடலுறிஞ்சிகளால் கால்சியம் எடுத்துக் கொள்வதற்கு முன்னால், நம்முடைய குளிர்பானங்கள் சிறுகுடலுக்குச் செல்கின்றன. அதில் உள்ள பாஸ்பாரிக் அமிலம் கால்சியத்தோடு வினைபுரியத் தொடங்குகிறது. இந்த மாற்றத்தால் ரத்தத்தில் கலக்கப்பட வேண்டிய கால்சியம், கழிவாக மாறி குப்பைக்குப் போகிறது. இதே நிகழ்ச்சி தொடர்ந்து நடக்கும்போது உடலுக்குத் தேவையான கால்சியம் முழுமையாகக் கிடைப்பது இல்லை. அது மட்டும் அல்ல. பாஸ்பாரிக் அமிலத்தைச் செரிப்பதற்காகக் கூடுதல் கால்சியமும் தேவைப்படுகிறது.

`தொடர்ந்து கால்சிய உற்பத்தி பாதிக்கப்படுவதாலும், இருக்கும் கால்சியமும் அமிலத்தைச் செரிக்கப் பயன்படுவதாலும் நம் எலும்புகளுக்கும் பற்களுக்கும் தேவையான கால்சியம் கிடைப்பது இல்லை. இதனால்தான், தொடர்ந்து குளிர்பானங்கள் அருந்துகிறவர்களுக்கு கால்சியம் குறைந்து, எலும்பில் உள்ள கால்சியமும் கரையத் தொடங்குகிறது’ என்று ஆய்வுகள் கூறுகின்றன. பிறகு, கோடையில் உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்க என்னதான் செய்வது என்று கேட்கலாம். முதலில் குளிர்பானங்கள் நம் உடலைக் குளிர்ச்சிப்படுத்துவது இல்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். செயற்கையான ரசாயனக் கலவை உள்ள குளிர்பானங்களை அருந்துவதால், நம் உடலில் வெப்பம்தான் அதிகமாகுமே தவிர, குளிர்ச்சி ஏற்படாது. கோடைக் காலத்தில் பழரசம் அருந்தலாம். தேவையான அளவுக்கு ஐஸ் கட்டிகளையும் கலந்துகொள்ளலாம். ஆனால், ஐஸ் கட்டிகள் கலக்கப்பட்ட பழச்சாறுகளை கடகடவென குடிக்கக் கூடாது. ஒவ்வொரு முறையும் வாயில் வைத்து, சற்று நேரம் கழித்து விழுங்கும்போது, அதன் குளிர்ச்சியை உடலுக்கு ஏற்புடையதாக மாற்றிக்கொள்ள உதவும்.

இளநீர், பதநீர், பழச்சாறுகள் போன்றவற்றோடு மோரையும் பயன்படுத்தலாம். உண்மையான பாலில் இருந்து எடுக்கப்படும் தயிரைக் கடைந்து, வெண்ணெயை நீக்கிய பிறகு, அதனைத் தாளித்துப் பயன்படுத்துவது நல்லது. பொதுவாக, இந்த வகை இயற்கையான பானங்கள் அனைத்தும் உணவு வகையைச் சேர்ந்தவை. குறைவான பசி இருக்கும் போதும், உடல் சோர்வு ஏற்பட்டிருக்கும்போதும் இவற்றைப் பயன்படுத்தலாம். செயற்கை குளிர்பானங்களை முற்றிலும் தவிர்ப்பது நம்மை நோய்களில் இருந்து பாதுகாக்கும்.

- பயணம் தொடரும்

அதிகாலையில் தண்ணீர் அருந்தலாமா?

உணவின்றி அமையாது உலகு - 14

கோடைக் காலங்களில் காலை எழுந்தவுடன் அதிக அளவு தண்ணீர் குடிக்கும் பழக்கத்தைப் பலர் பரிந்துரைக்கிறார்கள். ஆனால், இது தேவையற்றது. தாகம் என்ற உணர்வு ஏற்பட்ட பின்பு, தண்ணீர் அருந்துவதுதான் சிறந்தது. பிறகு ஏற்படப்போகும் தாகத்துக்காக இப்போதே தண்ணீர் அருந்துவது உடலுக்குச் சிரமத்தைத்தான் தரும். பொதுவாக, காலையில் உடல் குளிர்ச்சியாகத்தான் இருக்கும். உடல் வெப்பமடையும்போதுதான் தாகம் ஏற்படும். எனவேதான், நமக்குக் காலையில் பெரும்பாலும் தாகம் ஏற்படுவது இல்லை. தாகம் இல்லாதபோதோ அல்லது தாகத்தைவிட அதிக அளவிலோ நாம் குடிக்கும் தண்ணீரைச் சேமிக்கும் ஏற்பாடு எதுவும் உடலில் இல்லை. தனக்குத் தேவையான தண்ணீரை உடல் பயன்படுத்திக்கொண்டு, எஞ்சியதை சிறுநீராக, வியர்வையாக வெளியேற்றிவிடும். ஒவ்வொரு முறையும் அளவுக்கு அதிகமாகத் தண்ணீர் அருந்துவது, உடலின் வெளியேற்றும் வேலையை அதிகரித்து, ஆற்றலை வீணடிக்கும்.