Published:Updated:

உணவின்றி அமையாது உலகு - 15

உணவின்றி அமையாது உலகு - 15
பிரீமியம் ஸ்டோரி
News
உணவின்றி அமையாது உலகு - 15

உணவின்றி அமையாது உலகு - 15

உணவின்றி அமையாது உலகு - 15

வ்வப்போது ரசாயனக் கலப்பு உள்ள உணவுப்பொருட்கள் குறித்து நாம் தீவிரமாகப் பேசுவதையும், தொலைக்காட்சிகளில் அது குறித்த உரையாடல்களைத் தொடர்வதையும், சில மாநில அரசுகள் அந்த உணவுகளைத் தடை செய்வதையும்  பார்க்கிறோம். உணவு குறித்த இந்த விவாதங்கள் அரசியல், சினிமா போன்ற துறைகளில் நடக்கும் ஏதேனும் ஒரு சம்பவத்தால் தடம் மாறி, நம் மனங்களைவிட்டு அகன்றுவிடும். மறுபடியும், அதே உணவுகள் நம் வீட்டு சமையல் அறைக்குள் இடம் பிடிக்கும்.

உணவு தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் எதுவும் நம் நாட்டைப் பார்த்துப் பயப்பட வேண்டியது இல்லை. தடை செய்யப்பட்ட உணவு, தற்காலிகமாக வேண்டுமானால் விற்பனை குறையலாமே தவிர, மற்றபடி ஒன்றும் ஆகிவிடப் போவது இல்லை என்பதற்கு, ஏராளமான உதாரணங்களை உருவாக்கிவிட்டோம்.

உணவின்றி அமையாது உலகு - 15

சில மாதங்களுக்கு முன்பு, பிரபல நிறுவனத்தின் நூடுல்ஸ் தடை செய்யப்பட்டது. மோனோ சோடியம் குளுகோமேட் மற்றும் காரீயம் எனும் இரண்டு ரசாயனங்கள், அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக இருப்பதாகச் சொல்லப்பட்டது. தொடர்ந்த சில மாதங்களில் இன்னும் சில நூடுல்ஸ்களிலும் இதே பிரச்னை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஒருவழியாகப் பிரச்னைகள் நீங்கி, சந்தைக்கு மீண்டும் வந்திருக்கிறது அந்த நூடுல்ஸ்.

அதேபோல, உள்ளூர் தயாரிப்பு என்ற மிகப்பெரிய விளம்பரத்தோடு சந்தைக்கு வந்த பிரபல யோகா குருவின் தயாரிப்பு நூடுல்ஸும் இப்போது சர்ச்சையில் சிக்கி இருக்கிறது. மீரட் நகரில் உணவுத் தரக்கட்டுப்பாட்டு நிர்வாகம் செய்த பரிசோதனையில், இந்த நூடுல்ஸில் சாப்பிடத் தகுதி அற்ற சுவையூட்டிகள் அதிக அளவில் சேர்க்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

ஆனால், உண்மையில் நூடுல்ஸ்களில் இது மட்டும்தானா பிரச்னை? நூடுல்ஸ், ஃபிரைடு ரைஸ் பெயர்களைக் கேட்டவுடனே, `இவை எல்லாம் ஃபாஸ்ட் ஃபுட், ஜங்க் ஃபுட். உடலுக்கு நல்லது இல்லை’ என்று அவசரமாகக் கூறுவது இன்று ஃபேஷனாகிவிட்டது. எந்த அளவுக்கு இந்த மறுப்பைக் கேட்கிறோமோ, அதைவிட அதிகமாக இந்த உணவுகள் சாப்பிடப்படுகின்றன என்பதுதான் நடைமுறை எதார்த்தம்.
ஃபிரைடு ரைஸ், நூடுல்ஸ் போன்ற உணவுகளும் சீனர்களின் பாரம்பரிய உணவுகள்தான். நூடுல்ஸ் பாரம்பரிய உணவுதான் என்றால், அதனைச் சாப்பிட்டால் உடல்நலக் குறைவு எப்படி ஏற்படும் என்று கேட்கலாம். இதற்கு, நூடுல்ஸ் தயாரிக்கும் முறைகளில் உள்ள குறைபாடுகள்தான் காரணம்.

உணவின்றி அமையாது உலகு - 15

நூடுல்ஸ் என்ற சொல்லுக்கு, `தட்டையாகத் தயாரிக்கப்பட்ட மாவுப்பொருள்’ என்பது அர்த்தம். இயற்கையாகக் கிடைக்கக்கூடிய கிழங்குகளில் இருந்து தயாரிக்கப்படும் மாவால் நூடுல்ஸ் செய்யப்படுகிறது. இந்தப் பாரம்பரிய நூடுல்ஸில் எந்தப் பிரச்னையும் இல்லை.

சீனர்கள், தனித்தனியாக தங்களுக்குத் தேவையான அளவுகளில் நூடுல்ஸைத் தயாரித்து, பதப்படுத்தி வைத்துக்கொள்வார்கள். பின்பு, தேவைப்படும்போது சமைத்து உண்பார்கள். கால மாற்றத்தில் நூடுல்ஸ் தயாரிப்பு வீடுகளில் இருந்து கம்பெனிகளுக்கு இடம் மாறியது. வியாபாரப் போட்டியில் தங்கள் நிறுவன நூடுல்ஸின் சுவையைக் கூட்டவும், அழகுபடுத்தவும் பல்வேறு ரசாயன உத்திகள் பயன்படுத்தப்பட்டன. இப்படி, இயற்கையான உணவாக இருந்து, கம்பெனி தயாரிப்பாக மாறிவிட்ட நூடுல்ஸ் ஏராளமான பிரச்னைகளோடு இந்தியாவுக்கு வந்தது.

1980-களில், பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச உணவாக ஒரு கம்பெனி இந்தியாவில் நூடுல்ஸை அறிமுகப்படுத்தியது. மார்க்கெட்டிங் டெக்னிக்காக, இலவசம் மூலமாகச் சுவையை அறிமுகப்படுத்தி, அதனை வியாபாரமாக்கும் முயற்சி வெற்றி அடைந்தது. இன்று, கிராமம் முதல், காஸ்மோபாலிட்டன் சிட்டிகள் வரை ‘2 மினிட்ஸ்’ நூடுல்ஸ் பரவிவிட்டது. நூடுல்ஸ் என்ற சீனப் பாரம்பரிய உணவின் பெயர் தாங்கிய இன்றைய உணவு, உண்மையில் நூடுல்ஸ் இல்லை.

உணவின்றி அமையாது உலகு - 15

உண்மையில், சீன நூடுல்ஸை இரண்டு நிமிடங்களில் சமைக்க முடியாது. வழக்கமான சமையலுக்கு ஆகும் நேரம் நூடுல்ஸ் தயாரிக்கவும் தேவைப்படும். காய்கறிகள் அல்லது கோழிக்கறியைத் தனியாக வேகவைத்து, நூடுல்ஸையும் தனியாக வேகவைத்து, இரண்டையும் கலந்து மறுபடியும் சமைப்பார்கள். உலர்மீன் துகள்கள் அல்லது உணவு வாசனைப் பொருட்கள் சேர்த்து, நூடுல்ஸைத் தயார் செய்து சாப்பிடுவார்கள். இதற்கும் நாம் இரண்டு நிமிடங்களில் மசாலா பொருட்களோடு தயாரிக்கும் நூடுல்ஸுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா என்ன?

உணவுகளுக்கான சத்து வரையறையை இங்கிலாந்து அரசின் ‘உணவுத் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு’ வெளியிட்டு உள்ளது. இந்திய அரசின் உணவுக் கட்டுப்பாட்டு ஆணையத்தில் இப்படியான சத்து வரையறைக்கான அளவுகோல்கள் எதுவும் இல்லை. எனவேதான், இங்கிலாந்து அளவை எடுத்துக்கொள்கிறோம். ஒவ்வொரு பாக்கெட் உணவுப்பொருளிலும் எந்த அளவு சத்துக்கள் இருக்க வேண்டும் என்பதைத்தான் உணவுக் கட்டுப்பாட்டு அமைப்புகள் நிர்ணயிக்கின்றன. அப்படி, உலகம் முழுவதும் நிர்ணயிக்கப்பட்ட குறைந்த அளவு சத்துக்கள்கூட இன்றைய நூடுல்ஸ்களில் இல்லை. இப்படிச் சத்துக்கள் இல்லை என்பதுகூட பெரிய பிரச்னை இல்லை. ஆய்வுக்கூடங்களில் சத்துக்கள் இருப்பதாகக் காட்டுவதற்காக, செயற்கை ரசாயனங்களைச் சேர்க்கின்றனர்.

இப்போது, நாம் நூடுல்ஸ் என்ற பெயரில் சாப்பிடும் உணவில், தயாரிக்கப்படும்போதே ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்க, `வேக்ஸ்’ எனப்படும் மெழுகு தடவப்படுகிறது. அப்போதுதான், பார்ப்பதற்கு அழகாக இருக்குமாம். சுவை கூட்டுவதற்காக மசாலா பொருட்களோடு ஒவ்வொரு கம்பெனியும் தனித்தனியான சீக்ரெட் ரசாயனங்களைப் பயன்படுத்துகின்றன.

உணவின்றி அமையாது உலகு - 15

நூடுல்ஸ்களில் இருக்கும் முக்கியமான பிரச்னை, சோடியம். 100 கிராம் நூடுல்ஸில் 130 முதல் 600 மி.கி வரைதான் சோடியம் இருக்க வேண்டும். ஆனால், இந்திய நூடுல்ஸ்களில் 821 முதல் 1,943 மி.கி வரை இருப்பதை இந்த ஆய்வு வெளிப்படுத்தியது. சோடியம் அதிகமான உணவுகளைத் தொடர்ந்து நாம் சாப்பிடும்போது `ஹைப்பர்நேட்ரீமியா’ எனப்படும் ரத்தத்தில் உப்புச்சமநிலை பாதிப்பு ஏற்படும் ஆபத்து உண்டு. `தொடர்ந்து சோடியம் அதிகரிப்பு நீடிக்குமானால், நம் உடலின் ஹார்மோன் சுரப்பிகளின் மையமான பிட்யூட்டரி சுரப்பி பாதிக்கப்படும்’ என்கின்றனர் மருத்துவ ஆய்வாளர்கள்.

2 மினிட்ஸ் நூடுல்ஸ்களில் சுவை கூட்டுவதற்காகச் செய்யப்படும் மசாலா கலவை, உப்பு, செயற்கைக் கொழுப்பு, சோடியம், ரசாயனச் சுவை கூட்டிகள் ஆகியவற்றால் நலம் தரும் உணவு, நோய் தரும் நஞ்சாக மாற்றப்படுகிறது. திடீர் ரத்த அழுத்த மாறுபாடு முதல் உடல்பருமன், உள்ளுறுப்புகளில் கழிவுத்தேக்கம், சிறுநீரகப் பாதிப்பு வரை ஏராளமான உடல்கோளாறுகளை ஏற்படுத்துவதாக இருக்கின்றன.
சேமியாவை வாங்கி, நம் சொந்தத் தயாரிப்பில் நூடுல்ஸ்களைச் சமைக்கலாம். நம்  பாரம்பரிய நூடுல்ஸான இடியாப்பத்தைக் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தலாம். தினசரி உணவாக இருக்கும் நூடுல்ஸைப் படிப்படியாக மாற்றி, சிறுதானிய உணவுகளைப் பழக்கப்படுத்தலாம். இதுதான் குழந்தைகளுக்காக நாம் செய்யவேண்டிய அவசியமான வேலை. 

- பயணம் தொடரும்