Published:Updated:

உணவின்றி அமையாது உலகு - 16

உணவின்றி அமையாது உலகு - 16
பிரீமியம் ஸ்டோரி
News
உணவின்றி அமையாது உலகு - 16

உணவின்றி அமையாது உலகு - 16

உணவின்றி அமையாது உலகு - 16

பெரும்பான்மையான மக்களால், முழு உணவாகப் பயன்படுத்தப்படும் பொருளை அதிகமாக உற்பத்தி செய்யும்போதுதான் ரசாயனக் கலப்படம் அதன் உச்சத்தை எட்டுகிறது. ரசாயனக் கலப்படத்தின் சமீபத்திய தாக்கம், அரிசியையும் விட்டுவைக்கவில்லை. அரிசியைப் பார்த்துப் பயந்து ஓடும் அளவுக்கு சமீப காலத்தில் அரிசிக்கு எதிரான பிரசாரங்கள் அதிகரித்துள்ளன. அரிசியில் இருக்கும் கார்போஹைட்ரேட், ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கச்செய்யும் ஒரு காரணிதான். ஆனால், நம் ஊரில், அரிசி உணவே கெட்டது என தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. சர்க்கரை நோய்க்கு மட்டும் அல்ல; எந்த ஒரு நோய்க்கும் அரிசி மட்டுமே காரணமாக இருக்க முடியாது. நமக்கு ஏற்படும் பெரும்பாலான நோய்களுக்கு நமது முறையற்ற உணவுப்பழக்கம், மாறிவிட்ட வாழ்க்கைமுறை போன்றவைதான் காரணங்கள். பசியற்றுச் சாப்பிடுவது, தேவைக்கு அதிகமாகச் சாப்பிடுவது, தூங்காமல் விழித்திருப்பது, செயற்கைச் சுவைகளுக்கு அடிமையாகி, ஊட்டச்சத்து இல்லாத உணவுகளை உண்பது போன்றவைதான் முக்கியமான காரணங்கள்.

இதற்கு அடுத்த இடத்தில் இருக்கும் நோய்க்காரணி, உணவு உற்பத்திமுறை. உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யும் வேளாண் முறைகளில் ஏற்பட்டிருக்கும் தலைகீழ் மாற்றங்கள் அந்தப் பொருட்களின் அடிப்படைத்தன்மைகளைப் பாதிக்கின்றன. உயிர்ச்சத்தைத் தரவேண்டிய உணவுப் பொருட்கள் விஷப் பொருட்களைச் சுமந்து நம் வீடுகளுக்குள் நுழைகின்றன.

உலகில் பல நாடுகளில் தடைசெய்யப்பட்ட ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் நம் நாட்டில் தங்கு தடையின்றி கிடைப்பதும், வேளாண்மையில் பயன்படுத்தப்படுவதும் தொடர்கிறது.

இப்படி மாறிவிட்ட ஒழுங்கற்ற வாழ்க்கைமுறை, விஷம் கலந்த உணவு உற்பத்தி இவற்றோடு, ரசாயனக் கலப்பு சமையல், இன்ஸ்டன்ட் உணவுகள் என்று, ஏராளமான நோய்க் காரணிகளை நாம் வைத்திருக்கிறோம். இவற்றை மறந்துவிட்டு, பிரதானமான நோய்க் காரணியாக அரிசியை முன்னிறுத்தும் பழக்கம் நம்மிடம் வந்திருக்கிறது.

உண்மையில், இயற்கை முறையில் விளைந்த, பட்டைத்தீட்டப்படாத அரிசி,  வெப்ப மண்டல நாடுகளுக்கான அருமையான உணவு. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, இந்தோனேஷியா, வியட்நாம், மலேசியா போன்ற நாடுகள் அரிசி உணவை மையமாகக்கொண்டவை. இந்த நாடுகளில் அன்றாட உணவுகளில் மிக முக்கிய இடம் பிடித்திருப்பது அரிசி உணவுதான்.

உணவின்றி அமையாது உலகு - 16

அதிலும், நம் நாட்டின் அரிசிகளின் ரகங்களும், வரலாறும் மிக முக்கியமானவை. இன்றைய அரிசி ரகங்கள் குறுகிய கால விளைச்சல், அதிக உற்பத்தி என்ற அடிப்படையில் சுருக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான அரிசி வகைகள் இருந்தன என்ற கதைகள் மட்டுமே நமக்குத் தெரியும். இன்றைய பயன்பாட்டில் 10-க்கும் குறைவான அரிசி ரகங்களே நடப்பில் உள்ளன. அவையும் நம் பாரம்பரிய அரிசி ரகங்கள் இல்லை. அரிசி ஆராய்ச்சி நிறுவனங்களின் தயாரிப்புகள்.

நம் நாட்டின் அரிசி வரலாறு 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியதாகச் சொல்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். மாப்பிள்ளைச் சம்பா, சீரகச் சம்பா, கருங்குருவை, குழியடிச்சான், குள்ளங்கார், காட்டுயானம் என்று தொடரும் நம் பாரம்பரிய அரிசி ரகங்களின் பெயர்கள் இன்றைய தலைமுறைக்குப் புரியாத சொற்களாகத் தோன்றும் அளவுக்கு நம் பயன்பாட்டில் இருந்து அவை மறைந்துவிட்டன. இந்தியா முழுவதும் விளைந்த அரிசி ரகங்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து அறுபதாயிரம் என்கிறார்கள். இத்தனை வகை அரிசிகளை நம் முன்னோர்கள் விளைவித்து, சுவைத்திருக்கிறார்கள். லாபம் மட்டுமே நோக்கமாகக்கொண்ட வேளாண்முறையும், அவசர உணவுத் தேவையும் நம் உணவுச் சொத்துகளைக் காணாமல் போகச் செய்திருக்கின்றன. அரிசிக்கு இப்போது என்ன நேர்ந்துவிட்டது? ஏற்கெனவே ரசாயனப் பயன்பாட்டாலும், தொழிற்சாலை முறை விவசாயத்தாலும் எல்லா உணவுப் பொருட்களும் விஷமாக மாறிக்கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் சந்தைக்கு வந்திருக்கும் ஆபத்துதான் பிளாஸ்டிக் அரிசி.

கடந்த ஆண்டு டெல்லி உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞர் சுக்ரீவ் துபேவால் தொடரப்பட்ட பொதுநல வழக்கின் மூலம் நம் நாட்டில் பிளாஸ்டிக் அரிசி  இருப்பது உறுதி செய்யப்பட்டது.  சீனாவில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் பலவகையான உணவுப் பொருட்கள் சரியான முறையில் தர மதிப்பீடு செய்யப்படுவது இல்லை. இதில், பிளாஸ்டிக் அரிசியும் அடக்கம் என்பது துபேவின் முறையீடு.

பிளாஸ்டிக் அரிசி என்றால் என்ன? பிளாஸ்டிக் அரிசி என்றவுடன் அரிசிக்குப் பதிலாக பிளாஸ்டிக்கைக் காய்ச்சி, வடிகட்டி அரிசி செய்வார்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது. உண்மையில் பிளாஸ்டிக் அரிசி என்பது, கிழங்கு மாவைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டு, பிளாஸ்
டிக் கோட்டிங் அடிக்கப்படும் ஒரு வகை அரிசிதான்.

உணவின்றி அமையாது உலகு - 16

ஏன் பிளாஸ்டிக்கைக் கலக்கிறார்கள்?

உணவு உண்டவுடன் எளிமையாகச் செரிக்க வேண்டும், வயிறு லேசாக இருக்க வேண்டும். பார்ப்பதற்கு எப்படி இருந்தாலும் பரவாயில்லை என்ற தர நிர்ணயம் எல்லாம் நம் முன்னோர்களோடு போய்விட்டன.

‘அரிசி அதிக வெண்மையாக இருக்க வேண்டும். பார்ப்பதற்கு பளபளப்பாக, உதிரி அரிசிகளாக இருக்க வேண்டும். சமைத்த பின்பும் தனித்தனியாக ஒன்றோடு ஒன்று ஒட்டாமல், பளபளப்பாக இருக்க வேண்டும்.’ இவைதான் சிறந்த அரிசியைக் கண்டுபிடிப்பதற்கான அளவுகோல்களாக நாம் வைத்திருப்பவை. இந்த அளவுகோள்தான் பிளாஸ்டிக் அரிசி தயாரிக்கக் காரணமாகிவிட்டது. இந்தப் பிளாஸ்டிக் அரிசியின் மூலப்பொருள் சர்க்கரைவள்ளிக் கிழங்கும், உருளைக் கிழங்கும்தான். இந்தக் கிழங்கு மூலப்பொருளோடு தொழிற்சாலைக் கழிவுகளில் இருந்து கிடைக்கும் சிந்தடிக் பிளாஸ்டிக் பிசினை மேற்பூச்சாகப் பயன்படுத்துகிறார்கள்.

கிழங்குகளால் தயாராகும் அரிசி  சாப்பிடுவற்கு மிருதுவாகவும், எளிதில் வேகும்படியாகவும் இருக்கும். மேற்பூச்சாக இருக்கும் சிந்தடிக் பிளாஸ்டிக், பளபளப்பையும் அழகையும் தரும். ஆக, முதல்தர அரிசியாக நாம் நம்பிக் கொண்டிருக்கும் தகுதிகளோடு பிளாஸ்டிக் அரிசி மார்க்கெட்டுக்கு வந்தால் நம்மால் கண்டுபிடிக்க இயலாது.

சாதாரணமாக அரிசியை வேகவைக்கும்போது அதில் இருக்கும் ஸ்டார்ச் தண்ணீரில் மெல்லியப் படலமாகப் படியும். பிளாஸ்டிக் அரிசியை வேகவைக்கும்போது கண்ணாடிப் படலம் போன்ற, சிந்தடிக் பிளாஸ்டிக் படிய வாய்ப்பு உண்டு. `இந்தப் படலத்தை எடுத்து உலரவைத்தால், மெல்லிய பிளாஸ்டிக் கிடைக்கும்’ என்கிறார்கள். நம் ஊரில், அரிசியையும்  குக்கரில் வைப்பதால் இதனைக் கண்டுபிடிக்க முடியாது.

அரிசி வெந்து, அதன் மென்மையான மணம் பரவும்போது கிழங்கின் வாசனை வெளிப்பட்டால் பிளாஸ்டிக் அரிசியாக இருக்க வாய்ப்புள்ளது. வேதியியல் பரிசோதனைகள் மூலம் மட்டும்தான் பிளாஸ்டிக் அரிசியை முழுமையாகக் கண்டுபிடிக்க முடியும். சிந்தடிக் பிளாஸ்டிக் கலக்கப்பட்ட அரிசி எளிதில் ஜீரணமாகாது. வேறு வழியின்றி  நம் உடல் அதனை ஜீரணித்தாலும், அதிலிருந்து எஞ்சும் பிளாஸ்டிக் பொருள் செரிமானப் பகுதிகளில் படியும். குடல் இயக்கம் பாதிக்கப்படுவதில் தொடங்கி, செரிமான உறுப்புகளில் பெரும் கட்டிகள், புற்றுநோய் வரவும் வாய்ப்பு உண்டு.

உலக அளவில் நடைபெறும் ரசாயனக் கலப்புகளில் இருந்து நாம் தப்பிக்க எளிய வழி  உணவுப் பரிசோதனைகள் அல்ல. உள்ளூரில், நம் பகுதியில் தயாராகும் அரிசியைப் பயன்படுத்துவதுதான். அதிலும், ரசாயன உரங்களற்ற மரபு ரகங்களைப் பயன்படுத்துவது செயற்கை ரகங்களில் இருந்து நாம் தப்பித்துக்கொள்ளும் வழி மட்டுமல்ல, நம் ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக்கொள்ளும் சிறந்த வழியும் அதுதான்.

- பயணம் தொடரும்!