
உணவின்றி அமையாது உலகு - 18

இந்த உலகில் நம் வேலை என்ன? இது ஏதோ ஆன்மிகத் தேடலைத் தூண்டும் கேள்வி என்று புரிந்துகொள்ள வேண்டாம். அறிவுத்தேடலுக்கான சாதாரணக் கேள்வி. நம் நடைமுறைகளில் இருந்து யோசியுங்கள். பதில் எளிமையானது.
உணவைத் தருவதும், பசியைத் தருவதும் இயற்கை. பசியை செயற்கையாக நாமே தூண்டிக்கொள்ள முடியாது. இயற்கையின் படைப்பில் இரண்டு நேரெதிரான தன்மையும் தானே உருவாகின்றன. உணவுத் தேவையை உணர்த்தும் பசியும், பசியைப் போக்கும் உணவும் இயற்கையின் படைப்புகள். உணவிலும் எத்தனை வகைகள்? ஆறு சுவைகள், விதவிதமான குணங்கள். ஆறு சுவை என்று எண்ணிக்கைக்காக சொல்லிக்கொள்ளலாமே தவிர, ஒவ்வொரு சுவையிலும் ஆயிரம் வகை உண்டு. இனிப்பில் எத்தனை வகை? புளிப்பில் எத்தனை வகை?
ஆக, இயற்கை உணவுகளைக் கொடுத்துள்ளது. அதனைப் பயன்படுத்த பசியையும் தந்திருக்கிறது. இப்போது சொல்லுங்கள்... நம் வேலை என்ன? சாப்பிடுவதுதான். இது வேடிக்கை அல்ல. உண்மையிலேயே மனிதர்களின் பிரதானமான வேலையே சாப்பிடுவதுதான். அறிவின் அடுத்த நிலையை அடைய வேண்டுமானால், அடிப்படை வேலையான உணவு உண்ணுதலை நிறைவு செய்ய வேண்டும். பசி வந்தால் பத்தும் பறந்து போகும் அல்லவா?

இந்த உலகின் எல்லா போர்களும் தொடங்கிய இடம் உணவுதான். பிற காரணங்கள் எல்லாம் அடுத்தடுத்த நிலைகளில்தான் இருக்கின்றன. நவீன மனிதர்களாகிய நமக்கு உணவுப் பிரச்னை முதல் இடத்தில் இல்லை. எல்லா விதமான உணவுகளையும் நம்மால் இயற்கையைப் பின்பற்றி உற்பத்தி செய்துகொள்ள முடிகிறது. ஆனால், நாம் என்ன செய்துவைத்திருக்கிறோம்?
எந்த உணவைப் பார்த்தாலும் அதில் என்ன விஷம் கலக்கப்பட்டிருக்குமோ என்ற பயத்துடன் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். எதிரியைப் பார்த்து அஞ்சி வாழ்ந்த மன்னர்களைவிட, அதீத விழிப்புஉணர்வுடன் நாம் நம் உணவுகளைக் கவனிக்க வேண்டியிருக்கிறது. நம் தட்டில் வந்து விழும் எல்லா உணவுகளையும் சந்தேகக் கண்ணோடு பார்க்கும் அளவுக்கு ரசாயனப் பயன்பாட்டில் உச்சம் தொட்டிருக்கிறோம். நம் பணவெறி மனநிலையை மட்டும் அல்ல, உடல் நிலையையும் பாதிக்கும் அளவுக்கு வளர்ந்து நிற்கிறது.
நாம் உண்ட அன்றாட உணவுப் பொருட்கள் அனைத்திலும் எவ்வளவு நஞ்சு? இதனை யார் கட்டுப்படுத்த முடியும்?
ஓர் உணவுப் பொருளை அரசுக் கட்டுப்பாட்டு நிறுவனம் உற்பத்தி நிலையில் சோதனை செய்ய வாய்ப்பு இருக்கிறது. அதுவும் சில மாதிரிகளில் மட்டுமே இந்த சோதனையை நடத்த முடியும். ஒரே ஒரு நிறுவனத்தில் தயாரிக்கப்படும் எல்லா உணவுகளையும், எல்லா நேரத்திலும் சோதனை செய்துகொண்டே இருப்பது சாத்தியம்தானா? என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.
அப்படியானால், உணவுக் கலப்படத்துக்கு அரசாங்கம் பொறுப்பில்லையா? என்ற கேள்வி எழலாம். அரசுக்கும் அதன் அமைப்புகளுக்கும் பொறுப்பு உண்டுதான். ஆனால், நடைமுறையில் தனிமனித விழிப்புஉணர்வும், அரசின் பொறுப்பு உணர்வும் இணையும்போதுதான் முழுமையாக உணவுக் கலப்படத்தில் இருந்து வெளிவர முடியும்.

ஒவ்வோர் உணவின் தயாரிப்புமுறையையும், அதன் உள்ளடக்கத்தையும் தெரிந்துகொள்ள வேண்டியது தனிமனிதனின் கடமை. அந்த உணவுத் தயாரிப்பில் உடல்நலனுக்குத் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் கலக்கப்படுகிறதா என்பதைக் கண்காணிப்பது அரசு அமைப்புகளின் கடமை. நம் நாட்டில் இரண்டுமே முழுமையாக நடைபெறவில்லை.
நம் உடலைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டியது நம் அடிப்படை வேலை. உணவுக் கலப்படம் குறித்து அறிந்துகொண்டு, அவற்றை தினசரி வாழ்வில் இருந்து நீக்கிக்கொள்வதே சரியான வழி. சரி... நாம் இந்த இதழில் ஐஸ்கிரீம் குறித்துப் பார்ப்போம்.
ஐஸ்கிரீமில் இரண்டு பிரச்னைகளை நாம் ஆராயலாம். ஒன்று சாதாரண ஐஸ்கிரீம் தயாரிப்புக்குப் பயன்படுத்தப்படும் பொருட்களில் உள்ள பிரச்னை.
பாலில் இருந்து தயாரிக்கப்படும் பொருள்தான் ஐஸ்கிரீம். பாலில் நாம் பார்த்த அனைத்துப் பிரச்னைகளும் ஐஸ்கிரீமிலும் இருக்கின்றன. செயற்கையாக பாலே இல்லாமல், ரசாயனப் பாலில் இருந்து ஐஸ்கிரீம் தயாரிக்கப்படுமானால், அதனால் உடல் என்ன ஆகும் என்று தனியாகச் சொல்ல வேண்டியது இல்லை.
ஐஸ்கிரீமின் பிரதான மூலப்பொருளான பால் மட்டும் பிரச்னை இல்லை. ஐஸ்கிரீமின் வாசனைக்காகச் சேர்க்கப்படும் செயற்கை மணம், கெடாமல் இருப்பதற்காகச் சேர்க்கப்படும் பிரெசர்வேடிவ்களும் உடல்நலத்துக்கு எதிரானது. ஆனால், நம் தினசரி உணவுகள் பலவற்றில் இந்தப் பதப்படுத்திகளும் செயற்கை சுவையூட்டிகளும் இருக்கின்றன. இவற்றைக்கூட செரிப்பதற்கான முயற்சிகளை உடல் மேற்கொள்ளும்.
ஐஸ்கிரீமில் இருக்கும் மிக முக்கியமான பிரச்னை இது அல்ல. ஐஸ்கிரீமைப் போன்றே தயாரிக்கப்படும் ஃப்ரோஸன் டெசர்ட்ஸ்.
ஐஸ்கிரீமில் இப்படி ஒரு பிரச்னை இருப்பது குஜராத் வழக்கில் இருந்துதான் வெளிப்பட்டது. குஜராத் கோ ஆபரேட்டிவ் மில்க் ஃபெடரேஷனால் அமுல் ஐஸ்கிரீம் தயாரிக்கப்பட்டு வருகிறது. திடீரென சந்தையில் அறிமுகமான ஒரு தனியார் நிறுவன ஐஸ்கிரீம் அதிகமான விற்பனையைப் பிடித்தது. அந்த ஐஸ்கிரீமை ஆய்வு செய்த அமுல் நிறுவனம் அதிர்ச்சியடைந்தது. ஏனெனில், அந்தத் தனியார் நிறுவனம் மார்க்கெட் செய்துகொண்டிருந்தது ஐஸ்கிரீம் அல்ல. ஐஸ்கிரீம் போன்ற செயற்கைத் தயாரிப்பு.
தனியார் நிறுவனத்தின் மீது மில்க் ஃபெடரேஷன் தொடரப்பட்ட வழக்குதான் ஐஸ்கிரீம் வேறு, ஃப்ரோசன் டெசர்ட் வேறு என்ற பிரச்னையை வெளிக்கொணர்ந்தது.

ஐஸ்கிரீம் தயாரிப்பது போல ஃப்ரோசன் டெசர்ட் தயாரிக்க பால் அவசியம் இல்லை. பால் மட்டும் அல்ல இயற்கையான எந்த உணவுப் பொருளும் அவசியம் இல்லை. முழுக்க முழுக்க செயற்கையாகவே தயாரிக்கப்படுகிறது. தாவர எண்ணெய், ஃப்ளேவர்கள், சுவையூட்டிகள், ப்ரசெர்வேடிவ்கள் இவையே போதும் ஃப்ரோசன் டெசர்ட் தயாரிப்பிற்கு. தாவர எண்ணெய் என்பது தாவரங்களில் இருந்து எடுக்கப்படுவது இல்லை என்பதை நாம் ஏற்கெனவே எண்ணெய் குறித்துப் பார்க்கும்போது விரிவாகப் பார்த்திருக்கிறோம். ஒவ்வோர் உணவுப் பொருளிலும் என்னென்ன விதமான சத்துகள் இருக்கின்றன என்பதை அந்தப் பொருளின் பேக்கிங்கில் தெரிவிக்க வேண்டும் என்பது நம் நாட்டு விதிமுறைகளில் ஒன்று. அப்படி ஐஸ்கிரீமிலும், ஃப்ரோஸன் டெசர்ட்டிலும் என்னென்ன உள்ளன என்பதைக் கவனியுங்கள். (பார்க்க: பாக்ஸ்)
ஃப்ரோஸன் டெசர்ட்டுக்கு நிறுவனம் கொடுக்கும் பட்டியல்களின் அடிப்படையில் எந்த உணவுப் பொருளிலும் சத்துகள் இருக்காது. அப்படியே இருந்தாலும், அவை செயற்கையான தயாரிப்பாக இருந்தால், நம் உடல் ஏற்றுக்கொள்ளுமா என்பதெல்லாம் வேறு விஷயம்.
இரண்டு பட்டியல்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால் என்ன வேறுபாடு என்பது புரியும். ஐஸ்கிரீம் பட்டியலில் கால்சியம் இருக்கிறது. ஃப்ரோஜன் டெசர்ட்டில் கால்சியம் இல்லை. அதற்குப் பதிலாக இரு வகைக் கொழுப்புகள் இருக்கின்றன. அவையும் செயற்கையான, நவீன அறிவியலால் கெட்ட கொழுப்பு எனப்படுபவை.
கோடைகாலத்துக்கு இதமாக இருக்கிறது என்று ஐஸ்கிரீம் சாப்பிடுவது நன்றாகத்தான் இருக்கும். அதே நேரம், அவை ஐஸ்கிரீமா அல்லது ஃப்ரோஸன் டெசர்ட்டா என்று அறிந்துகொண்டு சாப்பிடலாம். அதிலும், எப்போதாவது ஒருமுறை சாப்பிடுவதுதான் உடல்நலனைக் காக்கும்.
தொடர்ந்து ஐஸ்கிரீம் சாப்பிடுவர்களின் உடல் எடை கூடுவது அதன் செயற்கைத் தயாரிப்புகளால்தான், நம் அளவு மீறினால்தான் என்பதைப் புரிந்துகொண்டு, முடிந்தவரை தவிர்ப்பதுதான் ஆரோக்கியத்துக்கான வழி.
- தொடரும்
இப்போது பிரபலமாக இருக்கும் ஜிகர் தண்டா ஒரு காலத்தில் இயற்கையான உணவுதான். இப்போது செயற்கையான ஐஸ்கிரீம்களால் அதன் தன்மை மாறிப்போயிருக்கிறது. இந்தியில் ஜிகர் என்றால் – கல்லீரல். தண்டா – என்றால் குளிர்ச்சி. கல்லீரலுக்கு குளிர்ச்சியைத் தரக்கூடிய பானம் தான் – ஜிகர் தண்டா. இது ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாகத் தயாரிக்கப்படும். உடலுக்கு குளிர்ச்சி தரும் பழங்கள், நொங்கு போன்றவற்றை கொண்டு ஜிகர் தண்டா தயாரிக்கப்பட்டது. பழச்சாறுகளோடு, கடல் பாசி அல்லது பாதாம் பிசினைச் சேர்த்தால் ஐஸ்கிரீம் இல்லாமல் நேரடியாக ஜிகர்தண்டா தயாரிக்கலாம். உண்மையிலேயே கல்லீரலுக்கு குளிர்ச்சியைத் தரும்.
ஐஸ்கிரீமை வீட்டிலேயே தயார் செய்துகொள்ளலாம். நொங்கு, பட்டர் ஃபுரூட் போன்ற இயற்கையான பொருட்களை நன்றாக அரைத்துக் கூழாக்கி, ஐஸ்கிரீம் போன்ற அரை திரவ நிலையில் தயாரிக்கலாம். போதுமான அளவு சர்க்கரை அல்லது தேன் சேர்த்து ஃப்ரிட்ஜில் வைத்தால், இயற்கையான ஐஸ்கிரீம் தயாராகிவிடும். கெட்டியான, கொழகொழப்பான எல்லா பழங்களில் இருந்தும் ஐஸ்கிரீம் தயாரிக்கலாம்.