Published:Updated:

உணவின்றி அமையாது உலகு - 20

உணவின்றி அமையாது உலகு - 20
பிரீமியம் ஸ்டோரி
News
உணவின்றி அமையாது உலகு - 20

உணவின்றி அமையாது உலகு - 20

உணவின்றி அமையாது உலகு - 20

ர்க்கரையில் உள்ள ரசாயனங்களைப் பார்த்தால் இனி சர்க்கரை உபயோகிக்கவே கூடாது என்று தோன்றும். சர்க்கரைக்கு மாற்றாக, இயற்கை முறையில் கிடைக்கும் கருப்பட்டி, தேன் பயன்படுத்தலாம் என்று பலருக்குத் தோன்றும். பனை வெல்லம், கருப்பட்டி போன்ற இனிப்புகளின் விற்பனை அதிகரித்திருக்கிறது.

பெரிய கடையோ, சின்னக் கடையோ – விற்கப்படும் பனைப் பொருட்களைக் கவனித்தால், அது உண்மையானதா என்று கண்டுபிடித்துவிடலாம். கருப்பட்டி, வெல்லம் போன்ற பொருட்கள் பளபளப்பாக இருக்காது. ஒளியை உள்வாங்கும் தன்மையைக் கொண்டிருக்கும். எதையும் பிரதிபலிக்காது. சில புத்தகளின் அட்டை பளபள என்று லேமினேஷன் செய்யப்பட்டிருக்கும். இன்னும் சில புத்தகங்கள் லேமினேசன் செய்யப்பட்டிருந்தாலும் பளபளப்பு இல்லாமல் அழகாக இருக்கும். பளபளப்பற்ற லேமினேசனை மேட் ஃபினிஷிங் என்று சொல்வார்கள். பளபளப்பாக இருந்தால் அது வெள்ளைச் சீனியால் செய்யப்பட்டது. பளபளப்பற்று, தொண்டையை சிரமப்படுத்தாத சுவையுடன் இருப்பது உண்மையானது.

மருத்துவ ரீதியாக மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பையும், விற்பனையையும் கொண்டிருக்கும் தேனில் ரசாயனக் கலப்பைக் கண்டறிவதுதான் சிக்கலானது.

தேன், ஓர் அருமையான இயற்கை இனிப்பு. தேனீக்கள் தங்கள் மழைக்காலத் தேவைக்காக கூட்டில் சேமித்து வைத்திருப்பதை நாம் எடுத்துப் பயன்படுத்துகிறோம். நம்முடைய கூடுதல் பராமரிப்பு இல்லாத நிலையில் தேன் இயற்கையாகவே இருக்கிறது.

உணவின்றி அமையாது உலகு - 20

பரிசோதிக்கும் அளவுக்கு தேனில் என்ன பிரச்னை? தேன் என்ற பெயரில் சர்க்கரைத் தண்ணீரை நம் தலையில் கட்டிவிடுவார்கள் என்பதுதான் பிரச்னை. நம்முடைய எல்லாவிதமான பரிசோதனைகளையும் ஏமாற்றிவிடுவது தேனில் கலந்துள்ள ஈரப்பதம். தேனின் ஈரப்பதம் 20 சதவிகிதத்துக்கும் குறைவாக இருந்தால் அது ‘ஸ்பெஷல் கிரேடு’ தேனாக அங்கீகரிக்கப்படுகிறது. எற்றுமதியிலும் அதுதான் முதல் இடம் பிடிக்கிறது. 20 - 22 சதவிகிதம் வரை ஈரப்பதம் உள்ள தேன் ‘ஏ கிரேடு’ தேன் எனவும், 22 முதல் 25 சதவிகிதம் வரை ஈரப்பதம் இருந்தால், அது  ‘ஸ்டாண்டர்ட்’ தேன் எனவும் தரம் பிரிக்கப்படுகிறது. தரத்தை நிர்ணயிக்கும் இதே ஈரப்பதம்தான் தேனின் அடர்த்தியையும், சுவையையும் நிர்ணயிக்கிறது.

தேனில் சர்க்கரைப்பாகு கலப்பது என்பதெல்லாம் போன நூற்றாண்டுக் கதை. நவீன உணவுகள் பலவற்றைப் போலவே, தேனும் மிகப்பெரிய சந்தையைக் கொண்டுள்ளதால், நிறுவனங்கள் கைக்குப் போய்விட்டது. தேனிலும் கொள்ளை லாபம் பெற வேண்டுமானால், ரசாயனக் கலப்படம்தான் அவர்களின் ஒரே வழி.

இந்தியாவில் பரிசோதிக்கப்பட்ட தேன் மாதிரிகள் பலவற்றில் சில ரசாயனங்கள் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அது என்ன தெரியுமா?

நம் உடலில் நுண்ணுயிர்களைக் கொல்வதற்கு என்று நாம் பயன்படுத்துகிற ஆன்டிபயாட்டிக் மருந்துகள்தான் தேனிலும் இருந்தன. அதிலும் டெராமைசின், சல்பனோமையிட், டெட்ரா சைக்ளின், குளொரம்பெனிகால், எரித்ரோமைசின் போன்ற ஆன்டிபயாட்டிக்குகள் தேனில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.

தேவை என்று கருதி எடுத்துக்கொள்ளும் ஆன்டிபயாட்டிக்குகளிலேயே பிரச்னை தோன்றும்போது, சும்மா சாப்பிடும் தேனில் இவ்வளவு ஆன்டி பயாட்டிக்குகள் இருந்தால், நம் உடல் என்ன ஆவது?

தேனில் எப்படி ஆன்டிபயாடிக் சேருகிறது?

தேனில் எங்கிருந்து ஆன்டிபயாட்டிக்குகள் வந்தன? இக்கேள்விக்கு விடை தேடிய உணவு ஆய்வாளர்கள் கடைசியில் கண்டுபிடித்தார்கள். வளர்ப்புத்தேனீக்களில் இருந்து பெறும் தேனில்தான் இந்தப் பிரச்னை. பண்ணைகளிலும், வீடுகளிலும் இந்திய வகைத் தேனீக்கள் வளர்க்கப்படுகின்றன. மலைத்தேனீக்களைப் போல, தாக்கும் தன்மை இந்தியத் தேனீக்களுக்கு இல்லை என்பதாலும், கொட்டினாலும் விஷத்தன்மை இல்லை என்பதாலும் அவை வளர்ப்புத் தேனீக்களாகப் பராமரிக்கப்படுகின்றன.

இந்த தேனீக்கள் கூட்டம் கூட்டமாகக் காணாமல்போவதும், சில நேரங்களில் கூட்டம் கூட்டமாக செத்துப்போவதும் நடக்கின்றன. பாடி ஸ்பிரே, வாசனைத் திரவியங்களோடு தேன் கூடுகளுக்கு அருகில் சென்றால், அவை கூட்டமாக இடத்தை மாற்றிக் கொள்கின்றன. ஆனால், இறந்துபோவதற்கு என்ன காரணம்? வளர்ப்புத் தேனீக்களுக்கு ஏற்படும் சூழல் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி குறைவு போன்ற பொதுக்காரணிகளை வைத்து தேனீக்களின் இறப்பைக் கட்டுப்படுத்த அவைக்கு ஆன்டிபயாட்டிக்குகள் கொடுக்கப்படுகின்றன. எனவேதான், வளர்ப்புத் தேனீக்களில் இருந்து பெறப்படும் தேனில் மட்டும் ரசாயனப் படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

எல்லா வளர்ப்புத் தேன்களில் இந்தப் பிரச்னை இல்லை. யாரெல்லாம் தேனீக்களுக்கு ஆன்டிபயாட்டிக்குகளை தருகிறார்களோ, அந்தப் பண்ணைகளில் தான் இந்தப் பிரச்னை. இப்படி ரசாயனம் கலந்த தேனைக் கண்டுபிடிப்பது உடனடிச் சாத்தியமே இல்லை.
மேலைநாடுகளில் தேனின் கலப்படத்தைக் கண்டுபிடிப்பதற்காக தர நிர்ணய அமைப்புகள் பல வழிமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளன. சமீபத்தில் நம் நாட்டின் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பு தேனுக்கான புதிய கட்டுப்பாடுகளை வகுக்கும் என்று அறிவித்துள்ளது.

தேனில் இருக்கும் ஆண்டிபயாட்டிக்குகள் மட்டும் இல்லை. இன்னொரு முக்கியமான பிரச்னையும் இருக்கிறது. தொடர்ந்து பார்ப்போம்.

தேன் ஏற்றுமதி

உலகம் முழுவதும் 15 லட்சம் டன் தேன் எடுக்கப்படுகிறது. இதில் 40 சதவிகிதம் ஆசியாவில் இருந்து கிடைக்கிறது. வளரும் நாடுகளைச் சேர்ந்த ஒவ்வொரு குடிமகனும் சராசரியாக 100 முதல் 200 கிராம் தேனை தினமும் உண்ணுகின்றனர். வளர்ச்சியடைந்த நாடுகளில் தேன் பயன்பாடு இன்னும் அதிகம். இந்தியாவில் சுமார் 65,000 டன் தேன் எடுக்கப்பட்டு, 25,000 டன் ஏற்றுமதியாகிறது. தேன் பயன்பாடு என்பது தனக்கெனத் தனிச் சந்தையை உருவாக்கிக் கொள்ளும் அளவுக்குப் பெரியது.

25 சதவிகிதம் ஆன்டிபயாடிக்


ஏற்றுமதி செய்யப்படும் தேனில் ஆன்டிபயாட்டிக்குகள் இருப்பதைவிட, உள்நாட்டில் விற்பனையாகும் தேனில் 25 மடங்கு அதிகமாக ஆன்டி பயாட்டிக்குகள் இருப்பதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எங்கே வாங்கலாம்?

இயற்கை அங்காடிகளில் இயற்கையான தேன் கிடைக்கிறது. வளர்ப்புத் தேனீயை இயற்கையான முறையில் வளர்க்கும் விவசாயப் பண்ணைகளிலும், நல்ல தேன் வாங்க முடியும்.

தேனிக்கு எப்படி ஆன்டிபயாடிக் கொடுக்கிறார்கள்?

தேனிக்கு உணவு கிடைக்காத நேரங்களில் வளர்ப்பு தேனீப் பண்ணைகளில் தேன் கூட்டில் சர்க்கரைக் கரைசலை வைப்பார்கள். அதனை தேனி உணவாக உட்கொள்ளும். அப்படி, உணவு வைக்கப்படும் போது அதில் ஆன்டிபயாட்டிக்குகளைக் கலந்து கொடுத்துவிடுவார்கள். ஆன்டிபயாட்டிக்குகளை உணவோடு சாப்பிட்ட தேனீக்கள் அவற்றை செரிக்காமல் அப்படியே தேனின் வழியாக வெளியேற்றிவிடுகின்றன.

- பயணம் தொடரும்

நல்ல தேனை கண்டறிவது எப்படி?

உணவின்றி அமையாது உலகு - 20

நல்ல தேனை பலவிதமான வேதியல் பரிசோதனைகள் மூலம்தான் கண்டறிய முடியும் என்றாலும், நம் சுவை உணரும் தன்மையும் உதவி செய்யும். தொண்டையில் இறுக்கமும், புண் ஏற்படுவது போன்ற எரிச்சலும் ஏற்படுவது, அலுமினியம் சல்பேட் கலந்த தேனை அறிய உதவும்.  கருப்பட்டி, வெல்லம் போன்றவற்றின் சுவையை அறிந்தவர்கள் தேனின் சுவையில் உள்ள வேறுபாட்டையும் புரிந்துகொள்ளலாம்.