
உணவின்றி அமையாது உலகு - 21

உலக உணவுகளிலேயே மிகவும் உயர்ந்ததாகவும், மருத்துவ குணம் உள்ளதாகவும் நம்பப்படுகிற உணவு - தேன். அதிலும், ரசாயனக் கலப்படம் எப்படி ஏற்படுகிறது என்பதைப் பார்த்தோம்.
தேனில் ரசாயனக் கலப்படம் செய்யப்பட்டால், பாதிக்கப்படுவது உணவு மட்டும் இல்லை. சில பாரம்பரிய மருந்துவமுறைகளும்தான். முன்பு, நாட்டு மருந்துகளைத் தேனில் கலந்து சாப்பிடுவது எல்லா வீடுகளிலும் பழக்கம். இப்போதும் கிராமப்புறங்களில் கசப்பு மருந்துகளைத் தேனில் குழைத்தே தருவார்கள். தேனில் இருந்து தயாரிக்கப்படும் ஆயுர்வேத, சித்த மருந்துகளும் அதிகம். இந்த இரண்டு வகைப் பயன்பாடுகளிலும் ரசாயனக் கலப்பு உள்ள தேன் பயன்படுத்தப்பட்டால் என்ன ஆகும்? தேனில் இன்னொரு முக்கியமான பிரச்னையும் இருக்கிறது. நாம் பயிர்களுக்குத் தெளிக்கும் ரசாயனப் பூச்சிக்கொல்லிகள், உரங்கள் அனைத்தும் தேனில் கலக்கும் வாய்ப்புகள் அதிகம். புகழ்பெற்ற கடலியல் விஞ்ஞானியான ராக்கேல் கார்சன் 1962-ல் ‘மெளன வசந்தம்’ என்ற உலகப்புகழ் பெற்ற நூலை எழுதினார். வேளாண்மையில் நாம் பயன்படுத்தும் ரசாயனங்கள் நம்மைச் சுற்றி என்னென்ன பாதிப்புகளை எல்லாம் ஏற்படுத்துகின்றன என்பதைப் பற்றிய நூல்.
அமெரிக்காவின் மிகப் பிரசித்தி பெற்ற ராபின் பறவை 1960-களில் படிப்படியாகக் குறைந்து காணாமல்போயின. ராபின் பறவையின் அழிவு குறித்த ஆராய்ச்சியில் பல அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிப்பட்டன. பனிக் காலத்தில் இங்கிலாந்து போன்ற அயல்நாடுகளுக்குச் செல்லும் ராபின் பறவை, வசந்த காலம் பிறக்கும்போதுதான் நாடு திரும்பும். ஒரு முக்கியமான பறவை இனம் அழிந்துபோவது அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு அதிர்ச்சி அளித்தது.

இங்கிலாந்துப் பக்கம் சென்ற ராபின் பறவைகள்தான் பெரும்பான்மையாகத் திரும்பவில்லை என்ற உண்மையைக் கண்டுகொண்டனர். இங்கிலாந்தின் சாலை ஓர மரங்களில் இருந்த புழுக்களை ராபின் பறவை உணவாக உண்பதும், புழுக்களைத் தின்ற பறவைகள் இறந்துபோவதும் கண்டுபிடிக்கப்பட்டது. அப்படி அந்தப் புழுக்களில் என்னதான் இருக்கிறது என்ற கேள்விக்குப் பதில் தெரிந்தபோது, விஞ்ஞானிகளுக்கு அதிர்ச்சி.
1956-ம் ஆண்டில் இங்கிலாந்து நாட்டின் சாலையோர மரங்களில் உள்ள இலைகளை ஒரு வித வண்டுகள் தின்று அழித்தன. அந்த வண்டுகளைக் கட்டுப்படுத்தவும், அழிக்கவும் ஹெலிகாப்டர் மூலம் பூச்சிக்கொல்லிகள் தெளிக்கப்பட்டன. வண்டுகள் செத்துப்போயின.
ஆனால், பூச்சி மருந்து தெளிக்கப்பட்ட அந்த மரத்தில் இருந்து உதிர்ந்த நஞ்சு படிந்த இலைகளைத் தின்ற மண்புழுக்கள் இறந்தன. இறந்த மண்புழுக்களைத் தின்ற ராபின் பறவைகளும் அழிந்தன. மண்புழுவை உண்டும் சாகாமல் உயிர் பிழைத்த பறவைகள் கூடு கட்டவில்லை. சற்றுக் குறைவாக மண்புழுவை உண்ட பறவைகள் கூடுகட்டின. ஆனால், முட்டையிடவில்லை; இருந்த சில முட்டைகளில் 13 நாட்களில் குஞ்சு பொரிக்க வேண்டும். ஆனால் 21 நாட்களுக்குப் பின்பும் முட்டையில் எந்த மாறுதலும் இல்லை.
அமெரிக்காவின் ராபின் பறவைகள் 6,000 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் இங்கிலாந்தில் தெளிக்கப்பட்ட பூச்சிக் கொல்லிகளால் பாதிக்கப்பட்டன. பூச்சிக் கொல்லிகளின் பாதிப்பு, ராபின் பறவைகளோடு முடியவில்லை. மரங்களுக்கு மருந்து தெளிக்கப்பட்டபோது நீரில் விழுந்த நஞ்சால் மீன்களும் செத்துப்போயின.
அமெரிக்காவின் தேசியப்பறவையான வழுக்கைத்தலைக் கழுகும் மெள்ள மெள்ள அழிந்து வருவது, ரசாயனப் பூச்சிக்கொல்லிகளால் புற்றுநோய் அதிகமாவது உள்ளிட்ட பல விஷயங்களை ‘மெளன வசந்தம்’ நூலில் எழுதி உலகையே அதிரவைத்த ராக்கேல் கார்சன், புற்றுநோயாலேயே மரணமடைந்தார்.
இதே அனுபவம் கேரளாவில் நமக்கு இருக்கிறது. கேரள முந்திரிக்காடுகளில் ஹெலிகாப்டர்கள் மூலம் தெளிக்கப்பட்ட எண்டோசல்ஃபானின் விளைவுகள் இன்னும் தொடர்ந்து கொண்டிருப்பதைக் கண்கூடாகப் பார்க்கிறோம்.
இப்படி, ஒரு பிரச்னைக்காக நாம் ரசாயனங்களை நாடுகிறபோது, அதில் இருந்து புதிய பல பிரச்னைகள் கிளம்புவதை உலக அனுபவங்கள் உணர்த்துகின்றன.
தேனில் ஏற்படும் பாதிப்புகளைப் புரிந்துகொள்ள, நம் உணவில் ஏற்பட்டிருக்கும் ரசாயனப் பாதிப்பை இதன் மூலம் புரிந்துகொள்வது அவசியம். இயற்கையாக விளைகிறது என்று காய்கறி, பழங்கள், தானியங்களைக் கலப்படமற்ற பொருட்களாகக் கருதிவிட முடியாது. இவற்றில், நாமே செய்யும் நேரடிக் கலப்படங்கள்தான் வேளாண்மையில் பயன்படுத்தும் ரசாயனங்கள்.
சரி, தொடங்கிய இடத்துக்கு வந்துவிடலாம். உணவுப் பயிர்களில் நாம் பயன்படுத்தும் ரசாயனங்களுக்கும் தேனில் கலக்கும் ரசாயனங்களுக்கும் என்ன தொடர்பு?

தேனீக்களின் வேலைத்தன்மை பற்றி அறிந்து கொண்டால் இந்தக் கேள்வியே எழாது. தேனீக்கள் கூட்டத்தில் தேன் எங்கே இருக்கிறது என்பதை அறிந்துகொள்ளும் உளவுத் தேனீக்கள் பிரிவு இருக்கிறது. அவை, அதிகாலை நேரத்தில் கிளம்பி பூக்கள் இருக்கும் பகுதிகளைப் பார்வையிட்டு, தேன் சேகரிப்புப் படைக்குத் தகவல் பரிமாறும்.
ஆரம்ப காலத்தில் உளவுத் தேனீக்கள் ரசாயன மருந்து பயன்படுத்தப்பட்ட நிலங்களுக்கும், தோட்டங்களுக்கும் செல்வது இல்லை. ஏனெனில், பல வகை ரசாயனங்களின் நெடி தேனீக்களுக்கு ஒத்துவரவில்லை. இதுபோன்ற ரசாயன நெடிகள் இருக்கும் பகுதிகளில் இருந்து தேனீக்கள் தங்கள் கூட்டை மாற்றிக்கொள்ளும் தன்மை உடையவை.
எனவேதான், ரசாயன உரங்கள் பயன்படுத்தப்படும் இடங்களுக்கு தேனீக்கள் செல்லாமல் இருந்தன. ஆனால், நவீன காலத்தில் நெடியற்ற ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வகை ரசாயனங்களை தேனீக்களால் கண்டுபிடிக்க முடிவது இல்லை.
நாம் பயன்படுத்தும் ராசாயனங்கள் பயிரின் எல்லா பகுதிகளிலும் பரவுகிறது. அதன் ஒரு பகுதி பூவிலும், அதன் தேனிலும் காணப்படுகிறது. தேனீக்கள் வழக்கம் போல, நெடியற்ற ரசாயனத்தன்மை உள்ள தேனையும் எடுத்துக்கொண்டு செல்கிறது. ஒரே பகுதியில் சேகரிக்கப்படும் தேனில் அந்தப் பகுதியில் பயன்படுத்தப்படும் ரசாயனங்களின் பாதிப்புகள் நேரடியாகக் காணப்படுகின்றன.
உணவுச்சங்கிலி என்பது நாம் உண்ணும் உணவுகளை மட்டும் குறிக்கும் விஷயம் அல்ல. இந்த முழு உணவுச்சங்கிலியையும் நாம் பயன்படுத்தும் ரசாயனங்கள் நஞ்சுச் சங்கிலியாக மாற்றுகின்றன. இப்படித்தான் தேனில் ரசாயனங்கள் வந்து சேர்கின்றன.
இதனை ஆய்வுக்கூடப் பரிசோதனைகளில் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். இயற்கையான முறையில் இயற்கை வேளாண் பண்ணைகளில் வளர்க்கப்படும் தேனீக்களின் தேன்தான் நம்பகமானது.
ரசாயனக் கலப்பு உள்ள உணவுகளை அடையாளம் காண்பது எப்படி என்பதையும் அவ்வப்போது பார்த்துவருகிறோம். நம் வீட்டிலேயே செய்ய முடிந்த மிகச் சாதாரணமான முறைகள்தான் அவை. இன்னும் சில உணவுகளில் உயர் அறிவியல் தொழில்நுட்பரீதியாக ரசாயனக் கலப்பு செய்யப்படுகிறது. அவற்றைக் கண்டுபிடிக்கும் எளிய வேதியியல் சோதனைகள் சிலவற்றையும் நாம் அறிந்துகொள்வோம்.
- பயணம் தொடரும்

“நாம் சாதாரணமாகப் பயன்படுத்தும் பூச்சிக்கொல்லிகள் காற்றிலும் நீரிலும் பரவி விஷத்தன்மையை உருவாக்குகின்றன. இதே போன்ற நஞ்சை நம் நாட்டில் ஆண்டுதோறும் ஆயிரம் லட்சம் கிலோ அளவில் நமது பயிரிலும், நிலத்திலும், நீரிலும், காற்றிலும் கலந்துகொண்டே இருக்கிறோம்” என்றார் இயற்கை வேளாண் விஞ்ஞானி, முனைவர் நம்மாழ்வார்.
இந்தியால் இருந்து ஏற்றுமதியாகும் 217 உணவுப்பொருட்களுக்கு அமெரிக்கா தடை விதித்திருப்பதும், தமிழ்நாட்டில் இருந்து அனுப்பப்படும் காய்கறிகளுக்கு கேரளா தடை விதித்திருப்பதும் அரசியல் காரணங்களைத் தாண்டி அதில் கலந்திருக்கும் பூச்சிக்கொல்லி மருந்துகளும்தான் என்பதை நாம் மறுக்க முடியாது. அந்த அளவுக்குப் பிற நாடுகளைவிட, நம் நாட்டின் வேளாண்மையில் ரசாயனப் பயன்பாடு அதிகம்.
நாம் உண்ணும் உணவுகளைத்தான் வேளாண்மையில் உற்பத்தி செய்கிறோம். ஆனால், உடலிற்கு நேரடியாகத் தீங்கு விளைவிக்கும் விஷங்களை உரங்கள் என்ற பெயரில் அதனை வளர்க்கப் பயன்படுத்துகிறோம்.