Published:Updated:

உணவின்றி அமையாது உலகு - 22

உணவின்றி அமையாது உலகு - 22
பிரீமியம் ஸ்டோரி
News
உணவின்றி அமையாது உலகு - 22

உணவின்றி அமையாது உலகு - 22

உணவின்றி அமையாது உலகு - 22

வீன உலகத்தில் எல்லா துறைகளும் வளர்வதைப் போலவே கலப்படமும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் புதிய புதிய உத்திகளில் பெருகிக்கொண்டே இருக்கிறது. அரசின் உணவுக்கட்டுப்பாட்டு அமைப்புகள், அவ்வப்போது தீவிரமான கள ஆய்வுகளை நடத்திவந்தாலும் கலப்படம் உள்ள உணவுகள் சந்தைக்கு வந்துகொண்டேதான் இருக்கின்றன. உணவு நிறுவனங்களின் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளும் போதுமானதாக இல்லை.

முறையாக அனுமதி பெற்று சந்தைக்கு வரும் ஒவ்வொரு உணவுப்பொருளையும் ஒவ்வொரு முறையும் பரிசோதிப்பது அரசுக்கும் கட்டுப்பாட்டு நிறுவனங்களுக்கும் சாத்தியமா? ஆயிரக்கணக்கான உணவுப்பொருள் வகைகளையும், அவற்றைத் தயாரிக்கும் நூற்றுக்கணக்கான நிறுவனங்களையும் எல்லா நேரத்திலும் கண்காணிக்க வாய்ப்பே இல்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்த உணவுக் கலப்படத்தை நாமே கண்டறியும் வழிகள் என்ன என்பதைப் பார்க்கலாம்.

நவீன ரசாயனக் கலப்படங்களை சில எளிய வேதிப் பரிசோதனைகள் மூலமே கண்டறிய முடியும். முக்கியமான உணவுகளின் ரசாயனக் கலப்படங்களை எப்படி நாமே செய்வது என்பதை உணவுப் பாதுகாப்பு அலுவலர் எஸ்.கொண்டல்ராஜ் விளக்குகிறார்.

கலப்படம் பற்றிய கட்டுரைகளை வாசிக்கும்போது, பலருக்கு ‘இது எல்லாம் சும்மா பயமுறுத்துவதற்காக எழுதப்படுகிறது’ என்ற எண்ணம் ஏற்படுகிறது. நீங்கள் கேள்விப்பட்ட கலப்படங்கள் குறித்த செய்திகள் உண்மையானவைதானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள சில பரிசோதனைகளை மேற்கொண்டு பார்ப்போம். நமது அன்றாட உணவுப்பொருளான பாலில் செய்யப்படும் கலப்படத்தைக் கண்டறிய முயற்சிப்போம்.

உணவின்றி அமையாது உலகு - 22

தண்ணீர் கலந்த பால்

ஒரு வழுவழுப்பான டைல்ஸை எடுத்து, சுவரில் சரிவாக வைக்க வேண்டும். பாலின் ஒரு துளியை எடுத்து, சரிவான டைல்ஸின் மீது விடுங்கள். பால் மேலிருந்து கீழாக இறங்கும். இப்போது, பால் வழிந்து வந்த கோட்டைக் கவனியுங்கள். கோடு முழுவதும் வெண்மை நிறம் இருந்தால், அது தண்ணீர் கலக்கப்படாத பால். கோட்டில் சில இடங்களில் வெண்மை நிறம் இல்லாமல், தண்ணீர் ஓடிய தடம் இருந்தால், அது தண்ணீர் கலக்கப்பட்ட பால்.

மாவுக் கலப்படம்

காயங்களுக்கு ஒரு மருந்தைத் தடவுவார்களே நினைவு இருக்கிறதா? அதன் பெயர் ‘டிங்க்சர் அயோடின்’. இதைக்கொண்டு பாலில் மாவுப் பொருட்கள் கலக்கப்பட்டிருக்கிறதா என்பதைக் கண்டறியலாம். சிறிது பாலை எடுத்து, அதில் சில துளிகள் டிங்க்சர் அயோடினைக் கலக்கும்போது, பாலின் நிறம் நீலமாக மாறினால், அது மாவுப் பொருள் கலக்கப்பட்டது என்பதை உறுதிசெய்யலாம்.

 யூரியா கலப்படம்

ஒரு சிறிய கண்ணாடி டம்ளரில் இரண்டு டீஸ்பூன் பாலை எடுத்து, ஒரு டீஸ்பூன் சோயா பீன் பவுடரைக் கலந்து, ஐந்து நிமிடங்கள் கழித்து, சிவப்பு லிட்மஸ் தாளை பாலில் நனையுமாறு பிடித்துக்கொள்ளுங்கள். ஓரிரு நிமிடங்களில் சிவப்பு லிட்மஸ் தாள் நீல நிறமாக மாறினால், அந்தப் பாலில் யூரியா சேர்க்கப்பட்டிருப்பதை உறுதிசெய்யலாம். யூரியாவைக் கண்டுபிடிக்க, இன்னொரு பரிசோதனையும் உள்ளது. ஒரு கண்ணாடி டம்ளரில் 5 மி.லி பால், பாரா டிமெத்தில் அமினோ பென்ஸால்டைடு (Para dimethyl amino benzaldehyde - (16 percent)) வேதிப்பொருளைச் சேர்க்க வேண்டும். பால் மஞ்சள் நிறமாக மாறினால், யூரியா கலக்கப்பட்டிருக்கிறது என்று அர்த்தம்.

வனஸ்பதி (டால்டா) கலப்படம்

6 மி.லி பாலை ஒரு சிறிய கண்ணாடி டம்ளரில் எடுத்து, 20 துளிகள் அடர் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தைச் சேர்க்க வேண்டும். அடுத்ததாக, இரண்டு டீஸ்பூன் வெள்ளைச் சர்க்கரையைச் சேர்த்துக் கலக்க வேண்டும். பாலின் நிறம் சிவப்பாக மாறினால், வனஸ்பதி கலக்கப்பட்ட பால் என்பதை அறிந்துகொள்ளலாம்.

ஃபார்மலின் கலப்படம்

பால் நீண்டநேரம் கெடாமல் இருப்பதற்காக, அதில் கொடிய விஷமான ஃபார்மலின் கலக்கப்படுவது நடக்கிறது.  இதைக் கண்டறிய, ஒரு கண்ணாடி டம்ளரில், 20 மி.லி பாலை எடுத்துக்கொள்ளுங்கள். அதில், 10 மி.லி அடர் கந்தக அமிலத்தை டம்ளரின் உட்பக்கச் சுவரில் விட்டு நன்றாகக் கலக்க வேண்டும். மெதுவாக, டம்ளரின் உட்பக்கச் சுவரின் வழியாக இறங்கும் அமிலம், பாலில் கலக்கும்போது நீல நிறத்தில் புகை போன்ற வளையத்தை உருவாக்கினால், ஃபார்மலின் கலக்கப்பட்டிருக்கிறது என்று பொருள்.

டிடர்ஜென்ட் கலப்படம்

ஒரு கண்ணாடி டம்ளரில் பால் மற்றும் தண்ணீர் தலா 10 மி.லி எடுத்துக்கொண்டு நன்றாகக் கலக்க வேண்டும். நுரை வந்தால் அதில் சோப்புப் பொருட்கள் கலக்கப்பட்டுள்ளன.

இன்னொரு வேதியியல் பரிசோதனையும் உண்டு. கண்ணாடி டம்ளரில் 10 மி.லி பாலுடன், 10 மி.லி வெந்நீரைச் சேர்க்க வேண்டும். அதில், ஒன்றிரண்டு துளிகள் பினாப்தலின் சேர்க்கும்போது, பிங்க் நிறம் தோன்றினால் சோப்பு கலக்கப்பட்டிருக்கிறது என அறியலாம்.

உணவின்றி அமையாது உலகு - 22

குளுக்கோஸ் கலப்படம்

பாலில் தண்ணீர் கலப்பதால் அதன் இனிப்புச் சுவை குறைந்துபோகும். அதனை ஈடுசெய்ய குளுக்கோஸ் கலக்கப்படுகிறது. இப்படிக் கலந்தால்தான் லேக்டோ மீட்டர் பரிசோதனையில் இருந்து தப்ப முடியும்.

ஒரு கண்ணாடி டம்ளரில் ஆறு மி.லி பாலை ஊற்றி, அதனுடன் 6 மி.லி பார்ஃபோட்ஸ் ரீஜென்ட் (Barfoed’s reagent) எனும் வேதிப்பொருளைச் சேர்த்து, நன்கு கலக்க வேண்டும். பின்பு, அந்த டம்ளரை மூன்று நிமிடங்கள் வெந்நீரில்வைத்து, குழாய் நீரில் குளிரச்செய்ய வேண்டும். அதனுடன், ஒரு மி.லி  பாஸ்போமோலிப்டிக் அமிலத்தைச் (Phosphomolybdic acid) சேர்த்து நன்கு கலக்க வேண்டும். இதில், நீல நிறம் தோன்றினால் அது குளுக்கோஸ் கலப்படம் செய்யப்பட்ட பாலாகும்.

சோடியம் கார்பனேட், சோடியம்  பைகார்பனேட் போன்ற நியூட்ரிலைஸர்கள் கலப்படம்

ஒரு கண்ணாடி டம்ளரில் ஐந்து மி.லி பாலை ஊற்றி, அதனுடன் ஐந்து மி.லி ஆல்கஹால் மற்றும் ஐந்து துளிகள் ரோசாலிக் அமிலத்தைச் சேர்க்கும்போது, பாலின் நிறம் பிங்க் கலந்த சிவப்பு நிறமானால், அது சோடியம் கார்பனேட், சோடியம் பைகார்பனேட் கலப்படம் செய்யப்பட்ட பாலாகும்.

அம்மோனியம் சல்பேட் கலப்படம்

அம்மோனியம் சல்பேட்டும் லேக்டோ மீட்டர் அளவை ஏமாற்றுவதற்காகப் பாலில் கலக்கப்படுகிறது. ஒரு கண்ணாடி டம்ளரில் ஐந்து மி.லி சூடான பாலுடன், சிறிது சிட்ரிக் அமிலத்தைச் சேர்க்கும்போது அதில் திடப் பொருளாகப் பாலின் ஒரு பகுதி மாறும். அந்த திடப்பொருளைப் பிரித்து, அதை மற்றொரு கண்ணாடி டம்ளரில் இட்டு,  0.5 மி.லி பேரியம் குளோரைடைச் (Barium chloride) சேர்க்கும்போது, வீழ்படிவு ஏற்பட்டால், அது அம்மோனியம் சல்பேட் கலந்த பாலாகும்.

போரிக், சாலிசிலிக் அமிலக் கலப்படம்

ஒரு கண்ணாடி டம்ளரில் 5 மி.லி பாலுடன் சிறிது அடர் கந்தக அமிலம் மற்றும் 0.5 சதவிகிதம் ஃபெரிக் குளோரைடு சொல்யூஷன் (Ferric chloride solution) சொட்டுச் சொட்டாகச் சேர்த்து, நன்கு கலக்கும்போது, வெளிர் மஞ்சள், பிரவுன்  நிறம் கிடைத்தால், அது போரிக் ஆசிட் பவுடரும் ஊதா நிறம் கிடைத்தால் சாலிசிலிக் ஆசிட் பவுடரும் கலந்த கலப்படப் பால் என்று உறுதி செய்யலாம்.

இப்படி, பாலில் மட்டும் அல்ல எல்லா உணவுப்பொருட்களிலுமே கலப்படம் இருக்கத்தான் செய்கிறது. இதில் இருந்து தப்ப வேண்டுமானால், கலப்பட உணவுகளைத் தவிர்த்துவிட்டு, அவற்றுக்குப் பதில் மாற்று உணவுகளைப் பயன்படுத்தலாம். உதாரணமாக, தேங்காய் எண்ணெயில் லிக்யூட் பாரஃபின் கலப்பை அறிந்தால், செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தலாம்.

தவிர்க்க இயலாமல் கலப்பட உணவுகளை சாப்பிட நேர்ந்தால், அதன் பாதிப்பில் இருந்து தப்ப வழி உள்ளதா? என்று கேட்பவர்கள் சிலர் உள்ளனர். அவர்களுக்கான பதில், “ஆம், உள்ளது”. வாருங்கள், அதை அடுத்த இதழில் காண்போம்.

- பயணம் தொடரும்

வ்வோர் உணவையும் நம் சுவையின் அடிப்படையிலும் எளிய வீட்டுப் பரிசோதனை முறையிலும் கண்டறியும் வழிகளை ஏற்கெனவே பார்த்திருக்கிறோம். ஆனால், இன்றைக்கு இருக்கும் நவீன அறிவியல் வளர்ச்சி, சாதாரண மக்களுக்குப் பயன்படுகிறதோ இல்லையோ, கலப்படம் செய்யும் நிறுவனங்களுக்கு முழுமையாகப் பயன்படுகிறது. புதிய புதிய நவீன உத்திகளை உணவுக் கலப்படத்தில் நம் நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன.