
உணவின்றி அமையாது உலகு - 23

நம் அன்றாட உணவுகளில் கலக்கப்பட்டிருக்கும் விதவிதமான ரசாயன நஞ்சுகளை ஒவ்வொன்றாக அறிந்துகொண்டோம்.
உணவுக் கட்டுப்பாடு நிறுவனங்கள் மற்றும் அரசுகளின் விதிமுறைகள் கடுமையாக இருந்தாலும், உணவுத் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களின் லாப நோக்கால் நமது ஆரோக்கியத்தை இரண்டாம் இடத்துக்குத் தள்ளிவிட்டன.குறிப்பிட்ட ரசாயனப் பொருளின் அளவு இவ்வளவு இருப்பது உடலைச் சீர்கெடுக்காது என்று நம் உணவு விதிமுறைகள் கூறுகின்றன. ஆனாலும், நாம் தினமும் பயன்படுத்தும் உணவில் சிறுகச்சிறுகச் சேரும் ரசாயனங்கள் நம் உடலில் தங்கி, அளவில் கூடும்போதும் பாதிப்பதுதான் பயங்கரம். இதற்கான தீர்வு என்ன?
நாம் உண்ணும் ஒவ்வோர் உணவையும், அதன் ரசாயனத்தன்மை பற்றியும் நாம் அறிந்திருக்க வேண்டும். நம் தாத்தா காலத்தில், எந்த உணவு எங்கிருந்து வருகிறது என்பதை முழுமையாக அறிந்திருந்தார்கள். நம் அப்பா காலத்தில் எந்த உணவில் இருந்து எந்த உணவைத் தயாரிக்கிறார்கள் என்பது ஓரளவு தெரிந்திருந்தது. நம் காலத்தில் எல்லா உணவுகளும் பாக்கெட்டுகளுக்குப் போய்விட்டன. எந்த உணவில் இருந்து வருகிறது என்றோ, எப்படித் தயாரிக்கப்படுகிறது என்றோ நமக்குத் தெரியாது. நாம் உண்ணும் உணவு பற்றிய புரிதல் நமக்கு இருந்தே ஆக வேண்டும்.
சரி, உணவின் கலப்புகளை நாம் அறிந்துகொள்கிறோம். சில மோசமான உணவுகளைத் தவிர்க்கவும்செய்கிறோம். நம்மால் அறிந்துகொள்ள முடியாத ரசாயனக் கலப்பு உள்ள உணவுகளை என்ன செய்வது? அவற்றைச் சாப்பிடுவதாலும் தொந்தரவுகள் வரத்தானே செய்யும்?

நம் உடலை ரசாயனப் பாதிப்புகளில் இருந்து காத்துக்கொள்ள இரண்டு வழிகள் இருக்கின்றன.
ஒன்று, பசிக்கும்போது உண்ணுதல். இரண்டு, இரவு நேரத்துக்குப் படுக்கைக்குச் செல்லுதல்.
பசிக்கும்போது உண்பது நம் உணவில் உள்ள ரசாயனத்தன்மையை ஓரளவுக் குறைப்பதற்குப் பயன்படும்.
நாம் உடலுக்குகாகத்தானே சாப்பிடுகிறோம்? அது கேட்கும்போது கொடுப்பதுதானே சரி? உடல் கேட்பது என்பது பசியைக் குறிக்கிறது. எனவே, உடல் கேட்கும்போது உணவு கொடுத்தால், பசியின் வெப்பமும் செரிமானத்தன்மையும் நம் கலப்பட உணவுகளில் இருக்கும் கேடுகளை நீக்கிவிடும். அடுத்தது, உணவின் அளவு. ‘அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’ என்கிறார்கள். அளவு மீறாமல் எப்படிச் சாப்பிடுவது? நமக்குப் பசிக்கிறது. இப்போது உணவருந்துகிறோம். சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே போதும் என்ற உணர்வு தோன்றும். இது முதல் அறிவிப்பு.
அடுத்தநிலையில், நாக்கின் சுவையுணர்வு குறையத் துவங்கும். நாம் சாப்பிடத் துவங்கியபோது, முதன் முதலில் உணவில் இருந்த சுவை இப்போது குறைந்து, காணாமல் போகும். இந்த நிலையில் நாம் சாப்பிடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். மூன்றாம் நிலையில் போதுமான உணவு இரைப்பைக்குள் சென்றவுடன் இரைப்பை நிறைந்த உணர்வு ஏற்படும். இப்படி வயிறு நிறைந்த உணர்வு ஏற்பட்டதற்கும் மேல் நாம் சாப்பிட்டால், வயிறு கனமாகவும், உடல் சோர்வும் தோன்றும். மேற்கண்ட அறிவிப்புகள் எல்லாம் நம் உடலால் கொடுக்கப்படுபவை. “போதும் நிறுத்து” என்று அறிவிப்பவை. இப்படி, அளவோடு நிறுத்திக்கொள்வது, பசித்துச் சாப்பிடும் அளவுக்கு முக்கியமானது.
பசித்துச் சாப்பிடுவதும், அளவோடு சாப்பிடுவதும் எல்லா வகை உணவுகளையும் எளிதாகச் செரிப்பதற்கு உதவுகிறது. இரண்டாவது வழி, சரியான நேரத்துக்குச் தூங்கச் செல்வது. நம் உடலுக்குள் வரும் ரசாயனங்களைக் கண்டுபிடித்து, அவற்றை நீக்கும் வேலையைச்செய்வது கல்லீரல். நாம் குடிக்கும் தண்ணீர் வழியாக, சுவாசிக்கும் காற்று வழியாக, உண்ணும் உணவின் வழியாக, நம் உடலுக்குள் நுழையும் ரசாயனங்களை அழிக்கும் வேலையைச்செய்யும் உறுப்புதான் கல்லீரல்.
நம் உடலின் ராஜ உறுப்புகளின் ஒன்றான கல்லீரலை இப்போது இருப்பதைவிட இன்னும் பலமடங்கு பலத்தோடு வைத்துக்கொண்டால் நஞ்சுகளில் இருந்து தப்ப முடியும்.

நாம் செய்ய வேண்டியது, 10 மணிக்கு எல்லாம் படுக்கைக்குச் செல்வதுதான். எத்தனை மணிக்கு எழுந்தாலும் பரவாயில்லை. ஆனால், நாம் தூங்கச் செல்லும் நேரம் 10 மணிக்கு முன்னதாக இருக்க வேண்டும். ஆயிரக்கணக்கான ரசாயனங்களை உருவாக்குவதும், தேவையற்ற ரசாயனங்களை அழிப்பதும் எனப் பரபரப்பாக உள்ள கல்லீரல், இன்னும் சிறப்பாகப் பணியாற்ற தூக்கத்தை நாம் சரிசெய்ய வேண்டும். இவற்றைத்தான் நம் முன்னோர்கள் செய்துவந்தார்கள். நம்மைவிட வலுவானவர்களாகவும், ஆரோக்கியமானவர்களாகவும், நீண்ட ஆயுள்கொண்டவர்களாகவும் நம் தாத்தா, பாட்டிகளை மாற்றியது இந்த வாழ்க்கைமுறைதான். தூக்கத்தையும் பசியையும் பின்பற்றி, இயற்கையான வாழ்க்கைமுறையில் நம்மை இணைத்துக்கொள்ளும்போது, உடலும் மனமும் சீர்படுகிறது.
இவ்வளவு இயந்திரங்களும் நாகரிகங்களும் பெருகிவிட்ட இந்தக் காலத்தில் இயற்கையோடு வாழ்வது சாத்தியமா என்று தோன்றலாம். நம் உடலுக்கு வெளியே உள்ள எல்லா அறிவியல் முன்னேற்றங்களையும் தேவைக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். அவை, மனித அறிவின் முன்னேற்றம். ஆனால், உடலின் ஆரோக்கியத்துக்காக நாம் பின்பற்ற வேண்டிய அடிப்படை அம்சங்களைப் புறக்கணித்துவிடக் கூடாது.
இயற்கை வாழ்வியல் என்பது, கிராமங்களில் வாழ்வதைக் குறிப்பது இல்லை. நாம் எங்கு வாழ்கிறோம் என்பதைவிட, உடலின் இயற்கையோடு இணைந்து வாழ்கிறோமா என்பதுதான் முக்கியம். பசி, தூக்கம் போன்ற உடலின் அடிப்படைகளை நாம் பின்பற்றிவந்தால், நுட்பமான அறிவையும், எதையும் தாங்கும் உடலையும் இயற்கை நமக்குப் பரிசளிக்கும்.
- நிறைவடைந்தது
தொகுப்பு: ப்ரீத்தி
இரவில் நாம் தூங்கும்போது, கண்களில் பெறப்படுகிற குளிர்ச்சியின் அடிப்படையிலும், இரவின் குளிர்ச்சியின் பயனாலும் நம் மூளையின் அருகில் இருக்கும் பீனியல் சுரப்பி தூண்டப்படுகிறது. இதில் இருந்து மெலடோனின் என்ற ஹார்மோன் சுரந்து, உடலின் பல வேலைகளுக்குக் காரணமாக அமைகிறது. நம் உடலில் ஹார்மோன்கள் ஒவ்வொன்றும் தனித்தனியாக இயங்குவது இல்லை. ஒன்றை ஒன்று சாந்திருக்கின்றன. உதாரணமாக, அட்ரினலின் ஹார்மோன் சுரந்தால், இன்சுலின் சுரக்காது. டி.எஸ்.ஹெச் சுரந்தால்தான் தைராக்சின் ஹார்மோன் சுரக்கும். இப்படி, ஒன்றை ஒன்று சார்ந்த சுழற்சிதான், ஹார்மோன்களின் இயக்கம். இந்தச் சுழற்சியில் இரவுத்தூக்கத்தின்போது சுரக்க வேண்டிய மெலட்டோனின் சுரக்கவில்லை என்றால், படிப்படியாக மற்ற ஹார்மோன்களின் சுரப்பிலும் மாறுபாடு ஏற்பட வாய்ப்பு உண்டு. அதிலும், தொடர்ந்து மெலட்டோனின் சுரக்கவில்லை என்றால், விளைவுகள் மோசமாக இருக்கும்.
இயற்கை வாழ்வியல் என்பது, கிராமங்களில் வாழ்வதைக் குறிப்பது இல்லை. நாம் எங்கு வாழ்கிறோம் என்பதைவிட, உடலின் இயற்கையோடு இணைந்து வாழ்கிறோமா என்பதுதான் முக்கியம்.