கட்டுரைகள்
Published:Updated:

ஒல்லி பெல்லிதான் ஆரோக்கியமானதா?

ஒல்லி பெல்லிதான் ஆரோக்கியமானதா?
பிரீமியம் ஸ்டோரி
News
ஒல்லி பெல்லிதான் ஆரோக்கியமானதா?

ஆர்ட் ஆஃப் ஈட்டிங்!

பருமனானவர்கள் இந்தச் சமூகத்தில் எதிர்கொள்ளும் விமர்சனங்களும், கிண்டல் கேலிகளும் கொஞ்சமல்ல. அப்படியானால் ‘ஊசிபோல உடம்பிருந்தா தேவையில்லை பார்மசி’ என்பதுதான் எல்லோருக்குமான மெசேஜா? பருமனானவர்கள் எல்லாம் நோய்க்கு எளிய இலக்கு என்பது போன்றும், ஒல்லியானவர்கள் எல்லாம் ஆரோக்கிய தூதர்கள் என்பது போன்றும் பார்ப்பது சரியா? சந்தேகங்களைத் தீர்த்து வைக்கிறார் சென்னையைச் சேர்ந்த, உணவு மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகரும், பிரபலங்களின் டயட்டீஷியனுமான ஷைனி சுரேந்திரன்.

‘‘ஒல்லியாக இருப்பதா, ஃபிட்டாக இருப்பதா... எது ஆரோக்கியமானது என்ற விவாதம் பல வருடங்களாகத் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. எடை அதிகமாக, பருமன் பிரிவில் வருவோர் சரியான வடிவுடையவர்கள் அல்லர் என்ற நம்பிக்கையும் பலகாலமாகத் தொடர்வதுதான். ஆனால் அது முற்றிலும் உண்மையல்ல. ஒல்லியாக இருப்பதோ, பருமனாக இருப்பதோ, ஃபிட்னெஸ்ஸைத் தீர்மானிப்பதில்லை என்பதே உண்மை. எனவே இந்த இரண்டையும் சேர்த்துக் குழப்பிக்கொள்ளத் தேவையில்லை.

Iஷைனி சுரேந்திரன்
Iஷைனி சுரேந்திரன்

சிலர் பருமனாக இருப்பார்கள். ஆனாலும் ஃபிட்டாக இருப்பார்கள். அதாவது ஒல்லியாகவும், எடை குறைந்தவர்போலவும் இருப்பவர்களைவிட பருமனானவர்கள் அதிக ஆரோக்கியமாக இருக்கக்கூடும். ‘வளர்சிதை மாற்ற ஆரோக்கிய பருமன்’ (Metabolically Healthy Obese) என்ற ஒன்றை விஞ்ஞானிகள் கடந்த சில ஆண்டுகளாகக் குறிப்பிடத் தொடங்கியுள்ளனர். இவர்கள் குறிப்பிடும் இந்தப் பிரிவில் வருபவர்கள், பருமனாக இருப்பார்கள்; ஆனாலும் அவர்களுக்கு ரத்த சர்க்கரை, கொலஸ்ட்ரால், ரத்த அழுத்தம் போன்ற ரிஸ்க் எதுவும் இருக்காது. சுறுசுறுப்பாக, ஆக்டிவ்வாக இருப்பது இந்த ஆபத்து காரணிகளைக் குறைத்திருக்கலாம் அல்லது நீக்கியிருக்கலாம். அதாவது உடல்பருமனுடன் நீரிழிவு, கொலஸ்ட்ரால் மற்றும் ரத்த அழுத்த பாதிப்புகள் உள்ளவர்களைவிட, ‘வளர்சிதை மாற்ற ஆரோக்கிய பருமன்’ உள்ளவர்களுக்கு ஆரோக்கியம் தொடர்பான ஆபத்துகள் குறைவு.

‘வளர்சிதை மாற்றப் பருமனான சாதாரண எடை (Metabolically Obese Normal Weight - MONW)’ என்ற ஒன்றையும் விஞ்ஞானிகள் வகைப்படுத்துகிறார்கள். இந்த நிலை சாதாரண எடை மற்றும் சரியான உடல் நிறை குறியீட்டெண் (BMI) உள்ளவர்களைக் குறிக்கிறது. ஆனாலும் இவர்களுக்கு வளர்சிதை மாற்றம் தொடர்பான நோய்கள் பாதிக்கும் அபாயமும் இருக்கும்.

ஒல்லி பெல்லிதான் ஆரோக்கியமானதா?

ஒல்லியாக இருப்பவர்கள் எல்லோரும் ஆரோக்கியமானவர்கள் என்று அர்த்தமில்லை. சிலர் ஒல்லியாக இருப்பார்கள், ஆனாலும் அவர்களுக்கு ஆரோக்கிய அச்சுறுத்தலுக்கான ரிஸ்க்குகள் இருக்கலாம். இவர்களை ‘உள்ளே, வெளியே’ பிரிவினராக (Thin on the Outside but Fat on the Inside -TOFI) வகைப்படுத்துகிறார்கள் விஞ்ஞானிகள். அதாவது வெளித்தோற்றத்தில் ஒல்லியானவர்கள், உடலுக்குள் கொழுப்பு உள்ளவர்கள். இவர்களுக்கும் நீரிழிவு, இதயநோய், உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றுக்கான ரிஸ்க் இருக்கும். இவர்களுக்கு இடுப்பைச் சுற்றிக் கொழுப்பு அதிகம் சேரும். இளம்வயதிலேயே இதயநோயால் பாதிக்கப்படவும், அதனால் உயிரிழப்பு ஏற்படவும்கூட வாய்ப்புகள் உண்டு.

எனவே பருமனாக இருந்தாலே ரிஸ்க்தான் என்றும் எண்ண வேண்டாம்; ஒல்லியாக இருந்தால் ஆரோக்கியம் என நம்பவும் வேண்டாம். ஒல்லியாக இருந்தாலும் உடற்பயிற்சியே செய்யாத நபர், ஆரோக்கியமானவராக இருப்பதாக நினைத்துக்கொள்ள முடியாது.

ஒல்லி பெல்லிதான் ஆரோக்கியமானதா?

ஒல்லியோ, பருமனோ... உங்கள் உடல்வாகு எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆரோக்கியமாக இருப்பதுதான் அல்டிமேட் லட்சியமாக இருக்க வேண்டும். எடை அதிகமிருந்தால் உடற்பயிற்சி செய்வது, சரிவிகித உணவுகளைச் சாப்பிடுவது, ஆரோக்கியமான வாழ்க்கைமுறையைப் பின்பற்றுவது என இந்த மூன்றையும் எப்போதும் கவனத்தில் கொள்ளுங்கள்.

- பழகுவோம்