
ஆர்ட் ஆஃப் ஈட்டிங்!
ஸ்ட்ரெஸ்ஸில் இருக்கும்போது சாக்லேட் சாப்பிடத் தோன்றியிருக்கிறதா? மன அழுத்தத்தில் இருக்கும்போது சாப்பாட்டை ஃபுல் கட்டுக் கட்டிய அனுபவம் இருக்கிறதா? ‘அது இயல்பானதுதான்... உணவுக்கும் மூளைக்குமான உறவு அப்படிப்பட்டது’ என்கிறார் சென்னையைச் சேர்ந்த உணவு மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகரும், பிரபலங்களின் டயட்டீஷியனுமான ஷைனி சுரேந்திரன். மூளைக்கும் உணவுகளுக்குமான தொடர்பையும், மூளையின் ஆரோக்கியத்தில் உணவின் பங்கையும் விளக்குகிறார் அவர்.
‘‘நம் உடலில் மூளையானது 24X7 ஓய்வின்றி இயங்கிக்கொண்டே இருக்கும். நம் எண்ணங்கள், அசைவுகள், சுவாசம், இதயத்துடிப்பு என எல்லாவற்றையும் மூளைதான் பார்த்துக்கொள்கிறது. நாம் தூங்கும்போதுகூட மூளை ஓய்வெடுப்பதில்லை. அப்படிப்பட்ட மூளை இயங்க, தொடர்ச்சியான ஆற்றல் சப்ளை செய்யப்பட வேண்டுமல்லவா? மூளைக்கான ஆற்றல் என்பது நாம் உண்ணும் உணவிலிருந்தே போகிறது. அது மட்டுமல்ல... நாம் சாப்பிடும் உணவுகளுக்கு நம் மனநிலையோடும் தொடர்புண்டு.

காஸ்ட்லியான காரானது தரமான எரிபொருள் நிரப்பப்படும்போது எப்படி சிறப்பாக இயங்குமோ, அப்படித்தான் தரமான உணவுகள் கொடுக்கப்படும்போது மூளையும் சிறப்பாக இயங்கும். தாதுக்கள், வைட்டமின்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்த உணவுகள் மூளையின் ஊட்டத்தை அதிகப்படுத்தி, செல்கள் பாதிப்படைவதைத் தடுக்கும். கலப்பட பெட்ரோலும் டீசலும் வாகனத்தை பாதிப்பதற்கு இணையானதுதான், சத்துகள் இல்லாத, தரமற்ற உணவுகளால் ஏற்படும் மூளை பாதிப்பு. உதாரணமாக, சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை சேர்த்த உணவுகள் மூளையின் இயக்கத்தை பாதிப்பதையும், மனநிலைத் தடுமாற்றங்கள் மற்றும் மன அழுத்தம் போன்றவற்றுக்கு முக்கியக் காரணமாக இருப்பதையும் பல ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.

மூளையில் சுரக்கும் செரட்டோனின் எனும் ரசாயனமானது நம் நல்ல மனநிலைக்குக் காரணமாகிறது. இதை ‘மெசெஞ்சர் கெமிக்கல்’ என்றே சொல்லலாம். கார்போஹைட்ரேட் உணவுகளைச் சாப்பிடுவதன் மூலம் இந்த கெமிக்கல் மூளைக்குக் கிடைக்கும். சாக்லேட் சாப்பிட்டால் மனம் உற்சாகம் அடைவதை நீங்கள் உணர்ந்திருக்கலாம், அல்லது கேள்விப்பட்டிருக்கலாம். மோசமான மனநிலையில் உள்ளவர்கள் சாக்லேட் சாப்பிடுவதையும் பார்த்திருக்கலாம். காபியிலும், கோலா உள்ளிட்ட பானங்களிலும் உள்ள கஃபைன் கிட்டத்தட்ட மருந்து போன்றது. அது உடனடியாக மூளையைத் தூண்டி, சுறுசுறுப்பாக்கும். களைப்பை நீக்கும். ஒரு நாளுக்குப் போதுமான அளவு கஃபைனை எடுக்காதவர்கள், இந்தச் சுறுசுறுப்பு இல்லாததாக உணர்வதையும் கேள்விப்படலாம். அதே நேரம் அளவுக்கதிக கஃபைன் எடுத்துக்கொள்வது எரிச்சல், தலைவலி உள்ளிட்ட எதிர்மறையான விளைவுகளையும் தரலாம்.

நல்ல மனநிலைக்கான உணவு என்பது போதுமான அளவு புரதம், வைட்டமின், தாதுக்கள் நிறைந்த சரிவிகித அளவில் இருக்க வேண்டும். நிறைய காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள், புரதச்சத்து, ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த மீன் போன்றவையும் நல்ல மனநிலைக்கு உத்தரவாதம் தரக்கூடியவை.
வாழ்வின் முதல் சில வருடங்களில் மூளையின் ஆரோக்கியத்துக்கான அடிப்படை போடப்படுகிறது. குழந்தைப்பருவத்தில் பிள்ளைகளுக்குப் பழக்கப்படும் உணவுகள், உணவு குறித்த அவர்களது நடத்தை, சிந்தனை போன்றவை பிற்காலத்தில் அவர்களது மனநலனில், குறிப்பாக அறிவாற்றல், மொழித்திறன் போன்றவற்றில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே குழந்தைகளுக்கு ஆரோக்கிய உணவுப்பழக்கத்தை அறிமுகப்படுத்துங்கள். வைட்டமின் ஏ, பி12, டி, இரும்புச்சத்து, ஃபோலேட், துத்தநாகம், கோலின், ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ளிட்ட அனைத்துச் சத்துகளும் கொண்ட உணவுகளை அவர்களுக்குக் கொடுத்து வளர்க்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகள், கொழுப்பு நிறைந்த உணவுகள், துரித உணவுகள், அதிக இனிப்பு சேர்த்த உணவுகளைக் கொடுக்க வேண்டாம். அவர்களது உடல் ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல, மன ஆரோக்கியத்துக்கும் உணவுப்பழக்கமே அடிப்படை என்பதை மறந்துவிடாதீர்கள்.
- பழகுவோம்