கட்டுரைகள்
Published:Updated:

கலோரிகளைக் கணக்கிட்டுச் சாப்பிடுவது சாத்தியமா?

ஆர்ட் ஆஃப் ஈட்டிங்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஆர்ட் ஆஃப் ஈட்டிங்!

ஆர்ட் ஆஃப் ஈட்டிங்!

கலோரி... இந்த வார்த்தையை ஆரோக்கியத்தில் அக்கறை உள்ளவர்கள் அறிவார்கள்.

ஆரோக்கியத்தில் அதீத அக்கறை உள்ளவர்கள், ஒவ்வொரு வாய் உணவிலும் உள்ள கலோரிகளைக் கணக்கிட்டுச் சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருப்பதையும் பார்க்கலாம்.

கலோரி என்றால் உணவினால் உடலுக்குக் கிடைக்கும் சக்தியின் அளவு.

கலோரியின் அவசியம், எடைக்குறைப்பில் அதன் முக்கியத்துவம், கலோரியைக் கணக்கிடுவது எப்படி என எல்லாவற்றையும் விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த உணவு மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகரும், பிரபலங்களின் டயட்டீஷியனுமான ஷைனி சுரேந்திரன்.

கலோரிகளைக் கணக்கிட்டுச் சாப்பிடுவது சாத்தியமா?

‘‘எடை விஷயத்தில் கலோரி என்பது அதிக முக்கியத்துவம் பெறுகிறது. அதாவது, நீங்கள் உண்ணும், அருந்தும் உணவுகளின் மூலம் உங்கள் உடலுக்குக் கிடைக்கும் சக்தி எவ்வளவு என்பதே இது. ஒரு நாளில் உங்கள் உடலுழைப்பின் அளவு எவ்வளவு என்பதைப் பொறுத்தே உங்கள் உடல் எடை கூடும், குறையும்.

எடையைக் குறைக்க விரும்புவோர், அதிக எனர்ஜியைப் பயன்படுத்த வேண்டும். அதாவது, உணவின் மூலம் உங்களுக்குக் கிடைப்பதைவிட அதிக கலோரிகளை எரிக்க வேண்டும். உடல் எடை கூட வேண்டும் என விரும்புவோர், எனர்ஜியைக் குறைவாகப் பயன்படுத்தி, உணவின் மூலம் கிடைக்கும் கலோரி அதிகமிருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். இந்த அடிப்படையில்தான் உடல் எடையை ஏற்றவோ, குறைக்கவோ முடியும்.

அது எப்படி?

தினமும் நீங்கள் 500 கலோரி அளவுள்ள உணவை எடுத்துக்கொள்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். நீங்கள் எடையைக் குறைக்க நினைக்கிறீர்கள் என்றால், உங்கள் உடலுழைப்போ, உடற்பயிற்சிகளோ அந்த 500-ஐவிட அதிக கலோரிகளை எரிப்பதாக அமைய வேண்டும். அல்லது, தினசரி உணவில் 500 கலோரிகளுக்குக் கீழே குறைத்து உண்ண வேண்டும்; உடலியக்கம் மூலம் 500 கலோரிகளுக்கு அதிகமாக எரிக்க வேண்டும்.

Iஷைனி சுரேந்திரன்
Iஷைனி சுரேந்திரன்

கலோரியைக் கணக்கிடுவது எப்படி?

அதைத் தெரிந்துகொள்வதற்கு முன், ஒரு நாளுக்கு உங்களுக்கு எத்தனை கலோரிகள் தேவை என்பதைத் தெரிந்து

கொள்ள வேண்டும். அதற்கு உங்களுக்கு இரண்டு வழிகள் உள்ளன. ஆன்லைன் கால்குலேட்டர்கள், ஹெல்த் ஆப் போன்றவை இதற்கு உதவலாம். அடுத்து அங்கீகரிக்கப்பட்ட டயட்டீஷியனின் உதவியை நாடலாம். கலோரிகளைக் கணக்கிடுவது இந்த வழிகளில் சாத்தியமானாலும், அதன் மூலம் உங்கள் உணவின் தரத்தை அறிய முடியாது. அதேபோல உங்கள் உணவிலுள்ள நுண்ணூட்டச்சத்துகள் குறித்தும் கலோரி கால்குலேட்டர் காட்டாது. எனவே நீங்கள் சாப்பிடும் உணவானது சத்துகள் நிறைந்ததாக இருப்பதை முதலில் உறுதிசெய்துகொள்ளுங்கள். எந்த உணவிலிருந்து எத்தனை கலோரிகள் உடலுக்குச் சேர்கின்றன என்பது உங்கள் ஆரோக்கியத்தில் பிரதிபலிக்கும்.

கலோரிகளைக் கணக்கிட்டுச் சாப்பிடுவது சாத்தியமா?

உதாரணத்துக்கு, இன்று குறிப்பிட்ட அளவு நட்ஸ் சாப்பிட்டிருப்பீர்கள். அதனால் உங்கள் உடலில் குறிப்பிட்ட அளவு கலோரி சேர்ந்திருக்கும். அதுவே இன்னொரு நாள் ஐஸ்க்ரீம் சாப்பிட்டிருப்பீர்கள். அதுவும் நட்ஸ் அளவுக்குக் கலோரிகளைக் கொடுத்திருக்கலாம் என்றாலும், இரண்டு உணவுகளும் உங்கள் ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் தாக்கம் வேறுவேறானது. நட்ஸ் உங்களுக்குப் புரதம், வைட்டமின், தாதுச்சத்து, நார்ச்சத்து, ஆரோக்கியமான கொழுப்பு ஆகியவற்றைக் கொடுத்திருக்கும். ஆனால் ஐஸ்க்ரீம் கொழுப்பையும் சர்க்கரையையும் மட்டுமே கொடுத்திருக்கும். நட்ஸ் சாப்பிட்டபோது உங்கள் உடலின் எனர்ஜி சீராக இருந்திருக்கும். ஐஸ்க்ரீம் சாப்பிட்டபோது ரத்தச் சர்க்கரையின் அளவு உடனே உயர்ந்திருக்கும். நட்ஸ் உங்கள் கொலஸ்ட்ரால் அளவையும் ரத்தச் சர்க்கரை அளவையும் குறைக்க உதவும். ஐஸ்க்ரீமில் உள்ள கொழுப்பும் சர்க்கரையும் பலவித உடல்நலக் கோளாறுகளுக்குக் காரணமாகும்.

எனவே கலோரிகளைக் கணக்கிட்டுச் சாப்பிடுவது முக்கியமானது என்றால், சாப்பிடும் உணவின் தரம் என்பது அதைவிடவும் முக்கியமானது என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

- பழகுவோம்