கட்டுரைகள்
Published:Updated:

உணவுக்கட்டுப்பாடும் உடற்பயிற்சிகளும்... ஆயுளுக்கும் தொடர வேண்டிய விஷயங்களா?

ஆர்ட் ஆஃப் ஈட்டிங்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஆர்ட் ஆஃப் ஈட்டிங்!

ஆர்ட் ஆஃப் ஈட்டிங்!

‘விடா முயற்சி, விஸ்வரூப வெற்றி' என்பது வேறு எந்த விஷயத்துக்குப் பொருந்துகிறதோ இல்லையோ... எடைக்குறைப்புப் பயணத்துக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். எடைக்குறைப்பு முயற்சியில் இருப்பதாகச் சொல்லும் பலரை நீங்கள் அன்றாட வாழ்வில் சந்திப்பீர்கள்... தினம் தினம் அவர்களது தோற்றத்தில் நீங்கள் பார்க்கும் மாற்றங்கள் உங்களுக்கு பிரமிப்பை ஏற்படுத்தலாம். ‘எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்' என உங்களைத் தொடர்ந்து ஆச்சர்யப்படுத்தும் அந்த நபர், திடீரென ஒரு நாள் மீண்டும் ஓர் ஆச்சர்யத்தில் ஆழ்த்துவார். அதுவும் ‘எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்' ஸ்டைலில்தான் இருக்கும். அதாவது மீண்டும் ‘பழைய பன்னீர்செல்வமாக' உங்கள்முன் நிற்பார். ‘‘டயட்டெல்லாம் ஒத்துவரலீங்க... தொடர்ச்சியா ஃபாலோ பண்ண முடியலை... அதான்...'’ என்று சுயவிளக்கமும் தருவார்.

எடைக்குறைப்பு முயற்சியில் இறங்கும் பலருக்கும் இதுதான் நிதர்சனமாக இருக்கிறது. எடைக்குறைப்பு முயற்சி என்பது காலத்துக்கும் தொடரப்பட வேண்டியதா... அதில் ஏன் எல்லோராலும் தாக்குப்பிடிக்க முடிவதில்லை..?

விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த உணவு மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகரும், பிரபலங்களின் டயட்டீஷியனுமான ஷைனி சுரேந்திரன்...

எடையைக் குறைக்கும் முயற்சிகளில் இறங்கி, வெற்றியைத் தொடுவதுடன், தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வோர் வெறும் 20 சதவிகிதத்தினர் மட்டுமே என்கிறது ஆய்வு. அப்படியானால் யாரெல்லாம் இந்த முயற்சிகளில் தோற்றுப்போகிறார்கள்..?

எடைக்குறைப்பின் பின்னணியில் உள்ள அறிவியல் புரியாமல், கலோரி குறைவான உணவுகளைச் சாப்பிட்டால் சீக்கிரம் எடை குறையும் என நம்பி, அப்படிப்பட்ட உணவுகளைச் சாப்பிடுவோர்...

உணவுக்கட்டுப்பாடும் உடற்பயிற்சிகளும்... ஆயுளுக்கும் தொடர வேண்டிய விஷயங்களா?

தனக்கேற்ற உணவுக்கட்டுப்பாட்டைத் தெரிந்துகொண்டு பின்பற்றாமல், யார் யாரோ சொல்வதையும், பிரபலங்களின் லைஃப் ஸ்டைலையும் பின்பற்றுவோர்...

ஆரோக்கியமான பழக்க வழக்கங்களைப் பின்பற்றாமல், வெறுமனே விதிகளை மட்டும் பின்பற்றுவோர்... அதாவது, வாழ்வியல் மாற்றத்தைப் பின்பற்றுவதில் இவர்களது கவனம் குறைவாக இருக்கும். அதனால் உடல் எடையை ஒரே சீராகத் தக்கவைப்பது இவர்களுக்கு சிரமமாக இருக்கும்.

சரி... முயற்சியில் தோற்காமலிருக்க என்னதான் செய்ய வேண்டும்?

உங்கள் வயது, உயரம், உடல்நலத்துக்கேற்ற சரியான டயட் பிளானை நிபுணரின் ஆலோசனையோடு தேர்ந்தெடுக்க வேண்டும்.

சாப்பிடாமல் இருப்பதால் எடையைக் குறைக்க முடியாது. சரியான நேரத்துக்கு சரியான உணவைச் சாப்பிட வேண்டும்.

உணவுக்கட்டுப்பாட்டைப் பின்பற்றுவதில் அசாத்திய மன உறுதி வேண்டும். ‘ஒருநாள் சாப்பிட்டா ஒண்ணும் ஆகிடாது' என்ற எண்ணம் தலைதூக்க அனுமதிக்கவே கூடாது.

மனதார சாப்பிடும் வழக்கத்தைப் பின்பற்ற வேண்டும் (‘மனதார சாப்பிடுவது’ பற்றி இதே பகுதியில் முந்தைய அத்தியாயத்தில் பேசியிருக்கிறோம்).

உணவுக்கட்டுப்பாடும் உடற்பயிற்சிகளும்... ஆயுளுக்கும் தொடர வேண்டிய விஷயங்களா?

எப்போது, என்ன, எவ்வளவு சாப்பிடுகிறீர்கள் என்பதைப் பதிவு செய்யவும்.

தினமும் உடற்பயிற்சிக்கு ஒரு மணி நேரமாவது ஒதுக்கவும்.

உங்கள் எடை ஏறுகிறதா என்பதைக் கண்காணிக்கவும்.

போதுமான அளவு தூக்கம் இருப்பதை உறுதிசெய்யவும்.

ஸ்ட்ரெஸ் இல்லாமல் வாழ அல்லது அதைச் சமாளிக்கப் பழக வேண்டும்.

இவற்றையெல்லாம் பின்பற்ற ஆரம்பித்த அடுத்த நாளே பலனை எதிர்பார்க்காமல், இதுதான் ஆரோக்கியத்துக்கான வாழ்க்கை முறை எனத் தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.

தவிர, உடல் எடையைத் தக்க வைப்பது என்பது அவ்வளவு கடினமானதெல்லாம் இல்லை என்கின்றன ஆய்வுகள். எடைக்

குறைப்பு முயற்சியை 2 முதல் 5 ஆண்டுகள் பின்பற்றிப் பழகிவிட்டால் அது அவர்களது வாழ்க்கைமுறையாக மாறியிருக்கும்.

- பழகுவோம்