கட்டுரைகள்
Published:Updated:

உணவுப்பழக்கத்திலும் இருக்கட்டும் ஒழுக்கம்!

உணவுப்பழக்கத்திலும்  இருக்கட்டும் ஒழுக்கம்!
பிரீமியம் ஸ்டோரி
News
உணவுப்பழக்கத்திலும் இருக்கட்டும் ஒழுக்கம்!

ஆர்ட் ஆஃப் ஈட்டிங்!

``ஆரோக்கிய உணவுப்பழக்கம் என்பது ஒருவகையான ஒழுக்கம். உணவு சாப்பிடும் நேரத்தில், உணவு இடைவேளையில் அந்த ஒழுங்கு கடைப்பிடிக்கப்பட வேண்டும். ரத்தச் சர்க்கரை அளவு அதிகரிக்காமல் இருக்கவும், செரிமானம் சீராக இருக்கவும் ஒவ்வொரு 3 - 4 மணி நேரத்துக்கொரு முறை சாப்பிடுவதை வழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். இதை முறையாகப் பின்பற்றினாலே, உடல் பருமன், அஜீரணம், வயிற்று உப்புசம், உணவுத்தேடல், அளவுக்கதிகமாகச் சாப்பிடுவது போன்ற பல பிரச்னைகளைத் தவிர்க்கலாம்'' என்கிறார் சென்னையைச் சேர்ந்த, உணவு மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகரும், பிரபலங்களின் டயட்டீஷியனுமான ஷைனி சுரேந்திரன். உணவு ஒழுக்கத்தைப் பின்பற்ற அவர் சொல்லும் ஆலோசனைகள்...

ஷைனி சுரேந்திரன்
ஷைனி சுரேந்திரன்

1. சரியான நேரத்துக்குச் சாப்பிடுவதை வழக்கமாக்குங்கள். அது நீங்கள் அளவுக்கதிகமாகச் சாப்பிடுவதைத் தடுக்கும்.

2. எந்தவேளை உணவையும் தவிர்க்காதீர்கள். காலையில் நீங்கள் சாப்பிடுகிற முதல் உணவு, அந்த நாளின் தன்மையைத் தீர்மானிக்கும். `எனக்கெல்லாம் பிரேக்ஃபாஸ்ட் சாப்பிடற வழக்கமே இல்லை...' என்று சொல்லிக்கொள்பவர்கள் குறைந்தபட்சம் சிறிது நட்ஸ், பழம், முட்டை என எளிமையான கார்போஹைட்ரேட்டும் புரதமும் நிறைந்த உணவுகளையாவது சாப்பிடுங்கள்.

உணவுப்பழக்கத்திலும்  இருக்கட்டும் ஒழுக்கம்!
உணவுப்பழக்கத்திலும் இருக்கட்டும் ஒழுக்கம்!

3. இந்தத் தலைமுறையினருக்கு நள்ளிரவில் சாப்பிடும் வழக்கம் அதிகமிருக்கிறது. விடிய விடிய திறந்திருக்கும் உணவகங்கள், நைட்ஷிஃப்ட் வேலை, 24 மணி நேரமும் கிடைக்கும் ஆன்லைன் உணவுகள் என இந்தப் பழக்கத்தை ஊக்கப்படுத்தும் விஷயங்களுக்கும் குறைவில்லை. இரவில் தாமதமாகச் சாப்பிடுவது என்பது உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். பகல் வேளைகளில் ஆரோக்கியமற்ற கொழுப்பு உணவுகளைச் சாப்பிடுவது, நாள் முழுவதும் ஒழுங்காக - போதுமான அளவு சாப்பிடாதது போன்றவற்றாலும் சிலர் இரவில் உணவுத்தேடலுக்கு ஆளாவதுண்டு. இரவில் தாமதமாக உண்ணும் பழக்கம், ரத்தச் சர்க்கரை அளவை அதிகரிப்பது, இதய நோய்கள், பருமன் மற்றும் அசிடிட்டி போன்ற பல பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். எவ்வளவு தாமதமாகச் சாப்பிடுகிறீர்களோ, அவ்வளவு தாமதமாகத்தான் உங்கள் உடல் உறக்கத்துக்குத் தயாராகும். இதனால் உங்கள் நினைவாற்றலும், அடுத்தநாள் வேலையும் பாதிக்கப்படும்.

4. இரவு உணவுக்கு பிரியாணி, அசைவ விருந்து என பலமாக எதையும் சாப்பிடாதீர்கள். அத்தகைய உணவுகள் செரிமானமாகத் தாமதமாகும். அவற்றிலுள்ள காரம் மற்றும் மசாலா அமிலம் எதுக்களித்து வரும் பிரச்னையையும் ஏற்படுத்தும்.

5. இரவு உணவுக்குக் கீரை சாப்பிடுவதைத் தவிர்க்கவும். பெரும்பாலான வீடுகளிலும் பகலில் சமைத்த உணவுகளின் மிச்சம் மீதியை வீணாக்க விரும்பாமல் இரவில் சாப்பிடும் வழக்கம் இருக்கிறது. அவை செரிமானத்தை பாதிக்காத உணவுகளாக இருப்பது சிறப்பு.

உணவுப்பழக்கத்திலும்  இருக்கட்டும் ஒழுக்கம்!
உணவுப்பழக்கத்திலும் இருக்கட்டும் ஒழுக்கம்!

6. மிக முக்கியமாக மீந்துபோகும் சட்னி வகைகளை அடுத்தவேளைக்குப் பயன்படுத்தாதீர்கள். பச்சையாக அரைக்கப்படுகிற சட்னி வகைகளை உடனுக்குடன் சாப்பிட வேண்டும். அவற்றை ஃப்ரிட்ஜில் வைத்தோ, அடுத்தவேளைக்கோ சாப்பிடாதீர்கள். அடுப்பில் வைத்துச் சமைக்காத காரணத்தால் அவற்றில் நுண்ணுயிரிகள் அதிகமிருக்க வாய்ப்புகள் உண்டு.

7. வெளியிலிருந்து வாங்கும் உணவுகளை அடுத்தவேளை வரை வைத்து உண்ணாதீர்கள். சாம்பார், சட்னி, குருமா, சிக்கன் கிரேவி என எதுவாகவும் இருக்கட்டும்... அவை, எப்போது தயாரிக்கப்பட்டது என்பது தெரியாததால் அடுத்தவேளைக்கும் வைத்துச் சாப்பிடுவது நல்லதல்ல.

8. எப்போதுமே அந்தந்த வேளைக்கான அளவு மட்டும் சமைத்து, அந்தந்த வேளையே சாப்பிட்டுவிடுவதுதான் சரியானது. வெப்பநிலை அதிகம் உள்ள பகுதிகளில், சமைத்த உணவு சீக்கிரம் கெட்டுவிடும் என்பதால் அவற்றை அடுத்தடுத்த வேளைகளுக்கு வைத்துச் சாப்பிட வேண்டாம். சமைத்த உணவைச் சூடுபடுத்திச் சாப்பிடும்போது அவற்றின் சுவை மாறாமல் இருக்கலாம், ஆனால்... சத்துகள் அழிந்துவிடும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.

- பழகுவோம்