பார்பெக்யூ உணவகங்கள்... க்ரில் செய்த உணவுகள்... கவனத்தில் கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்

ஆர்ட் ஆஃப் ஈட்டிங்!
`ட்ரீட்' என்றால், இப்போது பார்பெக்யூ விருந்து என்று மாறியிருக்கிறது. எக்கச்சக்க அயிட்டங்கள்... நான்கைந்து மணி நேரம் நீளும் விருந்து எனப் புதுமையான பார்பெக்யூ கலாசாரம் இந்தத் தலைமுறையினரை ஈர்த்துவருகிறது. ``கொழுந்துவிட்டு எரியும் தீயில் சமைக்கப்படும் தந்தூரி உணவுகளைவிட, பார்பெக்யூ உணவகங்களில் பரிமாறப்படும் க்ரில் செய்யப்பட்ட உணவுகள் ஓரளவு ஆரோக்கியமானவை என்றாலும், விஷயம் தெரியாத நபர்கள் சமைக்கும்போது, அந்த உணவுகளே ஆரோக்கியத்துக்கு அச்சுறுத்தலாக மாறலாம்'' என எச்சரிக்கிறார், சென்னையைச் சேர்ந்த , உணவு மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகரும் பிரபலங்களின் டயட்டீஷியனுமான ஷைனி சுரேந்திரன்.

‘‘க்ரில் முறையில் சமைக்கப்படும் உணவுகளை, குறிப்பாக அசைவ உணவுகளை அடிக்கடி சாப்பிடுவோருக்குக் குடல், கணையம், வயிறு மற்றும் மார்பகப் புற்றுநோய் பாதிக்கும் வாய்ப்புகள் அதிகம் என்கின்றன ஆய்வுகள். காந்தல் ருசி என்ற எண்ணத்தில், க்ரில் உணவுகளைக் கருக்கிச் சாப்பிடும்போது, அது கணையப் புற்றுநோயை ஏற்படுத்த 60 சதவிகித வாய்ப்புகள் அதிகம் என்கிறது ஓர் ஆய்வு முடிவு.

க்ரில் செய்யப் பயன்படுத்தப்படும் இறைச்சி, பதப்படுத்தப்பட்டதாக இருந்தால் ஏற்கெனவே அதில் ப்ரிசர்வேட்டிவ் கெமிக்கல் சேர்க்கப்பட்டிருப்பதால், புற்றுநோய் அபாயம் மேலும் அதிகரிக்கிறது.
அப்படியானால் க்ரில் செய்யப்பட்ட உணவுகளே ஆபத்தானவையா என்ற கேள்வி உங்களுக்கு வரலாம். க்ரில் முறையில் சமைப்பது பாதுகாப்பானது என்பதில் சந்தேகமில்லை. வீட்டிலேயே க்ரில் செய்யும் கருவி வைத்துச் சமைத்துச் சாப்பிடுவோர் பலர் இருக்கிறார்கள். க்ரில் முறையில் சமைக்கும்போது பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றினால் ஆரோக்கியத்தைத் தக்கவைக்கலாம்.
க்ரில் செய்யும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை...
1. க்ரில் செய்து சாப்பிடுவதற்கு முன் க்ரில்லிங் கருவிகளைச் சுத்தம் செய்யவும். தொற்று ஏற்படுவதற்கான முதல்கட்டப் பாதுகாப்பை அதன் மூலம் உறுதிசெய்ய முடியும்.
2. க்ரில் செய்ய வைத்திருக்கும் காய்கறிகள், அசைவம் எதுவானாலும் குழாய்த் தண்ணீரில் நன்கு அலசி சுத்தம் செய்யவும்.
3. அசைவ உணவிலுள்ள தோல், கண்ணுக்குத் தெரிகிற கொழுப்பு போன்றவற்றை க்ரில் செய்யும் முன்பே அப்புறப்படுத்தவும். இது அந்த உணவை ஆரோக்கியமாக மாற்றுவது மட்டுமன்றி, அந்தப் பகுதிகள் கருகி, ஆரோக்கியக் கேட்டை ஏற்படுத்துவதையும் தடுக்கும்.

4. நீண்ட நேரம் க்ரில் செய்வதைத் தவிர்க்க, உணவை முதலில் சில நிமிடங்களுக்கு மைக்ரோவேவ் ஓவனில் சூடுபடுத்தலாம்.
5. குறைந்த டெம்ப்ரேச்சரில் க்ரில் செய்வது சிறந்தது.
6. க்ரில் செய்யும்போது உணவை இருபுறமும் திருப்பிச் சமைக்க மறக்காதீர்கள். இதன் மூலம் புற்றுநோய் காரணியையும் மரபணுக்களில் மாற்றம் ஏற்படுத்தும் காரணியையும் தவிர்க்க முடியும் என்கிறது அறிவியல்.
7. மேற்குறிப்பிட்ட பிரச்னை காய்கறிகளை க்ரில் செய்யும்போது ஏற்படுவதில்லை. எனவே எந்த உணவுடனும் காய்கறிகள் சேர்த்து க்ரில் செய்வது சிறந்தது. தவிர இதன் மூலம் நீங்கள் கலோரி எண்ணிக்கையையும் குறைக்கலாம்.
8. க்ரில் செய்த உணவுகளைச் சாப்பிடும் முன், அவற்றிலுள்ள கருகிய பகுதிகளை நீக்க மறக்காதீர்கள்.
9. க்ரில் செய்து முடித்ததும் அந்தக் கருவியை முழுமையாகச் சுத்தம் செய்துவிடுங்கள். சமைத்த உணவின் மிச்சம் எதுவும் ஒட்டியிருக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
10. வீட்டிலேயே க்ரில் செய்கிறீர்கள் என்றால் உணவு தெர்மாமீட்டரை வைத்து, அது சரியாகச் சமைக்கப்பட்டுள்ளதா என்பதை செக் செய்யலாம்.
- பழகுவோம்