கட்டுரைகள்
Published:Updated:

சாப்பிடும் போது செய்யும் 10 தவறுகள்!

ஆர்ட் ஆஃப் ஈட்டிங்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஆர்ட் ஆஃப் ஈட்டிங்!

ஆர்ட் ஆஃப் ஈட்டிங்!

`நல்லாத்தான் சாப்பிடுறேன், ஆனாலும் உடம்பு தேறவே மாட்டேங்குது’ என்றோ அல்லது ‘கொஞ்சம்தான் சாப்பிடுறேன், ஆனாலும் வெயிட் ஏறிக்கிட்டே போகுது’ என்றோ புலம்புவோரில் நீங்களும் ஒருவராக இருக்கலாம். என்ன சாப்பிட வேண்டும் என்பது எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியம் எப்படிச் சாப்பிட வேண்டும் என்பது. நீங்கள் சாப்பிடுவதை வைத்து அல்ல, சாப்பிடுவதில் உங்கள் உடல் கிரகித்துக்கொள்வதை வைத்துத்தான் உங்கள் ஆரோக்கியம் தீர்மானிக்கப்படுகிறது. சரியாகச் சாப்பிடுவதாக நினைத்துக்கொண்டிருக்கும் பலரும் உணவு விஷயத்தில் செய்யும் பிரதானமான 10 தவறுகளை விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த உணவு மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகரும், பிரபலங்களின் டயட்டீஷியனுமான ஷைனி சுரேந்திரன்.

ஷைனி சுரேந்திரன்
ஷைனி சுரேந்திரன்

1. பசி உணர்வுக்கு மதிப்பளிக்காதது!

பசியா, போரடிக்குதா... இந்த இரண்டுக்கும் வித்தியாசம் தெரியாமல்தான், பலரும் பசியே எடுக்காமல் போரடிக்கும்போதுகூட கன்னா பின்னாவென எதையாவது கொறிக்க நினைக்கிறார்கள். உண்மையிலேயே பசிக்கிறதா என்று தெரிந்துகொள்ள உங்கள் உடல் சொல்வதைக் கேளுங்கள். சில நாள்களில் பசியே இருக்காது. சில நாள்களில் பேய்ப்பசி எடுக்கும். அது பசி உணர்வுதான் என்பதை உணர்ந்து, அதற்கேற்ப சாப்பிடுவதன் மூலம் அதிகப்படியாக உணவு உள்ளே செல்வதைத் தவிர்க்கலாம்.

2. கன்னா பின்னா நேரங்களில் சாப்பிடுவது!

பலர், சாப்பிடவேண்டிய நேரத்தை விட்டுவிட்டு, சாப்பிடக் கூடாத நேரத்தில் சாப்பிடுவார்கள். இது செரிமான மண்டலத்தைப் பெரிதும் பாதிக்கும். சரியான நேரத்துக்குச் சாப்பிடுவதன் மூலம் ரத்தச் சர்க்கரை அளவுகள் சீராக இருக்கும், செரிமானம் சீராக நடக்கும், நாள் முழுக்க எனர்ஜி குறையாமல் உணர்வோம்.

சாப்பிடும் போது செய்யும் 10 தவறுகள்!

3. அரக்கப் பரக்கச் சாப்பிடுவது..!

எந்த உணவானாலும் அரக்கப் பரக்க விழுங்கும் வழக்கம் பலருக்கு உண்டு. இது தவறானது. உணவுக்குழாயில் சென்று உணவு அடைத்துக்கொள்ளும் ஆபத்தும் இதில் இருக்கிறது. வேக வேகமாகச் சாப்பிடுவதன் மூலம் உடல் எடை கூடுவது, நீரிழிவு, இரைப்பை அழற்சி போன்ற பிரச்னைகள் வரவும் வாய்ப்புகள் அதிகம். எனவே, உணவை 15 - 20 நிமிடங்கள் நேரமெடுத்துக்கொண்டு, நன்கு மென்று உண்ண வேண்டும்.

4. மெல்லாமல் விழுங்குவது..!

ஒவ்வொரு வாய் உணவையும் நிதானமாக, மென்று சாப்பிட்டால்தான் செரிமானம் சரியாக நடைபெறும். செரிமானச் செயல்பாடு வாயிலிருந்தே தொடங்குகிறது. வாயில் மெல்லப்படும் உணவு, உமிழ்நீருடன் கலந்து செரிமான வேலை ஆரம்பமாகிறது. மென்று சாப்பிடாமல் உணவை விழுங்கும்போது உணவு நேரடியாக உணவுக்குழாய் வழியே வயிற்றுக்குப் போகும். அது செரிமானமாக நீண்ட நேரத்தை எடுத்துக்கொள்ளும். அது மட்டுமல்ல... தான் நிறைந்துவிட்டதாக மூளைக்கு சிக்னல் அனுப்ப வயிற்றுக்கு நேரமிருக்காது என்பதால், தேவைக்கு அதிகமாகச் சாப்பிட்டுக்கொண்டே இருப்போம்.

சாப்பிடும் போது செய்யும் 10 தவறுகள்!

5. இடையிடையே தண்ணீர் குடிப்பது..!

சாப்பிடும்போது அவ்வப்போது ஒன்றிரண்டு வாய் தண்ணீர் குடிக்கலாம், தவறில்லை. ஆனால் சாப்பாட்டுக்கு இடையில் எக்கச்சக்கமாகத் தண்ணீர் குடிப்பது, வயிற்று உப்புசம், அஜீரணம், சத்துகள் சரியாக கிரகிக்கப்படாதது போன்றவற்றுக்கு வழிவகுக்கும். எனவே, எப்போதும் சாப்பாட்டுக்கு 15 முதல் 20 நிமிடங்களுக்கு முன்போ, சாப்பிட்ட 10 நிமிடங்கள் கழித்தோ தண்ணீர் குடிப்பதுதான் சரியானது.

6. இடையீடுகளுடன் உண்பது..!

டி.வி., மொபைல் என வேறு விஷயங்களில் கவனச்சிதறல்களுடன் சாப்பிடும்போது எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதில் கட்டுப்பாடு மீறப்படும். அது உடல் எடையை அதிகரிக்கும். எனவே, உணவை எந்த இடையீடும் இன்றி அமைதியாக, அனைத்து உணர்வுகளும் உணவை ரசித்து அனுபவிக்கும்படி சாப்பிட வேண்டும்.

சாப்பிடும் போது செய்யும் 10 தவறுகள்!

7. ஓவர் அக்கறை

நட்ஸ், சாலட், பழங்கள், ஸ்மூத்தி எனச் சில உணவுகளை ஆரோக்கியமானவை பட்டியலில் வைத்திருப்போம். அதற்காக அவற்றை அளவுக்கதிகமாகச் சாப்பிடுவது சரியே அல்ல. ஆரோக்கியமானவை என்றாலும் அளவோடு, கலோரிகளின் அளவை அதிகரித்துக்கொள்ளாதபடி சாப்பிடுவதுதான் சரியானது. நட்ஸ் ஆரோக்கியமானவை என்பதால் அவற்றை அதிகமாக எடுத்துக்கொண்டால் கலோரிகள் அதிகரிக்கும். சைவ உணவுக்காரர்களுக்கு பருப்பு ஆரோக்கியமானது என்பதற்காக அதை அளவுக்கதிகமாக எடுத்துக்கொண்டால் வயிற்று உப்புசமும் வாயுத்தொல்லையும்தான் மிஞ்சும்.

8. கலோரிகளை கணக்கு பண்ணாதது..!

ரெகுலர் உணவுகளுக்கு பதிலாகப் பரிந்துரைக்கப்படும் ‘மீல் ரீப்ளேஸ்மென்ட்’ பானங்கள், காலை உணவுக்கான ஸ்மூத்தி, பழ ஜூஸ் போன்றவற்றில் மறைந்துள்ள அதிகப்படியான சர்க்கரை மற்றும் கலோரிகளின் அளவையும் கவனித்துச் சாப்பிட வேண்டும். எந்த உணவுப் பொருளையும் லேபிளைப் பார்த்து வாங்குவது அவசியம். ஜூஸ் ஆரோக்கியமானது என்று பாலையும் சர்க்கரையையும் சேர்த்துக் குடிப்பதும் தவறானது. ஜூஸாகக் குடிப்பதன் மூலம் நார்ச்சத்துகளை இழக்கிறோம் என்பதால் எப்போதும் பழமாக எடுத்துக்கொள்வதே சிறந்தது.

9. நின்றுகொண்டே சாப்பிடுவது..!

நின்றுகொண்டே சாப்பிடுவதால் சாப்பிடும் வேகம் அதிகரிக்கும்; அதிகப்படியான உணவு உள்ளே போகும் அபாயமும் அதில் இருக்கிறது. குடல் பகுதி ஆரோக்கியமாக இல்லாமல் சென்சிட்டிவ்வாக உள்ளோருக்கு இப்படிச் சாப்பிடுவதால் வயிற்று உப்புசம் ஏற்படும். வாயுத்தொல்லை படுத்தும். ஊட்டச்சத்துக் குறைபாடும் சேர்ந்துகொள்ளும்.

10. சமநிலை இல்லாத சாப்பாட்டுத் தட்டு!

சாப்பாட்டுத் தட்டில் முதலில் அரை பாகத்துக்கு காய்கறிகளை நிரப்ப வேண்டும். கால் பாகத்துக்கு புரதச்சத்தும், மீதமுள்ள கால் பாகத்துக்குத்தான் கார்போஹைட்ரேட்டும் இருக்க வேண்டும். இனி உங்கள் தட்டில் இந்த விகிதம் சரியாக இருக்கும்படி பார்த்துச் சாப்பிடுங்கள்.

- பழகுவோம்