லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

மாமருந்தாகும் மஞ்சள் பால்! - சித்த மருத்துவர் விக்ரம்குமார்

மஞ்சள் பால்
பிரீமியம் ஸ்டோரி
News
மஞ்சள் பால்

இயற்கை தந்த பரிசு

‘தங்கப்பால்’ பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? நாம் எப்போதும் அருந்தும் பசும்பாலில் சிறிதளவு மஞ்சள்தூள் கலந்தால் ‘தங்கப்பால்’ ரெடி!

மஞ்சள் பாலை தங்கப்பால் என்று வர்ணிக்கக் காரணம், அதில் நிறைந்துள்ள தங்கமான மருத்துவ குணங்கள்தாம். ‘வெறும் பாலைக் குடிப்பதைவிட அதில் சிறிதளவு மஞ்சள் கலந்து குடிப்பது நல்லது’ என்று மருத்துவர்களும், வீட்டில் உள்ள பெரியவர்களும் அடிக்கடி சொல்லக் கேட்டிருப்போம். குறிப்பாக இந்த கொரோனா காலத்தில்!

மாமருந்தாகும் மஞ்சள் பால்! - சித்த மருத்துவர் விக்ரம்குமார்

மஞ்சள் பால் ஏன் அருந்த வேண்டும், இதில் உள்ள மருத்துவ குணங்கள் என்னென்ன... விளக்குகிறார் சித்த மருத்துவர் விக்ரம்குமார்.

  • மஞ்சளில் குர்குமின் என்ற வேதிப்பொருள் உள்ளது. இதனால் அது சிறந்த கிருமிநாசினியாகச் செயல்படுகிறது. மஞ்சள் கலந்த பாலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பதால், நுண்ணுயிரிகளால் ஏற்படும் நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது.

  • தினமும் மஞ்சள் பால் எடுத்துக்கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது. மஞ்சளுக்குப் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கக்கூடிய சக்தி உண்டு. மஞ்சள் பாலில் சிறிதளவு மிளகுப் பொடியையும் சேர்த்துக் கொள்ளலாம்.

  • சளி, இருமல், தொண்டை கரகரப்பு போன்ற பிரச்னைகளுக்கு மஞ்சள் பால் அருமருந்தாகும். இது கீல்வாத, முடக்குவாதப் பிரச்னைகளுக்கும் தீர்வாக உள்ளது.

  • மஞ்சள் கலந்த பாலைக் குடிக்கும்போது, உடல் வெப்பம் அதிகரிக்கும். இதன் காரணமாக, நெஞ்சு சளி மற்றும் சைனஸ் பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும்.

மஞ்சள் பால்
மஞ்சள் பால்
  • மஞ்சள் பாலில் பீட்டா கரோட்டின், பொட்டாசியம், துத்தநாகம், கால்சியம், இரும்பு, நியாசின் உள்ளிட்ட பல்வேறு வகையான மேக்ரோ, மைக்ரோ ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. இதைத் தினமும் அருந்துவதால் உடல் வலிமையடைகிறது.

  • இதில் இருக்கும் சத்துகள் நம் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தில் உள்ள சைட்டோகைன் செல்களைத் தூண்டி நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போரிடச் செய்து, அந்தக் கிருமிகளால் ஏற்படும் நோய்களில் இருந்து நம்மைக் காக்கின்றன.

  • மஞ்சள் கலந்த பாலை தினமும் குடித்து வந்தால் சருமம் பொலிவு பெறும். ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, உடலுக்குப் புத்துணர்வைத் தரும்.

  • மாதவிடாய் காலங்களில் வரும் கடுமையான வயிற்று வலியைக் குறைக்கவும் மஞ்சள் பால் உதவுகிறது. கர்ப்பிணிகளும் இதை எடுத்துக்கொள்ளலாம்.

  • அல்ஸைமர் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இதைத் தொடர்ந்து பருகிவந்தால், நோயின் தீவிரம் குறையும்.

  • உடலின் எலும்புகள் வலிமையாகவும் உறுதியாகவும் இருக்க மஞ்சள் பால் உதவுகிறது. இதில் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது. உடலில் ஏற்படும் ஹார்மோன் பிரச்னையையும் இது சரி செய்கிறது.

  • பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் தினசரி உணவில் மஞ்சள் பாலைச் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படாது. தினமும் ஒரு வேளை மஞ்சள் பால் எடுத்துக் கொள்ளலாம்.

  • பால் காய்ச்சும்போது சிறிதளவு மஞ்சள்தூள், மிளகுத்தூள் சேர்த்து லேசாகக் கொதிக்கவிட்டு வடிகட்டினால் ‘மஞ்சள் பால்’ தயார். இதை அப்படியே குடிக்கலாம். அல்லது முந்திரி, பாதாம் போன்றவற்றைச் சுவைக்காகச் சேர்த்தும் குடிக்கலாம்.

கலப்பட மஞ்சள்... கவனம் அவசியம்!

கடைகளில் விற்பனை செய்யப்படும் பாக்கெட் மஞ்சள்தூளில் அதிகப்படியான ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. கலப்பட மஞ்சளும் கடைகளில் ஏராளம். சித்த மருத்துவக் கடைகளில் மஞ்சள், கிழங்குகளாகக் கிடைக்கும். அல்லது மஞ்சள் சாகுபடி செய்வோரிடமிருந்தே மஞ்சள் கிழங்குகளை வாங்கி, வெயிலில் உலரவைத்து, அரைத்து மஞ்சள்தூளை வீட்டிலேயே தயார் செய்து பயன்படுத்துவது சிறந்தது. ரசாயனம் கலந்த மஞ்சள் பொடியை உணவில் சேர்த்துக்கொள்வதைத் தவிர்ப்பது அவசியம்.