சீன நாட்டு மக்கள் பாம்பு, பல்லி, வௌவால் என பல உயிரினங்களைச் சாப்பிடுவார்கள் என்பது நாமெல்லாம் கேள்விப்பட்ட ஒன்றுதான். ஆனால் அவர்களின் முக்கியமான ஸ்நாக்ஸ் வகைகளில் பூரானும் ஒன்று என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆமாம், சிவப்புத்தலை கொண்ட பூரான்களை, குச்சியில் செருகி சீன மக்கள் ருசித்துச் சாப்பிடும் படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

பதப்படுத்திய பூரானை எடுத்து, குச்சியில் சொருகி அதை நன்றாக வறுத்து உப்பு தூவி, சோயா சாஸ் சேர்த்துச் சாப்பிட்டால், ருசியே வேற லெவல் என அங்குள்ள பலரும் விரும்பிச் சாப்பிடுகின்றனர். அந்தளவுக்கு பூரான் உணவு, சீனாவில் பிரபலம். சீன நாட்டின் பெரும்பாலான இரவு நேரச் சந்தைகளில், இந்த உணவு கிடைக்கிறது.
கிழக்கு ஆசியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இடங்களில் கிடைக்கும் சிவப்புத்தலை பூரான்களே இதற்காக பயன்படுத்தப்படுகின்றன. இந்தப் பூரானின் உடலில் விஷம் இருந்தாலும், அவற்றை உணவாகச் சமைக்கும் முறையில், அந்த விஷமானது முறிந்து விடுவதாகக் கூறுகிறார்கள். பூரானின் விஷத்தில் இருந்து தயாரிக்கப்படும் மருந்து சிறந்த வலி நிவாரணியாகப் பயன்படுகிறது. இந்தப் பூரானின் விற்பனை தற்போது ஆன்லைனில்கூட நடைபெறுகிறது.
இவ்வாறு பூரான் போன்ற விஷ உயிரினங்களை உணவாக உட்கொள்வது பற்றி டயட்டீஷியன் விஜயஸ்ரீயிடம் கேட்டோம்... ``பொதுவாகவே நமக்கு சில நேரங்களில் சாதாரண உணவுகளைச் சாப்பிடும்போது கூட ஃபுட் பாய்சன் ஆக வாய்ப்பிருக்கிறது. இதற்கு அந்த உணவில் உள்ள நுண்ணியிரிகள் காரணமாக அமையலாம். ஆனால் ஒரு பொருளை அதிக சூட்டில் வைத்து சமைக்கும்போது அதில் உள்ள நுண்ணியிரிகள் அழிந்தாலும், அதன் உடலில் உள்ள கெமிக்கல்கள் அழியாது. அவை உடலுக்கு தீங்கை ஏற்படுத்தலாம்.
அது போலவே நாம் விலங்குகளை உட்கொள்ளும்போது, அவற்றின் உடலில் உள்ள எல்லா பகுதியையும் நாம் உட்கொள்ள முடியாது. உதாரணமாக சிக்கன், இறால் மற்றும் மீனைக் கூட நாம் முறையாகக் கழுவி தேவையற்ற பகுதிகளை நீக்கிவிட்டு தான் உண்போம்.

அதுபோலத்தான் இந்தப் பூரான்களை உண்பதால் உடல்நலனுக்கு தீங்கு வரலாம் என்று பொதுவாகச் சொல்லிவிட முடியாது. பூரானின் உடலில் விஷத்தன்மை உள்ள பகுதிகளை நீக்கிவிட்டு உட்கொள்ளக்கூடிய பகுதிகளைச் சாப்பிடலாம். ஆனால் அதை முறையாக நீக்கி, பக்குவமாக சமைக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
எதை நீக்கிவிட்டு சாப்பிட வேண்டும் என்றே தெரியாதபட்சத்தில் அது உடல்நலக்குறைவை உண்டாக்கலாம். சீனா போன்ற நாடுகளில் பூச்சிகளை புரதச்சத்துக்காக உட்கொள்வார்கள். நமக்கு அவற்றை முறையாக எப்படி உட்கொள்ள வேண்டும் என்பது தெரியாததால், அவற்றைச் சாப்பிடாமல் இருப்பதே சிறந்தது" என்றார்.