லாக்டௌனில் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் நாம் உடல்நலம் மற்றும் மனநலம் சார்ந்த எத்தனையோ புதுப்புது பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறோம். குறிப்பாக இந்த லாக்டௌனில் நம் உணவு முறை முற்றிலும் மாறிவிட்டது. பீட்ஸா, பர்கரை மறந்து வீட்டிலேயே சமைக்கும் ஆரோக்கியமான உணவுகளின் பக்கம் பெரும்பாலானோர் திரும்பிக்கொண்டிருக்கிறோம்.

என்றாலும் சிலர், அவசர சமையலுக்காக நூடுல்ஸ், இன்ஸ்டன்ட் சப்பாத்தி, பரோட்டா, சூப் போன்ற உடலுக்குக் கேடு விளைவிக்கும் உணவுப்பொருள்களையும் உண்டுகொண்டுதான் இருக்கிறார்கள். இன்னும் சிலரோ சிக்கன், மட்டன் போன்ற ஹெவி உணவுகளைச் சாப்பிட்டு, உடலுக்கு வேலை தராமல் இருக்கிறார்கள்.
இதுபோன்ற முறையற்ற உணவுமுறையால் அஜீரணப் பிரச்னையில் தொடங்கி உடல் எடை அதிகரித்தல், அல்சர் உள்ளிட்ட பல உடல்நலக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இப்படி லாக்டௌன் காலத்தில் ஏற்படும் அஜீரணம் போன்ற பிரச்னைகளிலிருந்து விடுபட எந்த உணவுகளை எடுத்துக்கொள்ளலாம், எவற்றைத் தவிர்க்கலாம் என்று பட்டியலிடுகிறார் டயட்டீஷியன் அம்பிகா சேகர்.

"வேலைகளைச் செய்ய ஆற்றல் பெற வேண்டும் என்பதே நாம் உணவு உட்கொள்வதற்கான முக்கியக் காரணம். ஆனால் இந்த லாக்டௌனில் வெளியில் செல்வதற்கான வாய்ப்புகளும், அலுவலகம் சென்று வேலைபார்க்க வேண்டிய கட்டாயமும் இல்லை என்பதால் எல்லோரும் வீட்டில் அமர்ந்தபடியேதான் வேலைகளைச் செய்துகொண்டிருக்கிறோம்.
ஒருவர் வியர்வை வெளியே வர வேலைசெய்யும் போதுதான் அவர் எடுத்துக்கொள்ளும் உணவின் கலோரிகள் ஆற்றலாக மாற்றப்படும். அவ்வாறில்லாமல் உடலியக்கம் குறைவாக இருக்கும் நேரத்தில் நாம் எடுத்துக்கொண்ட கலோரிகள் ஆற்றலாக மாறாமல் நம் உடலிலேயே தங்கிவிடுகின்றன. இதுவே உடல் எடை அதிகரிக்க முக்கியக் காரணம். நாம் எடுத்துக்கொள்ளும் உணவின் தன்மையைப் பொறுத்து நமக்கு அஜீரணம் உள்ளிட்ட மற்ற பிரச்னைகளும் ஏற்படுகின்றன.

மற்ற நாள்களில் 1,800 கலோரிகள் கொண்ட உணவை ஒருவர் எடுத்துக்கொண்டார் என்றால், உடலுழைப்பு குறைவாக உள்ள இந்த லாக்டௌன் காலத்தில் அதை 1,500 கலோரிகளாகக் குறைத்துக்கொள்ளலாம். நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகளில் 1 கிராம் கார்போஹைரேட்டில் 4 கலோரிளும், 1 கிராம் புரோட்டீனில் 4 கலோரிளும், 1 கிராம் கொழுப்பில் 9 கலோரிலும் உள்ளன. கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளை நம் சாப்பாட்டில் குறைத்தாலே பெரும்பாலான கலோரிகள் குறைந்துவிடும்.
நாம் உண்ணும் உணவுகளில் அதிகம் உப்பு, காரம், எண்ணெய் சேர்ப்பதைக் குறைக்கலாம். பலர் லாக்டௌனில் நூடுல்ஸ், பாஸ்தா போன்ற இன்ஸ்டன்ட் உணவுகளுக்கு அடிமையாகியிருப்பார்கள். அவற்றில் ருசிக்காக எம்.எஸ்.ஜி எனப்படும் மோனோசோடியம் குளுட்டமேட் போன்ற உடலுக்குக் கேடு விளைவிக்கும் ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன.

இதுபோன்ற உணவுகளை எப்போதுமே நம் உணவுப்பழக்கத்திலிருந்து தவிர்ப்பது நல்லது. அவசரமாக ஏதாவது உணவு செய்தாக வேண்டும் என்றால் பிரெட் ஆம்லெட் செய்து சாப்பிடலாம். அப்படிச் செய்யும்போது மைதா பிரெட்டுக்கு பதிலாகக் கோதுமை பிரெட் பயன்படுத்தலாம். நூடுல்ஸ், பாஸ்தாவோடு ஒப்பிடுகையில் இது கொஞ்சம் ஆரோக்கியமான உணவே.
பால் பருகலாம். காய்ச்சி வடிகட்டிய நீரைப் பருகுவது பாதுகாப்பானது. கொரோனா வைரஸ் பரவிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ஐஸ்கிரீம், குளிர்பானங்கள் போன்றவற்றைத் தவிர்க்கலாம்.
அசைவ உணவுகளில் சிக்கன் உடலின் சூட்டை அதிகரிக்கும் என்பதால் அதைத் தவிர்க்கலாம். மட்டன் அதிக புரதம் நிறைந்தது என்றாலும் அதில் கொழுப்பு எக்கச்சக்கமாக இருப்பதால் லாக்டௌன் உணவு முறைக்கு அது செட் ஆகாது.
ஆனால் முட்டை, மீன், இறால், நண்டு உள்ளிட்ட அசைவ உணவுகளை நன்றாகச் சுத்தம் செய்து, முழுமையாக வேகவைத்து, சமைத்துச் சாப்பிடலாம். இவை நம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் உணவுகள்.
இவற்றைத் தவிர இந்த சீசனில் கிடைக்கும் அனைத்துவிதமான பழங்கள், காய்கறிகளை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். சிலருக்கு சில பழங்கள், காய்களால் அலர்ஜி ஏற்படும். அவர்கள் அந்தப் பழங்கள், காய்களை மட்டும் தவிர்த்துவிட்டு மற்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். தினமும் ஏதேனும் ஒரு கீரையை உணவில் சேர்த்துக்கொள்வது மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்க உதவும்.

வீட்டிலேயே இருக்கும் இந்தச் சூழலில் லேசான உணவுகள் எடுத்துக்கொண்டாலும் நமக்கு அஜீரணம், வயிற்று உப்புசம் போன்ற பிரச்னைகள் அடிக்கடி ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இதற்கு ஒரு சிறந்த தீர்வு... ரசம். வாரத்தில் மூன்று நாள்களாவது நம் உணவில் ரசம் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
மஞ்சள், சீரகம், மிளகு, கொத்தமல்லித்தழை உள்ளிட்ட மருத்துவக் குணமிக்க சமையல் பொருள்கள் நாம் செய்யும் ரசத்தில் இடம்பெற்றிருக்க வேண்டும். பொதுவாகவே இஞ்சி, மஞ்சள், சீரகம், மிளகு போன்ற பொருள்களை நம் உணவில் சேர்த்துவந்தால் அஜீரணக் கோளாறுகள் எதுவும் ஏற்படாது.

லாக்டௌன் காலத்தில் பலருக்கும் உணவு எடுத்துக்கொள்ளும் நேர ஒழுங்குமுறையே மாறிவிட்டது. பலர் வேலை டென்ஷனில் சாப்பிடுவதையே தவிர்க்கிறார்கள். உணவு எடுத்துக்கொள்வதில் நேர ஒழுங்குமுறையை விட முக்கியம் பசிக்கும் வேளைகளில் தவறாமல் உணவு உட்கொள்வது.
நொறுக்குத் தீனிகளைத் தவிர்த்தால் சரியான நேரத்தில் பசியெடுக்கும். சரியான உணவு முறையோடு சேர்த்து சிறிது நேர தியானம், ஒரு மணிநேர உடற்பயிற்சி, நல்ல தூக்கம் உங்கள் உடல்நலத்துடன் மனநலத்தையும் காக்கும்" என்கிறார் டயட்டீஷியன் அம்பிகா சேகர்.