
உதாரணத்துக்கு உடல்பருமனாக இருப்பவர்கள் எடையைக் குறைக்க விரும்பினால் வாழ்க்கை முறை மாற்றம், அவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய, தவிர்க்க வேண்டிய உணவுகள் ஆகியவற்றை ஊட்டச்சத்து ஆலோசகர்கள் பரிந்துரைப்பார்கள்.
கல்லூரிப் படிப்பை முடித்த இளம்பெண் அவர். உடல் பருமனால் அவதிப்பட்டு வந்தார். ‘பருமனைக் குறைக்க எளிதான வழி என்ன?’ என்று `கூகுள்' டாக்டரிடம் கேட்டார். வெந்நீர் குடித்து வந்தால் உடல் எடையை எளிதாகக் குறைத்து விடலாம் என வழிகாட்டியது. உடனே களத்தில் இறங்கிவிட்டார்.
ஆவி பறக்கும் சூட்டில் தினமும் வெந்நீர் குடிக்க ஆரம்பித்தார். நாள்கள் கழிந்தனவே தவிர எடை குறைந்தபாடாக இல்லை. வெந்நீர் சிகிச்சையால் அவரது உணவுக்குழாய் வெந்துவிட்டது. எந்த உணவைச் சாப்பிட்டாலும் தொண்டை எரிய ஆரம் பித்தது. இறுதியாக மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்தார். இப்போதும் அவரால் காரமான எந்த உணவையும் சாப்பிட முடியாது. உணவு எடுத்துக்கொள்வதற்கு முன்பு சில மாத்திரைகளைச் சாப்பிட்டால்தான் காரமில்லாத உணவையே வலியில்லாமல் சாப்பிட முடியும்.

இதுபோன்று எவ்வித மருத்துவ ஆலோசனையும் இல்லாமல் நம்மை நாமே சோதனைக்குள்ளாக்கிக் கொள்வதை ‘பயோஹேக்கிங்’ (Biohacking) என்றும், இன்னும் எளிமையாக ‘டூ இட் யுவர்செல்ஃப் (Do it yourself - DIY) பயாலஜி’ என்றும் சொல்கின்றனர். இந்த ‘பயோஹேக்கிங்’ அல்லது ‘டூ இட் யுவர்செல்ஃப் பயாலஜி’ பற்றிய தகவல்களைப் பகிர்கிறார் சென்னை யைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் டாப்னி.
‘`மிகச்சிறிய அளவில் வாழ்க்கை முறையை மாற்றுவதில் தொடங்கி உடலில் `சிப்' பொருத்தி கண்காணிப்பது, மரபணு மாற்றத்தை (Gene modification) முயற்சி செய்வது எனப் பல்வேறு விஷயங்கள் இதில் அடங்கும். நீண்ட ஆயு ளோடு வாழவும் உடலின் செயல்பாடுகளை மேம்படுத்தவுமே இதை முயன்று பார்க்கின்றனர். குறுக்கு வழியில் பலன் எதிர் பார்ப்போரே இதுபோன்ற முயற்சிகளில் அதிகம் ஈடுபடுகின்றனர்.
சில பிரச்னைகளுக்கு மருந்தோ, நிரந்தர தீர்வோ இருக்காது. அது போன்ற பிரச்னைகளுக்கு ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்படாத, சோஷியல் மீடியாவில் பார்த்த அல்லது கேள்விப்பட்ட புதிய விஷயங்களை முயற்சி செய்வார்கள். இது மேலை நாடுகளில் பிரபலம். ‘பயோஹேக்கிங்’ செய்து கொள்பவர்கள் பெரும்பாலும் அதுசார்ந்த நிபுணத்துவம் பெற்றவர்களாக இருப்பதில்லை. ‘பயோஹேக்கிங்’ என்ற சொல் தற்போதுதான் பிரபலமாகியிருந்தாலும் இதுபோன்ற விஷயங் களை முயற்சி செய்வது பல ஆண்டுகளாகவே நடந்துகொண்டுதான் இருக்கிறது.
என்ன ஆபத்து?
உதாரணத்துக்கு உடல்பருமனாக இருப்பவர்கள் எடையைக் குறைக்க விரும்பினால் வாழ்க்கை முறை மாற்றம், அவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய, தவிர்க்க வேண்டிய உணவுகள் ஆகியவற்றை ஊட்டச்சத்து ஆலோசகர்கள் பரிந்துரைப்பார்கள். நிபுணர்களின் ஆலோசனையைப் பெறாமல் சிரமப்படாமல் எடையைக் குறைக்க வேண்டும் என்பதற்காக இணைய தளங்களில் விளம்பரப்படுத்தப்படும் மாத்திரைகளைத் தாங்களாகவே எடுத்துக்கொள்வார்கள் சிலர். ஒரு மாத்திரையை ஒரு மருத்துவர் பரிந் துரைக்கிறார் என்றால் அதை எந்த அளவு, எத்தனை நாள்களுக்கு, எப்போது எடுத்துக்கொள்ள வேண்டும் என்பன போன்ற வரையறைகள் உண்டு. இதில் ஆபத்து இருக்காது.

ஏன் பிரபலமடைகிறது?
‘பயோஹேக்கிங்’ முறையில் பலர் ‘இன்டர்மிட்டென்ட் ஃபாஸ்டிங்’ (Intermittent Fasting) எனப்படும் விரதத்தைத் தாங்களாகவே கடைப் பிடிக்கின்றனர். நல்ல ரிசல்ட் கிடைக்கும்போது அதைத் தொடர்ந்து செய்யலாம் என்ற உற்சாகம் ஏற்படும். அது குறுகிய காலகட்டத்துக்கு கைகொடுக்கலாம். ஆனால், நீண்டகால பயன்பாட்டுக்கு உதவுமா என்பது தெரியாது.
வாரத்தில் இரண்டு நாள்கள் திட உணவைத் தவிர்ப் பது, 8 மணி நேரம் சாப்பிட்டுவிட்டு 16 மணி நேரம் விரதம் இருப்பது என இன்டர்மிட்டென்ட் ஃபாஸ்டிங்கில் பல வகைகள் உள்ளன. எடைக்குறைப்பு, நீரிழிவு இப்படி எந்தப் பிரச்னைக்காக இதைப் பின்பற்ற விரும்புகிறார்கள் என்பதைப் பொறுத்து அதைப் பின்பற்ற வேண்டியிருக்கும். நிபுணர்களின் உதவியுடன் செய்யும்போது பாதுகாப்பும் அதிகமாக இருக்கும். நடைமுறைச் சிக்கல்களும் ஏற்படாது. அதன் அடிப்படையில் பாசிட்டிவ்வான ரிசல்ட்டும் கிடைக்கும்.
குறுகிய காலத்துக்கு பாசிட்டிவ்வான பலனைத் தருவதால் இதுபோன்ற முயற்சிகள் பிரபலமடைந்து வரு கின்றன. இவற்றுக்கு நெறிமுறை கட்டமைப்பு, ஒழுங்குமுறை கண்காணிப்பு என எதுவும் கிடையாது. எந்த நாட்டிலும் இதற்கு சட்டபூர்வ அனுமதி வழங்கப்படவில்லை. ‘நான் இந்த டெக்னிக்கை பயன்படுத்தி ஒரு மாதத்தில் 20 கிலோ குறைந்து விட்டேன்’ என்பது போன்ற சோஷியல் மீடியா விஷயங்களைக் கண்களை மூடிக்கொண்டு பின்பற்றக் கூடாது” என்கிறார் டாப்னி.
சோதனைக்கூட எலிகளாக மாறாமலிருப்போம்!