
இதுவொரு பெரணி வகை தாவரம். கிழங்கு வகையில் சேராது. ஏற்காடு, கொல்லிமலை, சேர்வராயன் மலைகளில் இயற்கையாக விளையக்கூடியது.
சென்னை, சேலம், நாமக்கல் போன்ற பகுதிகளில் ஆட்டுக்கால் கிழங்கு சூப் பிரபலமாகிவருகிறது. ஆட்டுக்கால் சூப் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம், அதென்ன ஆட்டுக்கால் கிழங்கு சூப்?
கொல்லிமலை, ஏற்காடு, சதுரகிரி, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள பாறை இடுக்குகளில் வளரும் தாவரம்... ஆட்டுக்கால் கிழங்கு. பார்ப்பதற்கு ஆட்டின் கால் குளம்புகளைப்போல இருப்பதால் இப்படி அழைக்கிறார்கள். கடல் மட்டத்திலிருந்து சுமார் 2,000 அடிக்கும் மேற்பட்ட உயரம் கொண்ட மலைகளில் மட்டுமே ஆட்டுக்கால் கிழங்கு கிடைக்கும். ‘இதில் கால்சியம், வைட்டமின், பாஸ்பரஸ், புரதம் மற்றும் தாது உப்புக்கள் நிறைந்துள்ளன. எலும்பு, நரம்பு, தசை, மூட்டு போன்றவற்றில் ஏற்படும் பிரச்னைகளை சரிசெய்ய வல்லது’ என்கிறார்கள் இயற்கை மருத்துவர்கள். இந்தக் கிழங்கைக் கொண்டு தயாரிக்கும் சூப்புக்கு மக்களிடையே பெரிய வரவேற்பு இருக்கிறது. நவம்பர், டிசம்பர் மாதங்களில் இதற்கான மவுசு அதிகரிக்கிறது.

சென்னைக் கோயம்பேட்டில் சூப் கடை நடத்திவரும் மகாதேவன், “கை, கால் செயலிழந்தவங்க இதைச் சாப்பிட்டா நல்லதுன்னு சொல்றதால, இதை ‘முடவன் கிழங்கு’ என்றும் சொல்றாங்க. சைவ ஆட்டுக்கால், முடவாட்டுக்கால், ஆகாசக்கிழங்கு, ராஜமுக்தி கிழங்கு, கொல்லிமலைக் கிழங்குன்னு இன்னும் பல பெயர்கள் இதுக்கு இருக்கு. ஒரு கிலோ 300 - 350 ரூபாய் வரை விக்குறாங்க. ஆட்டுக்கால் கிழங்கை நான் கொல்லிமலையில இருந்து வாங்குறேன். அங்க பாறை இடுக்குகள்ல இருந்து பறிச்சு விற்பனைக்குக் கொடுக்குறாங்க. மொத்தமா வாங்கி பொடியாவும், சூப்பாகவும் தயாரிச்சு விற்பனை செய்றேன். இந்தக் கிழங்கை பசை போல அரைச்சு, கொஞ்சம் தண்ணீர், சீரகம், சின்ன வெங்காயம், மிளகு, பூண்டு சேர்த்து அரைச்ச கலவையைச் சேர்த்து கொதிக்கவிடணும். கிழங்கை சின்னச் சின்னத் துண்டுகளா நறுக்கி அதுல போட்டா... சூப் ரெடி. வித்தியாசமான சுவையைக் கொடுக்கிறதால வாடிக்கையாளர்கள் விரும்பிச் சாப்பிடுறாங்க. குறிப்பா சபரிமலைக்கு மாலை போட்டிருக்கிறவங்க இந்த மாசத்துல அசைவம் சாப்பிட மாட்டாங்க. அதனால இந்த சைவ ஆட்டுக்கால் கிழங்கு சூப்பை சாப்பிடறாங்க. இதோட சுவை மக்களுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு’’ என்றார்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக காய்கறிகள்துறை தலைவர் மற்றும் பேராசிரியர் புகழேந்தியிடம் பேசியபோது, “இதுவொரு பெரணி வகை தாவரம். கிழங்கு வகையில் சேராது. ஏற்காடு, கொல்லிமலை, சேர்வராயன் மலைகளில் இயற்கையாக விளையக்கூடியது. இதற்கு வியாபார வாய்ப்பு பெருகியிருப்பதால் இதைப் பறித்து தற்போது விற்பனை செய்கிறார்கள். இதில் கால்சியம் அதிகமாக இருக்கிறது. இதை மூலிகை என்ற வகையில் உணவாக எடுத்துக் கொள்ளலாம். இது வளர்வதற்கான சூழல் மலைப்பகுதிகளில் இருப்பதால் அங்கு இதை தனிப் பயிராகச் சாகுபடி செய்யலாம்” என்றார்.

சித்த மருத்துவர் வேலாயுதம், “ஆட்டுக்கால் கிழங்கு மலைகளில் வளரக்கூடிய ஒரு வகை வறண்ட தாவரம். சுத்தமான இயற்கைச் சூழலில் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்காமல் வளரக்கூடிய தூய்மையான மூலிகை. கொல்லிமலைப் பகுதியில் அதிகம் கிடைக்கும். அங்கிருக்கக்கூடிய பாறைகளில் பற்றி வளரக்கூடியது. இதன் வேர்கள் பாறைகளில் படர்ந்து, பாறையினுள் இருக்கும் நீரினை உறிஞ்சி வளர்வதால், கனிம வளங்கள், சுண்ணாம்புச்சத்து, மெக்னீசியம் போன்ற சத்துகளை கிழங்கிற்குத் தருகிறது. இது பார்ப்பதற்கு முடமான ஆட்டினுடைய காலைப் போல இருப்பதால் இதற்கு ‘முடவாட்டுக்கால்’ என்றும் பெயர் வந்திருக்கிறது. இன்று கொல்லிமலை அருகில் ஆகாய கங்கை எனும் அருவி இருக்கும் பகுதியிலுள்ள சிறுசிறு கடைகளில், அதிக அளவில் ஆட்டுக்கால் கிழங்கு மற்றும் சூப் கிடைக்கிறது. மூட்டு வலி, வீக்கம், அழற்சி, தசைப்பிடிப்பு போன்றவற்றிற்கு மிகச் சிறந்த மருந்து. நீண்டதூரப் பயணத்தின்போது, இந்தக் கிழங்கை வேகவைத்து, அதன் தண்ணீரை மட்டும் குடித்தாலே மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்’’ என்றார்.
‘இது விஷக்கிழங்கா?’ என்ற கேள்விக்கு பதிலளிக்கிறார், திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் உள்ள மத்திய வணிக வேளாண்மை ஆராய்ச்சி மையத்தின் தலைவரும் முதன்மை விஞ்ஞானியுமான முனைவர் மணிவேல். “ஆட்டுக்கால் கிழங்கு ஒரு நல்ல இயற்கை மூலிகை. Drynaria quercifolia என்பது இதன் அறிவியல் பெயர். மூலிகைகளை எப்போதும் ஒரு குறிப்பிட்ட அளவில்தான் எடுத்துக்கொள்ளவேண்டும். அதிக அளவில் எடுத்தால்தான் விஷம். அளவோடு எடுத்தால் உடலுக்கு இது அருமருந்து. கொல்லிமலை பக்கம் போனால், கண்டிப்பா ஆட்டுக்கால் கிழங்கு சூப் குடிச்சுட்டு வாங்க” என்றார்.