மற்ற எபிசோடுகள்
Published:Updated:

உணவு 360 டிகிரி - 10 - இலை முதல் ஈர்க்கு வரை... மருந்தாகும் கறிவேப்பிலை!

கறிவேப்பிலை
News
கறிவேப்பிலை

ஒரு பொருள்... பல பயன்கள்... சொல்கிறார் சித்த மருத்துவர் பி. மைக்கேல் செயராசு

* கறிவேப்பிலை என்பது சொல் வழக்கு. `கறிவேம்பு' என்பது இலக்கிய வழக்கு.

* நம்முடைய உணவுப் பழக்கத்தில் தாளிதமும், அதில் கறிவேப்பிலையும் தவிர்க்க முடியாதவை. கறி வேப்பிலையில் உள்ள ‘வைட்டமின் ஏ’, கொழுப்பில்தான் கரையும். அதனால்தான், அதை எண்ணெயில் பொரிய விடுகிறோம். சாப்பிடும்போது கறிவேப்பிலையை ஒதுக்கிவைத்தாலும், அதன் மருத்துவ பலன் நமக்கு முழுதாகக் கிடைத்து விடுகிறது என்பதே உண்மை.

* காய்ச்சல் வந்தால் கூடவே சோர்வும் வரும். இது சரியாக, கறிவேப்பிலையுடன் சுட்ட புளி, வறுத்த மிளகாய், வறுத்த உப்பு சேர்த்து துவையல் அரைத்துச் சாப்பிடலாம். தவிர, இது காய்ச்சலுடன் வருகிற வாந்தி யைத் தடுக்கும். நாவின் சுவையின்மையையும் சரி செய்யும்.

கறிவேப்பிலை
கறிவேப்பிலை

* வாயுத்தொல்லை, வயிற்றுப்புண், அஜீரணம், மலச் சிக்கல்.. இந்த நான்கில் ஒன்றாவது இன்றைக்கு பலருக்கும் இருக்கிறது. இதற்குச் சரியான தீர்வு அன்னப்பொடி. நிழலில் உலரவைத்த கறிவேப்பிலை 100 கிராம், சுக்கு, மிளகு, சீரகம், பெருங்காயம், உப்பு ஆகியவற்றை தலா 20 கிராம் எடுத்து சேர்த்து, மிக்சி யில் பொடித்து வைத்துக்கொள்ள வேண்டும். சுடு சாதத்தின் முதல் கவளத்தில் ஒரு சொட்டு நெய், ஒரு டீஸ்பூன் அன்னப்பொடி சேர்த்துப் பிசைந்து சாப்பிட்டு வர, மேற்சொன்ன நான்கு பிரச்னைகளும் சரியாகும்.

* ஐந்து கறிவேப்பிலை, ஒரு மிளகு இரண்டையும் நெய்யில் பொரித்து, வெந்நீர்விட்டு அரைத்து, அதில் நான்கு சொட்டுகளை ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால், வயிறு தொடர் பான பிரச்னைகள் வராது.

 மைக்கேல் செயராசு
மைக்கேல் செயராசு

* கைக்குழந்தைகள் தாய்ப்பாலை கக்கி விடுவார்கள். கறிவேப்பிலை ஈர்க்கின் வெளித்தோலை உரித்து, தாய்ப்பால் சேர்த்து அரைத்து, அந்தச் சாற்றைக் குழந்தையின் நாவின் சில முறை தடவிவிட்டால் பால் கக்குதல் கட்டுப்படும்.

* கறிவேப்பிலை, நெல்லி, வேப்பிலை ஆகியவற்றின் குச்சிகளை மோருடன் சேர்த்து இடித்துப் பிழிந்து சாறு எடுத்து அருந்தினால், வாந்தி நிற்கும்.

* கறிவேப்பிலைப் பொடி, நாட்டு வெல்லம் இரண்டையும் தலா 3 கிராம் அளவு, ஒரு மண்டலம் சாப்பிட்டு வர மாதவிடாய் வயிற்றுவலி, மூக்கடைப்பு பிரச்னைகள் சரியாகும்.

* இயற்கை வைத்திய சாலைகளில் முற்பகல் நேரத்தில் கறிவேப்பிலைச் சாறு, காய்ச்சிய பசும்பால் அல்லது தேங்காய்ப்பால் இரண்டையும் சம அளவு எடுத்து, நாட்டுவெல்லம் கலந்து பானகமாக அருந்தத் தருவார்கள்.

* ஒரு பிடி கறிவேப்பிலையுடன் சீரகம், மஞ்சள் சேர்த்து அரைத்து, நெல்லிக்காய் அளவு மூன்று மாதங்கள் சாப்பிட்டு வந்தால், மெனோபாஸ் காலத்து படபடப்பு கட்டுக்குள் வரும்.

* அரசு ஏற்றுக்கொண்டுள்ள ஒரே நீரிழிவு மருந்தான, மதுமேக சூரணத்தில் கறிவேப்பிலைப் பொடியே பிரதானமாகச் சேர்க்கப்படும்.