மற்ற எபிசோடுகள்
Published:Updated:

உணவு 360 டிகிரி - 6 - அல்சர் முதல் புற்றுநோய் வரை... அருமருந்தாகும் தேன்!

தேன்
பிரீமியம் ஸ்டோரி
News
தேன்

- ஒரு பொருள்... பல பயன்கள்... சொல்கிறார் சித்த மருத்துவர் பி. மைக்கேல் செயராசு

* உலகிலேயே அதிக வருடங்கள் கெடாமல் இருக்கிற பொருள் தேன் மட்டுமே... ஏறக்குறைய நான்காயிரம் வருடங்களுக்கு முந்தைய பிரமிடு களில் கண்டெடுக்கப்பெற்ற தேன்கூட கெடாமல் இருந்திருக்கிறது.

* ஐரோப்பியர்கள் நம்மைவிட தேன் அதிகம் பயன் படுத்துகிறார்கள். குறிப்பாக, இங்கிலாந்து மக்கள். அவர்கள் இந்தியாவை ஆண்டபோது, வருடம் முழுக்க பூக்கும் `Antigonon' கொடியை இந்தியாவுக்குக் கொண்டு வந்து வளர்த்தார்கள். அந்தக் கொடிகள் இப்போதும் நம்மூர் தெரு வோரங்களில் இதய வடிவில், பிங்க் நிறத்தில் சரம் சரமாகப் பூத்துக்கொண்டிருக்கின்றன.

* மலைத்தேன், கொம்புத்தேன், பொந்து தேன், புற்றுத்தேன் எனப் பல வகைகள் இருக்கின்றன. இவற்றில், மரப்பொந்திலிருந்து எடுப்பதுதான் சிறப்பான தேன். இதை கொசுவந்தேன் என்பார் கள். இந்தத் தேன்கூட்டைக் கட்டும் தேனீக்கள் மிகச்சிறியவையாக இருப்பதால் இந்தப் பெயர்.

உணவு 360 டிகிரி - 6 - அல்சர் முதல் புற்றுநோய் வரை... அருமருந்தாகும் தேன்!

* தேன் சேகரித்த பாத்திரத்தை, நீர் நிறைந்த பெரிய பாத்திரத்துக்குள் வைத்து, அந்த நீரை சூடுப்படுத்த வேண்டும். ஆனால், தளதளவென்று கொதிக்கக் கூடாது. தேன் லேசாக சூடாக ஆரம்பிக்கும் போது எடுத்துவிட வேண்டும். இதன் மூலம் தேனில் இருக்கிற நீர்த்துவம் போய்விடும். இந்தத் தேனை கம்பளித்துணியில் வடி கட்ட வேண்டும். பிறகு, பழைய ஓடு ஒன்றை லேசாக சூடாக்கி, அதைத் தேனுக்குள் போட்டு 2 நிமிடங்களில் எடுத்து விடுவார்கள். இதற்கு `முறித்தல்' என்று பெயர். இப்படிச் செய்தால், தேன் புளித்துப்போகாது.

* சித்த மருத்துவத்தில் மருந்துகளுடன் சேர்த்துக் கொடுப்பனவற்றை `அனுபானம்' என்போம். சிறந்த அனுபானம் தேன் மட்டுமே... உட் கொண்ட 96 நிமிடங்களில் தேன் உடம்புடன் கலந்துவிடும். நோயாளிகளின் உடலில் மருந்து சீக்கிரம் உட்கிரகிக்கப்பட வேண்டுமென்றால், தேனுடன் கலந்து தர வேண்டும். தவிர, மருந்து களில் இருக்கிற நச்சுத்தன்மையையும் தேன் முறித்து விடும்.

* வெந்நீரில் தேன் கலந்து அருந்தினால், உடல் எடை குறையும் என்கிறார்கள். குறைந்தபட்சமாக 50 மில்லி தேனுடன் 200 மில்லி வெந்நீர் கலந்து குடித்து வந்தால் மட்டுமே உடல் எடை படிப்படியாகக் குறையும். கூடவே உணவுக் கட்டுப்பாடும் முக்கியம்.

உணவு 360 டிகிரி - 6 - அல்சர் முதல் புற்றுநோய் வரை... அருமருந்தாகும் தேன்!

* தலா 30 மில்லி தேனும், எலுமிச்சைச்சாறும் கலந்து அவ்வப்போது குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால், சளி இளகி வெளியேறும்.

* வயிறு சுத்தமாக இருந்தால், வீஸிங் பிரச்னை கட்டுக்குள் இருக்கும். ஆஸ்துமா பிரச்னை இருப்பவர்கள், 10 மில்லி தேனுடன் 20 மில்லி சிற்றாமணக்கு எண்ணெய் கலந்து மாலையில் சாப்பிட்டு வந்தால், வயிறு சுத்தமாகும். மூச் சிரைப்பு பிரச்னையும் கட்டுக்குள் இருக்கும்.

* வேலைக்கார தேனீக்கள் தேனிலிருந்து ராயல் ஜெல்லியை உருவாக்கி, அதை ராணித்தேனீக்கு மட்டுமே கொடுக்கும். அதனால்தான், ராணித் தேனீயின் ஆயுள்காலம் 3 முதல் 5 வருடங்கள். நல்ல தேனைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஆயுள் நீடிக்கும் என்கின்றன ஆய்வுகள்.

* தேன் எல்லா நோயாளிகளுக்கும் ஏற்றது. நீரிழிவாளர்கள் மட்டும் மருத்துவரைக் கேட்டு, நல்ல தேனை 10 மில்லி முதல் 20 மில்லி வரை சாப்பிடலாம்.

* தேனும் தேங்காய் எண்ணெயும் கலந்து தடவி னால், வண்டுக்கடியின் கடுப்பு குறைந்துவிடும்.

* முதல்நிலை தீப்புண்களுக்கு தேன் சிறந்த மருந்து.

* தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு முகத்தில் தேன் தடவி வந்தால், கருவளையமும் கரும் புள்ளிகளும் மங்க ஆரம்பிக்கும்.

* தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தேன் அதிகமாகக் கிடைப்பது கொல்லிமலையில்தான். இங்கு வெட்பாலை மரங்கள் அதிகம். அடுத்து குடகு மலையில் காபித்தோட்டம் அதிகமென்பதால் அங்கும் வருடம் முழுக்க தேன் கிடைக்கும்.

* தேன் திக்காக இருப்பதற்காகப் படிகாரத்தைப் பொடி செய்து சேர்க்கிறார்கள் சிலர். எனவே கவனம் தேவை.

* தென்னை, வருடம் முழுக்க பூக்குமென்பதால், தேன் அதிகம் கிடைக்கும். தற்போது, உரம், பூச்சிக்கொல்லி, நடுத்தண்டை துளைத்து மருந்து வைப்பதால், தேன் உற்பத்தி குறைந்து விட்டது.

* தேன் அல்சரை மட்டுமல்ல, அத்தனை உள்ளுறுப்புகளின் ரணங்களையும் ஆற்றும்.

* தேனுடன் நெய்யும் நல்லெண்ணெயும் சேர்த்து சாப்பிடக்கூடாது. இந்தக்கால ஹனி சிக்கன் ஆரோக்கியமான உணவுப் பழக்கமில்லை. வயிற்றுக்குச் சிக்கலை ஏற்படுத்தும்.

* சம அளவு தேனையும் ஊசியால் துளையிட்ட பெரு நெல்லிக்காய்களையும் மண் பாண்டத்தில் சேர்த்து, 40 நாள்கள் மண்ணுக்குள் புதைத்துவிட வேண்டும். இதை வடிகட்டிக் குடித்தால், இது தான் பெஸ்ட் டானிக். நெல்லிக்கு பதிலாக முருங்கைக்கீரையும் சேர்க்கலாம்.

* தேனில் சோற்றுக்கற்றாழைத் துண்டுகளை ஊற வைத்துச் சாப்பிட்டால், குடல் புற்றுநோயில் மாற்றம் தெரியும்.

* தேன், எலுமிச்சைச்சாறு, இஞ்சிச்சாறு சம அளவு கலந்து அருந்த இதயநோய்கள் வராது.