உணவு 360 டிகிரி - 8 - ஒற்றைத் தலைவலி, புற்றுநோய், குடிப்பழக்கம்... மிளகாயில் இருக்கிறது தீர்வு!

சொல்கிறார் சித்த மருத்துவர் பி. மைக்கேல் செயராசு
ஒரு பொருள்... பல பயன்கள்...
* மிளகாயில் ஊசி மிளகாய், குண்டு மிளகாய், கருங்குண்டு மிளகாய், சீனி மிளகாய் , சம்பா மிளகாய், காந்தாரி மிளகாய், கொச்சி மிளகாய், குட மிளகாய் என்று பல வகைகள் இருக் கின்றன.
* 2 இன்ச் அளவு கொண்ட கொச்சி மிளகாய்தான் தமிழ்நாட்டின் பூர்வீக மிளகாய். ‘கொச்சி’ என்றால் ‘சிறிய’ என்று அர்த்தம். கொச்சி மிளகாய் இப்போதும் கேரளா மற்றும் எஸ்டேட் பகுதிகளில் விளைகிறது.
அதிகாலையில் வேலைக்குச் செல்லும் எஸ்டேட் தொழிலாளர்கள், மண்ணில் புதைந்து கிடக்கும் மரவள்ளிக்கிழங்கை வேகவைத்து, உடன் கொச்சி மிளகாயை சட்னியாக அரைத்துத் தொட்டுச் சாப்பிடு வார்கள்.
* பச்சை மிளகாய் மற்றும் காய்ந்த மிளகாயின் தீய குணம் நம் வயிற்றை பாதிக்காமல் இருக்கவே, அவற்றுடன் வெங்காயம், தேங்காய், கசகசா, தனியா (மல்லி விதை), நெய், நல்லெண்ணெய் போன்றவற்றை சமை யலில் சேர்க்கிறோம்.
* பச்சை மிளகாயோ, காய்ந்த மிளகாயோ அவற்றின் விதைகளை உதிர்த்துவிட்டுத்தான் சமையலுக்குப் பயன்படுத்த வேண்டும். `சில்லி ஃப்ளேக்ஸ்' சாப்பிடுவது வயிற்றுக்கு நல்லதல்ல.

* மூல நோயாளிகளுக்கும், அல்சர் பிரச்னை இருப்பவர்களுக்கும் மிளகாய் ஆகாது.
* மிளகாயின் காரத்தன்மைக்கு அதன் விதை களில் உள்ள `கேப்சய்சின்' (Capsaicin) என்னும் ரசாயனம்தான் காரணம். இது வலி நிவாரணி யாகவும் புற்றுநோய்க்கான மருந்துகளில் மூலப்பொருளாகவும் பயன்படுத்தப் படுகிறது.
* மிளகாயில் ஆன்டி டெட்டனஸ் தன்மை இருக்கிறது. அதனால்தான் பழங்காலத்தில், காலில் கண்ணாடித் துண்டு, முள், ஆணி போன்றவை குத்தி விட்டால் சீழ்ப்பிடிக்காமலிருக்க, பச்சை மிளகாய் அல்லது காய்ந்த மிளகாயை அரைத்து, காயத்தில் அப்பி விடுவார்கள். இன்றைக்கும் இந்தப் பழக்கம் கிராமப்புறங்களில் இருக்கிறது.
* நிலைப்படிகளில் தொங்க விடப்பட்டிருக்கும் படிகாரம், எலுமிச்சை, மிளகாய் ஆகியவை கண் திருஷ்டிக்கானவை அல்ல. உண்மையில் அவை முதலுதவிப் பொருள்கள். அந்தக் காலத்தில், பாம்பு கடித்துவிட்டால் விஷம் வேகமாக ஏறாமலிருக்க 10 கிராம் படி காரத்தைப் பொடி செய்து தண்ணீரில் கரைத்துக் கொடுப்பார்கள். ஒருவேளை அவர்கள் மயங்கி விழுந்துவிட்டால், அவர் களுக்கு சுய நினைவு வருவதற்காக மிளகாயை யும் எலுமிச்சையும் நெருப்பில் போட்டுப் புகைப்பார்கள். ஆபத்து நேரத்தில் இவற்றைத் தேடக்கூடாது என்பதற்காகத்தான் வீட்டு வாசலிலேயே கட்டி வைத்தார்கள்.

* குடிப்பழக்கத்திலிருந்து மீட்கும் மையங்களில், குடி மீதான ஆர்வத்தைக் குறைப்பதற்காக மிளகாய்ச்செடி, லவங்கப்பட்டை, நாட்டு வெல்லம் மூன்றையும் சேர்த்து, கஷாயம் போட்டுக் கொடுப்பார்கள்.
* மிளகாய் தைலம் ஒற்றைத் தலைவலிக்கு நல்ல மருந்து. ஆனால், வாரத்துக்கு ஒருமுறைதான் பயன்படுத்த வேண்டும். கண்களில் படக் கூடாது. இந்தத் தைலத்தை சித்த மருத்துவரின் பரிந்துரையின்படி பயன்படுத்துவது நல்லது.
* நாகாலாந்து, மணிப்பூர் மாநிலங்களில் விளையும் ராஜ மிளகாய்தான், மிளகாய் களின் ராஜா என்று கொண்டாடப்படுகிறது. காரத்தில் இதற்கு நிகரில்லை என்பதால் இந்தப் பெயர்.