ஹெல்த்
தொடர்கள்
Published:Updated:

மருந்தாகும் உணவு - பீட்ரூட் ரெய்த்தா

பீட்ரூட் ரெய்த்தா
பிரீமியம் ஸ்டோரி
News
பீட்ரூட் ரெய்த்தா

உணவு - 20

பீட்ரூட்டின் நிறத்தைப் பார்த்து, குழந்தைகள் அதைச் சாப்பிடாமல் ஒதுக்கிவைப்பார்கள். இதற்கு, பெரியவர்களும் விதிவிலக்கல்ல. ஆனால், தவிர்க்கவே கூடாத கிழங்கு வகைகளில் முக்கியமானது பீட்ரூட். வைட்டமின், நல்ல கொழுப்பு உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துகள் இதில் நிறைந்திருக்கின்றன. சமைக்கும்போது காய்கறிகளிலிருக்கும் சில சத்துகள் அழிய வாய்ப்பு உண்டு. பீட்ரூட்டின் முழுச்சத்துகளையும் பெற, `பீட்ரூட் ரெய்த்தா’ சிறந்த ரெசிபி! இதை பிரியாணி, சப்பாத்தி போன்றவற்றுடன் சேர்த்துச் சாப்பிடலாம். பீட்ரூட்டை சாலட்போலவும் செய்து சாப்பிடலாம்.

பலன்கள்:

மருந்தாகும் உணவு - பீட்ரூட் ரெய்த்தா
  • பீட்ரூட்டில் அதிகமிருக்கும் பொட்டாசியம் சத்து தசைகள், நரம்புகளை உறுதிப்படுத்தும்.

  • ரத்த ஓட்டம் சீராகும். உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு பீட்ரூட் மிகவும் நல்லது.

  • பீட்ரூட்டில் மக்னீசியம் சத்து நிறைந்திருப்பதால் எலும்பு, கல்லீரல், நுரையீரல், கணையம், சிறுநீரகம் ஆகியவற்றின் செயல்பாடுகள் சீராகும்.

  • பீட்ரூட்டிலுள்ள ஃபோலேட் (Folate) சத்து, கர்ப்பிணிகளின் கர்ப்பப்பைச் சுவர் ஆரோக்கியத்தைக் காக்கும்.

  • அடிக்கடி சளித் தொந்தரவு, சுவாசப் பிரச்னை, பல் ஈறு பாதிப்பு, மூலநோய், உள்ளுறுப்புகளில் ரத்தக்கசிவு இருப்பவர்களுக்கு பீட்ரூட் சிறந்த மருந்து.

  • பீட்ரூட்டிலுள்ள பீட்டெயின் (Betaine) சத்து, மன அமைதிக்கு உதவும்.

  • கெட்ட கொழுப்பு மிகக் குறைவாக இருப்பதால், இதய நோயாளிகளும்கூட தங்களது உணவுப் பட்டியலில் பீட்ரூட் ரெய்த்தாவைச் சேர்த்துக்கொள்ளலாம்.

  • கிழங்கு வகையைச் சேர்ந்தது என்பதால், வாழ்வியல் நோயாளிகள் இதைத் தவிர்க்க வேண்டும் என சொல்லப்படுவதுண்டு. குறிப்பாக, சர்க்கரை நோயாளிகளுக்கு பீட்ரூட் பரிந்துரைக்கப்படுவதில்லை. ஆனாலும், சர்க்கரைநோயைக் கட்டுக்குள் வைத்திருப்பவர்கள் வாரம் ஓரிரு முறை இதை உட்கொள்ளலாம்.

தேவையானவை:

பீட்ரூட் : 200 கிராம் (துருவியது)

தயிர் : 100 மி.லி

பச்சைமிளகாய் : 2

கடுகு : அரை டீஸ்பூன்

கரம் மசாலாத்தூள் /

மிளகுத்தூள் : சிறிதளவு

கொத்தமல்லித்தழை,

கறிவேப்பிலை : சிறிதளவு

எண்ணெய் : ஒரு டீஸ்பூன்

உப்பு : தேவையான அளவு

இஞ்சித் துருவல் : (விருப்பப்பட்டால்) சிறிதளவு

செய்முறை:

துருவிய பீட்ரூட்டுடன் பொடியாக நறுக்கிய பச்சைமிளகாயைச் சேருங்கள். அதனுடன் கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை,

மிளகுத்தூள் / கரம் மசாலாத்தூள், தயிர், உப்பு சேர்த்துக் கிளறினால் பீட்ரூட் ரெய்த்தா ரெடி. கூடுதல் சுவை வேண்டுமென்றால் கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய்விட்டு கடுகு, துருவிய இஞ்சி சேர்த்துத் தாளித்து ரெய்த்தாவுடன் சேர்க்கலாம்.

குறிப்பு:

  • அதிகம் புளித்த தயிரைத் தவிர்க்கவும்.

  • பீட்ரூட்டின் இனிப்புத் தன்மையை பச்சைமிளகாய் போக்கும் என்பதால், அதைத் தவிர்க்க வேண்டாம். பச்சைமிளகாயை அப்படியே சேர்த்துக்கொள்வது சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். அப்படிப்பட்டவர்கள், கடுகு, இஞ்சியைத் தாளிக்கும்போது அதனுடன் பச்சைமிளகாய் சேர்த்துத் தாளித்து உபயோகப்படுத்தவும்.