
மனிதன் தோன்றி சில லட்சம் ஆண்டுகள் ஆகின்றன. அதற்குப் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பே உலகம் தோன்றி அதில் உயிரினங்களும் இருந்துள்ளன
சாப்பிடும் உணவு ஆரோக்கியமாக இருக்கவேண்டும் என்று நினைக்கும் மக்கள் அதற்கு இரண்டுவிதமான வழிமுறைகளைப் பின்பற்றுகிறார்கள். சிறுதானியம் தொடங்கி பல்வேறு பாரம்பர்ய உணவுகளை எடுத்துக்கொள்வது ஒரு முறை. இன்னொரு பக்கம், இன்றைய இளைஞர்களின் கவனம் நவீன உணவுகள் மற்றும் உணவுமுறைகள் பக்கம் திரும்பியிருக்கிறது. இணையத்தைத் திறந்தால் அதுபற்றிய தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. இவற்றை தினசரி பின்பற்றவும் முயற்சி செய்கிறார்கள். அதேபோல மேலை நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நவீன உணவுகள் பலவும் இன்று நமக்கு மிக எளிதாகக் கிடைக்கின்றன. இவற்றைப் பற்றிய அறிவியல்பூர்வமான விஷயங்களை அடுத்த இரண்டு வாரங்கள் பேசுவோம்.
முதல் விஷயம், டீ-டாக்ஸ் (Detox). இன்று இதைப்பற்றி நிறைய பேர் பேசுகிறார்கள். அதேபோல நடிகர்கள், பிரபலங்களெல்லாம் கோவா, மாலத்தீவு போன்ற சுற்றுலாத் தலங்களுக்குச்சென்று டீ-டாக்ஸ் செய்வதாகப் பதிவுகள் போடுகிறார்கள். நவீன உணவுமுறையில் ஒரு புரட்சிகரமான விஷயமாக இந்த டீ-டாக்ஸ் பார்க்கப்படுகிறது. சரி, டீ-டாக்ஸ் என்றால் என்ன? அதன் பயன்கள் என்ன?

இதை அறிவியல்பூர்வமாகப் பார்த்துவிடுவோம். டாக்ஸ் (Tox) என்றால் நச்சு. டீ-டாக்ஸ் என்றால் அந்த நச்சை நீக்குவது. இந்த உலகில் நிறைய நச்சுப் பொருள்கள் இருக்கின்றன. அவற்றில் சில உணவோடு நம் உடலுக்குள் செல்கின்றன. டீ-டாக்ஸ் உணவுகளைச் சாப்பிடுகையில் அவை நம் உடலிலிருந்து நீங்கிவிடுகின்றன. இப்போது இன்னும் நுட்பமாக கல்லீரலுக்கான டீ-டாக்ஸ், சிறுநீரகத்துக்கான டீ-டாக்ஸ், இதயம் மற்றும் சருமத்துக்கான டீ-டாக்ஸ் என ஒவ்வொன்றுக்கும் தனித்தனி உணவுகளை இணையம் நமக்குப் பரிந்துரைக்கிறது. இது எந்த அளவுக்கு உண்மை?
மனிதன் தோன்றி சில லட்சம் ஆண்டுகள் ஆகின்றன. அதற்குப் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பே உலகம் தோன்றி அதில் உயிரினங்களும் இருந்துள்ளன. அனைத்தும் ஏதோ ஒருவித உணவை எடுத்துக்கொண்டு உயிர் வாழ்கின்றன. அதேபோல மனிதனும் தொடக்கத்தில் பலவித உணவுகளை எடுத்துக்கொள்ள முயன்றிருப்பான். பின்னர் அனுபவம் ஏற்பட ஏற்பட தற்போதைய நிலையை அடைந்திருக்கிறான். மனிதன் உட்கொண்ட எத்தனையோ ஆயிரம் உணவுகளில் நச்சுப்பொருள்கள் அடங்கிய உணவுகளும் இல்லாமலிருந்திருக்காது. இயற்கையின் படைப்பான நம் உடலில் அப்படியான நச்சுகளை வெளியேற்றுவதற்கு ஏற்பாடுகள் இல்லாமலிருந்திருக்குமா என்ன?!
சிங்கம், புலி, மான், முயல் போன்ற விலங்குகளெல்லாம் தங்கள் உடலில் இருக்கும் நச்சுப் பொருள்களை நீக்க கோவா அல்லது மாலத்தீவு செல்வதில்லை. இணையத்தில் பார்க்கும் ஸ்பெஷல் உணவுகளைக் கொண்டுதான் நச்சுப்பொருளை நீக்கவேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. நாம் தினந்தோறும் சாப்பிடும் உணவுகளின் மூலம் நம் உடலுக்குள் கொஞ்சம் நச்சுப்பொருள்கள் சென்று கொண்டுதான் இருக்கின்றன. இது மிக இயல்பான ஒன்று. அதை நீக்குவதற்கும் மிக அருமையான உறுப்புகள் நம் உடலிலேயே உள்ளன. அவற்றில் முதன்மையானது கல்லீரல். மது தொடங்கி நாம் சாதாரணமாக நினைக்கும் சர்க்கரை வரை பல பொருள்களை நம் உடலுக்கு ஏற்றவாறு மாற்றுவது கல்லீரல்தான். அந்த அளவுக்கு கல்லீரலுக்கு நச்சுத்தன்மையை நீக்கும் தன்மை இருக்கிறது. ஆனால், கல்லீரலையே சிலர் டீ-டாக்ஸ் செய்கிறேன் என்றெல்லாம் சொல்லிக் கம்பி கட்டுகிறார்கள்.
அதேபோல சிறுநீரகமும் பலவித நச்சுப்பொருள்களை நீக்கும் உறுப்புதான். நம் உடலின் ஜீரண மண்டலமும் நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகளில் உள்ள நச்சுப்பொருள்களை நீக்க உதவுகிறது. அவை மட்டுமல்ல, நம் நுரையீரல் தொடங்கி சருமம் வரை நச்சுத்தன்மையை நீக்க பல உறுப்புகள் உதவுகின்றன. இயற்கையே நம் உடலை இப்படி டிசைன் செய்திருக்கும்போது இந்த டீ-டாக்ஸ் முறை நம் உடலில் என்ன மாற்றத்தைக் கொண்டுவந்துவிடும்? என்னைப் பொறுத்தவரை, டீ-டாக்ஸ் என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படாத விஷயம் என்றே கூறுவேன். இதன் உண்மைத்தன்மை குறித்து இன்னும் ஆராய்ச்சிகள் நடைபெற்ற வண்ணம் இருக்கின்றன.
டீ-டாக்ஸ் செய்யும் உணவுகளைத் தயாரிக்கும் நிறுவனங்களிடம் இரண்டு கேள்விகள் மட்டும் முன்வைக்கப்படுகின்றன. நச்சுத்தன்மையை நீக்குகிறது என்று சொல்கிறீர்கள், அது என்ன விதமான நச்சுப்பொருள்... அதற்கு ஏதேனும் அளவுகோல் இருக்கிறதா? இது முதல் கேள்வி. அடுத்தது, இந்த நச்சுத்தன்மையை நீக்கும் எந்தத் திறன், நீங்கள் பரிந்துரைக்கும் உணவுப்பொருள்களில் இருக்கிறது? இது இரண்டாவது கேள்வி. ஆனால் இந்த இரண்டு கேள்விகளுக்கும் எந்தவிதமான உறுதியான பதிலையும் அந்நிறுவனங்கள் அளிக்கவில்லை. நச்சுப்பொருள் என்ற மிகப் பொதுவான வார்த்தையை நிறுவனங்கள் வெறுமனே பயன்படுத்துகின்றன. அதைக் கேட்பவர்கள் எந்த எதிர்க்கேள்வியும் இன்றி அதை வாங்கிப் பயன்படுத்துகிறார்கள்.
நச்சை நீக்குவதாகச் சொல்லப்படும் உணவுப் பொருள்கள் அவற்றை நீக்குகிறதா என்று பார்த்தாலும் எந்தப் பலனையும் அளிப்பதில்லை என்றே ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன. இந்த உணவுகளைச் சாப்பிடுபவர்கள் தாங்கள் மிகவும் புத்துணர்வாக இருப்பதாகக் கூறுகிறார்கள். இதற்கு வேறு சில காரணங்கள் இருக்கின்றன. பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை உண்பதும் விரதமும்தான் இந்த டீ-டாக்ஸ் முறையில் முக்கியமானது. தினந்தோறும் மாவுச்சத்து மட்டுமே சாப்பிட்டுக்கொண்டிருக்கும் நாம், ஒரு நாள் இப்படி பழங்கள், காய்கறிகள் போன்ற மிதமான உணவுகளைச் சாப்பிடும்போது இயல்பாகவே ஆரோக்கியமாக உணர்வோம். இதுதான் காரணமே தவிர, பல ஆயிரங்கள் செலவு செய்து டீ-டாக்ஸ் மேற்கொள்வதில் வேறெந்தப் பயனும் இல்லை.
இந்தக் கட்டுரையைப் படிக்கும் வாசகர்கள் நான் சொல்கிற சோதனையைச் செய்து பாருங்கள். நாளை காலை விரதம் இருங்கள்; மதியம் உங்களுக்குப் பிடித்த பழங்கள், காய்கறிகள் மட்டும் சாப்பிடுங்கள்; மாலையில் நீங்கள் நிச்சயம் ஒருவிதப் புத்துணர்ச்சியை அடைவீர்கள். மேலும் இந்த உணவுப் பொருள்கள் அனைத்தும் நம் உடலுக்கு ஆரோக்கியமே தவிர, அவை நச்சுப்பொருள்களை வெளியேற்றுவதில் பங்குகொள்ளாது. காரணம், நாம் கேட்டாலும் கேட்காவிட்டாலும் நம் உடலில் இருக்கும் உறுப்புகளே இப்பணியைச் சிறப்பாகச் செய்துவிடும்.
இதேபோல ‘Alkaline diet' என்ற வார்த்தையை நாம் தற்போது அதிக அளவில் பயன்படுத்தி வருகிறோம். அதாவது, காரத்தன்மை மிகுந்த உணவுகள். இதைப்பற்றிக் கடைசியாக பத்தாம் வகுப்பு வேதியியல் பாடப்புத்தகத்தில் படித்திருப்போம். அமிலத்தன்மை அதிகமுள்ள உணவுகளை நாம் எடுத்துக்கொள்கையில் நம் எலும்புகள் பலவீனமடைந்து புற்றுநோய் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது... மேலும், காரத்தன்மை அதிகமுள்ள உணவுகளே நம் உடலுக்கு உகந்தது என்றெல்லாம் சொல்கிறார்கள்.

அசைவம், பால் பொருள்கள், முட்டை, சிறுதானியங்கள் உட்பட அனைத்து விதமான தானியங்களும் அமிலத்தன்மை உள்ள உணவுகள் என்று சொல்லப்படுகின்றன. பழங்கள், பாதாம், பிஸ்தா போன்ற நட்ஸ் வகைகள், பயறு வகைகள் மற்றும் காய்கறிகள்... இவையெல்லாம் காரத்தன்மை மிகுந்த உணவுகள். அதனால் அசைவம் மற்றும் தானிய வகைகளை நம் உணவுப்பழக்கத்திலிருந்து தவிர்த்துவிட்டுப் பழங்கள், காய்கறிகள், பயறு மற்றும் நட்ஸ் வகைகளைச் சாப்பிடுவதால் உடலில் காரத்தன்மை அதிகரிக்கும். இதனால் புற்றுநோய் ஏற்படாது, எலும்பு வலு இழக்காது என்றெல்லாம் கூறுகிறார்கள். இந்த உணவுமுறை வெளிநாடுகளில் மிகவும் பிரபலம். சமீபமாக நம் ஊரிலும் இதைப்பற்றி அதிகம் பேசுவதைப் பார்க்கமுடிகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பதைப் பார்ப்போம்.
pH (potential of hydrogen) அளவு பற்றிப் பாடப்புத்தகங்களில் படித்திருப்போம். நம் உடல், ரத்தம் ஆகியவற்றுக்குத் தனித்தனி pH அளவுகள் உண்டு. ரத்தத்தின் pH அளவு 7.35 முதல் 7.45 வரை இருக்கும். இதனை மிதமான காரத்தன்மை என்று சொல்வோம். ஆனால் இதற்கும் உணவுமுறைக்கும் தொடர்பு கிடையாது. உடலின் வெவ்வேறு உறுப்புகளில் pH அளவு மாறுபடும். உதாரணத்துக்கு சிறுநீரின் காரத்தன்மை சற்று அதிகமாக இருக்கும். pH அளவு 6 தான் இருக்கும். வயிற்றில் செரிமானம் செய்வதற்கான pH அளவு வெறும் 2 தான் இருக்கும். உமிழ்நீரின் pH அளவு 6.5. இதுபோல நம் உடலின் உறுப்புகளைப் பொறுத்து அமிலத்தன்மை மற்றும் காரத்தன்மை மாறுபடும். ரத்தத்தின் pH அளவு நூலளவு தவறினாலும் அது உடலில் அதிகமான பாதிப்பை ஏற்படுத்தும். இதனால்தான் நம் ரத்தத்தின் pH அளவை சரியாகப் பராமரிக்க நுரையீரல், சிறுநீரகம் போன்ற உடலின் பல உறுப்புகள் கடுமையாக வேலை செய்கின்றன. எல்லோரும் நினைப்பதுபோல், சில உணவு வகைகளைச் சாப்பிடுவதால் மட்டும் உடலின் அமிலத்தன்மையோ காரத்தன்மையோ மாறுபட்டு விடாது.
எடுத்துக்காட்டாக நாம் குடிக்கும் காபியின் pH அளவு 4.5. திராட்சைப் பழச்சாற்றின் pH அளவு 3. இவற்றைக் குடிப்பதால் நம் உடலின் அமிலத்தன்மை அதிகரித்துவிடும் என்பது கிடையாது. மக்கள் புரிந்துகொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், நம் ரத்தத்தின் pH அளவு நாம் எந்த உணவைச் சாப்பிட்டாலும் மாறுபடாது. அதனால், காரத்தன்மையைக் கூட்டுகிறேன்... அமிலத்தன்மையைத் தவிர்க்கிறேன் என்று அசைவம், தானியம், பயறு வகைகளையெல்லாம் தவிர்ப்பது அறிவியலுக்கு எதிரானது.
இதுபோன்ற உணவுமுறை குறித்துப் பொதுவெளியில் பேசிப் பிரபலப்படுத்தியவர் டாக்டர் யங் (Dr. Yung). அவர் இந்தப் பெயரிலேயே பல புத்தகங்களும் எழுதியிருக்கிறார். பின்னாள்களில் அவர் உண்மையான டாக்டர் இல்லை என்பது அறியப் பட்டுக் கைது செய்யப் பட்டார். அறிவியலுக்குப் புறம்பான விஷயங் களைப் பேசும் பலர், இப்படிப் போலியானவர்களாகவே இருக்கிறார்கள் என்பதை மக்கள் நினைவில் கொள்ளவேண்டும். அமிலத்தன்மை மற்றும் காரத்தன்மை பற்றிய இந்தக் கருத்துகள் தவறானவை. நாம் ஏற்கெனவே மிக விளக்கமாகப் பல்வேறு சத்துகள் குறித்துப் பேசியதுபோல தங்கள் தேவைக்கு ஏற்ப சரியான உணவை சரியான அளவில் எடுத்துக் கொண்டால் போதும்.
அடுத்ததாக இன்னொரு முக்கிய விஷயம் பேசவேண்டியிருக்கிறது. சமீபமாக மக்கள் நிறைய விதை வகைகளைச் சாப்பிடத் தொடங்கியிருக்கிறார்கள் இதற்கு ‘seed cycling’ என்று பெயரும் வைத்திருக்கிறார்கள். பொதுவாக நாம் சாப்பிடும் அரிசி, பருப்பு, பாதாம், பிஸ்தா உட்பட எல்லாமே விதைகள்தான். இவைதவிர, ஆளி விதை, சூரியகாந்தி விதை, பூசணிக்காய் விதை என்று பல விதை வகைகளை மக்கள் இன்று சாப்பிடுகிறார்கள். குறிப்பாக பெண்கள். இவை பெண்களின் ஹார்மோன்களை வலுப்படுத்துகிறது என்று சொல்கிறார்கள். விதைகளைச் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் என்பதைத் தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம். இரண்டாவது, ஹார்மோன் பிரச்னைகளை விதைகள் உண்மையிலேயே சரிசெய்கின்றனவா என்பதையும் நாம் பார்க்கவேண்டும்.

விதைகள் அனைத்திலும் ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்திருக்கிறது. மிகப்பெரிய மரம் சிறிய விதையிலிருந்துதான் உருவாகிறது. அத்தனை சத்து அதில் நிறைந்திருக்கிறது. மாவுச்சத்துகள் குறைவாக இருந்தாலும், புரதங்கள் தொடங்கி மற்ற நுண்சத்துகள் அனைத்தும் நல்ல அளவில் இருக்கும். ஒவ்வொரு வகை விதையிலும் ஒவ்வொரு வகைச் சத்து அதிக அளவில் காணப்படுகிறது. உடல் எடையைக் குறைக்க விரும்புவோர், சர்க்கரை அளவைச் சீராக வைக்க நினைப்பவர்கள் ஸ்நாக்ஸ் என்ற பெயரில் கண்ட கண்ட பஜ்ஜி, போண்டாவையெல்லாம் சாப்பிடாமல் விதைகளை எடுத்துக்கொள்வது பல நன்மைகளை உருவாக்கும். ஆனால் பெண்களின் ஹார்மோன் பிரச்னைகளை யெல்லாம் இவை சரி செய்கின்றனவா என்று கேட்டால், அப்படிப்பட்ட நேரடித் திறன்கள் எதுவும் விதைகளில் இல்லை. மாறாக, மாவுச்சத்துத் தீனி வகைகளைக் குறைத்து உண்டு, இதுபோன்ற ஆரோக்கிய கொழுப்பு விதைகளை எடுத்துக்கொள்வதால், இன்சுலின் எதிர்ப்புத் தன்மை குறைவதால், இந்த நன்மைகள் கிடைக்கலாம். அதற்காக விதைகளை சர்க்கரை சேர்த்து பால் ஊற்றி மில்க் ஷேக் போட்டுக் குடித்தால், ஹார்மோன் பிரச்னைகள் சரியாகாது. அதேநேரத்தில், எல்லாவிதப் பிரச்னைகளுக்கும் விதைகளில் தீர்வுண்டா என்று கேட்டால், ‘இல்லை' என்றே சொல்வேன். சொரியாசிஸ் போன்ற ‘ஆட்டோ இம்யூன்' மற்றும் அலர்ஜி பிரச்னை இருப்பவர்கள் இதை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுவதில்லை. இதற்கான காரணம் பற்றி முன்பே பார்த்துள்ளோம். அதாவது, ஒரு தாவரத்தை விலங்குகள் சாப்பிட்டுவிடக்கூடாது என்பதற்கான மிதமான அளவு நச்சுப் பொருள்கள் அனைத்து வித விதைகளிலும் சிறிதளவு உண்டு.
அதனால் ஏற்கெனவே `ஆட்டோ இம்யூன்’ அல்லது அலர்ஜி பிரச்னை இருப்பவர்கள் நட்ஸ் வகைகளை அதிக அளவு எடுத்தால் அந்தப் பிரச்னைகளின் வீரியம் அதிகமாகும் வாய்ப்பு உள்ளது. இதையும் நாம் மனத்தில் கொள்ளவேண்டும். அதேபோல விலையுயர்ந்த விதைகளை நோக்கிச் செல்வதற்கும் எந்த அவசியமும் இல்லை. சாதாரணமாகச் சாப்பிடும் வேர்க்கடலையிலேயே பல சத்துகள் உண்டு.
அடுத்த வாரம், ஓட்ஸ், கார்ன் ஃபிளேக்ஸ் போன்ற பற்பல நவீன உணவுகள், வித்தியாசமான பழ வகைகள் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
- பரிமாறுவோம்
எனக்கு 60 வயது. நான் கடைப்பிடிக்க வேண்டிய உணவுப் பழக்கவழக்கங்கள், அவசியமான உடற்பயிற்சிகள் பற்றிச் சொல்லுங்கள் டாக்டர்?- திலகர் ஈஸ்வரன்
ஓய்வு வயதுக்கென்று தனியாக உணவுமுறை எதுவும் இல்லை. இளம்வயதினர் சாப்பிடும் அனைத்து உணவுகளையும் நீங்களும் சாப்பிடலாம். நிறைய பேர் ஜீரணமாகாது என்று நினைத்து, புரதம் மிகுந்த உணவுகளை வயதான பின்பு தவிர்த்துவிடுகிறார்கள். ஆனால் வயதான பின்புதான் பார்வைப் பிரச்னை, கிருமித் தொற்று போன்றவை ஏற்படாமலிருக்க நல்ல புரதம் தேவை. அதனால் புரதம் மிகுந்த உணவுகளான முட்டை, இறைச்சி, சுண்டல், பயறு வகைகள் போன்றவற்றை அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும். இது ஒத்துக்கொள்ளாது, அது ஒத்துக்கொள்ளாது என்று எந்த உணவையும் தவிர்க்க வேண்டாம்.
அடிப்படையில் மனித உடலமைப்பு சைவ உணவுக்கு ஏற்றவாறு படைக்கப்பட்டுள்ளதா? அசைவ உணவுக்கு ஏற்றவாறு படைக்கப்பட்டுள்ளதா? - கே.விஸ்வநாதன்
மனிதன் omnivorous என்று அழைக்கப்படுகிறான். அதாவது தாவரங்கள், விலங்குகள் இரண்டிலிருந்தும் சில சத்துகள் அவனுக்குத் தேவை. அதனால்தான் சைவர்கள்கூட பால் போன்ற விலங்குப் பொருள்களைச் சேர்த்துக்கொள்கிறார்கள். பால்கூட சேர்க்காத நனி சைவர்களுக்கு வைட்டமின் பி-12 போன்ற சத்துக் குறைபாடுகள் ஏற்படுவதால் அவர்கள் சில சத்து மருந்துகளை எடுத்துக்கொள்கிறார்கள். இதை இன்னும் ஆழமாக நாம் விரைவில் பேசலாம்.