மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 42

கீரை
பிரீமியம் ஸ்டோரி
News
கீரை ( ivandzyuba )

ஆடு மாடுகள் நீண்ட குடல் அமைப்பை உடையவை. அதன் உடலின் நீளத்தைவிட அதன் குடல் 8-10 மடங்கு நீளமாக இருக்கும். ஆடு மாடுகள் சாப்பிடும் முறையை நீங்கள் பார்த்திருக்கலாம்.

உணவு குறித்து நிறைய பார்த்திருக்கிறோம். இன்னும் தீவிரமாக அலச வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது. உணவில் சிறந்தது சைவமா, அசைவமா என்ற கேள்விக்கு இன்றுவரை சரியான விடை கிடைக்கவில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி சொல்கிறார்கள். அதேபோல, மனிதர்கள் உண்மையில் சைவமா, அசைவமா என்ற கேள்விக்கும் விடைகாண வேண்டியது அவசியம்.

எந்த உணவுமுறையைப் பின்பற்றுபவர்களாக இருந்தாலும் அவர்கள் எந்த மாதிரியான சத்துகளில் கவனம் செலுத்த வேண்டும், அவற்றைப் பெற எந்த மாதிரியான உணவுகளைச் சாப்பிட வேண்டும் என்பது குறித்தும் அறிவியல்பூர்வமாக அலசலாம்.

முதலில் சில அடிப்படைக் கேள்விகளுக்கான பதில்களைப் பார்த்துவிடுவோம். இயற்கையில் மனிதன் சைவமா, அசைவமா? இந்தக் கேள்விக்கான பதிலைப் பார்க்கும்முன் விலங்கு களின் வகைகளைப் பார்த்துவிடுவோம். முதலில் விலங்குண்ணிகள் (Carnivores). இதில் Obligate Carnivores என்ற ஒரு வகை உண்டு. அதாவது உணவுக்காக மாமிசத்தை மட்டுமே முழுமையாக நம்பும் விலங்குகள் இவை. அதேபோல Hyper Carnivores, Hypo Carnivores என்ற வகையும் உண்டு. மாமிசத்துடன் சைவ உணவு களை அவை எடுத்துக்கொள்ளும் சதவிகிதத்தை வைத்து இப்படி வகை பிரிக்கப்படு கின்றன.

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 42
Arundhati Sathe

அடுத்து, தாவர உண்ணிகள் (Herbivores). ஆடு, மாடு அனைத்தும் இந்த வகைக்குள் வரும். மூன்றாவது, அனைத்துண்ணிகள் (Omnivores). மனிதர்கள் இந்த வகைக்குள்தான் வருகிறார்கள். சைவம், அசைவம் என இரண்டையும் உண்டு சத்துகள் பெற்று உயிர் வாழும் உயிரினங்கள் இவை. மனிதனின் பரிணாம வளர்ச்சியைப் பார்க்கையில், அவன் குரங்கிலிருந்து தோன்றினான் என்பது நமக்குத் தெரியும். குரங்குகளை நமது Primates என்கிறோம். சிம்பன்ஸி போன்றவை நமது நெருங்கிய மூதாதைகள். பழங்களைச் சாப்பிடும் அதே நேரத்தில், இவை பூச்சிகளையும் சாப்பிடுவதால் அனைத்துண்ணி வகையிலேயே இவை சேர்கின்றன. ஆடு மாடுகளைப் போல தாவர உணவுகளை மட்டுமே இவை சாப்பிடுவது கிடையாது.

அடுத்து, மனிதர்களின் ஜீரண மண்டலம் எதைச் சாப்பிடுவதற்கு ஏற்ற வகையில் உள்ளது என்பதைப் பார்ப்போம். தாவர உண்ணிகள் சாப்பிடும் புற்களில் மாவுச்சத்து செல்லுலோஸ் (Cellulose) வடிவில் உள்ளது. இதை குளுக்கோஸாக மாற்ற செல்லுலேஸ் (Cellulase) என்ற என்சைம் தேவை. அது தாவர உண்ணிகளுக்கு இயற்கையில் கிடையாது. நாம் சாப்பிடும் கீரைகளில் இருந்து நுண்சத்துகள்தான் கிடைக்குமே தவிர, அதில் இருக்கக்கூடிய மாவுச்சத்துகளை நம்மால் பெறவியலாது. பின்னர், தாவர உண்ணிகளுக்கு இது சாத்தியப்படுவது எப்படி?

ஆடு மாடுகள் நீண்ட குடல் அமைப்பை உடையவை. அதன் உடலின் நீளத்தைவிட அதன் குடல் 8-10 மடங்கு நீளமாக இருக்கும். ஆடு மாடுகள் சாப்பிடும் முறையை நீங்கள் பார்த்திருக்கலாம். நிறைய புற்களை வேகவேகமாகச் சாப்பிடும். அவை அனைத்தும் உடனடியாக ஜீரணமாகிறதா என்றால் இல்லை. அவை வயிற்றில் குறிப்பிட்ட இடத்தில் சேகரிக்கப்படும். பிறகு ஒரு தருணத்தில் அவற்றை மீண்டும் வாய்க்குக் கொண்டு வந்து அசைபோடும். வயிற்றில் இப்படி உணவுகள் சேகரிக்கப்படும் நேரத்தில் இயற்கையாக அங்கிருக்கும் சில பாக்டீரியாக்கள் மூலமாக செல்லுலேஸ் சுரந்து மாவுச்சத்து ஜீரணமாகிறது. நீர் யானை, யானை, மாடு ஆகியவற்றின் உடல் அளவு பெரிதாக இருக்க கொழுப்புதான் காரணம் என்று நாம் நினைக்கிறோம். ஆனால், நீண்ட குடலே அதற்குக் காரணம். அவற்றின் மொத்த உடல் எடையில் பெரும்பான்மை அளவை அதுவே ஆக்கிரமித்துவிடுகிறது.

ஆனால், தூய விலங்குண்ணிகளுக்கு இவை எதுவும் தேவையில்லை. இதைக் கிட்டத்தட்ட ரெடிமேடு உணவுடன் ஒப்புமைப்படுத்தலாம். தாவர உண்ணிகள் உடலில் ஏற்கெனவே சேமிக்கப்பட்டிருக்கும் சத்துகள் இந்த விலங்குண்ணிகளுக்கு மிக எளிதாகக் கிடைத்துவிடுகின்றன. எனவே, தாவர உண்ணிகளைவிட இவற்றின் குடல் சிறிய அளவில்தான் இருக்கும். அதாவது உடலின் நீளத்தைவிட அவற்றின் குடல் நீளம் 2-3 மடங்கு மட்டுமே பெரிதாக இருக்கும்.

மனிதர்கள் இந்த இரண்டுக்கும் இடையில் இருக்கின்றனர். புற்களை மட்டுமே சாப்பிட்டு ஜீரணம் செய்யும் ஆற்றல் இல்லையென்றாலும், மாவுச்சத்து கிடைக்கக்கூடிய அரிசி போன்றவற்றை நாம் எடுத்துக்கொள்கிறோம். நம் பற்கள், தாடை அமைப்பு போன்றவையும் இதில் வித்தியாசப்படுகின்றன. மாமிசத்தைக் கடித்து இழுக்கும் பற்களும் நமக்கில்லை, மிக நீண்ட நேரத்துக்குப் புற்களை அசைபோடும் வகையில் உறுதியான தாடை அமைப்பும் நமக்கு இல்லை.

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 42
Arundhati Sathe

மூளையே நம் பலம். சமைத்துச் சாப்பிடத் தொடங்கிய பிறகு, கடினமான மாமிசம் தொடங்கி அனைத்து உணவு வகைகளையும் ஜீரணம் செய்யும் ஆற்றல் நமக்குக் கிடைத்திருக்கிறது. மேலும், விலங்குண்ணிகளின் வயிற்றுப்பகுதியில் உள்ள அமிலத்தன்மை, மாமிசத்தை ஜீரணம் செய்வதற்கேற்ற வகையில் அதிகமாக இருக்கும். (pH=1). ஆடு மாடுகளின் pH அளவு 3-5 வரை இருக்கிறது. இதே நமக்கு 1.5 - 3.5 என்ற இடைப்பட்ட அளவில் இருக்கிறது. பரிணாம ரீதியான கருத்துகளும் இவ்விடத்தில் முன்வைக்கப்படுகின்றன. அதாவது கற்கால மனிதன் சைவம், அசைவம் இரண்டையும் தனித்தனியாகச் சாப்பிடாமல் ஒன்றாகவே சாப்பிட்டிருக்க வேண்டும். சிம்பன்ஸி முதலிய குரங்குகள் 5 ஆண்டுகள் வரை தாய்ப்பால் கொடுக்கும் வழக்கத்தைக் கொண்டிருக்கின்றன. காரணம், சைவமே அவற்றின் பிரதான உணவாக இருக்கிறது. விலங்குண்ணிகளுக்கு அதற்குத் தேவையான சத்துகள் மற்ற விலங்குகளிலிருந்து கிடைத்துவிடுவதால், சீக்கிரத்திலேயே தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திவிடுகின்றன.

மனிதன் குறைவான காலமே தாய்ப்பால் கொடுத்து அடுத்தடுத்து குழந்தை பெற்றெடுத்துக் கொள்ள வசதியாக இருந்தது, அவன் பண்டைய காலத்தில் அசைவ உணவுகளைச் சாப்பிட ஆரம்பித்து அதனால் சீக்கிரம் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்த முடிந்ததால்தான் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இப்போது சைவர்களும் நனி சைவர்களும் பெரும்பாலும் சரிவிகித உணவு எடுத்துக்கொள்வதால், பண்டைய மனிதனுக்கு இருந்த சிக்கல்கள் இப்போது இல்லை.

மாவுச்சத்து தவிர்த்து வேறு சிலவற்றைப் பற்றியும் நாம் பேசியாக வேண்டும். வைட்டமின் C, வைட்டமின் B12 என மேலும் இரண்டு முக்கிய சத்துகள் உள்ளன. குரங்குகள் போன்ற சில Primate இன விலங்குகளைத் தவிர்த்து மற்ற பெரும்பாலான விலங்குகளும் தங்களுக்குத் தேவையான வைட்டமின் C-ஐ தாங்களே உற்பத்தி செய்துகொள்கின்றன. சிங்கம், புலி தொடங்கி பறவைகள், மீன்கள் என அனைத்துக்கும் இந்த ஆற்றல் உண்டு. மனிதன் மற்றும் சில வகை குரங்களுக்கு இது இயலாது.

தூய அசைவ உணவுகளை மட்டும் சாப்பிட்டு நம்மால் உயிர்வாழ இயலாது. அப்படிச் சாப்பிட்டாலும் நமக்கு வைட்டமின் C கிடைக்காது. காரணம், பரிணாம ரீதியாக இதை உற்பத்தி செய்யும் ஆற்றல் மனிதர்களுக்குப் போய்விட்டது. தாவரங்கள் மூலமே இச்சத்து நமக்குக் கிடைக்கிறது.

ஆனால், இதில் சில விதிவிலக்குகளும் உண்டு. தாவரங்கள் ஏதுமில்லாத வடதுருவத்தில் வாழும் மக்களுக்கு இந்த வைட்டமின் குறைபாடு வருவதில்லை. காரணம், விலங்குகளின் ஈரல் பகுதியை அவர்கள் சமைக்காமல் அப்படியே சாப்பிடும் வழக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள். இது அவர்களுக்குத் தேவையான வைட்டமின் C-ஐ தந்துவிடுகிறது என அறியப்பட்டுள்ளது.

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 42
ivandzyuba

தாவரங்களைத் தவிர்த்து இச்சத்தைப் பெற ஒரே வழி, ஈரலைச் சமைக்காமல் அப்படியே உண்பது மட்டும்தான். ஆனால், இது நமக்கு நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்று. அதனால் வைட்டமின் சி சத்தைப் பெற நாம் சைவ உணவுகளையே நம்பியுள்ளோம்.

இதேபோல, நம் ரத்த செல்கள், நரம்புகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கு முக்கியமாக விளங்கும் சத்து, வைட்டமின் B12. இதன் குறைபாட்டால் ரத்தசோகை, காமாலை போன்ற நோய்கள் ஏற்படும். ஆனால், இதை எந்த விலங்குகளாலும் இயற்கையில் உற்பத்தி செய்யமுடியாது.

தாவர உண்ணிகளுக்கு அவற்றின் வயிற்றில் இருக்கும் பாக்டீரியாக்கள் மூலமாகவும், விலங்குண்ணிகளுக்குப் பிற விலங்குகளைச் சாப்பிடுவதன் மூலமாகவும் இச்சத்து கிடைத்துவிடுகிறது. அனைத்துண்ணிகளான நாம் இந்தச் சத்தைத் தூய சைவ உணவுகளில் இருந்து பெற முடியாது. ஏனென்றால் தாவர உண்ணிகளுக்கு இந்த வைட்டமின் B12 சத்து சிறுகுடலில் உள்ள நுண்ணுயிரிகளால் உற்பத்தியாவதால், எளிதாக அது உடலில் சேர்ந்துவிடுகிறது. ஆனால் நமது உடலில் இந்த வைட்டமின் B12 சத்தை உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள் பெருங்குடலில் உள்ளதால், நமது உடலில் இந்தச் சத்து உற்பத்தி ஆனாலும் அது மலத்துடன் வெளியே சென்றுவிடுகிறது. எனவே, அங்கு உற்பத்தியாகும் சத்தால் எந்தப் பயனுமில்லை. மண்ணில் இருந்து எடுத்து சமைக்காமல் சாப்பிடும் காய் கனிகளிலிருந்து, அந்த மண்ணில் கலந்துள்ள அசுத்தம் காரணமாக இச்சத்து நமக்கு இயற்கையில் கிடைக்க சிறு வாய்ப்பிருக்கிறது. ஆனால், உணவுகளைக் கழுவி சுத்தம் செய்து சாப்பிடும் முறைக்கு நாம் மாறிவிட்டதால் அதற்கான வாய்ப்பும் இல்லை. ஆதலால், இந்த வைட்டமின் பி12 சத்தை நாம் அசைவ உணவுகள் அல்லது விலங்குகளிலிருந்து பெறப்படும் பால் பொருள்களிலிருந்து மட்டுமே பெற முடியும்.

பாலைக்கூட உண்ணாத நனி சைவர்களுக்கு இந்தக் குறிப்பிட்ட சத்தின் குறைபாடு ஏற்படுவதற்குக் காரணம் இதுதான். அதனால்தான் நிறைய நேரங்களில் அவர்கள் வைட்டமின் B12 சத்து மாத்திரைகள் எடுத்துக்கொள்வார்கள்.

எனவே, தூய அசைவ உணவில் வைட்டமின் சி கிடைப்பது நடைமுறையில் கடினம் என்பதுபோல, தூய சைவ உணவில் வைட்டமின் B12 கிடைப்பதும் சிரமம்.

இதுவரை பார்க்கையில், மனிதனின் உடல் வடிவமைப்பு தூய தாவர உண்ணிகள் போலவும் இல்லை, தூய விலங்குண்ணிகள் போலவும் இல்லை. நாம் இரண்டு வகையான உணவுகளையும் நம்பியே உள்ளோம். இதற்கு ஏற்றாற்போல நாம் நம் உணவு முறையை சரிசமமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்த இடத்தில் என் கருத்துகள் சிலவற்றைப் பதிவு செய்ய விரும்புகிறேன். இதை மதரீதியாகவோ கொள்கை ரீதியாகவோ தொடர்புபடுத்திக் கொள்ள வேண்டாம். அனைத்து வகையான உணவுமுறையைச் சார்ந்தவர்களையும் நான் மதிக்கிறேன். ஒவ்வொருவருக்கும் அனைத்துச் சத்துகளும் கிடைக்க தக்க உதவி செய்ய வேண்டும் என்பதே நோக்கம்.

சைவமா... அசைவமா...
சைவமா... அசைவமா...
Andyworks

சைவர்களைப் பொறுத்தவரை, மாவுச்சத்து மற்றும் கொழுப்புச்சத்து குறித்த எந்தப் பிரச்னையும் அவர்களுக்கு இல்லை. புரதங்கள் தேவையான அளவில் சைவர்களுக்குக் கிடைக்குமா என்ற கேள்வி பலருக்கு உள்ளது. நாம் ஏற்கெனவே புரதம் பற்றிய கட்டுரையில் பார்த்ததுபோல, தானியங்களையும் பருப்பு வகைகளையும் சேர்ந்து எடுத்தாலே அனைத்து அமினோ அமிலங்கள் சைவர்களுக்கு தாராளமாகக் கிடைத்துவிடும். கூடுதல் அளவு தேவைப்படுமாயின் சோயா பீன்ஸ், பால் சார்ந்த உணவுகள் மூலம் அதைப் பெற்றுக்கொள்ளலாம். சைவர்கள் மற்றும் நனி சைவர்களுக்கு அதிக அளவிலான வைட்டமின் B12 குறைபாடு ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க பால் பொருள்களை சைவர்கள் தாராளமாக எடுத்துக்கொள்வது அவசியம். நனி சைவர்கள் பி12 சத்து மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம்.

இதே அசைவம் சாப்பிடுபவர்களுக்கு நார்ச்சத்துக் குறைபாடு இருப்பதைப் பார்க்கமுடிகிறது. இதன் காரணமாக, மலச்சிக்கல் போன்ற பிரச்னைகள் அவர்களுக்கு ஏற்படுவதுண்டு. ஒவ்வொருவரும் 300-500 கிராம் காய்கறி, கீரைகளை தினந்தோறும் சாப்பிடுவது அவசியம். அசைவம் சாப்பிடும் பெரும்பாலோருக்கு இப்பழக்கம் இருப்பதில்லை. அதேபோல, சமைத்துண்ணும் அசைவ உணவுகளில் வைட்டமின் C கிடைப்பதில்லை. இதைக் கொய்யா, நெல்லிக்காய், எலுமிச்சை போன்ற காய் கனிகளிலிருந்து பெறலாம். வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் சத்துகள் தானியம், பருப்பு வகைகள், கீரைகள் மூலம் கிடைக்கப்பெறும். ஆதலால் அசைவ உணவுகள் அதிகமாக எடுப்பவர்கள் மேற்கூறிய சத்துக் குறைபாடுகளைத் தவிர்க்க அதிக அளவில் காய்கறி கீரைகளைச் சேர்த்துக்கொள்வதும் மிக அவசியம்.

‘சைவம் சிறந்ததா, அசைவம் சிறந்ததா' என்ற கேள்வியை நாம் பெரிதாக ஆராய வேண்டியதில்லை. அவரவருக்கு உகந்த உணவுமுறையை தாராளமாகப் பின்பற்றலாம். அது பிறரை உதாசீனப்படுத்தும் வகையில் இருக்கக்கூடாது, அவ்வளவுதான். இப்போது குழந்தைகள் என்ன உணவை எடுத்துவர வேண்டும் என்பது குறித்துப் பள்ளிகள் தீர்மானிக்கின்றன. இது சரியல்ல. ஒருவரின் உணவுமுறை கொள்கைரீதியாக மட்டுமல்லாமல், உடலுக்குத் தேவையான சத்துகளைக் கொண்டிருக்கும் அறிவியல் ரீதியாக இருப்பதுதான் அவசியம். பிடித்த உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள், அதற்கேற்ற சில மாற்றங்களைச் செய்துகொள்ளுங்கள். ஆரோக்கியமான வாழ்க்கையை வாழுங்கள்.

அடுத்த வாரம், வேறொரு விஷயத்தைப் பற்றிப் பேசுவோம்.

- பரிமாறுவோம்

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 42
AFZALKHAN M

குறிப்பிட்ட வயதுக்கு மேல் அசைவ உணவு களைத் தவிர்க்க வேண்டும் என்கிறார்களே... ஏன் டாக்டர்? - திலகர் ஈஸ்வரன்

உண்மையில் இது தவறான நம்பிக்கை. முதிர்ந்த வயதுடையவர்களுக்குப் புரதச்சத்து பற்றாக்குறையைப் போக்கினால் மட்டும் 30% இறப்புகளைத் தடுத்துவிடலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன. வயதான பின்பு அசைவம் ஜீரணமாகாது என்பது தவறான நம்பிக்கை. அசைவம் சாப்பிடும் பழக்கம் உடையவர்கள் தாராளமாகத் தொடர்ந்து சாப்பிடலாம். இரவு நேரத்தில் சாப்பிடாமல் காலை அல்லது மதிய நேரம் சாப்பிடுவது, அவர்கள் ஜீரணத்திற்கு சற்று உகந்ததாக இருக்கும்.

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 42
Gopal Krishna

இரவில் வாழைப்பழம் சாப்பிடுவது நல்ல பழக்கமா சார்? - கவிவர்மன்

மலச்சிக்கல் போன்ற பிரச்னை இருப்பவர்கள் நார்ச்சத்து பெறவேண்டும் என்பதற்காக இரவு வாழைப்பழம் சாப்பிடும் பழக்கத்தைப் பின்பற்றுகிறார்கள். உடல் பருமன், சர்க்கரை நோய், கல்லீரல் கொழுப்பு போன்ற பிரச்னை இருப்பவர்கள், இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற உணவை இரவில் எடுத்துக்கொண்டு, அதோடு சேர்த்து இரண்டு மூன்று வாழைப்பழங்கள் சாப்பிடுவது நல்லதல்ல. வாழைப்பழம் மாவுச்சத்து மிகுந்த உணவு என்பதால், இரவு உணவுடன் சேர்த்து ஒரே ஒரு வாழைப்பழம் எடுத்துக்கொள்வதில் தவறில்லை.

டாக்டரிடம் கேளுங்கள்...

ஆரோக்கியம், டயட் தொடர்பான சந்தேகங்களை மருத்துவர் அருணிடம் வாசகர்கள் கேட்கலாம். சந்தேகங்களை arokkiam@vikatan.com என்ற மின்னஞ்சலிலோ அல்லது ‘டாக்டரிடம் கேளுங்கள், ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை- 2’ என்ற முகவரிக்குக் கடிதம் வழியாகவோ அனுப்பலாம்.