
டயட் எனும் பெயரில் மூன்று வேளையும் வாழைப்பழ உணவுகள் சாப்பிடும் முறை உருவாக்கப்பட்டது. செலியாக் என்ற குழந்தைகளைத் தாக்கும் நோயை இது குணப்படுத்துவதாக மருத்துவ ஆராய்ச்சிகள் வெளியிடப்பட்டன.
உணவு குறித்துப் பரந்துபட்ட பார்வையோடு நிறைய விஷயங்களை அலசியிருக்கிறோம். இந்த வாரம் நாம் பேசப்போவது ‘சூப்பர் ஃபுட்' எனப்படும் சூப்பர் உணவுகள். தினம் தினம் வாட்ஸப்பிலும் பேஸ்புக்கிலும் இன்ஸ்டாகிராமிலும் சூப்பர் உணவுகளைப் பற்றி பலரும் பலவிதச் செய்திகளைப் பகிர்ந்துவருகிறார்கள். உண்மையில் சூப்பர் உணவு என்றால் என்ன?
ஓர் உணவின் தன்மையை, பயனை மிகைப்படுத்தி ‘இந்த உணவு சேர்த்துக்கொண்டால் பாதி நோய்கள் ஓடிவிடும்', ‘நீங்கள் நூறாண்டுக் காலம் வாழலாம்', 'வயது குறைந்து இளமையாகிவிடுவீர்கள்', ‘கேன்சர் ஓடிப் போய்விடும்' என்றெல்லாம் பல்வேறு செய்திகளை வாட்ஸப்பிலும் சமூக வலைதளங்களிலும் தினம் பார்ப்பீர்கள்... அவைதான் சூப்பர் உணவு. மேஜிக் உணவு, மிராக்கிள் உணவு, சூப்பர் உணவு, பவர் உணவு, டாப் டென் உணவுகள் என்று பல்வேறு பெயர்களில் இதுபோன்ற தகவல்கள் இணையத்தில் உலவுகின்றன. சூப்பர் உணவு என்ற பெயரில் பல நவீன உணவுகளும் பாரம்பரிய உணவுகளும் மிகைப்படுத்தப்பட்டு அதிக விலையில் விற்கப்படுகின்றன. மக்கள் அவற்றை எப்படியாவது வாங்கி தினம் தினம் உண்ண நினைக்கிறார்கள். இந்தப் பழக்கம் எங்கிருந்து ஆரம்பித்தது? சூப்பர் ஃபுட் என்று உண்மையில் உணவுகள் உள்ளனவா? அவற்றில் அந்த அளவுக்கு சத்துகள் இருக்கின்றனவா? பார்க்கலாம்...

`சூப்பர் ஃபுட்' என்ற வார்த்தையை முதலில் பயன்படுத்தியது மருத்துவர்களோ உணவு வல்லுநர்களோ அல்லது ஆராய்ச்சியாளர்களோ இல்லை. பழங்களை விற்கும் ஒரு கம்பெனிதான் இந்த வார்த்தையை முதலில் பயன்படுத்தியது. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் முதல் உலகப்போர் நடந்துகொண்டிருந்தபோது ஒருவித வாழைப்பழத்தை இறக்குமதி செய்து அமெரிக்காவில் விற்பனை செய்தது யுனைட்டெட் ஃப்ரூட்ஸ் என்ற கம்பெனி. அந்தப் பழ வணிகத்தை அதிகப்படுத்த, அவர்கள் செய்த விளம்பர யுத்திதான் இது. ஒரு மிகப்பெரிய பிரசாரத்தைத் தொடங்கியது அந்தக் கம்பெனி. வாழைப்பழம் பற்றிய குறிப்புகள், அவற்றில் உள்ள சத்துகள் உள்ளிட்ட தகவல்களைத் துண்டுப் பிரசுரங்களாக வெளியிட்டது. தினசரி உணவில் வாழைப்பழத்தை எப்படியெல்லாம் சேர்த்துக்கொள்ளலாம் என்று விளம்பரப் படுத்தியது. மலிவானது, சத்தானது, எளிதில் செரிமானமாகும், எல்லா இடங்களிலும் கிடைக்கும், கிருமியில்லாத பேக்கேஜில் இயற்கையால் சீல் வைக்கப்பட்டது என்றெல்லாம் கண்ணையும் கருத்தையும் கவரும் வாசகங்கள் பயன்படுத்தப்பட்டன. காலை உணவில் கார்ன்ஃபிளேக்ஸுடன் சேர்த்துக்கொள்ளுங்கள். மதிய உணவில் சாலட் போல சாப்பிடுங்கள், இரவு உணவில் இறைச்சியுடன் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று அறிவுரைகள் சொல்லப்பட்டன.

டயட் எனும் பெயரில் மூன்று வேளையும் வாழைப்பழ உணவுகள் சாப்பிடும் முறை உருவாக்கப்பட்டது. செலியாக் என்ற குழந்தைகளைத் தாக்கும் நோயை இது குணப்படுத்துவதாக மருத்துவ ஆராய்ச்சிகள் வெளியிடப்பட்டன. அமெரிக்க மருத்துவச் சங்கமும் இதையே அறிவித்தது. (‘செலியாக் நோய்க்கு கோதுமையில் உள்ள குளூட்டனே காரணம். குளூட்டன் இல்லாத எந்த உணவை எடுத்திருந்தாலும் அந்த நோய் கட்டுப்பட்டிருக்கும்' என்ற அறிவியல் உண்மை அந்தக் காலத்தில் கண்டுபிடிக்கப்படவில்லை.) வாழைப்பழங்கள் விரைவில் ஆரோக்கியத்தின் சின்னமாக மாறின. மேலும் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு செலியாக் நோய் இல்லாவிட்டாலும் வாழைப்பழங்களை உணவாக மாற்றினர். யுனைட்டெட் ஃப்ரூட்ஸ் நிறுவனம் பிரபல பத்திரிகைகளில் வாழைப்பழங்களைப் பற்றிய செய்திகளை வெளியிடச்செய்து வாழைப்பழ உணவு மோகத்தை உருவாக்கியது. இப்படித்தான் பிறந்தது முதல் சூப்பர் உணவு.
வாழைப்பழம் என்பது காலம் காலமாக மனிதனும் மனிதர்களின் மூதாதையர்களான குரங்குகளும் மகிழ்ச்சியாகச் சாப்பிட்டு வந்த உணவுதான். ஆனால் விளம்பரங்கள் மூலம் எப்படி மனிதனை ஒரு சாதாரண உணவை நோக்கி ஓடச் செய்ய முடியும் என்ற உத்தி முதலாளித்துவச் சந்தைக்குத் தெரியவந்தது அப்பொழுதுதான்.

இந்த 21-ம் நூற்றாண்டில் தகவல்கள் மின்னல் வேகத்தில் பரவும் காரணத்தால் மாதா மாதம் ஒரு சூப்பர் உணவு சந்தைக்கு வந்து கொண்டிருக்கிறது. உணவு பற்றி எந்த அடிப்படையும் தெரியாத ஒரு நடிகரோ, நடிகையோ அல்லது உணவு வல்லுநர் என்று தங்களைத் தாங்களே கூறிக்கொள்ளும் ஒரு நபரோ ஏதாவது ஒரு உணவைப் பற்றிப் பேசி அந்தச் செய்தி வைரல் ஆகிவிட்டால் போதும், அந்த உணவு சூப்பர் உணவாக மாறிவிடுகிறது. ‘சூப்பர் உணவு' என்றால் ‘சூப்பர் சேல்ஸ்' என்று அர்த்தம். நீல்சன் கம்பெனி எடுத்த ஒரு கருத்துக்கணிப்பில், 80 சதவிகித மக்கள் ‘எவ்வளவு விலை அதிகமானாலும் சூப்பர் உணவுகளை வாங்குவதற்குத் தயாராக இருக்கிறோம்' என்று கருத்து தெரிவித்தார்கள்.
‘உணவே மருந்து' என்ற வாசகம்தான் இதற்கு உயிர் நாடி. ‘உடல் எடையைக் குறைப்பதற்கோ அல்லது சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதற்கோ இப்படிப்பட்ட உணவுமுறையைப் பின்பற்றுங்கள், இப்படிப்பட்ட உடற்பயிற்சியைச் செய்யுங்கள்' என்று சொல்லப்படும் முறையான அறிவியல் உண்மையைவிட, இதுமாதிரியான சூப்பர் உணவுச் செய்திகள் மக்களை எளிதாகக் கவர்ந்துவிடுகின்றன. அது வேலை செய்கிறதோ, இல்லையோ, இணையத்தில் சொல்லப்படும் வழிமுறைகளை மக்கள் பின்பற்றிப் பார்த்துவிட நினைக்கிறார்கள். இதுதான் இந்த பில்லியன் டாலர் சந்தைக்குக் காரணம்.

உண்மையில் ஒரு உணவு, சூப்பர் உணவாக இருப்பது சாத்தியமா?
நாம் இந்தத் தொடரில் பல்வேறு விதமான நோய்களையும் அவற்றின் காரணங்களையும் பற்றி விரிவாக அலசியுள்ளோம். ஓர் உணவை எடுத்துக்கொள்வதால் மட்டுமே ஒரு நோய் குணமாகிவிடும் என்று சொல்வது பெரிய தவறு. உதாரணத்திற்கு, புளூபெர்ரி பழத்தை எடுத்துக்கொள்ளலாம். 1991-ல் செய்யப்பட்ட ஓர் அமெரிக்க ஆராய்ச்சியில், புளூபெர்ரி போன்ற பழங்களில் ஆன்டி ஆக்சிடென்ட் தன்மை சற்று அதிகம் இருப்பது தெரிய வந்தது. அதே சமயத்தில், ‘ஆக்சிஜனேற்றம் நடந்து அதனால் உருவாகும் ஃப்ரீ ரேடிகல் என்ற வேதியியல் பொருள்கள்தான் சர்க்கரை நோய், இதய நோய், வயது மூப்பு போன்றவற்றில் முக்கியப் பங்கு வகிக்கின்றன' என்று வேறு சில ஆராய்ச்சிகளில் தகவல்கள் கிடைத்தன. இந்த இரண்டையும் இணைத்து, ‘ஆக்சிஜனேற்றத்தைத் தடுக்க ஆன்டி ஆக்சிடென்ட் உள்ள உணவுகளை அதிகம் எடுத்தால் இந்த நோய்களெல்லாம் ஓடிப்போய்விடும்' என்று மிகைப்படுத்தப்பட்டது. உடனடியாக, மக்கள் ஆன்டி ஆக்சிடென்ட் இருக்கும் உணவுகளைத் தேட ஆரம்பித்தார்கள். புளூபெர்ரியில், ஆந்தோசயனின் எனப்படும் ஆன்டி ஆக்சிடென்ட் தன்மை கொண்ட வேதிப்பொருள் இருப்பதால், அந்தப் பழத்தை உலகம் முழுக்க வாங்கிச் சாப்பிட ஆரம்பித்தார்கள். ஆனால் ஒரு ஆராய்ச்சியில்கூட இந்த புளூபெர்ரி பழத்தைச் சாப்பிடும் நபர்களுக்கு அந்தப் பழத்தைச் சாப்பிடாதவர்களைவிட சர்க்கரை நோய் குறைவாக வருகிறது என்றோ, கேன்சர் வருவதில்லை என்றோ, இதய நோய் குணமாகிறது என்றோ நிரூபிக்கப்படவில்லை.
அந்த ஆராய்ச்சியை வெளியிட்ட அமெரிக்க உணவுத்துறை சில வருடங்கள் கழித்து, ‘புளூபெர்ரி போன்ற பழங்களில் இந்த ஆன்டி ஆக்சிடென்ட் இருந்தாலும் பெரிதாக அவை ரத்தத்தில் கலப்பதில்லை. உடலுக்குப் பெரிய அளவுக்குப் பயன்களைக் கொடுப்பதில்லை' என்று அறிவித்தது. ஆனாலும் புளூபெர்ரி பழத்தின் சந்தை பன்மடங்கு அதிகமாகிக்கொண்டேதான் இருக்கிறது. இப்படித்தான் சூப்பர் உணவுகள் உருவாகின்றன.

ஓர் உணவுப்பொருளில் இருக்கும் ஏதோ ஒரு பலனை மிகைப்படுத்திப் பேசும்போது, ‘நாம் அந்த உணவை எடுத்துக்கொள்ளும் சிறிய அளவில் அந்தப் பயன் கிடைக்குமா? அப்படியே பயன் கிடைத்தாலும் உண்மையில் ஒரு குறிப்பிட்ட நோயைக் குணப்படுத்துமா? அல்லது நோயின் வீரியத்தைக் குறைக்குமா?' என்பது போன்ற கேள்விகளுக்கும் விடை தேட வேண்டும். அப்படிச் செய்யாமல் ஏதோ ஒரு வேதியியல் பொருள் ஓர் உணவில் இருக்கிறது என்பதற்காகவே நிறைய உணவுகள் மிகைப்படுத்தப்பட்டுப் பேசப்படுகின்றன. சந்தையில் விற்கப்படுகின்றன.
பாதாம் பருப்பு இப்பொழுது மிகவும் பிரபலமாகி வருகின்றது. பாதாம் மட்டுமல்லாமல் வால்நட், பிஸ்தா போன்ற மற்ற நட்ஸ் வகைகளும் இப்போது பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. இரண்டே இரண்டு பாதாம் தினசரி ஊறவைத்துச் சாப்பிட்டுவிட்டால் நூறாண்டுக் காலம் வாழலாம் என்று மக்கள் நம்புகின்றனர். பாதாம் என்பது, மாவுச்சத்து குறைவான ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் புரதம் நிறைந்த ஒரு விதையுணவு. எடையைக் குறைக்கவேண்டும் அல்லது சர்க்கரையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று நினைப்பவர்கள் காலையில் இட்லி, தோசைக்குப் பதிலாக 50-60 பாதாமை ஒரு வேளை உணவாகச் சாப்பிட்டால், அவருக்கு அந்த விலை கட்டுப்படியானால், குறைந்த மாவுச்சத்து இருப்பதன் காரணமாக கட்டாயம் உடல் எடை குறையும். சர்க்கரை அளவுகளும் கட்டுப்படும். அதே பயன், விலை மலிவான நிலக்கடலையிலும் கட்டாயம் கிடைக்கத்தான் செய்யும். ஆனால் இரண்டு பாதாமை தினம் உணவில் சேர்த்துக்கொண்டு நிறைய பயன்கள் கிடைத்துவிடும் என்று நம்புவது அறியாமையின் உச்சக்கட்டம். அதிலும் வால்நட் போன்ற நட்ஸ் வகைகள் கிலோ 2,000 ரூபாய்க்கு மேல் விற்கப்படுகின்றன. வால்நட்டில் உள்ள ஆரோக்கிய ஒமேகா-3 கொழுப்பு நம் இதயத்திற்கு நல்லது என்று சொல்லப்பட்டாலும், அதன் விலையைக் கேட்டால் மாரடைப்பே வந்துவிடும் என்பதுதான் நிஜம்.

அவகேடோ என்ற பழத்தைப் பற்றி ஏற்கெனவே பேசியிருந்தோம். உடல் எடையைக் குறைக்க விரும்புவர்களுக்கு மற்ற பழங்களைவிட இதில் மாவுச்சத்து குறைவாகவும் நல்ல கொழுப்புகள் அதிகமாகவும் உள்ளதால் இது பிரபலமாக இருக்கிறது. ஆனால் ஒரு பழத்தின் விலை கிட்டத்தட்ட 100 ரூபாய்க்கும் மேல் விற்கிறது. அந்த விலைக்கு ஒரு கிலோ நிலக்கடலை வாங்கி 10 நாளைக்கு உணவாக எடுத்துக்கொள்ளலாம். மூன்று நான்கு தேங்காய்கள் வாங்கி ஒரு வாரத்திற்கு உணவாக எடுத்துக்கொள்ளலாம். மாவுச்சத்து குறைவாகவும் ஆரோக்கிய கொழுப்புகள் அதிகமாகவும் உள்ள உணவுகளை எடுத்துக்கொண்டால் உடல் எடை குறையும் என்ற அறிவியல் உண்மையைப் புரிந்து கொண்டால், ‘அவகேடோவும் தேங்காயும் நிலக்கடலையும் ஒன்றுதான்' என்பது விளங்கும்.
தற்போதைய இன்னொரு சூப்பர் உணவு, சியா விதைகள். இவை இதய ஆரோக்கியத்திற்கு நல்லது என்றும், நிறைய ஆன்டி ஆக்சிடென்ட் உள்ளது என்றும் பேசப்படுகிறது. 100 கிராம் சியா விதைகளில் 17 கிராம் ஒமேகா-3 கொழுப்புகள் உள்ளன. இது, ஒமேகா-3 கொழுப்புகள் அதிகம் கிடைக்கும் உணவு என்று சொல்லப்படும் சால்மன் மீனில் கிடைப்பதைவிட 8 மடங்கு அதிகமாகும். ஆனால், உண்மை என்னவென்றால் விதையில் இருப்பது ALA எனப்படும் ஒமேகா-3 வகை. நமது உடலுக்குள் வந்து வேறு வகையான, அதாவது EPA, DHA எனப்படும் ஒமேகா-3 கொழுப்பாக அது மாறவேண்டும். அப்போதுதான் அது பயன் தரும். ஆனால் அது முழுமையாக அப்படி மாறுவதில்லை என்பதுதான் உண்மை. இன்னொரு விஷயம், நாம் ஒரு டீஸ்பூன் அளவில் சியா விதைகளைச் சாப்பிட்டுவிட்டு இதயம் வலுவடைந்துவிடும் என்று நம்புவதும் சரியல்ல. மேலும் சியா விதைகளை அதிகம் சாப்பிடுவதால் இதயப் பிரச்னைகள் குறையுமா என்று நடத்தப்பட்ட ஆராய்ச்சிகளில் அப்படி ஒன்றும் பெரிதாக நல்ல முடிவுகள் கிடைக்கவில்லை. ஆனாலும் சியா விதைகள் பரவலாக விற்பனை ஆகிக் கொண்டுதான் இருக்கின்றன.

இன்னொரு சூப்பர் உணவு, கசப்பான டார்க் சாக்லேட். சாக்லேட்டை அதன் இனிப்புக்காகத்தான் அனைவரும் சாப்பிடுவோம். ஆனால் சாக்லேட்டில் உள்ள கோக்கோ அளவை அதிகப்படுத்தி அதைக் கசப்பாக மாற்றி ஆரோக்கியம் என்று விளம்பரம் செய்யப்படுகிறது. அதைப்பற்றிய இரண்டு உண்மைகளை இங்கே உடைக்கிறேன். ஒன்று, அதிக கசப்புத் தன்மைக்கு காரணம், Flavonoids எனப்படும் கோக்கோவில் உள்ள வேதிப்பொருள்கள். அதில், Antioxidant தன்மை இருக்கின்றது என்று கதை சொல்லப்பட்டாலும், நாம் சாப்பிடும் குறைந்தபட்ச அளவுகளில் அது பெரிதாகக் கிடைப்பதில்லை என்பதுதான் உண்மை. இரண்டாவது காமெடி, நிறைய பேர் கசப்பான சாக்லேட்டுகளில் இனிப்பும் மாவுச்சத்தும் குறைவாக இருக்கின்றது என்று நினைத்துக்கொள்கிறார்கள். உடல் எடை குறைக்க விரும்புவர்கள்கூட, ‘நான் இனிப்பான சாக்லேட்டிற்கு பதிலாக கசப்பான சாக்லேட் சாப்பிட்டுக்கொள்ளவா?' என்று கேட்கிறார்கள். உண்மை என்னவென்றால், இரண்டு வகையான சாக்லேட்களிலும் மாவுச்சத்து அளவும் சர்க்கரை அளவும் ஒன்றுதான். கோக்கோ அதிகமாவதால் மட்டுமே அது கசப்பாக இருக்கின்றது. மற்றபடி கசப்பான சாக்லேட் சாப்பிட்டாலும் உடல் எடை கூடும், சர்க்கரை அளவுகள் அதிகமாகும், மற்ற பிரச்னைகளும்தான் அதிகமாகும்.
இதேபோல கீனுவா, கோஜி பெரி, கிவி பழம், டிராகன் பழம், கேல் என்று பல்வேறு சூப்பர் உணவுகள் வந்துகொண்டே இருக் கின்றன. விலை அதிகம் கொடுத்து மக்கள் வாங்கிக் கொண்டேதான் இருக்கிறார்கள். பிரபலங்களும் இணையத்தில் அவற்றை விளம்பரப்ப டுத்திக்கொண்டேதான் இருக்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில் சூப்பர் உணவு என்று ஒரு பொருளை நாம் நம்புவதற்கு முன்பாக, ‘உண்மையில் அந்த சத்துகள் எந்த அளவில் இருக்கின்றன, நாம் அந்த உணவை எடுத்துக் கொள்ளும் அளவில் அந்த சத்துகள் கிடைக்குமா, அந்த சத்துகள் முழுமையாக ஜீரணமாகி உடலுக்குப் போய்ச் சேருமா, அப்படியே போய்ச் சேர்ந்தாலும் அது உண்மையில் நோய்களைத் தடுக்கின்றதா, அதற்கு ஆதாரங்கள் உள்ளனவா?' என்ற கேள்விகளுக்கெல்லாம் விடைதேட வேண்டும். அப்போதுதான் இந்த சூப்பர் உணவு மோகத்தில் இருந்து நாம் தப்பிக்க முடியும். நமது பர்சைப் பாதுகாக்கவும் முடியும்.
அடுத்த வாரம் இன்னொரு விஷயம் பேசுவோம்!
- பரிமாறுவோம்
*****
சைனஸுக்கும் உணவுக்கும் தொடர்பு இருக்கிறதா? - சந்திரசேகரன்
சைனஸ் என்று நம்மூரில் பெரும்பாலான மக்கள் அழைப்பது அலர்ஜியால் வரும் தும்மல், மூக்கில் நீர் வடிதல், மூக்கடைப்பு போன்ற பிரச்னையைத்தான். சைனஸ் தொற்று என்பது தனிப் பிரச்னை. இந்த அலர்ஜி பிரச்னைக்கும் உணவுக்கும் கட்டாயம் தொடர்பு இருக்கிறது. அதிக சர்க்கரை சார்ந்த உணவுகள், பால் பொருள்கள், அதிக மாவுச்சத்து உள்ள தீனி வகைகள்... இவை அனைத்தும் இந்த அலர்ஜி அறிகுறிகளை அதிகப்படுத்தும். எனவே இந்தப் பொருள்களை அலர்ஜி பிரச்னை இருப்பவர்கள் தவிர்ப்பது நல்லது.
புற்றுநோய் போன்ற நோய்களெல்லாம் உணவுப் பழக்கத்தால்தான் ஏற்படுகின்றன என்று சொல்கிறார்கள்... அது உண்மையா? - செந்தில் வேலவன்
புற்றுநோய்க்கும் உணவுக்கும் நிச்சயம் தொடர்பு இருக்கிறது. ஆனால், தவறான உணவுப் பழக்கத்தால் மட்டுமே புற்றுநோய் அதிகம் வருகிறது என்பது தவறான பார்வை. புற்றுநோய் வருவதற்கு மரபணு காரணங்கள், வாழ்க்கைமுறை, புகை, மதுப்பழக்கங்கள், சமூக மாற்றங்கள் போன்ற பல காரணங்கள் இருப்பதைப்போல உணவும் சிறு காரணமாக இருக்கிறது. மிக ஆரோக்கியமான உணவுகளை உண்டு வந்த காலத்தில் இருந்தே புற்றுநோய்கள் இருக்கின்றன. தொல்பொருள் ஆராய்ச்சியில் கிடைத்த எலும்புக் கூடுகளில்கூட புற்றுநோய் இருந்தது தெரியவந்துள்ளது. எனவே அதிகம் பயப்படாமல் உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கிய உணவை மகிழ்வோடு உண்ணுங்கள்.
பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஞாபகசக்தி அதிகரிக்க எந்தமாதிரியான உணவுகள் தரவேண்டும்? - எம்.ராஜேந்திரன்
ஞாபகசக்தி என்பது ஒவ்வொரு குழந்தையின் ஐ க்யூ எனப்படும் மூளையின் திறன் எவ்வளவு உள்ளது, எத்தனை முறை திரும்பத் திரும்பப் பயிற்சி செய்கிறார்கள் என்ற விஷயங்களைப் பொறுத்தே அமையும். ஒரு குறிப்பிட்ட உணவு மூலம் ஞாபகசக்தியை அதிகப்படுத்த இயலாது. மூளையின் நியூரான்கள் திரும்பத் திரும்ப தூண்டப்படும்போது அது நிரந்தர ஞாபகமாக மாறும். எனவே அடிக்கடி பயிற்சி செய்யச் சொல்வதில் கவனம் செலுத்தினால் போதும்.
கறிவேப்பிலையை வெறும் வயிற்றில் காலை நேரத்தில் சாப்பிட்டால் முடி நரைக்காது என்பது உண்மையா? - ஆர்.வித்யா
முடி நரைப்பதற்குக் காரணம் அந்த முடியின் வேரில் மெலனின் எனப்படும் கருமை நிறமி உற்பத்தி ஆகாமல் நின்று போவதுதான். கறிவேப்பிலையில் சில முக்கியமான Alkaloid ரசாயனங்கள் உள்ளன. அதுமட்டுமல்லாமல் செலினியம், இரும்புச்சத்து, ஜிங்க் போன்ற முக்கிய தாதுப்பொருள்களும் உள்ளன. இந்தப் பொருள்கள் அனைத்தும் சேர்ந்து முடியின் வேரில் மெலனின் உற்பத்தி நின்றுபோகாமல் தடுக்கும் என்கின்றனர். ஆனால் எந்த அளவில் எடுக்க வேண்டும்; உண்மையில் கறிவேப்பிலை சாப்பிட்டால் முடி நரைக்காமல் இருக்கின்றதா என்பதற்கு சரியான ஆராய்ச்சிச் சான்றுகள் இல்லை. இதில் மேலும் ஆராய்ச்சிகள் நடந்து முடிவுகள் வெளிவந்தால் மட்டுமே சரியான பதில் கூறவியலும்.

ஆரோக்கியம், டயட் தொடர்பான சந்தேகங்களை மருத்துவர் அருணிடம் வாசகர்கள் கேட்கலாம். சந்தேகங்களை arokkiam@vikatan.com என்ற மின்னஞ்சலிலோ அல்லது ‘டாக்டரிடம் கேளுங்கள், ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை- 2’ என்ற முகவரிக்குக் கடிதம் வழியாகவோ அனுப்பலாம்.