
உடல் மெலிந்து இருப்பவர்கள் 1 கிலோவுக்கு 35 முதல் 40 கலோரிகள் வரை எடுத்துக்கொள்ள வேண்டும். கொழுப்புச் சத்துகளைக் குறைவாக்கிக் கொண்டு புரதம் மற்றும் மாவுச் சத்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்
உடலில் நோய்கள் இருப்பவர்கள் என்ன மாதிரியான உணவுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதைப் பற்றி சில வாரங்களுக்கு முன்பு பார்த்தோம். ஏற்கெனவே மாரடைப்பு வந்தவர்கள், சிறுநீரக பாதிப்பு, இதய செயலிழப்பு, மூளை தொடர்பான பக்கவாதம் மற்றும் வலிப்பால் பாதிக்கப்பட்டவர்கள், வயிறு சார்ந்த நோய்கள், கணைய, கல்லீரல் செயலிழப்பு போன்ற நீண்ட கால பாதிப்புகள் உள்ளவர்கள் என்ன மாதிரியான உணவுமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது குறித்துப் பார்ப்போம்.
மாரடைப்பிலிருந்து தொடங்குவோம். கொழுப்பு பற்றிய அத்தியாயத்திலேயே இதைப் பற்றி நிறைய பேசியிருக்கிறோம். இப்போது நாம் பேசுவது, ஏற்கெனவே மாரடைப்பு வந்து அதற்கு சிகிச்சை எடுத்துக்கொள்பவர்கள் பற்றி. இவர்களில் பலர் எண்ணெய், கொழுப்பு, அசைவம் ஆகியவற்றைத் தவிர்த்துவிடுவார்கள்.
இது சரியா என்று பார்ப்பதற்கு முன் மாரடைப்பு பற்றிய அறிவியலைப் பார்த்துவிடுவோம். இதயத்துக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுவதையே மாரடைப்பு என்கிறோம். மாரடைப்பு ஏற்பட்டு அதற்காக அறுவை சிகிச்சை செய்துகொண்டு மருந்துகளை ஒருவர் எடுத்துவருகிறார் என்றால், அவரது உணவுமுறையின் நோக்கம் மீண்டுமொருமுறை மாரடைப்பு ஏற்படாமல் தவிர்ப்பதாகவே இருக்கவேண்டும். சரியான உணவுமுறையைப் பின்பற்றினால் நிச்சயமான இன்னொரு மாரடைப்பு வருவதைத் தடுக்கலாம்.

ஏற்கெனவே மாரடைப்பு வந்த ஒருவர், Statin என்ற கொழுப்பைக் குறைக்கக்கூடிய மாத்திரைகளைச் சாப்பிட்டால் 80-ல் ஒருவர் என்ற விகிதத்தில் மாரடைப்பு வராமல் தடுக்கப்படுகிறது. இதே Aspirin என்ற ரத்தக்குழாய் உறைவைத் தடுக்கும் மாத்திரை 40-ல் ஒருவர் என்ற விகிதத்தில் மறு மாரடைப்பு வருவதைத் தடுக்கிறது. Mediterranean diet என்று சொல்லக்கூடிய மிதமான கொழுப்புகளுடைய உணவுமுறையைக் கடைப்பிடித்தால் 18-ல் ஒருவர் என்ற விகிதத்தில் மறு மாரடைப்பு வரும் சாத்தியம் குறைகிறது என்று ஆராய்ச்சிகள் திட்டவட்டமாகச் சொல்கின்றன. மேலே கூறிய இரண்டு மாத்திரைகளை மாரடைப்பு வந்தவர்கள் கட்டாயம் போடவேண்டும். ஆனால், அவற்றைவிட அதிக பயன் தருவது உணவுமுறையே என்று உயர்தர ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. ஆனால், அதற்கான முக்கியத்துவத்தை நாம் அளிப்பதில்லை. சரி, இதற்கு என்ன மாதிரியான உணவுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும்?
நம் உணவுமுறையில் 80-90% மாவுச்சத்தே நிறைந்திருக்கிறது. புரதம் மற்றும் கொழுப்பின் அளவு மிகவும் குறைவு. ஆனால், 50-60% மட்டுமே மாவுச்சத்து வேண்டும் என்று மருத்துவக் கூட்டமைப்புகளே கூறுகின்றன. இதேபோல 25 - 30% கலோரிகள் ஆரோக்கியமான கொழுப்பில் இருந்து கிடைக்கவேண்டும். நிறைகொழுப்பு என்று சொல்லக்கூடிய நெய், வெண்ணெய், அதிக கொழுப்புகளை உடைய மாமிசங்களை மிதமான அளவில் எடுத்துக்கொண்டு Monounsaturated fatty acids வகைக் கொழுப்புகளை நிறைய எடுத்துக்கொள்ளவேண்டும். நிலக்கடலை மற்றும் சில அசைவங்களில் இது நிறைந்திருக்கிறது.

எல்லா விதமான அசைவ உணவுகளையும் தாராளமாக எடுத்துக்கொள்ளலாம். குறிப்பாக ஒமேகா-3 கொழுப்பு நிறைந்த கடல் மீன்களை நிறைய சாப்பிடலாம். மாமிசத்தை முற்றிலுமாகத் தவிர்ப்பது மிகவும் தவறு. கொழுப்புப் பகுதிகளைத் தவிர்க்கலாமே தவிர, இறைச்சியைத் தாராளமாக சாப்பிடலாம். இதில் நிறை கொழுப்பு, நிறையுறா கொழுப்புகள் குறித்து நிறைய விவாதங்கள் இருந்தாலும், மருத்துவக் கூட்டமைப்புகள் பரிந்துரைக்கும் நிறையுறா கொழுப்புகளைக்கூட நாம் எடுத்துக்கொள்ள மறுக்கிறோம்.மூன்றுவேளையும் மாவுச்சத்துகுள்ளேயே சுழன்றுகொண்டு இருக்கக்கூடாது. அதேபோல கலர் கலராக இருக்கக்கூடிய காய்கறிகள், கீரைகள், நார்ச்சத்து நிறைந்த உணவுகளை நன்கு சாப்பிடவேண்டும். உப்பை மிதமாக எடுத்துக்கொள்ளலாம், முற்றிலும் தவிர்க்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், சர்க்கரையை முடிந்தவரை தவிர்ப்பது முக்கியம்.
இன்னொரு மூடநம்பிக்கை, முட்டை சாப்பிடக்கூடாது என்பது. ஆனால், ஏற்கெனவே மாரடைப்பு வந்தவர்கள்கூட வாரத்துக்கு மூன்று முட்டைகளை தாராளமாக எடுத்துக்கொள்ளலாம். என்னைக் கேட்டால், தினமும்கூட ஒரு முட்டை எடுத்துக்கொள்ளலாம் என்பேன். அதன் மஞ்சள் கருவில் பல நல்ல விஷயங்கள் இருக்கின்றன. இதயத்துக்கான உணவுமுறை வெறுமனே கொழுப்புச் சத்திலிருந்து விலகி நிற்பது மட்டுமல்ல. மாத்திரைகளைவிட அதிக பயனளிக்கக்கூடிய நல்ல கொழுப்புகளை உணவில் சேர்த்துக்கொள்வதிலேதான் உண்மையான பயன் அடங்கியிருக்கிறது.
`ஹார்ட் அட்டாக்’ போல ‘இதயச் செயலிழப்பு’ (cardiac failure) என ஒன்று உண்டு. இரண்டும் வெவ்வேறானது. இதயச் செயலிழப்பு ஏற்படுவதால் மற்ற உறுப்புகளுக்கு ரத்தம் அனுப்பும் இதயத்தின் செயல்திறன் குறையும். மாரடைப்பு ஏற்பட்டவர்களுக்கு இருப்பதைப்போல அல்லாமல், இதயச் செயலிழப்பு ஏற்பட்டவர்கள் உப்புச்சத்தை முடிந்தவரை குறைக்கவேண்டும். அதேபோல, நீர்ச்சத்தும் மருத்துவரின் அறிவுரைப்படி தேவையான அளவு மட்டுமே எடுக்கவேண்டும். மற்றபடி மாரடைப்பு ஏற்பட்டவர்களுக்கான அதே உணவுமுறைகளை இதயச் செயலிழப்பு ஏற்பட்டவர்களும் பின்பற்றலாம்.

நம் மக்கள் அவதியுறும் இன்னொரு நீண்டகால பிரச்னை சிறுநீரகச் செயலிழப்பு. இதன் காரணமாக Urea, Creatinine, Uric acid ஆகியவற்றின் அளவு அதிகரித்துவிடுவதால் புரதங்களை முற்றிலுமாகத் தவிர்க்க நினைக்கிறார்கள் பலர். அது தவறு. ஆரோக்கியமான மனிதர்களுக்கு தங்கள் உடல் எடையின் ஒவ்வொரு கிலோவுக்கும் 1 கிராம் புரதம் தேவை. சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டு உடல் கழிவுகளை வெளியேற்றும் திறன் குறைவாக இருப்பவர்களுக்கு உடல் எடையில் கிலோ ஒன்றுக்கு 0.4-0.5 கிராம் தேவை. அசைவ உணவுகள் வாயிலாக எடுத்துக்கொள்ளாமல் தாவரங்களிலிருந்து எடுத்துக்கொள்ளலாம். இதுபோன்ற பிரச்னை இருப்பவர்கள் புரதங்களைக் குறைத்தால் அது வேறுவித சிக்கல்களை ஏற்படுத்தும். புரதம் தாண்டி மேலும் இரண்டு சத்துகள் அதிகரிக்காத வகையில் இவர்கள் பார்த்துக்கொள்வது அவசியம். ஒன்று, பாஸ்பரஸ். எலும்புகளில் உள்ள கால்சியத்தை இழுத்து அவற்றை இச்சத்து பலவீனமாகும். அதேபோல, பொட்டாசியம் அதிகரித்தாலும் நிறைய பிரச்னைகள் உண்டாகும். இளநீர், வாழைப்பழம், ஆரஞ்சு, உருளைக்கிழங்கு, தக்காளி முதலியவற்றை முடிந்தவரை தவிர்க்கலாம். பொதுவாக, தவிட்டுடன் இருக்கக்கூடிய தானியங்களே நல்லது என்று கூறியிருக்கிறேன். ஆனால், இந்தப் பிரச்னை இருப்பவர்களுக்கு பாலீஷ் செய்யப்பட்ட அரிசியே சிறந்தது.
சிறுநீரகச் செயலிழப்பு உள்ளவர்கள் டயாலிசிஸ் செய்யவேண்டிய நிலைமையில் இருந்தால் அவர்களுக்குப் புரதம் அதிக அளவில் தேவைப்படும். ஆனால், டயாலிசிஸ் செய்பவர்களுக்கு வேறு பிரச்னைகள் இருக்கக்கூடும் என்பதால் மருத்துவர்களின் அறிவுரைப்படி புரதங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். ஏற்கனவே சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் புரதம் குறைவாக எடுக்க வேண்டும் என்று சொல்வதனால், புரதம் சாப்பிட்டாலே சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டுவிடும் என்று தலைகீழாகப் புரிந்துகொள்ளக் கூடாது. சிறுநீரகச் செயலிழப்புக்குப் புரதங்கள் எதிரி இல்லை. எனவே, தேவையான அளவு எடுத்துக்கொள்வது மிகவும் அவசியம்.

அடுத்ததாக, கல்லீரல் செயலிழப்பு உள்ளவர்கள் புரதங்களே எடுத்துக்கொள்ளக்கூடாது என்று ஒரு காலத்தில் நம்பப்பட்டது. ஆனால் இப்போது கல்லீரல் செயலிழப்பால் கோமா வரை செல்லக்கூடியவர்கள்கூட புரதங்களை நிறுத்தக்கூடாது என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இப்பிரச்னை உள்ளவர்கள் பெரும்பாலும் பலவீனமாக இருப்பதே இதற்கான காரணம். உடல் எடையின் ஒரு கிலோவுக்கு 1.5 கிராம் வரை புரதம் எடுத்துக்கொள்ளலாம். சிலருக்கு கல்லீரல் செயலிழப்புடன் சிறுநீரகச் செயலிழப்பும் இருக்கும். அவர்கள்தான் குறைவாக புரதங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு சத்துப் பற்றாக்குறை ஏற்படவும் வாய்ப்புண்டு. இதற்கு காய்கறி, கீரைகள் எடுத்துக்கொள்ள வேண்டும். வைட்டமின் பி 12 பற்றாக்குறை ஏற்படாமல் இருப்பதற்கு ஆட்டு ஈரல் எடுத்துக்கொள்வது நல்லது. வைட்டமின் ஏ, வைட்டமின் கே, வைட்டமின் டி பற்றாக்குறைகளுக்குக் கேரட் எடுத்துக்கொள்ளலாம், அளவாக ஆட்டு ஈரல் எடுத்துக்கொள்ளலாம். வைட்டமின் கே பற்றாக்குறை இருந்தால் கீரைகள் எடுத்துக் கொள்ளலாம். வைட்டமின் டி பற்றாக்குறைக்கு வெயிலில் நிற்பது தீர்வு தரும். ஜிங்க், செலினியம் போன்ற சத்துகள் பற்றாக்குறை ஏற்பட்டால் அசைவ உணவுகளும், நட்ஸ் வகைகளும் எடுத்துக்கொள்ளலாம். கலோரிகளும் சற்று அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
உடல் மெலிந்து இருப்பவர்கள் 1 கிலோவுக்கு 35 முதல் 40 கலோரிகள் வரை எடுத்துக்கொள்ள வேண்டும். கொழுப்புச் சத்துகளைக் குறைவாக்கிக் கொண்டு புரதம் மற்றும் மாவுச் சத்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளுக்கு ஐந்து, ஆறு வேளைகளாக கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடலாம். இதேபோல வயிற்றுப் பகுதியில் ஏற்படக்கூடிய இன்னொரு பிரச்னை கணைய பாதிப்பு. இப்பிரச்னை உள்ளவர்கள் கொழுப்புச் சத்தைக் குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டும். மது அருந்தும் பழக்கத்தை முற்றிலுமாக நிறுத்திவிடுவது நல்லது.
கல்லீரல் பாதிப்பில் ஏற்படும் பிரச்னைகள் அனைத்தும் கணைய பாதிப்பிலும் ஏற்படும். இவர்கள் கொழுப்புகளைச் சற்று குறைத்து, புரதங்களை நிறைய எடுத்துக்கொள்ளலாம். Fatty liver நிலையில் இருப்பவர்கள் ஆரோக்கியமான கொழுப்புகளை எடுத்துக்கொண்டு மாவுச்சத்தைக் குறைத்து புரதங்களை எடுத்துக்கொள்ளலாம். பேலியோ போன்ற உணவுமுறைகளைப் பின்பற்றும்போது க்ரேட்-3 Fatty liver பிரச்னைகூட 6-8 மாதங்களில் குணமாகும். செயலிழப்பு என்பது வேறு, கல்லீரல் வீக்கத்தால் ஏற்படும் Fatty liver என்பது வேறு. அதேபோல இரண்டுக்கும் சொல்லப்படும் அறிவுரைகளும் வேறு என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். கல்லீரல் முன்பே செயலிழந்துவிட்டது என்ற நிலையில்தான் விதிமுறைகள் மாறுகின்றன. இந்த வித்தியாசத்தை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும்.
மூளை தொடர்பான பிரச்னைகளில் பக்கவாதம் முக்கியமானது. இதற்கென்று தனிப்பட்ட உணவுமுறை எதுவும் இல்லை. மாரடைப்புக்குப் பின்பற்றக்கூடிய அதே உணவுமுறை இதற்கும் பொருந்தும். மூளை பாதிப்பால் ஏற்படக்கூடிய தீவிர வலிப்பு நோய்கள், அல்சைமர்ஸ் போன்ற ஞாபகமறதி பிரச்னை இருப்பவர்களுக்கு ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். சிகிச்சையைத் தாண்டி இப்பிரச்னைகளுக்கு ‘கீட்டோஜெனிக்’ உணவுமுறை நன்கு பயனளிப்பதாக ஆராய்ச்சிகளில் நிரூபணமாகியுள்ளன.
இவை தவிர நாம் பார்க்க வேண்டிய முக்கிய நோய்கள், TB, HIV போன்ற தொற்றுகள். இந்நோய்கள் பாதித்தவர்கள் மிகவும் மெலிந்திருப்பதால் தேவையான சத்துகள் கிடைப்பது அவசியம். ஒரு கிலோவுக்கு ஒன்றரை கிராம் அளவுக்குப் புரதம் எடுத்துக்கொள்ளவேண்டும். அப்போதுதான் இந்தக் கிருமிகளை எதிர்கொள்வதற்குத் தேவையான நோய்எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.
இறுதியாக, நுரையீரல் நோய்களுக்கான உணவுமுறையைப் பற்றிப் பார்ப்போம். மாவுச்சத்து உணவை நாம் அதிகம் சாப்பிடும்போது நம் நுரையீரல் சற்று கடினப்பட்டே கார்பன் டை ஆக்ஸைடை வெளியேற்றும். எனவே, COPD போன்ற நீண்டகால நுரையீரல் நோய் இருப்பவர்கள் ஆரோக்கியமான கொழுப்பு உணவுகளை அதிகப்படுத்தி, முடிந்தவரை மாவுச்சத்தைத் குறைத்துக்கொள்வது நல்லது.
சரி, அடுத்த வாரம் வேறொரு விஷயம் பேசுவோம்.
- பரிமாறுவோம்
கடைகளில் கிடைக்கும் ஹெர்பல் நியூட்ரிஷியன் தயாரிப்புகளை எடைக்குறைப்புக்குப் பயன்படுத்தலாமா? - ஹைதர் அலி
எந்த ஒரு வணிகரீதியான எடைக்குறைப்பு பவுடருக்கும் எந்தவொரு பிரத்யேக சக்தியும் கிடையாது. நாம் இந்தத் தொடரில் முன்பே பேசியதுபோல மாவுச்சத்தையும் ஒட்டுமொத்த கலோரிகளையும் குறைத்து அதிக புரதங்களை எடுத்தால் எளிதாக உடல் எடை குறையும். மக்களைக் குறிவைத்து நிறைய பவுடர்கள் விற்கப்படுகின்றன. நாம் சொன்ன அதே உடல் எடைக்குறைப்பு கான்செப்ட்டை வணிக ரீதியாக மாற்றி, இட்லி தோசை சாப்பிடுவதற்குப் பதில் இந்த பவுடரை இரண்டு வேளை குடியுங்கள் என்று சொல்கிறார்கள். இந்த பவுடரைக் குடிப்பதால் பயன் கிடைப்பதில்லை, இரண்டு வேளை இட்லி, தோசை சாப்பாட்டைக் குறைப்பதால்தான் உண்மையில் பயன் கிடைக்கிறது. இதே மூன்று வேளை நாம் ரெகுலர் உணவுகளை ஃபுல் கட்டு கட்டிவிட்டு இந்த பவுடரை எக்ஸ்ட்ராவாக காலை மாலை இருவேளை குடித்தால் உடல் எடை கூடுமே தவிர குறையாது. இந்த அடிப்படை உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டும். காசைக் கரியாக்காதீர்கள்.
எனக்குப் பித்தப்பையில் கற்கள் இருக்கின்றன. பித்தப்பையை அகற்றவேண்டும் என்கிறார்கள். செய்யலாமா? அதன்பிறகு கொழுப்பு உணவுகள் சாப்பிடக்கூடாது என்கிறார்கள், அது உண்மையா? எனக்கு நீரிழிவும், உயர் ரத்த அழுத்தமும் உள்ளது. - சந்திரன் மணி
பித்தப்பையில் இருக்கும் கற்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தாலோ, அதீத வலியை ஏற்படுத்தினாலோ, பித்தப்பையை நீக்கும் அறுவை சிகிச்சை செய்துகொள்வது நல்லது. பித்தப்பை மனிதர்களுக்கு அத்தியாவசியமான உறுப்பு கிடையாது. கொழுப்பை ஜீரணமாக்கும் பித்தநீர், கல்லீரலில்தான் தயாராகிறது. பித்தப்பை வெறுமனே அதைத் தேக்கி வைத்து, தேவைப்படும்போது குடலுக்கு அனுப்புகிறது. பித்தப்பையை நீக்கியவர்கள் கொழுப்பு உணவுகளைச் சாப்பிடக்கூடாது என்று பல தவறாக நினைக்கிறார்கள். அப்படி ஒன்றும் இல்லை, தாராளமாக சாப்பிடலாம். தேவைக்கு அதிகமாக சாப்பிடாமல் இருந்தால் போதும்.

ஆரோக்கியம், டயட் தொடர்பான சந்தேகங்களை மருத்துவர் அருணிடம் கேட்கலாம்.arokkiam@vikatan.com என்ற மின்னஞ்சலிலோ அல்லது ‘டாக்டரிடம் கேளுங்கள், ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை- 2’ என்ற முகவரிக்குக் கடிதம் வழியாகவோ அனுப்பலாம்.