மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 56

ஆரோக்கியம் ஒரு பிளேட்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆரோக்கியம் ஒரு பிளேட்

நமக்கு இருக்கும் வேறு சில பிரச்னைகளும் ஒவ்வாமையைத் தூண்டலாம். உதாரணத்துக்கு, ஏற்கெனவே ஆஸ்துமா இருப்பவர்களுக்கு இந்தப் பிரச்னை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

உணவு பற்றி நாம் கட்டாயம் பேச வேண்டிய இன்னொரு விஷயம் ஒவ்வாமை. நம்மில் பலரும் ‘இது ஒத்துக்காது', ‘அது ஒத்துக்காது', ‘இது சாப்பிட்டால் காய்ச்சல் வரும்', ‘அது எடுத்துக்கொண்டால் சளிப்பிடிக்கும்' என்றெல்லாம் பெரிய லிஸ்ட்டே வைத்திருப்போம். இப்படி உணவு ஒவ்வாமை பற்றி எல்லோருக்கும் ஏதோ ஒரு வகையில் கருத்து இருக்கத்தான் செய்கிறது. அது உண்மையில் உணவு ஒவ்வாமையா அல்லது நமக்கு நாமே உருவாக்கிக்கொண்ட மாயையா?

ஆரோக்கியம் ஒரு பிளேட்
ஆரோக்கியம் ஒரு பிளேட்

இதில் இரண்டு விஷயங்கள் உண்டு. ஒன்று, Food Allergy எனப்படும் உணவு ஒவ்வாமை. இரண்டாவது, Food Intolerance. இதை ஒவ்வாமை என்று கூறாமல் அசௌகரியம் என்று கூறுவதே சரி. இந்த இரண்டுக்கும் இடையேயான வித்தியாசத்தை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். காரணம், இந்த இரண்டாவது விஷயமான உணவு அசௌகரியம் என்பது உண்மையில் ஒவ்வாமை கிடையாது. ஒரு குறிப்பிட்ட வகை உணவை எடுத்துக்கொள்ளும்போது உடலில் சிறு சிறு பிரச்னைகள் உருவாகும். குறிப்பாக வயிறு தொடர்பான பிரச்னைகள் அதிகமாக இருக்கும். இவை அனைத்தும் உணவு அசௌகரியம்தான். உதாரணத்துக்கு, பாலில் இருக்கக்கூடிய லேக்டோஸ் என்னும் சர்க்கரையை சிலரது உடலால் ஜீரணம் செய்ய முடியாது. இதை Lactose Intolerance என்று சொல்வோம். அதேபோல, சிலருக்கு மாவுச்சத்தால் பிரச்னை ஏற்படும். அதை Irritable bowel syndrome என்போம். சில உணவுகளை எடுத்துக்கொள்ளும்போது சிலருக்கு ஒற்றைத் தலைவலி வரும். சிலருக்கு காரமான உணவுகள் பிரச்னையை உண்டாக்கும். இவை அனைத்தையும் ஒவ்வாமை என்று கூறிவிடமுடியாது.

உணவு ஒவ்வாமையை Hypersensitivity reaction என்று சொல்வோம். ஒரு பூச்சி அல்லது பூரான் கடித்தால் உடல் முழுவதும் தடிப்பு ஏற்பட்டு அந்த விஷத்துக்கான ஒவ்வாமை உடனடியாக வெளிப்படுகிறது அல்லவா? அதேபோல, நாம் சாப்பிடும் உணவு நம் உடலில் உடனடி விளைவுகளை ஏற்படுத்துமானால் அதுவே உணவு ஒவ்வாமை. உணவு ஒவ்வாமைக்கு பெரும்பாலும் வயிறு மற்றும் சருமம் சார்ந்த பிரச்னைகளே அறிகுறிகளாக இருக்கும். அரிப்பு, உதடு வீக்கம், முகம் வீக்கம், கடும் வயிற்று வலி போன்றவை ஏற்படும். நாம் சாப்பிட்ட உடனேயே இவை ஏற்படும் என்பதே இதில் மிக முக்கியமான விஷயம். இது தவிர தீவிர மூச்சுத் திணறல், ரத்த அழுத்தம் குறைவது போன்ற பாதிப்புகளும் உண்டாகலாம். உயிருக்கு ஆபத்தான நிலைகூட ஏற்படலாம்.

இன்னொரு முக்கிய விஷயத்தையும் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும். அதாவது, நமக்கு இருக்கும் வேறு சில பிரச்னைகளும் ஒவ்வாமையைத் தூண்டலாம். உதாரணத்துக்கு, ஏற்கெனவே ஆஸ்துமா இருப்பவர்களுக்கு இந்தப் பிரச்னை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதேபோல மது அருந்திவிட்டு உணவு எடுத்துக்கொள்பவர்களுக்கும் ஒவ்வாமை ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். உயர் ரத்த அழுத்தத்துக்கான மாத்திரைகள் எடுத்துக்கொள்பவர்களுக்கும் ஒவ்வாமை வரலாம். மேலும், சரியான தூக்கமின்மை, மாதவிடாய், உடல்நலக் குறைவு ஏற்படும் காலங்களிலும் இது ஏற்படலாம்.

ஆரோக்கியம் ஒரு பிளேட்
ஆரோக்கியம் ஒரு பிளேட்

சரி, ஒவ்வாமையில் என்னென்ன வகைகள் இருக்கின்றன என்று பார்க்கலாம்.

சிலவகைப் பழங்கள், காய்கறிகள் வாயில் நமநமவென்ற உணர்வை ஏற்படுத்தும். உதடு வீக்கம் போன்ற பிரச்னைகள்கூட வரலாம். ஆப்பிள், பேரிக்காய், கேரட், செர்ரி, சில வகைக் கீரைகள், உருளைக்கிழங்கு, வாழைப்பழம், முலாம்பழம், தர்ப்பூசணி போன்ற பழங்கள், காய்கறிகள் சாப்பிடுபவர்களுக்கு இதுபோன்ற பாதிப்புகள் வரலாம். அதற்குக் காரணம், அவற்றில் உள்ள மகரந்தத் துகள்களே! பூக்களின் மகரந்தத் துகள்கள் பலருக்கு ஆஸ்துமா மற்றும் ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றன. இதுபோன்ற பிரச்னை உள்ளவர்கள் காய்கறி, பழங்கள், கீரை வகைகளை நன்றாகக் கழுவிவிட்டுச் சாப்பிட வேண்டும். காய்கறி, கீரைகளைச் சமைத்துச் சாப்பிடும்போது அவற்றில் இருக்கும் ரசாயனங்கள் நீங்கிவிடும்.

நண்டு, இறால் போன்ற கடல் உணவுகளால் சிலருக்கு ஒவ்வாமை ஏற்படும். மக்கள்தொகையில் 2, 3 சதவிகிதம் பேருக்கு இந்த உணவு ஒவ்வாமை இயற்கையாவே இருக்கும். சிலருக்கு இது வளர்ந்த பிறகு உண்டாகும். ஏற்கெனவே ஆஸ்துமா உள்ளவர்களுக்கு கடல் உணவுகளாலும், பூக்களின் மகரந்தத் துகள்களாலும் ஒவ்வாமை ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. அவர்கள் இவற்றைத் தவிர்ப்பது நல்லது. உணவகங்களில் சாப்பிடும்போது, ஒவ்வாமை ஏற்படுத்தும் பொருள்கள் அதில் கலந்துள்ளனவா என்பதை ஆராய வேண்டும். குடும்பங்களில் எவரேனும் ஒருவருக்கு கடல் உணவுகளால் ஒவ்வாமை இருந்தால், சமைக்கும்போது வரும் நீராவியாலும் இருமல், மூச்சுத் திணறல் ஏற்படும். கவனமாக இருப்பது அவசியம்.

ஆரோக்கியம் ஒரு பிளேட்
ஆரோக்கியம் ஒரு பிளேட்

சிலருக்கு நட்ஸ் வகைகளால் ஒவ்வாமை ஏற்படும். வெளிநாடுகளில் நிலக்கடலையால் ஒவ்வாமை ஏற்படுபவர்களின் எண்ணிக்கை அதிகம். பாதாம், முந்திரி, பிஸ்தா, வால்நட் போன்ற நட்ஸ் வகைகளாலும் கடுகு, எள், கசகசா போன்ற விதைகளாலும் ஒவ்வாமை ஏற்படக்கூடும். நம் ஊரைவிட வெளிநாடுகளில் நட்ஸ் ஒவ்வாமையால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகம். வெளிநாடுகளில் நிலக்கடலை அலர்ஜி இருப்பவர்கள், கையில் அட்ரினலின் ஊசியை எடுத்துச் செல்வது வழக்கம். நல்லவேளையாக நம்மூரில் அதுபோன்ற தீவிரத்தன்மை எதுவும் கிடையாது. தற்போது, புது வகையாக நட்ஸ்கள் பலவும் வரத்தொடங்கிவிட்டதால் இதுபற்றிய புரிதல் நமக்கு மிகவும் முக்கியம். நட்ஸைத் தவிர்ப்பது எளிதான காரியமாகத் தெரியலாம். ஆனால், சாக்லேட், கேக் தொடங்கி குழந்தைகளுக்குத் தரும் சத்துமாவு வரை பல பொருள்களிலும் நட்ஸ் கலக்கப்படுகின்றன. எனவே, நட்ஸ் ஒவ்வாமை இருப்பவர்கள் இதுபோன்ற பேக்கரிப் பொருள்களை முழுவதுமாகத் தவிர்த்துவிடுவது நல்லது.

அடுத்தது, எக் அலர்ஜி. ‘முட்டையின் வெள்ளைக்கருவால்தான் அலர்ஜி ஏற்படும், மஞ்சள் கருவை தாராளமாகச் சாப்பிடலாம்' என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால், புரதச்சத்துகள் இரு பகுதியிலும் சரிசமமாகக் கலந்திருக்கும் என்பதால் முட்டை அலர்ஜி இருப்பவர்கள் அதை முழுவதுமாகத் தவிர்த்துவிடுவது நல்லது. முட்டை சாப்பிட்டால் வாய்வு பிடித்துக்கொள்கிறது என்று நிறைய பேர் சொல்வார்கள். அது ஒவ்வாமை கிடையாது. அதைக் காரணம் காட்டி முட்டையைத் தவிர்க்க வேண்டிய அவசியமில்லை. உண்மையான ஒவ்வாமை இருப்பவர்கள் மட்டும் முட்டையைத் தவிர்த்தால் போதும். முட்டையில் உள்ள சில பொருள்கள், ஃப்ளூ போன்ற சில தடுப்பூசிகளிலும் உள்ளன. எனவே, முட்டை அலர்ஜி இருப்பவர்கள் அந்தத் தடுப்பூசிகள் போடுகையில் கவனமாக இருக்க வேண்டும்.

ஆரோக்கியம் ஒரு பிளேட்
ஆரோக்கியம் ஒரு பிளேட்

அடுத்தது பால் ஒவ்வாமை. முன்சொன்னது போல பாலில் உள்ள சர்க்கரை ஏற்படுத்தும் அசௌகரியம் ஒன்று உண்டு. அதுதவிர பாலால் ஏற்படக்கூடிய ஒவ்வாமையும் இருக்கிறது. அது பெரியவர்களுக்கு ஏற்படுவதைவிட குழந்தைகளுக்கு ஏற்படுவதற்கான வாய்ப்பே அதிகம். பால் குறித்து எழுதப்பட்ட கட்டுரையில் இதுபற்றி விரிவாகப் பேசியிருக்கிறேன். மலத்தில் ரத்தம் கசிவது, ரத்த சோகை போன்ற பிரச்னைகள் குழந்தைகளுக்கும் ஏற்படலாம். ‘நாட்டு மாட்டின் பால்தான் கொடுக்கிறேன்', ‘ஒற்றை மாட்டின் பால்தான் கொடுக்கிறேன்' என்றெல்லாம் நீங்கள் சொல்லலாம். ஆனால் ஒவ்வாமை இருப்பவர்களுக்கு இதில் எந்த வித்தியாசமும் கிடையாது. உண்மையான பால் புரத ஒவ்வாமை இருக்கும் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள்கூட பால் எடுத்துக்கொள்வதைத் தவிர்த்துவிட வேண்டும்.

போதிய விழிப்புணர்வு இல்லாத இன்னொரு வகை அலர்ஜி தானியங்களுக்கான ஒவ்வாமை. அதிலும் முக்கியமாக குளூட்டன் இருக்கக்கூடிய, நாம் சகஜமாகப் பயன்படுத்தக்கூடிய கோதுமை, ஓட்ஸ், பார்லி போன்றவற்றால் நிறைய பேருக்கு அலர்ஜி உண்டு. ஆனால், இப்படி ஒன்று இருப்பதே நிறைய பேருக்குத் தெரியாது. ‘எனக்கு அலர்ஜி இருக்கிறது. எல்லா உணவுகளையும் தவிர்த்துப் பார்த்துவிட்டேன், குறையவில்லை' என்பவர்கள் கோதுமை, மைதா உள்ள உணவுகளைத் தவிர்த்துப் பாருங்கள். தற்போது குழந்தைகளுக்கு அதிக அளவில் காரணமே இல்லாமல் வயிற்று வலி வருகிறது. அவர்கள் கோதுமை, மைதா பொருள்களை நிறுத்தும்போது நல்ல முன்னேற்றத்தைப் பார்க்க முடிகிறது.

‘அலர்ஜியில் இத்தனை வகைகள் இருப்பதாகக் கூறுகிறீர்கள். இதன் காரணமாக அந்த உணவுகளையெல்லாம் தவிர்த்துவிட்டால் சத்துக்குறைபாடு ஏற்படாதா? குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுவார்களே?’ என்ற கேள்விகள் உங்களுக்கு எழக்கூடும். இந்த உணவுகளை மொத்தமாகத் தவிர்த்துவிடாமல் இதுகுறித்து உங்கள் மருத்துவரிடம் ஆலோசிப்பது நல்லது. காரணமில்லாமல் அலர்ஜி ஏற்படும் நிலையில் ஒரு டைரியில் குறிப்பு எடுத்துக்கொண்டால், எந்த உணவால் அலர்ஜி ஏற்படுகிறது என்பதை அறிந்துகொள்ள முடியும். உணவை ஒத்துக்கொள்ள வைப்பதற்கான சில சிகிச்சைகள் தற்போது வந்துள்ளன. அதைவிட, அந்த உணவுகளைத் தவிர்ப்பதே நல்லது.

அடுத்த வாரம், வேறொரு விஷயத்தைப் பற்றிப் பேசுவோம்.

- பரிமாறுவோம்

முகம் மற்றும் முன்னங்கைகள் மட்டும் வெயிலில் படுவதால் உடலுக்குத் தேவையான வைட்டமின் டி கிடைத்துவிடுமா? எவ்வளவு நேரம் வெயில் படவேண்டும்?

- விஜி செந்தில்

சூரிய ஒளியில் உள்ள புற ஊதாக் கதிர்கள் தோலில் படும்பொழுது நமது உடலில் நடக்கும் வேதியியல் விளைவுகள் மூலம் வைட்டமின் டி உருவாகிறது. அது பின்னர் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் மூலம் முழுமை பெறுகிறது. UV-B எனப்படும் புற ஊதாக் கதிர்கள் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை அடிக்கும் வெயிலில் அதிக அளவு கிடைக்கிறது. இந்த நேரத்தில் தோராயமாக அரை மணி நேரம் நமது உடலில் பெரும்பாலான பகுதி வெயிலில் படுமாறு நின்றாலோ அல்லது வேலை செய்தாலோ ஒரு நாளைக்குத் தேவையான வைட்டமின் டி சத்து கிடைத்துவிடும். காலை அல்லது மாலை வெயிலில் வைட்டமின் டி பெற வேண்டுமானால் இதைவிட இரண்டு மடங்கு அதிக நேரம் வெயிலில் நிற்க வேண்டும். ஆனால் முழுக்கை சட்டை, பேன்ட் மற்றும் தலைக்கு ஹெல்மெட் போட்டுக்கொண்டு வெயில் கதிர்களே தோலில் படாமல் நாள் முழுக்க வெளியில் அலைந்தாலும் தேவையான வைட்டமின் டி கிடைக்காது.

தினசரி குடிக்கும் மூன்று லிட்டர் தண்ணீரும் மூன்று வேளை சாப்பாடும் சேர்த்தால் சுமார் 5 கிலோ ஆகிறது. ஆனால் வெளியேறும் கழிவு அந்த அளவு இருப்பதில்லை. எப்படி சமன் ஆகிறது?

- செல்வராஜன்

நல்ல கேள்வி. நாம் சாப்பிடும் உணவு, குடிக்கும் தண்ணீர் ஆகியவை நமது உடலில் எடையைக் கூட்டுகின்றன. மலம், சிறுநீர் இரண்டும்தான் நமக்குத் தெரிந்து வெளியே செல்லும் கழிவுகள். இதைத்தாண்டி வியர்வை மூலமாகவும், நேரடியாக சருமத்திலிருந்து நீராவியாகவும் கணிசமான அளவு தண்ணீர் வெளியேறுகிறது. இது மட்டுமல்லாமல் நாம் சாப்பிடும் மாவுச்சத்து, கொழுப்புச்சத்து ஆகியவை எரிபொருளாக மாறும்போது வேதியியல் விளைவுகள் மூலம் ஒரு பகுதி கார்பன் டை ஆக்சைடு வாயுவாக நுரையீரல் மூலம் வெளியேறுகிறது. இன்னொரு பகுதி endogenouswater எனப்படும் உடலில் உற்பத்தியாகும் தண்ணீர், சிறுநீராக வெளியே வருகிறது. இந்த அனைத்தையும் நீங்கள் கணக்கில் கொண்டால் சமன்பாடு கிடைத்துவிடும்.

சில வகை மது நல்லது என்று சிலர் சொல்கிறார்கள். அது உண்மையா?

- எம்.சுரேஷ்

மிதமான அளவு மது அருந்துவது, அதிலும் ரெட் ஒயின் எனும் வகை மதுவை அருந்துவது இதயத்திற்கு நல்லது என்று முன்பு சொல்லப்பட்டுவந்தது. அமெரிக்கா மற்றும் சில மேலை நாடுகளில் நடத்தப்பட்ட நிறைய ஆராய்ச்சிகளில் மிதமான அளவு என்பது பீர் எனும் மதுவாக இருந்தால் 360 மில்லி, ரம், பிராந்தி, விஸ்கி போன்ற மது வகைகளாக இருந்தால் 45 மில்லி என்று வரையறுக்கப்பட்டது. இந்த அளவு மட்டும் ஒரு நாளைக்கு ஒருவர் எடுத்துக்கொண்டால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் வரும் வாய்ப்பு குறைவதாகச் சில ஆராய்ச்சிகளில் தெரியவந்தது. அதேநேரம், எவ்வளவு குறைவாக மது அருந்தினாலும் கல்லீரல், கணையம் சார்ந்த நோய்கள், புற்றுநோய் போன்றவை அதிகரிக்கும் என்பதும் தெரியவந்துள்ளது. எனவே, இதயத்திற்கு நல்லது செய்ய வேண்டுமானால் உடல் எடையைக் குறைத்து, ஆரோக்கியமான உணவை எடுத்து, நல்ல உடற்பயிற்சி செய்து, புகைப்பழக்கத்தை நிறுத்தினாலே போதும். எவ்வளவு குறைவாக மது அருந்தினாலும் ஏதாவது ஒரு உறுப்புக்கு பிரச்னை வரத்தான் செய்யும். எனவே மதுவை முற்றிலும் தவிர்ப்பதே நல்லது.

வாரத்தில் ஒருநாள் fruit diet இருக்கலாமா?

- வசந்தபிரியா

அரிசி சாதம், இட்லி, தோசை, சப்பாத்தியைவிடப் பழங்கள் பரவாயில்லை. ஆனால் நாள் முழுக்க நமக்குத் தேவையான கலோரிகள் பழங்கள் மூலம் கிடைக்க வேண்டும் என்றால் 3-4 கிலோ சாப்பிட வேண்டும். இந்த அளவுக்குப் பழங்கள் சாப்பிடும்போது, அதில் உள்ள பிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் சர்க்கரைகள் இன்சுலின் எதிர்ப்புத் தன்மை, கல்லீரல் கொழுப்பு போன்ற பிரச்னைகளை அதிகப்படுத்த வாய்ப்புண்டு. சர்க்கரை, உடல் பருமன் போன்ற எந்தப் பிரச்னையும் இல்லாதவர்கள் வேண்டுமானால் இப்படி எப்பொழுதாவது ஒன்றிரண்டு நாள்கள் முயற்சி செய்யலாம். மற்றவர்கள் மற்ற உணவுகளுடன் சேர்த்து மிதமான அளவு பழங்களை எடுத்துக்கொள்வதே நல்லது.