மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 59

ஆரோக்கியம் ஒரு பிளேட்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆரோக்கியம் ஒரு பிளேட்

மனிதன் விவசாயத்தைக் கண்டுபிடித்து வெறும் பத்தாயிரம் ஆண்டுகள்தான் ஆகின்றன. ஆனால், மனித இனம் 26 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பாகவே தோன்றியுள்ளது

சர்க்கரை, உடல் பருமன், மாரடைப்பு போன்ற வாழ்வியல் தொடர்பான நோய்கள் தற்போது பெருமளவில் அதிகரித்து வருவதாக ஒரு பேச்சிருக்கிறது. நம் பாரம்பரிய வாழ்வுமுறையையும் உணவுகளையும் பின்பற்றினால் எந்த நோய்களும் அண்டாது என்றும் சொல்லப்படுகிறது. இதெல்லாம் எந்த அளவுக்கு உண்மை? பாரம்பரிய உணவுகள் தற்போதுள்ள உணவுகளிலிருந்து எந்த வகையில் மாறுபடுகின்றன? அதில் நாம் புரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் என்ன?

பாரம்பரிய உணவுகளை இரு வகைகளாகப் பிரிக்கலாம். நம் தாத்தா பாட்டி சாப்பிட்ட உணவு... அதாவது, 200-300 வருடங்களுக்கு முன்னர் நம் மூதாதையர் உண்ட உணவுகள் ஒரு வகை. இரண்டாவது, ஆயிரம் இரண்டாயிரம் ஆண்டுகள் பின்னோக்கிப் பயணித்து சங்க கால மக்கள் சாப்பிட்ட உணவுகள் இன்னொரு வகை. இந்த இரண்டுக்கும் மேலே விவசாயம் கண்டுபிடிப்பதற்கு முன்பான கற்கால மனிதன் என்ன உணவுகளை உண்டான் என்ற மூன்றாவது வகை ஒன்றும் உண்டு. அதுவே இன்று பேலியோ உணவுமுறையாகப் பின்பற்றப்படுகிறது. நாமும் கற்காலத்தில் இருந்தே தொடங்குவோம்.

ஆரோக்கியம் ஒரு பிளேட்
ஆரோக்கியம் ஒரு பிளேட்

மனிதன் விவசாயத்தைக் கண்டுபிடித்து வெறும் பத்தாயிரம் ஆண்டுகள்தான் ஆகின்றன. ஆனால், மனித இனம் 26 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பாகவே தோன்றியுள்ளது. எனவே, 25,90,000 ஆண்டுகளாக மனிதன் வேட்டையாடியும், ஆங்காங்கே கிடைக்கும் காய் கனிகளை உண்டும்தான் உயிர்வாழ்ந்திருக்கிறான். அதன்பிறகே விவசாயம் கண்டுபிடிக்கப்பட்டு அந்தந்த ஊர்களுக்கு ஏற்ற தானியங்கள் விளைவிக்கப்பட்டன. எனவே, நம் உடல் கற்கால உணவுமுறையிலிருந்து தற்போதைய உணவுமுறைக்கு இன்னும் முழுமையாக மாறவில்லை என்பதே உண்மை. பேலியோ உணவுமுறையை முன்வைக்கும் பேராசிரியர் லோரன் கார்டைன் இதைத்தான் சொல்கிறார். கொழுப்பில்லாத இறைச்சியையும் கூடவே பழங்களையும் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்பதே அவரின் அறிவுரை. பால் பொருள்களைத் தவிர்க்கவேண்டும் என்கிறார். இது சரியா என்று என்னைக் கேட்டால், நிச்சயம் சரியென்றே சொல்லுவேன். காரணம், காய் கனிகளை அதிக அளவில் எடுத்துக்கொள்ளும் குரங்குகளுக்கு அதை ஜீரணிக்க மிக அதிக நேரம் தேவைப்படுகிறது. அதற்கு ஏற்ற வகையில் அவற்றுக்கு நீண்ட குடலும் உண்டு. இதே நம்முடைய மூதாதையரான ஹோமோ எரக்டஸ், மாமிசத்தை உண்ணத் தொடங்கிய பிறகு பரிணாம ரீதியாக நம் குடலின் நீளம் சுருங்கி அங்கு கிடைத்த கூடுதல் சக்தி நம் மூளை வளர்ச்சியடைய உதவியிருக்கிறது. இதை மானுடவியலாளர்கள் உறுதி செய்கிறார்கள். முக்கியமாக ஒன்றைக் கவனிக்க வேண்டும்... கற்கால மனிதன் வெறும் இறைச்சியை மட்டும் சாப்பிட வில்லை. பல்வேறு வகை உணவு களையும் அவர்கள் கலந்து சாப்பிட்டிருக்கிறார்கள்.

தற்போதும், தான்சானியா நாட்டின் ஹட்சா இன மக்களுக்கு வேட்டையாடுவதே வாழ்க்கை. வேட்டையில் கிடைக்கும் மாமிசத்தோடு, காட்டில் கிடைக்கும் தேன், கனிகள், கிழங்குகளையும் சேர்த்துக் கொள்கிறார்கள். இது மட்டுமே அவர்களின் உணவு. இறைச்சி அவர்களின் உணவில் 30-40% இடம்பெறுகிறது. நமக்குக் கடைகளில் கிடைப்பதைப்போல அவர்களுக்கு இறைச்சி கிடைப்பது ஒன்றும் சாதாரண விஷயம் அல்ல. அதற்காக அவர்கள் பெரிய அளவில் போராட வேண்டி யிருக்கிறது. வேட்டை அமையாத நேரங்களில் காய், கனி, கிழங்குகளே அவர்களின் பசியாற்றுகின்றன. விவசாயம் கண்டுபிடிக்கப்படும் முன்பேகூட இவர்கள் காட்டுப்பகுதியில் கிடைக்கும் சில தானியங்களைச் சாப்பிட்டார்கள் என்பதற்கான சான்றுகள் உள்ளன. கிரீன்லாந்தின் என்யூட் மக்கள் வெறும் இறைச்சியை மட்டுமே உணவாகக் கொண்டிருந்தனர். காரணம், அங்கு வேறெதுவும் விளையாது. வைட்டமின் சி போன்ற சத்துகளை சமைத்த இறைச்சிகளின் மூலம் பெற முடியாது. அது விலங்குகளின் ஈரல் பகுதியைப் பச்சையாக உண்பதன் மூலம் அவர்களுக்குக் கிடைத்தது. அவர்களைத் தவிர, இறைச்சியை மட்டுமே உண்டு வாழ்ந்த இனம் வேறெதுவும் இல்லை. மற்றபடி, இறைச்சியிலிருந்து கொஞ்சம் சத்து, காய் கனியிலிருந்து கொஞ்சம் சத்து என்றே மனிதனின் உடல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த உணவுமுறையில் அவன் ஆரோக்கியமாகவே வாழ்ந்து வந்திருக்கிறான்.

ஆரோக்கியம் ஒரு பிளேட்
ஆரோக்கியம் ஒரு பிளேட்

எப்போது விவசாயத்தைப் பழகி தினம் தினம் ஒரேமாதிரியான உணவை மனிதன் எடுத்துக்கொள்ளத் தொடங்கினானோ, அன்று தொடங்கியது பிரச்னை. போதிய அளவுக்கு எல்லாப் பகுதிகளிலும் தானியங்கள் விளைந்தன. ஓரிடத்தில் தங்கத் தொடங்கியதால் மக்கள் தொகையும் அதிகரித்தது. அதே நேரத்தில், பண்டைய மனிதனுக்கு இல்லாத சொத்தைப்பல், இரும்புச் சத்துக் குறைபாடு போன்ற பிரச்னைகளும் ஏற்பட்டன. வேட்டையாடுதலை விட்டுவிட்டு ஒரே வகை தானியங்களை உண்டதால் சில பிரச்னைகள் உருவானது உண்மை. நாளாக நாளாக, அப்பிரச்னைகள் அனைத்தும் மனிதனின் அறிவால் ஈடு செய்யப்பட்டன. கடந்த 50 வருடங்களாக நாம் அதிக அளவில் பதப்படுத்தப்பட்ட உணவுகளைச் சாப்பிடுகிறோம். இது பல பிரச்னைகளை உருவாக்கியிருக்கிறது. உதாரணத்துக்கு, தென் அமெரிக்காவைச் சேர்ந்த மாயா இன மக்கள் மேலை நாட்டு உணவுமுறைக்கு மாறியதும், அவர்களின் சர்க்கரை அளவில் அதிக மாற்றம் இருந்திருக்கிறது. அதேபோல மாமிசத்தை அதிகம் சாப்பிட்டு வாழ்ந்த சைபீரியாவின் யகூட் மக்கள், மார்க்கெட்டில் கிடைக்கும் உணவுகளை எடுத்துக்கொள்ளத் தொடங்கிய பிறகு 50% பேர் கூடுதல் எடை பிரச்னையால் பாதிக்கப்பட்டார்கள். மூன்றில் ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டது.

ஆரோக்கியம் ஒரு பிளேட்
ஆரோக்கியம் ஒரு பிளேட்

கற்கால மனிதனின் மரபணு நம் மரபணுக்கு ஒத்தது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பண்டைக்கால மனிதனின் உணவில் இறைச்சியுடன், தேவையான அளவு காய் கனிகளும் இருந்திருக்கின்றன என்று பார்த்தோம். அதன் வடிவம்தான் பேலியோ டயட் என்பதையும் பார்த்தோம். இந்த உணவுமுறை இப்போது முழுமையாக ஒத்துப்போகுமா என்று பார்க்க வேண்டும். அப்போது கிடைத்த மாமிசமும், இப்போது கிடைக்கும் மாமிசமும் ஒன்றுதானா என்பதைப் பார்க்க வேண்டும். இரண்டாவது, இப்படி ஒரு உணவுமுறையை உலகின் இத்தனை கோடி மக்களும் பின்பற்ற முடியுமா என்ற கேள்வியும் முக்கியமானது. 2050-ம் ஆண்டில் உலக மக்கள் தொகை கிட்டத்தட்ட 1,000 கோடியைத் தொடும் எனச் சொல்லப்படுகிறது. எனவே, கற்கால மனிதன் பின்பற்றிய உணவுமுறை தற்போது சாத்தியமா என்றால், இல்லை என்றே கூறமுடியும். வேட்டையாடி உண்ணக்கூடிய பழக்கம் தற்போது அந்தமான் தீவுகள் போன்ற சில இடங்களில் மட்டுமே உள்ளது.

ஆரோக்கியம் ஒரு பிளேட்
ஆரோக்கியம் ஒரு பிளேட்

சரி, சங்க காலத்தைப் பற்றிப் பேசுவோம். சங்ககாலத்தின் உணவுமுறையை சங்கப் பாடல்களின் மூலம் அறிந்துகொள்ள முடியும். அக்காலத்தில் நிலங்களை அதன் தன்மைக்கேற்பப் பிரித்து வைத்திருந்தோம். முல்லை என்ற காடு சார்ந்த பகுதிகளில் வாழ்ந்த மக்கள் சோளம், தினை, பால், தயிர், நெய் ஆகியவற்றை உணவாக எடுத்துக்கொண்டனர். இதோடு பல வகையான மாமிசங்களையும் சாப்பிட்டனர். நெய்தல் என்ற கடல் சார்ந்த பகுதியில் வாழ்ந்த மக்கள் கடல் உணவுகளை எடுத்துக்கொண்டனர். குறிஞ்சி என்ற மலை சார்ந்த பகுதியில் வாழ்ந்த மக்கள் சிறுதானிய வகைகள், தேன், பழங்கள், காய்கறிகள், பலவகையான மாமிசங்களையும் சாப்பிட்டு வந்துள்ளனர். பாலை நிலத்தில் வாழ்ந்த மக்கள், சிவப்பு அரிசியையும் மாமிசங்களையும் உணவாக சாப்பிட்டு வந்தனர். மருதம் என்ற வயல் சார்ந்த பகுதிகளில் வசித்த மக்கள் அரிசி, கரும்பு, வாழை உள்ளிட்ட பழ வகைகளையும் காய்கறிகளையும் உணவாக எடுத்துக்கொண்டனர். இதோடு சேர்த்து கோழி, ஆடு போன்ற மாமிசங்களும் அவர்கள் உணவில் இருந்தன. அக்காலத்தில் சமண மார்க்கத்தைக் கடைப்பிடித்த மக்களைத் தவிர, பெரும்பாலானவர்கள் அசைவ உணவை சாப்பிட்டனர். அரிசியும் சிறுதானியங்களும் முக்கியமான உணவுகளாக இருந்தாலும், பல்வேறு வகையான மாமிசங்களையும் சாப்பிட்டு வந்துள்ளனர். நாம் இப்போது உண்ணக்கூடிய மாமிசங்கள் தாண்டி, உடும்பு, மான், எலி, வெள்ளை எலி போன்றவற்றின் இறைச்சியையும் சாப்பிட்டு வந்துள்ளனர்.

ஆரோக்கியம் ஒரு பிளேட்
ஆரோக்கியம் ஒரு பிளேட்

நற்றிணையின் ஒரு பாடலில் இரண்டு காதலர்கள் மரத்தின் அடியில் அமர்ந்து பேசும்போது, தலைவி மரத்தின் மேல் இருந்த ஆந்தையைப் பார்த்து, ‘நீ அமைதியாக இரு... எங்கள் நேரத்தைக் கெடுக்க வேண்டாம்... அதற்கு பதிலாக, என் தலைவனுக்காக நெய்யில் சமைத்த எலிக்கறியை உனக்குப் பரிமாறுவேன்' என்று சொல்வதாக வருகிறது. ஆமைக்கறியையும் உடும்புக்கறியையும் நெய்தல் இன மக்கள் சாப்பிட்டதாகப் பட்டினப்பாலை பாடல்களில் குறிப்புகள் உள்ளன.

வெறும் சைவ உணவுகளைச் சாப்பிடும்போது சத்துக் குறைபாடு ஏற்படும். இதை நம் மூதாதையர் உணர்ந்திருந்தனர். நம் மூதாதையர்கள் சைவ உணவில் எருமை நெய், எருமை வெண்ணெயைச் சேர்த்துச் சாப்பிட்டனர். சைவ உணவாளர்களுக்கு, மாதுளை விதையை நெய்யில் வதக்கிச் சாப்பிடும் பழக்கமும் இருந்தது. சத்துக்குறைபாடு வராமல் இருக்க இதுபோன்ற உணவுமுறையைப் பின்பற்றினர். வெறும் தானியங்கள் மட்டுமல்லாமல், அதோடு மாமிசங்கள், காய்கறிகள், கீரைகளை எடுத்துக்கொண்டனர். அக்காலத்தில் காய்கறிகளையும் மாமிசங்களையும் ஒன்றாகச் சேர்த்து சமைக்கும் பழக்கமும் இருந்திருக்கிறது. இன்றும் நிறைய ஊர்களில் மீன் குழம்பில் மாங்காயும் ஆட்டிறைச்சியில் உருளைக்கிழங்கும் சேர்த்துச் சமைக்கும் பழக்கம் உண்டு. இறாலோடு அவரைக்காய் சேர்த்தும் சிலர் சமைப்பர். உண்மையில் இன்று பிரியாணி என்ற பெயரில் நாம் சாப்பிடும் உணவு அக்காலத்தில் அரிசியையும் நெய்யில் வறுத்த மாமிசங்களையும் கலந்து சமைக்கும் ‘ஊன்சோறு'தான் என்று சில உணவு ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.

பண்டைய உணவுமுறைகளிலிருந்து நாம் தெரிந்துகொள்வது, இரண்டு விஷயங்கள். நாம் நீண்ட ஆயுளோடு ஆரோக்கியமாக வாழ பலவிதமான சத்துகள் தேவைப்படுகின்றன. இவற்றை உணவுகளில் இருந்தே எடுத்துக்கொள்ள வேண்டும். அசைவம், சைவம் இரண்டிலும் பலவகையான உணவுப் பொருள்களைச் சாப்பிட்டு வந்துள்ளனர். மற்ற புரதங்களுக்காகவும், நல்ல ஆரோக்கியமான கொழுப்புகளுக்காகவும், பால் பொருள்கள், பழங்கள், கீரைகள் ஆகியவற்றை சரிசமமாகச் சாப்பிட்டு வந்துள்ளனர். தானியங்கள் பிரதான உணவாக இருந்துவந்தாலும், பிற உணவுகளையும் சாப்பிட்டனர். இதிலிருந்து தெரிந்துகொள்ள வேண்டியது, நம் உணவுத் தட்டில் பல்வேறு வகையான சத்துகளை உள்ளடக்கிய உணவு இருக்க வேண்டும் என்பதே. நீங்கள் அசைவம் சாப்பிடுபவராக இருந்தால், கற்கால மனிதனைப் போல சாப்பிட வேண்டும் என்று நினைத்து தானியங்களை நிறுத்த வேண்டிய அவசியம் இல்லை. தீவிர சர்க்கரை மற்றும் உடல் பருமன் இருக்கும்போது ‘பேலியோ' போன்ற உணவுமுறையைக் கடைப்பிடிப்பது பயன்தரும். மற்றவர்கள் அனைத்தையும் சம அளவில் கலந்து உண்டாலே போதும்.

ஆரோக்கியம் ஒரு பிளேட்
ஆரோக்கியம் ஒரு பிளேட்

சைவர்களாக இருக்கும் பட்சத்தில், அதே வகையான புரதங்களுக்குப் பால் பொருள்களையும் நெய்யையும் எடுத்துக்கொள்ளலாம். சுண்டல், பயிறு வகைகள், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை எல்லோருமே எடுத்துக் கொள்ளலாம். வெறும் தானியங்களை மட்டும் அதிகமாக உண்டு, காய்கறி, ஆரோக்கிய கொழுப்புகள் மற்றும் புரதங்களை சரிவர எடுத்துக்கொள்ளாமல் இருப்பது, உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோயை அதிகப்படுத்தும். இவையே மூதாதையர் உணவுமுறையிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் விஷயம்.

அடுத்த வாரம் வேறொரு விஷயத்தைப் பற்றிப் பேசுவோம்.

- பரிமாறுவோம்

நாம் உண்ணும் உணவிலிருந்து கிடைக்கும் சத்துகள் எத்தனை நாள்கள் வரை உடலில் இருக்கும்?

- சிவகுமார்

நமது தொடரை ஆரம்பம் முதலே படித்து வந்திருந்தால், நாம் உண்ணும் உணவில் மேக்ரோ நியூட்ரியன்ட்ஸ் எனப்படும் கலோரி தரும் சத்துகளும், மைக்ரோ நியூட்ரியன்ட்ஸ் எனப்படும் நுண்சத்துகளும் உள்ளது என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து போன்றவை நம் உடலுக்குள் ஓர் அங்கமாக மாறி வாழும் காலம் முழுவதும் உடலுக்குள் இருக்கும். ஆனால் வைட்டமின், தாதுப் பொருள்கள் போன்ற நுண்சத்துகளைப் பொறுத்தவரை, கொழுப்பில் கரையும் வைட்டமின்களான வைட்டமின் ஏ, டி, இ, கே, பி12, ஆகியவற்றை மூன்று மாதங்கள் முதல் ஓரிரண்டு வருடங்கள் வரைகூட நமது கல்லீரல் சேமித்து வைத்திருக்கும். இரும்புச்சத்தையும் காப்பர் எனும் தாதுப் பொருளையும்கூட சில மாதங்கள் கல்லீரல் சேமித்திருக்கும். மற்ற வைட்டமின்கள் சில வாரங்களுக்கு மேல் உடலில் தங்காது. தினசரி உணவில் இவற்றைச் சேர்த்துக்கொள்வது அவசியம்.

பாரம்பரிய நெல் ரகம் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொருவித மருத்துவ குணம் இருப்பதாகச் சொல்கிறார்களே, அது உண்மையா?

- தேவி ஐஸ்வர்யா

மாப்பிள்ளைச் சம்பா சாப்பிட்டால் மாப்பிள்ளைக் கல் தூக்கும் அளவுக்கு சக்தி கிடைக்கும்; கறுப்புக் கவுனி அரிசி சாப்பிட்டால் சர்க்கரை நோய் ஓடிப் போய்விடும்; பூங்கார் அரிசி சாப்பிட்டால் சுகப்பிரசவம் ஆகும் என்றெல்லாம் பல விஷயங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. உண்மை என்னவென்றால் பாலீஷ் செய்த வெள்ளை அரிசியைவிட, தவிட்டுடன் சேர்த்துச் சாப்பிடும் பெரும்பாலான பாரம்பரிய அரிசி வகைகள் நிறைய நார்ச்சத்து, வைட்டமின் மற்றும் இரும்புச் சத்துகளையும் சில பிரத்யேக ஃபைட்டோ நியூட்ரியன்ட்ஸ் எனப்படும் நுண்சத்துகளையும் கொண்டிருக்கின்றன. இதனால் எடை குறைப்பு, சர்க்கரை நோய் குறைப்பில் 10 முதல் 20 சதவிகிதம் சாதாரண அரிசியைவிட கூடுதல் கட்டுப்பாடு கிடைக்கும். ஆனால் பல நோய்களைக் குணப்படுத்திவிடும் என்பதெல்லாம் மிகைப்படுத்தப்பட்ட செய்திகள். அவை உண்மையல்ல.

சர்க்கரை, ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுக்குள் வந்தாலும் ஆயுள் முழுவதும் மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டுமா?

- திலகர் ஈஸ்வரன்

சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்றவை நாளுக்கு நாள் நம் உடலில் ஏறி இறங்கும் விஷயங்கள். ஒருவருக்கு சர்க்கரை நோய் அல்லது உயர் ரத்த அழுத்தம் வருகிறது என்றாலே, அந்த அளவுகளைக் கட்டுக்குள் வைக்க உடலுக்குள் இருக்கும் மெக்கானிசம் செயலிழந்துவிட்டது என்று அர்த்தம். அதனால்தான் அதை மருந்துகள் மூலமாகவோ உணவுக் கட்டுப்பாடு மூலமாகவோ சில மாற்றங்களைச் செய்து கட்டுப்படுத்த வேண்டியுள்ளது. இந்தக் கட்டுப்பாடு மருந்தாக இருந்தாலும் சரி, அல்லது உணவு முறையாக இருந்தாலும் சரி, அதை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். கட்டுப்பாட்டை நிறுத்தினால் மறுபடி அதிகமாகத்தான் செய்யும்.

சுத்திகரிக்கப்பட்ட குடிநீரைச் சூடாக்கிக் குடிக்கலாமா?

- ஆண்டாள்

சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை தாராளமாக சூடாக்கிக் குடிக்கலாம். தவறில்லை. ஏனென்றால், வெளியில் இருந்து கேனில் வாங்கும் தண்ணீராக இருந்தாலும் சரி, அல்லது வீட்டில் இயந்திரம் மூலம் தண்ணீரைச் சுத்திகரித்தாலும் சரி, சரியான பராமரிப்பு இல்லை என்றால் தண்ணீரில் இருக்கும் கிருமிகள் சரியாக நீங்காது. எனவே மீண்டும் ஒரு முறை கொதிக்க வைத்து ஆற வைத்துப் பயன்படுத்துவதில் எந்தத் தவறும் இல்லை.

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 59

ஆரோக்கியம், டயட் தொடர்பான சந்தேகங்களை மருத்துவர் அருணிடம் கேட்கலாம்.

arokkiam@vikatan.com என்ற மின்னஞ்சலிலோ அல்லது ‘டாக்டரிடம் கேளுங்கள், ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை- 2’ என்ற முகவரிக்குக் கடிதம் வழியாகவோ அனுப்பலாம்.