Published:Updated:

சிறியவர்கள் முதல் நீரிழிவு நோயாளிகள் வரை... நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்துக் கொள்வது எப்படி?

Immunity ( pixabay )

நார்த்தங்காய் இலையில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் செறிந்துள்ளன. இந்த இலையின் நடுவில் இருக்கும் நரம்பை நீக்கிவிட்டு, ஓமம், உப்பு, வரமிளகாய்ச் சேர்த்து நன்றாக அரைத்து அதைச் சோற்றில் பிசைந்து சாப்பிடலாம்.

Published:Updated:

சிறியவர்கள் முதல் நீரிழிவு நோயாளிகள் வரை... நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்துக் கொள்வது எப்படி?

நார்த்தங்காய் இலையில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் செறிந்துள்ளன. இந்த இலையின் நடுவில் இருக்கும் நரம்பை நீக்கிவிட்டு, ஓமம், உப்பு, வரமிளகாய்ச் சேர்த்து நன்றாக அரைத்து அதைச் சோற்றில் பிசைந்து சாப்பிடலாம்.

Immunity ( pixabay )

கொரோனா வைரஸ் தொற்று நூற்றுக்கணக்கில் பரவிக்கொண்டிருந்த நேரங்களில் எல்லாம் ஊரடங்கில் வீட்டில் இருந்தோம். தற்போது ஆயிரக்கணக்கில் பெருகிக்கொண்டிருக்கும் வேளையில் வேறு வழி இல்லாமல் வெளியில் வரத் தொடங்கியிருக்கிறோம்.

Corona
Corona

கொரோனாவை எதிர்த்துப் போராட இன்னும் 'தடுப்பு மருந்துகள்' அறியப்படாத நிலையில் சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், நாம் உட்கொள்ளும் உணவுகளுமே நமக்கான ஆயுதங்களாக உள்ளன. மாஸ்க், சானிடைஸர் என்று தன் சுத்தத்தில் நாம் காட்டும் கவனத்தை நாம் உட்கொள்ளும் உணவுகளிலும் காட்ட வேண்டும்.

நம்மைத் தாக்கும் நோய்க்கிருமியை எதிர்த்துப் போராடுவதற்கான சக்தியை நமக்களிப்பதில் முக்கியப் பங்கு நாம் உட்கொள்ளும் உணவுகளுக்கே. அதனால் நாம் என்ன சாப்பிடுகிறோம், குறிப்பாக இந்தக் கொரோனா காலத்தில் உணவாக என்ன எடுத்துக்கொள்கிறோம் என்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

ஊட்டச்சத்து நிபுணர் தாரிணி கிருஷ்ணன்
ஊட்டச்சத்து நிபுணர் தாரிணி கிருஷ்ணன்

உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்துக்கொள்ள எந்தெந்த வயதினர் என்ன மாதிரியான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று விளக்குகிறார் ஊட்டச்சத்து ஆலோசகர் தாரிணி கிருஷ்ணன்.

குழந்தைகளுக்கு....

Fruits
Fruits

குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புச்சக்தி அதிகரிக்கப் புரதச்சத்து அதிகமுள்ள உணவுகளை வழங்க வேண்டும். பருப்பு, சுண்டல், முளைகட்டிய தானியங்களை வழங்கலாம்.

வைட்டமின்-சி அதிகமுள்ள சிட்ரஸ் பழங்களான எலுமிச்சை, சாத்துக்குடி, நெல்லிக்காய் மற்றும் கொய்யாப்பழம் போன்றவை நோய் எதிர்ப்புச்சக்தியை அதிகரிப்பதில் முக்கிய இடம் வகிக்கின்றன. இவற்றை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

தினமும் 500-600 மில்லி லிட்டர் பால், தயிர் எடுத்துக்கொள்வது நல்லது. பாலில் மஞ்சள், மிளகு கலந்து கொடுக்கலாம்.

மஞ்சள், சீரகம், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி ஆகியவை குழந்தைகளுக்கான உணவில் கட்டாயம் இடம்பெற்றிருக்க வேண்டும்.

Milk
Milk

கேரட், குடைமிளகாய், கீரை வகைகளைக் கூட்டாகவோ, பொரியலாகவோ செய்து தரலாம். முட்டை, மீன், சிக்கன் போன்றவற்றை நன்றாக வேகவைத்துக் கொடுக்கலாம்.

இவற்றை எண்ணெயில் பொரித்துக் கொடுப்பதைக் காட்டிலும் குழம்புபோல் செய்து தருவது நல்லது.

பெரியவர்களுக்கு....

Food
Food
Pixabay

பெரியவர்களும் புரதம் நிறைந்த பருப்புகள், தானியங்கள் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

பால், தயிரை தினமும் 400-500 மில்லி லிட்டர் அளவில் எடுத்துக்கொள்ளலாம்.

அனைத்து வகையான கீரைகளையும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். முருங்கைக்கீரை, முளைக்கீரை, வல்லாரை குறிப்பிடத்தக்கவை. தினமும் ஏதாவது ஒரு கீரை வகையைக் கூட்டாகவோ, பொரியலாகவோ உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

புதினா நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவும். இதில் வைட்டமின்-சி, ஏ, பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற சத்துகள் நிறைந்துள்ளன.

அனைத்து வகையான காய்கறிகள், கிழங்குகளையும் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. இவற்றுடன் மீன், இறால், நண்டு, முட்டை, சிக்கன் போன்ற அசைவ உணவுகளையும் நன்றாக வேகவைத்து எடுத்துக்கொள்ளலாம்.

வயதானவர்களுக்கு....

Protein Powder
Protein Powder

இவர்களும் புரதச்சத்து நிறைந்த உணவுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். உணவாக எடுத்துக்கொள்வது சிரமமெனில் புரோட்டீன் பவுடராக வாங்கி பாலிலோ, வெந்நீரிலோ கலந்து பருகலாம்.

மருத்துவர்களின் பரிந்துரையின் அடிப்படையில் வைட்டமின் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கக் கூடிய மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம்.

வயதானவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே ஏதேனும் உடல்நலப் பிரச்னைகள் இருக்கும் என்பதால் அதற்கேற்ப என்ன உணவுகளை எடுத்துக்கொள்ளலாம் என்பது குறித்து உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

அனைவரும் கவனிக்க வேண்டிய மேலும் சில விஷயங்கள்: "கொரோனா வைரஸிடமிருந்து தற்காக்க... காரத்தன்மை உணவுகள்!" - ஊட்டச்சத்து ஆலோசகர்
Protein rich food
Protein rich food
Pixabay

* நம் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதில் புரதச்சத்திற்கு முக்கியப் பங்குண்டு. ஆனால் நாம் குறைந்த அளவிலான புரதத்தையே உணவில் எடுத்துக்கொண்டிருக்கிறோம். 60 கிலோ உடல் எடை இருக்கும் ஒருவர் 58 முதல் 68 கிராம் வரையில் புரதம் உட்கொள்ள வேண்டும். ஆனால் சராசரியாக 20 கிராம் அளவிலான புரதத்தையே எடுத்துக்கொள்கிறார். உங்களது தினசரி உணவில் புரதம் அதிகமாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.

* வைட்டமின்-சி - நம் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து, தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடி நம்மைப் பாதுகாக்கவும் உதவும். அனைத்து வயதினரும் வைட்டமின்-சி நிறைந்துள்ள பழங்கள், காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஆரஞ்சு, எலுமிச்சை, நெல்லிக்காய், கொய்யாப்பழம் ஆகியவற்றில் வைட்டமின்-சி நிறைந்துள்ளது.

* க்ரீன் டீ குடிக்கும் பழக்கமுள்ளவர்கள். அதற்கு பதிலாகத் துளசி, நார்த்தங்காய் இலை போன்றவற்றைப் பயன்படுத்தலாம். நார்த்தங்காய் இலையில் ஆன்டி ஆக்ஸிடன்ட் செறிந்துள்ளது. இந்த இலையின் நடுவில் இருக்கும் நரம்பை நீக்கிவிட்டு, ஓமம், உப்பு, வரமிளகாய் சேர்த்து நன்றாக அரைத்து அதைச் சோற்றில் பிசைந்து சாப்பிடலாம்.

* தயிர், மோரில் உடலுக்கு நன்மை ஏற்படுத்தக்கூடிய லாக்டோபேசிலஸ் போன்ற சில நுண்ணுயிர்கள் இருக்கின்றன. இவற்றையும் தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

Sleeping
Sleeping
Freepik

* உடலில் நோய் எதிர்ப்புச்சக்தியை அதிகரிக்க உணவில் கவனம் செலுத்துவதுபோல் உறக்கத்திலும் கவனம் செலுத்த வேண்டும். ஒருவர் தினமும் சராசரியாக 8 மணிநேரம் அவசியம் உறங்க வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் தூக்கத்தைத் தவிர்க்கக் கூடாது.

* மன உளைச்சல், மனஅழுத்தம் இவற்றிலிருந்து விடுபட்டு மன அமைதியுடன் இருக்க தினமும் அரை மணிநேரமாவது உடற்பயிற்சிகள், தியானம் செய்வது நல்லது" என்றார் ஊட்டச்சத்து ஆலோசகர் தாரிணி கிருஷ்ணன்.

நீரிழிவு நோய் உள்ளவர்கள் தங்கள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து சர்க்கரைநோய் மருத்துவர் ராஜ்மாதங்கியிடம் கேட்டோம்.
சர்க்கரை நோய் மருத்துவர் ராஜ்மாதங்கி
சர்க்கரை நோய் மருத்துவர் ராஜ்மாதங்கி

"பொதுவாக, சர்க்கரைநோய் இருப்பவர்கள் அனைவருக்குமே உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருக்கும் என்று நம்மில் பெரும்பாலானோர் நினைத்துக்கொண்டிருக்கிறோம். உண்மை அதுவல்ல. தங்களுக்கு ஏற்பட்டுள்ள சர்க்கரைநோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி மற்றவர்களைப்போல் சாதாரணமாகவே இருக்கும். கட்டுப்பாட்டில் வைத்திருக்காதவர்களுக்கே உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருக்கும்.

ஒருவருக்கு சர்க்கரைநோய் கட்டுப்பாட்டில் இருக்கிறதா என்பது ஹெச்பி.ஏ.1.சி (Hemoglobin A1c Test) டெஸ்டின் மூலம் கண்டறியப்படுகிறது. ஹெச்பி.ஏ.1.சி என்பது சர்க்கரைநோய் உள்ள ஒருவருக்கு எடுக்கப்படும் டெஸ்ட். கடந்த மூன்று மாதங்களில் ஒருவரின் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் சராசரி அளவை இந்த ஹெச்பி.ஏ.1.சி டெஸ்டின் மூலம் அறியலாம். இதில் வரும் அளவு 7.5 சதவிகிதத்திற்கு மேலே இருந்தால் அவர்களுக்கு சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இல்லை என்று அர்த்தம். அவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருக்கும்.

Diabetes
Diabetes
Pixabay

இந்த ஹெச்பி.ஏ.1.சியின் அளவு 8, 9, 10 சதவிகிதமாக அதிகரித்துக்கொண்டே சென்றால் அவரின் உடலில் நோய் எதிர்ப்புச்சக்தி குறைந்துகொண்டே செல்லும். இதனால் நீரிழிவு நோயாளிகள் தங்களின் ஹெச்பி.ஏ.1.சி அளவை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். ஒருவேளை நீரிழிவு நோயாளிகளின் உடலில் நோய் எதிர்ப்புச்சக்தி குறையும்பட்சத்தில் அவர்களை வைரஸ், பாக்டீரியா போன்றவற்றால் ஏற்படும் நோய்கள் எளிதில் தாக்கும்.

நீரிழிவு நோய் உள்ளவர்கள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்யவேண்டியவை:

Vaccination
Vaccination

கொரோனா வைரஸ் பரவிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அதற்கான தடுப்பு மருந்து இல்லை என்றாலும், நீரிழிவு நோய் உள்ளவர்கள் இன்ஃப்ளுயென்ஸா காய்ச்சலுக்கான தடுப்பு மருந்தைக் கட்டாயம் எடுத்துக்கொள்வது நல்லது.

அவகேடோ, கொய்யாக்காய், பப்பாளிப்பழம் இவை மூன்றும் நீரிழிவு நோயாளிகளின் உடலில் நோய் எதிர்ப்புச்சக்தியை மேம்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இவற்றை ஜூஸ் செய்து சாப்பிடாமல், பழங்களைக் கழுவிவிட்டு நறுக்கி அப்படியே சாப்பிடுவது நல்லது.

குடைமிளகாய், பரங்கிக்காய், சுரைக்காய், கீரை வகைகளும், இஞ்சி, பூண்டு, புதினா போன்றவையும் நோய் எதிர்ப்புச்சக்தியை அதிகரிக்க உதவும்.

முட்டையின் வெள்ளைக்கரு, மீன், இறால், நண்டு போன்றவற்றையும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

Egg
Egg

எலுமிச்சை, நெல்லிக்காய் போன்ற சிட்ரஸ் பழங்களையும் எடுத்துக்கொள்ளலாம். இவற்றில் சர்க்கரையின் அளவு குறைவாகவே இருக்கும். இவை நோய் எதிர்ப்புச்சக்தியை அதிகரிக்கக்கூடியவை.

மாம்பழம், சப்போட்டா, பலாப்பழம் இவற்றில் எல்லாம் சத்துகள் இருந்தாலும் சர்க்கரையின் அளவும் அதிகம் இருக்கும் என்பதால் இவற்றைத் தவிர்ப்பது நலம்.

பிழிந்த எலுமிச்சைப்பழசச் சாறு, அரைத்த இஞ்சிச் சாறு போன்றவற்றைத் தண்ணீர் சேர்க்காமல் அடர்த்தியாக அப்படியே எடுத்துக்கொள்ளாமல் அவற்றைச் சிறிதளவு மோர், டீ அல்லது தண்ணீருடன் கலந்து பருக வேண்டியது அவசியம். ஏனென்றால் நீரிழிவு நோய் உள்ளவர்கள் சீறுநீரகங்களின் செயல்திறன் பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இந்தச் சாறுகளைத் தண்ணீர் சேர்க்காமல் அடர்த்தியாகப் பருகும்போது அது சீறுநீரகத்தின் இயக்கத்தைப் பாதிக்கலாம்.

உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கக் கூடிய பழங்கள், காய்கறிகளை தினமும் தவறாமல் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

Ginger
Ginger

இந்த உணவுகளை ஓரிரு நாள்கள் மட்டும் அதிகளவில் உட்கொண்டால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்துவிடாது. இந்த எல்லா உணவுகளையும் குறைந்த அளவிலாவது தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அப்படி எடுத்துக்கொண்டால் உடலில் கொஞ்சம் கொஞ்சமாக நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிப்பதை உணரலாம்.

இவற்றுடன் சேர்த்து நீரிழிவு நோய்க்காக மருத்துவர்கள் பரிந்துரைத்த மாத்திரை, மருந்துகளைச் சாப்பிடுவதும் குறிப்பிட்ட இடைவெளிகளில் டெஸ்டுகளை எடுப்பதும் முக்கியம்" என்றார் சர்க்கரைநோய் மருத்துவர் ராஜ்மாதங்கி.