Published:Updated:

மதுர ருசி: நாலு வகை சூப், வெங்காயக் கறி, சிலுப்பி ஃப்ரை, கொத்துக்கறி தோசை... எங்கே சாப்பிடலாம்?!

வடக்குமாசி வீதி கோனார் கடை

மதுரமான மட்டன் வகைகளை அள்ளி வழங்கும் வடக்குமாசி வீதி கோனார் கடைக்குள் ஒரு விசிட்!

Published:Updated:

மதுர ருசி: நாலு வகை சூப், வெங்காயக் கறி, சிலுப்பி ஃப்ரை, கொத்துக்கறி தோசை... எங்கே சாப்பிடலாம்?!

மதுரமான மட்டன் வகைகளை அள்ளி வழங்கும் வடக்குமாசி வீதி கோனார் கடைக்குள் ஒரு விசிட்!

வடக்குமாசி வீதி கோனார் கடை

பசிக்காக உணவு உண்போர் மத்தியில் ருசிக்காக உண்பவர்கள் மதுரையில் அதிகம்.

பழைய சோற்றைக்கூடத் தயிர், தேங்காய்பால் சேர்த்து மதிப்புக் கூட்டி வயிற்றுக்குள் அனுப்புவார்கள் மதுரைக்காரர்கள்.

வடக்குமாசி வீதி கோனார் கடை
வடக்குமாசி வீதி கோனார் கடை

சர்பத், ஐஸ்க்ரீம், அகர் அல்வா, பால், பாலாடை என்று ஒவ்வொரு ஊரிலும் தனித்தனியாக சாப்பிடுவதை, 'அதற்கெல்லாம் எங்களுக்கு நேரமில்லை' என்று மொத்தமாக கலந்து ஜிகர்தண்டா என்ற பெயரில் அப்படியே உள்ளே அனுப்புபவர்கள் மதுரைக்காரர்கள்!

சாஃப்ட் சமாச்சரங்களையே இந்த போடு போடுகிறவர்கள் ஆட்டுக்கறி, கோழிக்கறியை சும்மா விடுவார்களா? அதை தலை வேறு, கால் வேறாக பிரித்து மேய்ந்து விடுவார்கள்.

நெஞ்சு எலும்பு சூப்
நெஞ்சு எலும்பு சூப்

ஆட்டுக்கறிக்காக அடித்துக்கொள்ளக்கூடாது, கோழிக்கறிக்காக வெட்கமில்லாமல் கூடிக்கொள்ளக்கூடாது என்று மதுரையன்ஸ்களின் பெருமையை போற்றிப் பாதுகாக்க வீட்டு பக்குவத்தில் ஆடு, கோழியில் விதவிதமாக விருந்து வைக்க காரசாரமிக்க ஹோட்டல்கள் மதுரையில் நிறைந்து கிடக்கிறது.

அதில், மக்கள் அபிமானம் பெற்ற ஹோட்டல்களில் முக்கியமானது 'வடக்குமாசி வீதி கோனார் சூப் கடை!'

ஆரம்பத்தில் ஆட்டுக்கால் சூப் கடையாக மட்டும் தொடங்கி இன்று மட்டன் உணவுகளில் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது.

சிலுப்பி ரோஸ்ட்
சிலுப்பி ரோஸ்ட்

மதுரையில் ஏற்கனவே சிம்மக்கல் கோனார் கடை பிரபலமாக இருந்தாலும், சுவை மற்றும் கவனிப்பால் தனித்த அடையாளத்துடன் 'வடக்கு மாசி வீதி கோனார் கடை'யும் வாடிக்கையாளர்கள் தேடி வரும் வகையில் சிறந்து விளங்குகிறது.

நகரில் முக்கிய இடங்களில் ஆட்டிறைச்சி கடை வைத்திருக்கும் சகோதரர்கள், 20 வருடங்களுக்கு முன் சாதாரணமாக தொடங்கிய ஆட்டுக்கால் சூப் கடைதான் வளர்ந்து தற்போது சிறந்த மட்டன் வெரைட்டி ஹோட்டலாக மாறியுள்ளது.

ஆட்டு நெஞ்சு சூப், எலும்பு சூப், பாயா சூப், மிளகு எலும்பு சூப், குடல் சூப், சில்லி சூப் என்று சூப்பில் மட்டும் இவ்வளவு வெரைட்டி வைத்திருக்கிறார்கள்.இப்போது புதிதாக நாட்டுக்கோழி சூப்பும் மசாலா மணத்துடன் ஆவி பறக்க கிடைக்கிறது.

ஆட்டுக்கால் சூப்
ஆட்டுக்கால் சூப்

கால் குளம்புடன், கறியும் ஒட்டிக்கிடக்கும் ஆட்டுக்காலை அப்படியே இலகுவாக மென்று துப்பும் வகையில் சுவை போய்விடாத அளவுக்கு வேக வைத்து சூப் வழங்குகிறார்கள். ஸ்டாட்டர்களான சூப்புகளே ஆளை கிறங்கடிக்கும் என்றால் மெயின் டிஷ்களைப்பற்றி சொல்ல வேண்டியதில்லை.

ஆரம்பத்தில் மாலைநேரம் மட்டும் தொடங்கிய ஹோட்டல் தற்போது மதியத்தில் பிரியாணி வகைகளுடன் சுக்கா வருவல், தலைக்கறி ரோஸ்ட், எலும்பு ரோஸ்ட், நாட்டுக்கோழி சுக்கா, சிலுப்பி ஃப்ரை, நாட்டுக்கோழி குழம்பு, நாட்டுக்கோழி போன்லெஸ், மூளை ரோஸ்ட், மட்டன் கைமா என்று பந்தி வைக்கிறார்கள்.

மூளை கைமா
மூளை கைமா

மதியத்தை விட மாலை நேரத்தில்தான் மட்டன்களின் வெரைட்டியான அணி வகுப்பை தொடங்குகிறது. வெள்ளாட்டின் தோல், கொம்பு தவிர்த்து மற்ற அனைத்து பாகங்களையும் அருமையான செய்முறையில் அற்புதம் படைக்கிறார்கள்.

இங்கு பரோட்டா கிடையாது. மாவு உணவுகளில் இட்லி, ஊத்தப்பம், முட்டை தோசை, இடியப்பம் கிடைக்கும். ஆனால், இவைகளுக்கு சட்னி, சாம்பார் கிடையாது. டிபனுக்கு மட்டன் குழம்பு, எலும்பு குழம்பு, குடல் குழம்பு, ஈரல் குழம்பு என நான்கு குழம்புகள் தருகிறார்கள். அதில் இட்லி, தோசைகளை மிதக்க விட்டு சாப்பிடலாம்.

கொத்துக்கறி தோசை
கொத்துக்கறி தோசை

அழகான சைஸில், அதிகப்படியான சுவையில் இங்கு கிடைக்கும் கறிதோசை அசத்தலானது. அது மட்டுமல்ல, கொத்துக்கறி இடியப்பம், வெங்காய கறிதோசை, கொத்துக்கறி தோசை, கொத்துக்கறி இட்லி என்று அதகளப் படுத்துகிறார்கள்.

அதிலும், இங்கு ஒருமுறை வெங்காய கறி சாப்பிட்டீர்கள் என்றால், வாழ்நாளில் மறக்க மாட்டீர்கள். அப்படி ஒரு சுவை. கைமா பதத்துக்கு கொத்தப்பட்ட மட்டனில் வழக்கமான மசாலாக்களுடன் கிரேவி செய்து, அதில் மையாக அரைத்து வைத்த சின்ன வெங்காயத்தை கலந்து அந்த கலவையை, சூடான கல்லில் போட்டு புரட்டி எடுத்து இலையில் கொண்டு வந்து வைப்பார்கள் பாருங்கள்... அப்பப்பா, அதன் வாசமும் சுவையும் 'அப்படியே' சாப்பிட வைக்கும். இட்லி, இடியப்பத்தோடும் உள்ளே தள்ளலாம்.

குடல் ஃப்ரை
குடல் ஃப்ரை

இதுபோல் எலும்பு ரோஸ்ட்டிலும் அசத்துவார்கள். எலும்பை இவ்வளவு பஸ்பமாக சாப்பிட்டிருக்க மாட்டோம். ஈரல், மூளை, சுவரொட்டிகளை இவர்கள் தயாரிக்கும் விதமே தனி, ஒவ்வொன்றுடன் சேர்க்கும் மசாலா ருசியையும் மறக்கமுடியாது. மசாலாவில் அப்படி என்னதான் மேஜிக் செய்கிறார்களோ?

இதேபோல் நாட்டுக்கோழியிலும் விதவிதமாக வரலாறு படைக்கிறார்கள்.

இக்கடையில் எண்ணெயில் பொறித்து எடுக்கும் உணவுகள் இல்லை. மசாலா சேர்மானங்கள் அனைத்தும் வீட்டிலயே தயார் செய்கிறார்கள். நீண்டகாலமாக மதுரை மக்கள் அறியும் வகையில் கறிக்கடைகள் நடத்தி வருவதால், கொடுக்கும் அளவுகளில் கஞ்சத்தனம் காட்டுவதில்லை. மட்டன் மீதும் சந்தேகப்பட வேண்டியதில்லை.

நல்ல ருசியான மட்டன், நாட்டுக்கோழி உணவுகளுக்காக குடும்பத்துடன் மக்கள் வருகிறார்கள்.

ஆறுமுக குமார்
ஆறுமுக குமார்

கடையின் நிர்வாகிகளில் ஒருவரான ஆறுமுக குமாரிடம் பேசினோம். "பாரம்பரியமாக ஆட்டிறைச்சி கடை நடத்தி வரும் நாங்கள், தரமான முறையில் வீட்டு ருசியில் பலவகையான மட்டன் உணவுகளை நியாயமான விலையில் வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் இக்கடையை நடத்தி வருகிறோம்.

ஆரம்பத்தில் மாலை நேரக்கடையாக இருந்து, இப்போது மதியத்திலும் பிரியாணி, மட்டன் சாப்பாடு என்று வழங்குகிறோம். எங்கள் கடை ருசியைத் தேடி மக்கள் வருவதால் எந்த ஆன்லைன் ஃபுட் சர்வீஸிலும் இணையவில்லை" என்றார்.

மதுர ருசி
மதுர ருசி

என்ன மக்களே... அடுத்த முறை மதுரைக்கு வந்தீங்கன்னா, வடக்குமாசி வீதி கோனார் கடையை விட்றாதீங்க!