ஹெல்த்
தொடர்கள்
Published:Updated:

குடும்பம்: புலியா... யானையா...

குடும்பம்
பிரீமியம் ஸ்டோரி
News
குடும்பம்

குழந்தை வளர்ப்பில் நீங்கள் எப்படி?

குழந்தை வளர்ப்பில் எத்தனை வகைகள் இருந்தாலும், 2010-ம் ஆண்டுக்குப் பிறகு உலகத்துக்குத் தெரியவந்த ‘டைகர் பேரன்ட்டிங்’ (புலியின் குழந்தை வளர்ப்பு முறை) மற்றும் ‘எலிஃபன்ட் பேரன்ட்டிங்’ (யானையின் குழந்தை வளர்ப்பு முறை) ஆகிய இரண்டு வகைகளே இன்றைய பெற்றோர்களால் அதிகம் கையாளப்பட்டு வருகின்றன.

குடும்பம்: புலியா... யானையா...

இவை குறித்த அறிமுகம், இரண்டில் எது சிறந்தது, இவற்றின் சாதக பாதகங்கள் என்னென்ன... உளவியல் ஆலோசகர் கல்பனா சூர்யகுமார் விவரிக்கிறார்.

டைகர் பேரன்ட்டிங்

இந்தியாவில் இருக்கும் பெற்றோர்களில் பலரும் இந்த முறையில்தான் குழந்தைகளை வளர்த்துக்கொண்டிருக்கிறோம். நிறைய கண்டிப்பு, கொஞ்சம் கறார், விதிகள், விதிமுறைகள், சுதந்திரமின்மை, பொழுதுபோக்குக்குத் தடை, வெற்றியும் சாதனையும்தான் முக்கியம்... இவையெல்லாம் ‘டைகர் பேரன்ட்டிங்’ அணுகுமுறைகள். இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால், ‘பொண்ணு அடுத்த வருஷம் ப்ளஸ் டூ எழுதப் போறா. அதனால, இந்த வருஷமே கேபிள் டி.வி-யை கட் பண்ணிட்டேன். சீரியலையெல்லாம் தியாகம் செஞ்சுட்டேன்’ என்பவர்களெல்லாம், ‘டைகர் பேரன்ட்டிங்’ பெற்றோர்களே.

குடும்பம்: புலியா... யானையா...

சாதகங்கள்

டைகர் பேரன்ட்டிங்கில், உங்கள் பிள்ளைகளைச் சாதனையாளர்களாக ஆக்குவதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது. படிப்பில், விளையாட்டில், ஏன்... பாட்டு, நடனம் என எதைத் தொட்டாலும் உங்கள் பிள்ளை சிறந்தவராக இருப்பார்.

பாதகங்கள்

தோல்விகளும் வாழ்க்கையில் ஓர் அங்கம்தான், தோல்விகள்தாம் வெற்றிகளை இன்னும் ருசியாக்கும் என்பது, இந்த ஸ்டைலில் வளர்க்கப்படும் குழந்தைகளுக்குத் தெரியாமலேயே போய்விடலாம். விட்டுக்கொடுத்தல், உணர்வுபூர்வமாக ஒரு விஷயத்தை அணுகுவதெல்லாம் இந்தப் பிள்ளைகளுக்குக் கைவராமல் போகலாம். சக குழந்தைகளுடன் சேர்ந்து சோர்வாகும்வரை விளையாடியது, செல்லப்பிராணி வளர்த்தது, மழையில் நனைந்தது என பால்யகால மகிழ்வான நினைவுகள் பெரியவர்களாக வளர்ந்த பிறகு, இந்தப் பிள்ளைகளுக்குக் குறைவாகவே இருக்கும்.

குடும்பம்: புலியா... யானையா...

எலிஃபன்ட் பேரன்ட்டிங்

யானைகள் தங்கள் குட்டிகளை ஓரளவுக்கு வளரும்வரை கால்களுக்குள்ளேயே வைத்திருக்கும். அவ்வப்போது, துதிக்கையால் குட்டியைத் தடவிக் கொடுத்துக்கொண்டிருக்கும். எலிஃப்ன்ட் பேரன்ட்டிங்கும் இப்படிப்பட்டதுதான். பிள்ளைகளை நிறைய செல்லம் கொஞ்சிக்கொண்டிருப்பார்கள். அன்பு, அரவணைப்பு, பிள்ளைகளின் சந்தோஷத்துக்கு முதலிடம் கொடுப்பது, உடல் ஆரோக்கியத்துக்குக் கொடுக்கும் அளவுக்கு மன ஆரோக்கியத்துக்கும் முக்கியத்துவம் கொடுப்பது என்று இருப்பார்கள்.

சாதகங்கள்

பிள்ளைகள் நிறைய சுதந்திரத்தை அனுபவிப்பார்கள். கெடுபிடி இல்லாமல் வளர்வார்கள். நினைத்ததையெல்லாம் சாதிப்பார்கள்.

பாதகங்கள்

தனக்குக் கொடுக்கப்படும் சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்துவது, `ஸ்ட்ரெஸ் இல்லாமல் இருக்கிறேன் பேர்வழி’ என்று சோம்பேறியாக இருப்பது, தன் வேலைகளை அடுத்தவர்மேல் சுமத்துவது, அலட்சியம் போன்ற இயல்புகளுடன் இருக்கும் குழந்தைகளுக்கு எலிஃபன்ட் பேரன்ட்டிங் சரிவராது.

குடும்பம்: புலியா... யானையா...

இரண்டில் எது பெஸ்ட்?

என்னிடம் கவுன்சலிங்குக்கு வந்த இரண்டு கேஸ் ஹிஸ்டரி மூலம் இதைப் புரியவைக்கிறேன். நன்கு படிக்கக்கூடிய சிறுவன் ஒருவன், பிட் அடித்து, கையும் களவுமாக மாட்டிக்கொள்கிறான். ஆசிரியர்களுக்கோ, ‘நன்றாகப் படிக்கும் இவன் ஏன் பிட் அடித்தான்?’ என்று பயங்கர அதிர்ச்சி. விஷயம் என்னிடம் வந்தபோது, அந்தச் சிறுவன் என்ன சொன்னான் தெரியுமா? ‘ஆன்ட்டி,

95 சதவிகிதத்துக்கு மேலே மார்க் எடுத்தாதான் என் பேரன்ட்ஸ் நான் கேட்கிறதையெல்லாம் வாங்கித் தருவேன்னு சொல்லியிருக்காங்க. அதனாலதான் பிட் அடிச்சேன்.’ இரண்டாவது, ஒரு குட்டிப் பெண் செய்த விஷயம். வழக்கமான பள்ளித் தேர்வில் இரண்டு பரீட்சைகளுக்கு இடையே ஓரிரு நாள் விடுமுறை கிடைக்கும் அல்லவா... அப்படியொரு நாளில் சிறுவர், சிறுமியர் ஒன்றுகூடி விளையாடுவது எனத் தீர்மானிக்கிறார்கள். அப்படிக் கிளம்பும்போது, எல்லாப் பிள்ளைகளும் `ஸ்பெஷல் கிளாஸ்’, `குரூப் ஸ்டடி’ என்று அம்மாக்களிடம் பொய் சொல்ல, ஒரு சிறுமி மட்டும் தாங்கள் விளையாடப்போகும் உண்மையைச் சொல்லிவிட்டுச் செல்கிறாள்.

முதல் சம்பவம், சாதனையாளர்களை உருவாக்கும் டைகர் பேரன்ட்டிங்கின் பலம். இரண்டாவது சம்பவம், கொஞ்சம் அசந்தால் சோம்பேறிகளை உருவாக்கிவிடக்கூடிய எலிஃபன்ட் பேரன்ட்டிங்கின் பலவீனம்.

எனவே, இந்த பேரன்ட்டிங் முறைகளில் ஒன்றை மட்டுமே ஃபாலோ செய்வதால் பயனில்லை. உங்களின் அதிகப்படியான கண்டிப்பால், கொஞ்சம்கூட சுதந்திரமே இல்லாமல் குழந்தை தவிக்கும்போது, எலிஃபன்ட் பேரன்ட்டிங்குக்கு மாறிவிடுங்கள். அதே நேரம், உங்கள் பிள்ளை சாதனையாளராக உருவாக, அவ்வப்போது டைகர் பேரன்ட்டிங்கைக் கையிலெடுங்கள்.

மாடல்கள்: தீபா சங்கர், குழந்தை சம்யுக்தா

``குழந்தை வளர்ப்பில்

என் பாலிசி இது!’’

அருணா விஸ்வநாதன் ஆனந்த்

‘‘ `காய்கறி பிடிக்கலை; சாப்பிட மாட்டேன்’னு குழந்தை சொன்னா, ‘கொஞ்சம் சாப்பிட்டுப் பாரு, பிடிக்கலைன்னா வேற தர்றேன்’னு எலிஃபன்ட் பேரன்ட்டிங் செய்யலாம். ஆனா, ‘இந்தக் காய் மட்டும்தான் சாப்பிடுவேன்’னு அடம்பிடிச்சா, ‘இதுதான் சாப்பிட இருக்கு’னு கண்டிப்புடன் சொல்ற டைகர் பேரன்ட்டிங் அவசியம். குழந்தைகளின் சந்தோஷ உலகத்தை நாம தொந்தரவு செய்யக் கூடாது.

குடும்பம்: புலியா... யானையா...

அதனால, என் பிள்ளையை அவனுக்குப் பிடிக்காத கோச்சிங் கிளாஸில் தள்ள மாட்டேன். குழந்தைகளுக்குப் பிடிச்சா அனுப்பலாம். எலிஃபன்ட் பேரன்ட்டிங்கைவிட மேலே, டைகர் பேரன்ட்டிங்கைவிடக் கீழே... குழந்தை வளர்ப்பில் இதுதான் என் பாலிசி!”

``ஊக்கம் கொடுக்கும் நேரத்தில் டைகர்தான்!’’

அருணா சாய்ராம், கர்னாடக இசைப் பாடகி

``நான் சின்னவளா இருந்தப்போ, அம்மா பாட்டுப் போட்டிகள்ல கலந்துக்கச் சொல்லி என்னைக் கட்டாயப்படுத்தும்போது, சிணுங்கியழுது கூடியவரை தவிர்க்கப் பார்ப்பேன். ‘தப்போ, ரைட்டோ பரிசு கிடைக்காட்டியும் பரவாயில்லை, நீ போய்ப் பாடு’்னு அனுப்பிவைப்பாங்க. வேற வழியில்லாம, ஒத்திகையெல்லாம் செஞ்சு, நானும் போய்ப் பாடுவேன். பரிசு கிடைக்கலைன்னா எங்கப்பா, ‘உன்னுடைய பெஸ்ட்டை நீ பண்ணினே, உன்னைவிட இன்னொரு குழந்தை பெட்டரா பாடினதால அவ பரிசு வாங்கிட்டா. நான் உனக்கு பரிசு தர்றேன்’னு ஏதாச்சும் வாங்கிக் கொடுப்பார்.

குடும்பம்: புலியா... யானையா...

அதேபோல, நான் கண்ணு முழிச்சுப் படிக்கிறப்போ, அவங்களும் எனக்காக கண்ணு முழிச்சு உட்கார்ந்திருக்க மாட்டாங்க. ஆனா, நல்ல மார்க் எடுக்கும்போது எனக்குப் பிடிச்சதை வாங்கித் தருவாங்க. மொத்தத்தில், என் திறமையை வெளிப்படுத்த வைக்கிறதுக்காக டைகரா இருப்பாங்க. என்னை முழு மனுஷியா வளர்த்தெடுக்க எலிஃபன்ட் பேரன்ட்டாவும் இருந்திருக்காங்க. எங்கம்மா, அப்பா என்னை எப்படி வளர்த்தாங்களோ, அப்படித்தான் என் குழந்தைகளை வளர்த்தேன். சில நேரங்கள்ல அவங்க விருப்பப்படி வளரட்டும்னு விட்டிருக்கேன். சில நேரங்கள்ல அது சரியா வராது. குழந்தைகளை மோட்டிவேட் செஞ்சுதான் ஆகணும். அதே நேரம் ‘இதை செஞ்சுதான் ஆகணும்; ஃபர்ஸ்ட் பிரைஸ் வாங்கித்தான் ஆகணும்’னு கட்டாயப்படுத்தினா, அது தப்பு மட்டுமல்ல கொடுமையும்கூட!’’