கட்டுரைகள்
Published:Updated:

கருவுறுதலை பாதிக்கும் புற்றுநோய்... காரணங்கள், தீர்வுகள்...

கருவுறுதலை பாதிக்கும் புற்றுநோய்... காரணங்கள், தீர்வுகள்...
பிரீமியம் ஸ்டோரி
News
கருவுறுதலை பாதிக்கும் புற்றுநோய்... காரணங்கள், தீர்வுகள்...

நோய் மீண்டும் வருவதற்கான வாய்ப்பு உள்ளது என்பதால் புற்றுநோய் சிகிச்சைக்குப் பிறகான ஃபாலோ அப் மிகவும் முக்கியம்.

புற்றுநோய்... ஒரு மனிதனின் தலையிலிருந்து கால் வரை எங்கு வேண்டுமானாலும் பாதிப்பை ஏற்படுத்தலாம். கர்ப்ப காலத்தில் ஒரு பெண்ணுக்கு இந்த பாதிப்பு ஏற்படும்போது அது குழந்தைப் பேற்றையும் பாதிக்கிறது. அதேபோல் புற்றுநோய் சிகிச்சையும் கருவுறுதலை பாதிக்கிறது. புற்றுநோய் எவ்வாறு கருவுறுதலை பாதிக்கிறது என்பதை விளக்குகிறார், சென்னையைச் சேர்ந்த கதிரியக்க புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் ரத்னா தேவி.

எந்தெந்தப் புற்றுநோய்?

ஒரு பெண் கர்ப்பம் தரித்து அவருக்குக் குழந்தை பிறப்பதைத்தான் கருவளம் (Fertility) என்கிறோம். பெரும்பாலும் பெண்ணின் இனப்பெருக்க உறுப்புகளை பாதிக்கும் புற்றுநோய்கள் கருவுறுதலை பாதிக்கும். அந்த வகையில் சினைப்பை, கர்ப்பப்பை வாய், கர்ப்பப் பை, வெஜைனல் பகுதி, ஆகிய இடங்களில் ஏற்படும் புற்றுநோய்கள் கருவுறுதலை பாதிக்கும். இடுப்புப் பகுதியையொட்டிய பகுதியில் ஏற்படும் மலக்குடல், பெருங்குடல் புற்றுநோயும் சில நேரங்களில் கருவுறுதலைத் தடைசெய்யும். இவற்றைத் தவிர, மூளையில் பிட்யூட்டரி சுரப்பியில் ஏற்படும் கட்டியும் (Pituitary adenoma) கருவுறுதலைத் தடுக்கும்.

கருவுறுதலை பாதிக்கும் புற்றுநோய்... காரணங்கள், தீர்வுகள்...
கருவுறுதலை பாதிக்கும் புற்றுநோய்... காரணங்கள், தீர்வுகள்...

கருவுறுதல் எப்படி பாதிக்கப்படுகிறது?

சினைப்பையிலிருந்துதான் கருமுட்டைகள் முதிர்ச்சியடைந்து வெளியேறும். அந்தப் பகுதியில் புற்றுநோய் உருவாகும்போது, கருமுட்டை முதிர்ச்சியடையவது தடைப்பட்டு கருவுறுதல் பாதிக்கப்படும். அதேபோல கரு வளரக்கூடிய கர்ப்பப்பையில் புற்றுநோய் வந்தால் கருவுறுதல் பாதிக்கப்படும். இடுப்புப் பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தும் புற்றுநோய்க்கட்டி, அளவில் பெரிதாகி கர்ப்பப்பைப் பகுதியை அழுத்தும்போது கருமுட்டை முதிர்ச்சியடைந்து வெளியேறுவது உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டுக் கருவுறுதல் தடைப்படும்.

பிட்யூட்டரி... மூளையில் இருக்கக்கூடிய முக்கியமான சுரப்பி. இந்த சுரப்பிதான் உடல் முழுவதும் சுரக்கும் ஹார்மோன்களைக் கட்டுப்படுத்தும். கருவுறுதல் நடைபெற குறிப்பிட்ட ஹார்மோன்களின் உதவி மிக அவசியம். பிட்யூட்டரியில் உருவாகும் கட்டி அந்த ஹார்மோன்களின் உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தும்போது கருவுறுதல் நடைபெறாது.

எதனால் இந்தப் புற்றுநோய்கள் ஏற்படுகின்றன?

ஹியூமன் பாப்பிலோமா என்ற வைரஸால் கர்ப்பப்பை வாய்ப்புற்றுநோய் ஏற்படுகிறது. அந்தரங்கப் பகுதியை சுத்தமாகப் பராமரிக்காதது, அதிக குழந்தைகள் பிறப்பு, புகைபிடித்தல், மதுப்பழக்கம் உள்ளிட்ட காரணங்களால் இது ஏற்படுகிறது. சிறிய வயதிலேயே திருமணம் முடிந்து தாம்பத்தியத்தில் ஈடுபடும்போதும், ஒன்றுக்கும் மேற்பட்டவர்களுடன் உறவு கொள்ளும்போதும் இது வரலாம். இந்தப் புற்றுநோயைத் தடுப்பதற்கு மட்டும் தடுப்பூசி உள்ளது.

சினைப்பை, கர்ப்பப்பைப் புற்றுநோய்கள் ஏற்படுவதற்கான காரணம் என்ன என்பதை உறுதியாக இதுவரை கண்டறியப்படவில்லை. டி.என்.ஏ-வில் ஏற்படும் திடீர் மாற்றங்களால் பிட்யூட்டரி சுரப்பியில் கட்டிகள் உருவாகின்றன என்று சொல்லப்பட்டாலும், இது உறுதியாக எதுவும் வரையறுக்கப் படவில்லை.

கருவுறுதலை பாதிக்கும் புற்றுநோய்... காரணங்கள், தீர்வுகள்...
கருவுறுதலை பாதிக்கும் புற்றுநோய்... காரணங்கள், தீர்வுகள்...

சிகிச்சை

அனைத்துப் புற்றுநோய்களைப் போலவே இதற்கும் கீமோதெரபி, கதிரியக்க சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைதான் தீர்வுகள். புற்றுநோயின் வகை, நிலை ஆகியவற்றின் அடிப்படையில் தனியாகவோ, காம்பினேஷனாகவோ இந்தச் சிகிச்சைகள் வழங்கப்படும். கருவுறுதலை பாதிக்கும் புற்றுநோய்கள் அனைத்தையுமே ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் முழுவதுமாக குணப்படுத்த முடியும் அல்லது அதிக பாதிப்பு இல்லாமல் பாதிக்கப்பட்ட பெண்ணைக் காப்பாற்ற முடியும்.

கருவுறுதலை பாதிக்கும் சிகிச்சை

கர்பப்பைவாய்ப் புற்றுநோய்க்கு கதிர்வீச்சு சிகிச்சை அளிக்கும்போது அருகிலுள்ள இனப்பெருக்க உறுப்புகளும் கதிர்வீச்சுக்கு உள்ளாகும். இதனால் கருவுறுதல் தடைப்படும். ஆரம்ப நிலை என்றால் அறுவை சிகிச்சை செய்து கர்ப்பப்பை வாய்ப்பகுதியில் பாதிக்கப்பட்ட இடத்தை மட்டும் நீக்கிவிட்டு, கர்ப்பப்பையைத் தக்க வைத்துவிட முடியும். பாதிப்பு அதிகமாக இருக்கும்பட்சத்தில் முழுவதுமாக நீக்க வேண்டிய அவசியம் ஏற்படும். இதனால் அவர்களால் சுயமாக கர்ப்பம் தரிக்க முடியாது. அதே போல கீமோதெரபி சிகிச்சையில் பயன்படுத்தப்படும் சில ஆல்கலைன்கள் கர்ப்பப்பை, சினைப்பைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி, கருவுறுதலைத் தடுக்கும். இதுபோன்ற பாதிப்பின் தீவிரத்தைக் குறைக்கும் வகையிலும் சில கீமோதெரபி மருந்துகள் பயன்பாட்டில் உள்ளன.

I ரத்னா தேவி
I ரத்னா தேவி

கருவுற வாய்ப்புள்ளதா?

பொதுவாக கீமோதெரபி, கதிரியக்க சிகிச்சை எடுத்துக்கொண்ட பிறகு ஓராண்டு காத்திருக்கச் சொல்வோம். அதற்குப் பிறகு கருவுறுதலுக்கான வாய்ப்பு உள்ளதா, பாதுகாப்பான கர்ப்பம் அமையுமா என்று மருத்துவர்கள் பரிசோதனை செய்வார்கள். ஒவ்வொரு நோயாளியின் தன்மையைப் பொறுத்தும் அதற்கான முடிவுகள் எடுக்கப்படும். அறுவை சிகிச்சையில் சில நேரங்களில் கர்ப்பப்பையுடன் சினைப்பை, கருக்குழாயையும் சேர்த்து எடுக்க வேண்டி வரும். அதுபோன்ற பெண்களால் கருத்தரிக்க முடியாது.

கர்ப்பப்பைவாய் புற்றுநோய், மலக்குடல் புற்றுநோய்களால் பாதிக்கப்பட்ட இளம்வயதுப் பெண்கள் சிலருக்கு கதிரியக்க சிகிச்சை கொடுக்கும்போது சினைப்பையிலிருக்கும் முட்டைகளைப் பதப்படுத்தி சேமித்து வைத்து பின்னர் பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்துவோம். அப்படி சேமித்து வைக்கும் கருமுட்டைகளைக் கொண்டு, இயன்றால் அவர்களாகவே கருத்தரிக்கலாம், வாய்ப்பில்லாதவர்கள் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்.

கருவுறுதலை பாதிக்கும் புற்றுநோய்... காரணங்கள், தீர்வுகள்...
கருவுறுதலை பாதிக்கும் புற்றுநோய்... காரணங்கள், தீர்வுகள்...

மீண்டும் வருமா?

அனைத்துப் புற்றுநோய்களைப் போலவே, இந்த வகைப் புற்றுநோய்களும் மீண்டும் வருவதற்கான வாய்ப்பு உண்டு. புற்றுநோயைத் தாமதமாக இரண்டாம், மூன்றாம், நான்காம் நிலையில் கண்டுபிடிக்கும்போது மீண்டும் வருவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கும். ஆரம்ப நிலையில் நோயைக் கண்டறிந்தால் மீண்டும் வருவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. அதனால்தான் ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் இந்நோயை முழுவதுமாக குணப்படுத்த முடியும் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்திவருகிறோம்.

நோய் மீண்டும் வருவதற்கான வாய்ப்பு உள்ளது என்பதால் புற்றுநோய் சிகிச்சைக்குப் பிறகான ஃபாலோ அப் மிகவும் முக்கியம். சிகிச்சை பெற்ற முதல் இரண்டு ஆண்டுகள் தொடர் கண்காணிப்பு முக்கியம், அந்தத் சமயத்தில்தான் மீண்டும் நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகவும் அதிகமாக இருக்கும். அதற்கு அடுத்த மூன்று வருடங்கள் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு குறையும். எனினும் சிகிச்சை பெற்ற 5 ஆண்டுகள் ஃபாலோ அப் மிகவும் அவசியம்'' என்றார்.