இந்தியாவில் 4 நிமிடங்களுக்கு ஒருவர் பக்கவாதத்தால் இறந்துபோகிறார் என எய்ம்ஸ் மருத்துவமனை நரம்பியல் நிபுணர் தெரிவித்துள்ளார்.
எய்ம்ஸ் மருத்துவமனை நரம்பியல் பேராசிரியர் எம்.வி.பத்மா ஸ்ரீவஸ்தவா, வியாழன் அன்று ஸ்ரீ கங்கா ராம் மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.
அந்த நிகழ்வில் பேசுகையில்...
*இந்தியாவில் ஏற்படும் இறப்புக்கான பொதுவான காரணங்களில் பக்கவாதம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. பக்கவாதத்தினால் இந்தியாவில் 4 நிமிடங்களுக்கு ஒருவர் இறக்கின்றனர்.
*ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவில் 1,85,000 முறை பக்கவாதம் ஏற்படுகிறது. 40 விநாடிகளுக்கு ஒருமுறை பக்கவாதம் நிகழ்கிறது.
*குளோபல் பர்டன் டிசீஸஸ் (Global Burden Diseases) தரவுகளின்படி, இந்தியாவில் 68.8 சதவிகித பக்கவாத நிகழ்வுகளும், 70.9 சதவிகித பக்கவாத மரணங்களும், 77.7 சதவிகித பக்கவாத இயலாமைகளும் பதிவாகி உள்ளன. இந்தப் புள்ளிவிவரங்கள் இந்தியாவுக்கு, குறிப்பாக மோசமான வள அமைப்புகளில் வாழும் மக்களுக்கு ஆபத்தானவை.
*இளையவர்கள் மற்றும் நடுத்தர வயதுடையவர்களுக்கு பக்கவாதத்திற்கான சுமை அதிகமுள்ளது. 20 வயதுக்கும் குறைவாக உள்ள 5.2 மில்லியன் நபர்கள் (31 சதவிகிதம்) பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

*பல இந்திய மருத்துவமனைகளில் பக்கவாத நோயாளிகளுக்கு விரைவாகவும் திறமையாகவும் சிகிச்சை அளிக்கத் தேவையான உள்கட்டமைப்பு இல்லை. போதுமான பக்கவாத சிகிச்சையும் வழங்கப்படுவதில்லை.
*பக்கவாதம் இறப்பை ஏற்படுத்தக் கூடியது. பக்கவாதம் ஏற்படுகையில் 4 - 5 மணி நேரத்திற்குள் சிகிச்சையளிக்கப்பட வேண்டும். இதுவே பக்கவாத சிகிச்சையளிப்பதற்கான `கோல்டன் விண்டோ’ (Golden Window) என்று அழைக்கப்படுகிறது. அதைத் தாண்டி அளிக்கப்படும் சிகிச்சைகளால் நியூரான்களில் உண்டாகும் பாதிப்பை மீட்க முடியாது.
*நரம்பியல் இதழில் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வு, மனச்சோர்வு பக்கவாதத்துடன் தொடர்புடையது என்பதைக் காட்டுகிறது. மனச்சோர்வின் அறிகுறிகள் உள்ளவர்களுக்குப் பக்கவாதம் ஏற்படும் அபாயமானது அதிகம். பக்கவாதத்திற்குப் பிறகான மீள்வை மனச்சோர்வு மோசமாக்கும்’’ என்று தெரிவித்துள்ளார்.