Published:Updated:

நடிகர் பாலாவை பாதித்த கல்லீரல் செயலிழப்பு... காரணங்கள், தீர்வுகள் - மருத்துவ விளக்கம்!

கல்லீரல்

``கல்லீரல், தனது பணியைச் செய்ய இயலாமல் முற்றிலும் செயலிழப்பதை 'தீவிர கல்லீரல் செயலிழப்பு' (Acute liver Failure) எனக் கூறுவோம். இந்த நிலை ஏற்படும்போது, கல்லீரலால் செய்யப்படும் பணி எதுவுமே உடலில் நடைபெறாமல் நின்றுபோகும்.

Published:Updated:

நடிகர் பாலாவை பாதித்த கல்லீரல் செயலிழப்பு... காரணங்கள், தீர்வுகள் - மருத்துவ விளக்கம்!

``கல்லீரல், தனது பணியைச் செய்ய இயலாமல் முற்றிலும் செயலிழப்பதை 'தீவிர கல்லீரல் செயலிழப்பு' (Acute liver Failure) எனக் கூறுவோம். இந்த நிலை ஏற்படும்போது, கல்லீரலால் செய்யப்படும் பணி எதுவுமே உடலில் நடைபெறாமல் நின்றுபோகும்.

கல்லீரல்

அஜீத் நடித்த `வீரம்' உள்பட பல படங்களில் நடித்தவர் நடிகர் பாலா. இவர், இயக்குநர் சிறுத்தை சிவாவின் தம்பி ஆவார். இவருக்கு கல்லீரலில் பிரச்னை ஏற்பட்டு, கடந்த மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மருத்துவர் ஜாய் வர்கீஸ்
மருத்துவர் ஜாய் வர்கீஸ்

கல்லீரல் செயலிழப்பு ஏற்பட என்ன காரணம்... கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைதான் இதற்கு தீர்வா... கல்லீரல் சிறப்பு மருத்துவர் ஜாய் வர்கீஸிடம் கேட்டோம்...

``கல்லீரல், தனது பணியைச் செய்ய இயலாமல் முற்றிலும் செயலிழப்பதை 'தீவிர கல்லீரல் செயலிழப்பு' (Acute liver Failure) எனக் கூறுவோம். இந்த நிலை ஏற்படும்போது, கல்லீரலால் செய்யப்படும் பணி எதுவுமே உடலில் நடைபெறாமல் நின்றுபோகும். உணவில் உள்ள சத்தை உட்கிரகிப்பதில் தொடங்கி, வளர்சிதை மாற்றத்துக்கு உதவியாக இருப்பது, உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றுவது என கல்லீரலுக்கு முக்கியப் பங்கு உண்டு. கல்லீரல் செயலிழக்கும் போது இந்தச் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டு, அது மற்ற உறுப்புகளையும் பாதிக்கத் தொடங்கும். கல்லீரல் செயலிழப்பால் மஞ்சள் காமாலை ஏற்படும். நச்சுகள் உடலை விட்டு வெளியேறாமல் உடலிலேயே இருப்பதால், மூளை பாதிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட நபர் மூர்ச்சையாவதற்கும் (Unconscious) கூட வாய்ப்புள்ளது.

இந்த நிலை ஏற்பட பல காரணங்கள் உள்ளன. ஹெபடைட்டிஸ் போன்ற சில வகை வைரஸால் ஏற்படும் தொற்று காரணமாக, கல்லீரல் செயலிழப்பு நிகழலாம். இது தவிர, சில மருந்துகளின் தாக்கத்தால் கல்லீரல் செயலிழக்க வாய்ப்புண்டு. மருந்துகளின் அலர்ஜி காரணமாகவோ, தேவைக்கு அதிகமாக மருந்துகளை உட்கொள்வதாலோகூட கல்லீரல் பாதிக்கப்படும். குறிப்பாக காசநோய், வலிப்பு போன்ற நோய்களுக்கு உட்கொள்ளும் மருந்துகள் இதுபோன்ற தாக்கத்தை உண்டாக்கலாம். எலிகளைக் கொல்வதற்காகப் பயன்படுத்தப்படும் மருந்துகளில், Zinc phosphide என்ற ஒருவகை கெமிக்கல் இருக்கும். தற்கொலை செய்வதற்காகவோ அல்லது தவறுதலாக எலி மருந்தை உட்கொள்ளும்போதோ, அது கல்லீரல் செயலிழப்புக்கு காரணமாக அமையலாம்.

மதுப் பழக்கம்
மதுப் பழக்கம்

தீவிர கல்லீரல் செயலிழப்பு, கொஞ்சம் கொஞ்சமாக நடக்கும் என்றில்லை. ஒரு வாரத்துக்குள்கூட இதன் வீரியம் அதிகரித்து, கல்லீரல் செயலிழக்கலாம். இதுபோன்ற சூழலில் மாத்திரை, மருந்துகளால் குணப்படுத்த முயல்வோம். இறுதியாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைதான் ஒரே தீர்வாக இருக்கும். ஆனால், பலர் கல்லீரல் மிகவும் செயலிழந்த பின் இறுதி நிலையில் தான் மருத்துவமனைக்கு வருவார்கள். அப்படிபட்ட சூழலில் மற்ற உறுப்புகளும் அதிகம் பாதிப்படைந்திருக்கும். இதனால் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகூட பயனற்றதாக மாறி, மரணம் நேரலாம். கல்லீரல் வீக்கமடைவதை Fatty liver எனக் கூறுவோம். இது உடல் பருமன், மதுப்பழக்கம் போன்ற காரணங்களால் நிகழலாம். கல்லீரல் வீக்கமடைவதால் அது கல்லீரலில் உள்ள செல்களின் செயல்பாடுகளை பாதிக்கத் தொடங்கும். தீவிர கல்லீரல் செயலிழப்புபோல் இல்லாமல் இது கொஞ்சம் கொஞ்சமாக கல்லீரலை பாதிக்கத் தொடங்கும்" என்றார்.

ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது எப்படி?

மேலும், கல்லீரலை ஆரோக்கியமாக வைத்து கொள்வதற்கான வழிமுறைகள் பற்றியும் அவர் கூறினார்... ``ஹெபடைட்டிஸ் போன்ற வைரஸ் தொற்றுகள் தண்ணீர் மூலம் ஏற்பட வாய்ப்புள்ளதால், எப்போதும் ஆரோக்கியமான நீரைப் பருக வேண்டும். வைரஸ் தொற்றைத் தடுப்பதற்கு, தற்போது சில தடுப்பூசிகள் உள்ளன. அவற்றையும் செலுத்திக் கொள்ளலாம்.

கல்லீரல்
கல்லீரல்

Fatty liver பிரச்னையைத் தவிர்க்க, தேவைக்கு அதிகமாக சாப்பிடுவதைக் குறைக்க வேண்டும். அதிகமான கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளை‌ உட்கொள்வதைத் தவிர்த்து புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து உள்ள உணவுகளைச் சாப்பிட வேண்டும். மதுப்பழக்கம் கூடாது. சில மருந்தின் தாக்கத்தால் கல்லீரல் செயலிழக்க வாய்ப்புள்ளதால் மருத்துவரின் முறையான பரிந்துரையில் மட்டுமே மருந்து உட்கொள்ள வேண்டும்" எனக் கூறினார்.

மகப்பேறு சமயத்தில் தாய்மார்களுக்கு ஏற்படக்கூடிய கல்லீரல் பாதிப்பு பற்றி மருத்துவர் ஜாய் வர்கீஸ் கூறும்போது, ``கருவுற்றிருக்கும் சமயத்தில் சில பெண்களுக்கு உடலில் அரிப்பது போல் இருந்து கொண்டே இருக்கும். இது சரும பிரச்னை காரணமாக இருக்கலாம். அப்படி சரும பிரச்னையாக இல்லாதபட்சத்தில், அவர்களின் கல்லீரல் மேல்பகுதியில் பித்தநீர, வழக்கத்தை விட அதிகமாக இருக்கலாம்.

கர்ப்பிணிகள்
கர்ப்பிணிகள்

இது சாதாரணமாக பத்துக்கும் குறைவான அளவில் இருக்கும். அதைவிட அதிகமாகும் போது அரிப்பை உண்டாக்கும். அதை சரி செய்வதற்கு. மாத்திரை உள்ளது. சில பெண்கள் இந்த அரிப்பை கண்டுகொள்ளாமல் விட்டு விடுவார்கள். அது பித்தநீர் சுரப்பை இன்னும் அதிகமாக்கும். அதன் அளவு அதிகரிக்க அதிகரிக்க, பிரசவ நேரத்தில் சிக்கல் அதிகமாவதோடு அது குழந்தைக்கும் ஆபத்தாக அமையலாம்" என்றார்.