Published:Updated:

`கோவிட் அபாயம் இன்னும் விலகவில்லை...' - எச்சரிக்கிறார் WHO முன்னாள் தலைமை விஞ்ஞானி சௌமியா சாமிநாதன்!

கோவிட் 19

``இன்னும் கொரோனாவில் இருந்து நாம் முழுமையாக மீண்டு வரவில்லை. கோவிட் நாளுக்குநாள் எப்படி உருமாறும் எனச் சொல்ல முடியாது. அதனுடைய தாக்கமும் எந்தளவுக்கு இருக்கும் எனத் தெரியாது..."

Published:Updated:

`கோவிட் அபாயம் இன்னும் விலகவில்லை...' - எச்சரிக்கிறார் WHO முன்னாள் தலைமை விஞ்ஞானி சௌமியா சாமிநாதன்!

``இன்னும் கொரோனாவில் இருந்து நாம் முழுமையாக மீண்டு வரவில்லை. கோவிட் நாளுக்குநாள் எப்படி உருமாறும் எனச் சொல்ல முடியாது. அதனுடைய தாக்கமும் எந்தளவுக்கு இருக்கும் எனத் தெரியாது..."

கோவிட் 19

சமீபத்தில், உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில், ``கொரோனா பெருந்தொற்றின் உலகளாவிய சுகாதார அவசரநிலை முடிவுக்கு வந்துவிட்டதாக மிகவும் நம்பிக்கையுடன் அறிவிக்கிறோம். தற்போது இந்த அறிவிப்பை வெளியிடுவதன் முக்கிய நோக்கம், இனி மக்கள் இதுகுறித்து கவலைப்படத் தேவையில்லை என்பதற்காக மட்டுமே” என்றார்.

டாக்டர் செளமியா சாமிநாதன்
டாக்டர் செளமியா சாமிநாதன்

இந்நிலையில், இனி ஏற்படவிருக்கும் கொரோனாவின் தாக்கம் மே மாதத்தின் இறுதியிலிருந்து ஜூன்வரை கூட நீடிக்கலாம் என, சமீபத்தில் பஞ்சாப் லூதியானா மருத்துவக்கல்லூரியில் நடந்த ஆய்வில் சொல்லப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் முன்னாள் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன், ``இன்னும் கொரோனாவில் இருந்து நாம் முழுமையாக மீண்டு வரவில்லை. கோவிட் நாளுக்கு நாள் எப்படி உருமாறும் எனச் சொல்ல முடியாது. அதனுடைய தாக்கமும் எந்தளவுக்கு இருக்கும் எனத் தெரியாது.

இனி ஏற்படும் கொரோனாவின் தாக்கத்தை, தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும். ஏற்கெனவே இருந்த வைரஸுக்கும், உருமாறிய வைரஸுக்கும் என்னென்ன வேறுபாடுகள் உள்ளன என ஆராய வேண்டும்.

இந்தியாவில், 20% பேர் மட்டுமே மூன்றாவது தவணை தடுப்பூசி (பூஸ்டர் ஊசி) போட்டுக் கொண்டுள்ளனர். ஏற்கெனவே போட்டுக் கொண்ட கொரோனா தடுப்பூசிகளின் நோய் எதிர்ப்பு சக்திதான் இப்போதும் நமது உடலில் இருக்கிறது. இதுவே இனி வரும் கோவிட் தொடர்பான தொற்றுகளை எதிர்கொள்ளப் போதுமானதாக இருக்குமா எனத் தெரியவில்லை.

மேலும் மக்களும் தற்போது முகக்கவசம் அணிவதோ, சமூக இடைவெளியைப் பின்பற்றுவதோ இல்லை. வெளிநாட்டு பயணங்களின் எண்ணிக்கையும் தற்போது அதிகரித்துள்ளது. எனவே மக்களிடையே இதுகுறித்து போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம்” என்று கூறியிருக்கிறார்.

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி

இது குறித்து தொற்றுநோய் பிரிவு மருத்துவர் ராம்கோபால் கிருஷ்ணனிடம் பேசினோம்... அவர், ``உலக சுகாதார அமைப்பு, கொரோனா நோய்த்தொற்றின் அவசரநிலையைத்தான் முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.

நோய்த்தொற்று இன்னும் முழுமையாகச் சரியாகவில்லை எனவும் கூறியுள்ளது. இன்னும் வைரஸ் ஏதோ ஒரு வகையில் சுற்றிக்கொண்டுதான் இருக்கிறது. நோய்த்தொற்று அந்தந்தக் காலத்தைப் பொறுத்தது. தற்போது கோவிட், ஒமிக்ரான் என தொற்று வகைகள் மாறிக் கொண்டிருக்கின்றன.

மக்களின் நோய் எதிர்ப்பு சக்திக்கேற்ப சிலர் அதிகம் பாதிக்கப்படலாம். முக்கியமாக வயதானவர்கள், புற்றுநோய் தொடர்பான பிரச்னை இருப்பவர்கள் சற்றே கவனமாக இருப்பது நல்லது. பிறருக்கு சளி, காய்ச்சல் போன்ற பிரச்னைகளைத் தவிர தீவிரமாக எந்த தொற்றுப் பிரச்சனையும் ஏற்பட வாய்ப்பில்லை. இருப்பினும் இதயம், நுரையீரல் தொடர்பான பிரச்னை இருப்பவர்கள், தொற்றால் பாதிக்கப்படலாம்.

Corona
Corona

மூன்றாவது தவணை தடுப்பூசி போடாதவர்களும், இனிவரும் காலங்களில் கவனமாக இருப்பது நல்லது. ஆனால் தற்போது பூஸ்டர் டோஸ் கிடைப்பதே அரிதாக உள்ளது. தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் எளிதில் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. இதனை சரி செய்ய, அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகம் கூட்டம் இருக்கும் பகுதிகளுக்குச் செல்பவர்கள், வயதானவர்கள் தவிர பிறர் முகக்கவசம் அணிவதோ, சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டிய அவசியமோ இல்லை. இத்தொற்று குறித்த விழிப்புணர்வு இருந்தால் போதும். தவிர இதில் பயப்படுவதற்கு எதுவும் இல்லை” என்றார்.