அஸ்ஸாம் கோலகட் மாவட்டத்தில் விஷக் காளானைச் சாப்பிட்டு மூன்று பேர் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அஸ்ஸாமின் கோலகட் மாவட்டம் மெரபானி பகுதியை (Merapani) சேர்ந்த ஐந்து குடும்பத்தினர் ஏப்ரல் 2-ம் தேதி காளானைச் சாப்பிட்டனர். இவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் இறந்துள்ளனர்.

விஷக்காளானைச் சாப்பிட்டதால் கடந்த வியாழக்கிழமை 24 வயதான தந்தை பிரபுல்லா பர்மன், அதற்கு மறுநாள் வெள்ளிக்கிழமை 23 வயதான தாய் தரலி பர்மன் மற்றும் இரண்டு வயதான குழந்தை ஹேமந்த பர்மன் அடுத்தடுத்து இறந்த சம்பவம் அங்குள்ள மக்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியது.
`விஷக்காளானை சமைத்து சாப்பிட்டதால் பாதிக்கப்பட்ட ஐந்து குடும்பங்களைச் சேர்ந்தவர்களை அங்குள்ளவர்கள் மீட்டு ஜோர்ஹாட் அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அதில் இந்த மூன்று பேரும் சிகிச்சைப் பலனின்றி இறந்தனர்’ என மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மெரபானி சமூக சுகாதார துணை கண்காணிப்பாளர் டாக்டர் சந்திரா ஷியாம் கூறுகையில், `விஷக் காளானைச் சாப்பிட்ட ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த 13 பேருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. நோய் வாய்ப்பட்டவர்களின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.

``புரதச் சத்து அதிகமாகக் கொண்ட காளான், உடம்புக்கு நல்லது என்பது பலருக்கும் தெரியும். ஆனால், அனைத்து வகையான காளானும் நல்ல காளான்கள் கிடையாது. வெள்ளை நிறத்தில், துர்நாற்றம் இல்லாமலும், அழுகாமலும் இருந்தால்தான் அது உணவுக்கு ஏற்ற காளான்.
மற்றபடி சிவப்பு, மஞ்சள், அடர் பழுப்பு, சாம்பல், ஆரஞ்சு என விதவிதமான நிறத்தில் இருக்கும் காளான்களுக்குள் உயிரை பறிக்கக்கூடிய ஆபத்து மறைந்திருக்கிறது. அதேபோன்று காளான் சாப்பிட்ட பிறகு தலைவலி, வாந்தி, சோர்வு, உடலியக்கம் சரிவர இயங்காமல் இருப்பது என்று அறிகுறிகள் இருந்தால், உடனடியாக மருத்துவமனையை அணுக வேண்டும்" என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.