அமெரிக்காவில் RSV என்ற சுவாச ஒத்திசை வைரஸ், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பரவி வருகிறது. இது சாதாரண சளி போன்று லேசான அறிகுறிகளுடன் தோன்றி, பின்நாள்களில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது.
மஞ்சள் மற்றும் சாம்பல் நிற சளியுடன் கூடிய இருமல், மூச்சுக்குழாய் அலற்சி, நுரையீரல் வீக்கம், சுவாசிப்பதில் சிரமம் ஆகியவை இந்த வைரஸ் தாக்கத்தின் அறிகுறிகளாக உள்ளன.

நோய்க் கட்டுபாடு மற்றும் தடுப்பு மையங்கள் வெளியிட்டுள்ள தரவுகளின்படி ஒவ்வோர் ஆண்டும் அமெரிக்காவில் 5 வயதுக்குட்பட்ட 100 முதல் 300 குழந்தைகள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கின்றனர். அதேபோல் ஆண்டுதோறும் 65 வயதுக்கு மேற்பட்ட 6000 முதல் 10,000 வரை பெரியவர்கள் உயிரிழக்கின்றனர். மேலும் 60,000 முதல் 1,20,000 வரை பொதுமக்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் உலகில் முதன்முறையாக, வயது முதிர்ந்தவர்களுக்கான ஆர்.எஸ்.வி தடுப்பூசிக்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. இங்கிலாந்தை தளமாக கொண்டு செயல்படும் GSK என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு ‘அரெக்ஸ்வி’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசி 82.6% செயல் திறன் கொண்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதன் பக்க விளைவுகள் லேசானது முதல் மிதமானது வரை இருக்கும், மேலும் இவை இரண்டு நாள்களில் சரியாகிவிடும் என கூறப்பட்டுள்ளது. ஊசி செலுத்திய இடத்தில் வலி மற்றும் உடல் சோர்வு ஆகியவை காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RSV தடுப்பூசிக்கு அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் ஒப்புதல் அளித்த பிறகு, இன்னும் சில மாதங்களில் இது 60 வயதுக்கும் மேற்பட்டவர்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளது. “உலகின் முதல் RSV தடுப்பூசிக்கு அளிக்கப்பட்டுள்ள ஒப்புதல் உயிருக்கு ஆபத்தான நோயை தடுப்பதற்காக ஒரு முக்கிய பொது சுகாதார சாதனையாக இருக்கும்” என உயிரியல் மதிப்பீடு மற்றும் ஆராய்ச்சி மையத்தை வழிநடத்தும் டாக்டர் பீட்டர் மார்க்ஸ் கூறியுள்ளார்.