சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

எல்லாம் பயமயம்!

அப்லுடோபோபியா
பிரீமியம் ஸ்டோரி
News
அப்லுடோபோபியா

வாய்விட்டுச் சிரிப்பது ஆரோக் கியத்திற்குச் சிறந்தது என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால், சிரிப்பதுதான் இவர்களின் ஆரோக்கியத்திற்குக் கேடாக இருக்கிறது என்று சொன்னால் சிரித்துவிடாதீர்கள்

மகிழ்ச்சி, கோபம், சோகம் போலவே பயமும் மனித உணர்வுகளுள் ஒன்றுதான். நம் ஒவ்வொருவருக்கும் ஒருவித பயம் இருக்கும். ஆனால், போபியா என்பது உச்சபட்ச பயத்தைக் குறிக்கிறது. இது பயமா, போபியாவா என்றே தெரியாமல் நிறைய இருக்கின்றன. அவற்றில் சில விநோதமான போபியாக்களைப் பார்க்கலாம்.

டீப்னோபோபியா

டீப்னோபோபியா
டீப்னோபோபியா

உணவுநேர உரையாடல் பயம். இதில் பாதிக்கப்பட்ட நபர் பொது இடத்தில் உணவருந்தும்போது அல்லது இரவு உணவின்போது உரையாடல்களில் பயத்தை உணர்கிறார். ‘சாப்பிடும்போது அமைதியாக இருப்பது செரிமானத்திற்கு நன்மை பயக்கும்’ என்றெல்லாம் பாசிட்டிவ் அறிவுரைகளை வழங்கிக் கொண்டிருக்க மாட்டார். மாறாக, அதிகம் பதறி பார்ட்டியையும் விருந்தாளிகளையும் சங்கடத்துக்கு உள்ளாக்கும் வகையில் சூழலை மாற்றிவிடுவாராம்!

ஜெலியோபோபியா

ஜெலியோபோபியா
ஜெலியோபோபியா

சிரிப்பதால் பயம். வாய்விட்டுச் சிரிப்பது ஆரோக் கியத்திற்குச் சிறந்தது என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால், சிரிப்பதுதான் இவர்களின் ஆரோக்கியத்திற்குக் கேடாக இருக்கிறது என்று சொன்னால் சிரித்துவிடாதீர்கள். சிரிப்பது அல்லது சிரிப்பவர்களைச் சுற்றி இருப்பது, அவர்களுக்குப் பெரும் பயத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்துமாம். அதீதக் கவலை களைச் சமாளிக்க முடியாததால் இவ்வாறு நேர்வதாகச் சொல்கிறார்கள்.

ஆப்டோபோபியா

ஆப்டோபோபியா
ஆப்டோபோபியா

கண்களைத் திறப்பதில் பயம். ஒருவர் இறப்பதைப் பார்ப்பது போன்ற மோசமான நிகழ்வுகளால் இது ஏற்படலாம். கண்களை மூடித் திறப்பது பற்றி என்றாவது நாம் யோசித்திருப்போமா? ஆனால், ஆப்டோபோபியா உள்ளவர்கள் இந்த எளிய செயலைச் செய்ய மிகவும் பயப்படுகிறார்கள். கண்களைத் திறந்தால் ஏதாவது அபாயகரமான ஒன்று கண்முன் இருக்கும் என்கிறார்கள். மிக இயல்பாக கண்களைத் திறந்து உங்களால் இதைப் படிக்க முடிகிறது என்றால், நீங்கள் பாதிக்கப்படவில்லை.

சின்ஜெனெசோபோபியா

சின்ஜெனெசோபோபியா
சின்ஜெனெசோபோபியா


உறவினர்கள்மீதான பயம். இதில் பாதிக்கப்பட்ட ஒருவர், உறவினர்களைப் பார்த்தாலோ, அவர்களைப் பற்றி நினைத்தாலோ அதிக அளவு கவலையை அனுபவிக்கிறார். இந்த பயம் உள்ளவர்கள் உறவினர்களையோ அல்லது மக்கள் கூட்டத்தையோ சந்திக்காமலிருக்க ஏதாவது காரணங்களைக் கூறித் தப்பிக் கிறார்கள். இவர்கள் வலுவான குடும்ப உறவுகளை உருவாக்கி னால், இவர்களின் ஆயுட்காலம் அதிகரிக்க அது உதவும் என்று ஆராய்ச்சி சொல்கிறது.

நியோபோபியா

நியோபோபியா
நியோபோபியா

புதிய விஷயங்கள் குறித்த பயம். இந்த பயம் உள்ளவர்கள் மாற்றத்தைக் கொஞ்சமும் விரும்பாதவர்கள். புதுமையான விஷயங்கள் தங்களுடைய மகிழ்ச்சியான வாழ்க்கையை பாதிக்கும் என நம்பி எல்லா வற்றையும் அனுபவிக்காமல் இழக்கிறார்கள். பழகிய பழைய விஷயங்களை வைத்தே நாள்களை ஓட்டிவிடுவார்களாம். உணவு, உடை, டெக்னாலஜி என எதிலுமே மாற்றத்தை விரும்பாமல் மன அழுத்தத்திலேயே வாழ்ந்து ஆயுளையும் குறைத்துக் கொள்கிறார்கள்!

அப்லுடோபோபியா

அப்லுடோபோபியா
அப்லுடோபோபியா

கழுவுதல், குளித்தல் பயம். இந்த போபியா கொண்டவர்கள் குளிப்பதற்கு, ஏன், கை கால் முகம் கழுவுவதற்கே பயப்படுவார்களாம்! மருத்துவ மற்றும் சமூக காரணங்களுக்காக வாழ்க்கையின் முக்கியப் பகுதியாகவும் தினசரி வழக்கமாகவும் குளியல் இருக்கிறது. ஆனால், இவர்களுக்கு இந்தச் செயல் திகிலூட்டும். மரபியல்ரீதியாக இந்த பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள். அசுத்தமே சுத்தம் என்பது இவர்களின் பய வாக்கு.