மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என்ன நோய், எந்த டாக்டர்? 11- தொற்று முதல் செயலிழப்பு வரை, கல்லீரல் பாதிப்புகள்,காரணங்கள்,தீர்வுகள்!

கல்லீரல்
பிரீமியம் ஸ்டோரி
News
கல்லீரல்

உங்களுக்காக ஒரு கிளினிக் கைடு

மனித உடலின் மிகப்பெரிய உள்ளுறுப்பு கல்லீரல். வயிற்றின் வலதுபுறத்தில் அமைந்துள்ள இது, கருஞ்சிவப்பு நிறத்தில், ரப்பர் தன்மையோடு இருக்கும் கல்லீரலை நம்மால் தொட்டு உணர முடியாது. செரிமானத்தில் ஆரம்பித்து, ரத்த உறைவை முறைப்படுத்துவது, தொற்றுகளைத் தடுப்பது என கல்லீரலுக்குப் பல வேலைகள். கல்லீரலை பாதிக்கும் பிரச்னைகள், தீர்வுகள், கல்லீரல் ஆரோக்கியம் காக்கும் வழிகள் என அனைத்தையும் விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த கல்லீரல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் காவ்யா டெண்டுகுரி.

கல்லீரலுக்கு இத்தனை வேலைகளா?

மனித உடலில் மீண்டும் வளரும் தன்மைகொண்ட ஒரே உறுப்பு கல்லீரல். ஹெப டைட்டிஸ் பி, சி தொற்றுகளாலோ, உடல் பருமனாலோ, குடிப்பழக்கத்தினாலோ கல்லீரல் செல்கள் மடிந்து போகலாம். ஆனாலும் கல்லீரல் மீண்டும் வளரும். அதனால்தான் கல்லீரலை பாதிக்கும் பெரும்பான்மை பிரச்னைகளை, ஆரம்பநிலையில் கண்டுபிடிக்கும் பட்சத்தில் சரிப்படுத்திவிட முடிகிறது.

கல்லீரலில்தான் செரிமானத்துக்கான திரவம் சுரக்கிறது. அந்தத் திரவம்தான் உணவை செரிக்கச் செய்கிறது. நம் உடலுக்குத் தேவையான அத்தனை வைட்டமின்களும் தாதுக்களும் கல்லீரலில்தான் உற்பத்தியாகின்றன.

உடலில் எங்கோ அடிபடுகிறது, ரத்தம் வருகிறது என வைத்துக்கொள்வோம்... அந்த ரத்தம் சில நொடிகளில் நின்றுவிடும். ரத்தத்தை உறையச் செய்கிற கல்லீரலின் தன்மையால்தான் அது நிகழ்கிறது. நம் உடலுக்குத் தேவையில்லாத நச்சுகளை வெளியேற்றும் `டீடாக்ஸிஃபி கேஷன்' செயலானது நம் கல்லீரலுக்குள் தான் நிகழ்கிறது.

கல்லீரல்
கல்லீரல்

கல்லீரல் நோய்கள்... அறிகுறிகள்

கல்லீரல் பாதிப்பு மிதமானதாகவோ, தீவிரமான தாகவோ, நாள்பட்டதாகவோ இருக்கலாம். அதுநாள் வரை இல்லாமல் திடீரென வரும் பாதிப்பு தீவிரமானது என்றும், பல வருடங்களாக இருக்கும் பிரச்னைதான், ஆனால் இப்போதுதான் அறிகுறிகள் தெரிகின்றன என்றால் அது நாள்பட்ட பாதிப்பு என்றும் புரிந்துகொள்ளலாம்.

ஸ்கேன் பரிசோதனையில் ‘ஃபேட்டி லிவர்’ பாதிப்பு தெரியவரும். அதாவது கல்லீரலின் செல்களுக்குள் கொழுப்பு படிந்திருப்பது. பொதுவாக நம் கல்லீரலில் 10 சதவிகிதத்துக்கும் குறைவாக கொழுப்பு இருக்கும். அந்த அளவைத் தாண்டும்போது ‘ஃபேட்டி லிவர்’ உருவாகிவிடும். இந்த பாதிப்பில் 80 முதல் 85 சதவிகிதம் பேருக்கு அறிகுறியே இருக்காது. அதனால்தான் ஆறு மாதங்களுக்கொரு முறை கல்லீரல் செயல்பாட்டைத் தெரிந்துகொள்ளும் ஸ்கேன் செய்து பார்க்க வேண்டும். கல்லீரல் நிரந்தரமாகச் செயலிழக்கும் நிலையில்கூட சிலருக்கு அறிகுறிகள் தெரியாது. வெறும் களைப்பை மட்டும் உணர்வார்கள். வேலைப்பளு, சாப்பிடாதது என அதற்கு அவர்களாக காரணங்களைக் கற்பனை செய்துகொண்டு கடந்துவிடுவார்கள்.

பெண்களுக்கும் ஃபேட்டி லிவர் பாதிப்பு ஏன்?

கடந்த சில வருடங்களில் இந்தப் பிரச்னையை அதிகம் பார்க்கிறோம். வாழ்வியல் பாதிப்பாக மாறிவரும் இதற்கு முக்கிய காரணம், உடல் இயக்கமில்லாதது. இது ஆண்களுக்குத்தான் வரும் என்றில்லை. தைராய்டு பாதிப்புள்ள ஆண், பெண்களுக்கு இது அதிகம் வரலாம். தவிர கொலஸ்ட்ரால் அதிகமிருந்தாலோ, ஸ்லீப் ஆப்னியா பாதிப்பு இருந்தாலோ, பிசிஓஎஸ் பாதிப்பிருந்தாலோ, பருமனாக இருந்தாலோ ஃபேட்டி லிவர் பாதிப்புக்கு உள்ளாகலாம். உட்கார்ந்தபடியே பல மணி நேரம் வேலைபார்ப்பது, உடல் இயக்கமில்லாத வாழ்க்கை என இந்தப் பிரச்னையைத் தூண்டும் காரணிகள் பல.

 காவ்யா டெண்டுகுரி
காவ்யா டெண்டுகுரி

கல்லீரலை பாதிக்குமா பருமன்?

உடல் பருமன் பிரச்னை உள்ளவர்களுக்கு உடலிலுள்ள கொழுப் பானது கல்லீரல் செல்களில் படியும். சில வருடங்களுக்கு முன்பு வரை ஃபேட்டி லிவர் பிரச்னைக்கு சிகிச்சையே இல்லை. உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, வாழ்வியல்முறை மாற்றங்களைத்தான் மருத்துவர்கள் பரிந்துரைத்தோம். இன்று நிலைமையே வேறு. ஃபேட்டி லிவர் பிரச்னைக்கு நல்ல மருந்துகள் உள்ளன. எடையைக் குறைத்த பிறகு இந்த மருந்துகளை ஆரம்பித்தால் பிரச்னை ரிவர்ஸ் ஆகும். ஃபேட்டி லிவர் பாதிப்பில் கிரேடு 1, 2, 3, 4 என நான்கு நிலைகள் உள்ளன. இதை யடுத்து அது ‘ஃபைப்ரோசிஸ்’ என்ற பிரச்னையாக மாறும். அதாவது கல்லீரலின் உள்ளே தழும்பாக மாறும். இதற்கும் அடுத்த நிலை ‘சிரோசிஸ்’. அதாவது கல்லீரல் நிரந்தரமாகச் செயலிழக்கும் நிலை. இந்தக் கடைசிகட்டத்தை எட்டும் வரை கல்லீரலை பழையநிலைக்குத் திரும்பச்செய்ய இன்று வாய்ப்புகள் அதிகம். அதனால்தான் ஃபேட்டி லிவர் பாதிப்பை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை யைத் தொடங்க வலியுறுத்துகிறோம். பிரச்னைக்குக் காரணமான பருமனைக் குறைக்க வேண்டும். சிலருக்கு மருத்துவக் காரணங்களாலும் பருமன் ஏற்பட்டிருக்கலாம். தைராய்டு, பிசிஓஎஸ் என அது எந்த பாதிப்பாக இருந்தாலும் அதைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.

ஆரோக்கியமான நபருக்கும் கல்லீரல் பரிசோதனை அவசியமா? கல்லீரலை ஆரோக்கியமாக

வைத்துக்கொள்வது எப்படி?

- அடுத்த இதழில்...