மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என்ன நோய், எந்த டாக்டர்? 14 - ஒவ்வொரு வீட்டிலும் வைத்திருக்க வேண்டிய அவசர சிகிச்சை மருந்துகள்!

 உங்களுக்காக ஒரு கிளினிக் கைடு
பிரீமியம் ஸ்டோரி
News
உங்களுக்காக ஒரு கிளினிக் கைடு

உங்களுக்காக ஒரு கிளினிக் கைடு

- சென்ற இதழ் தொடர்ச்சி...

நவீன மருத்துவத் துறையில் அவசர சிகிச்சைப் பிரிவு என்ற ஒன்று கடந்த சில வருடங்களாக கவனம் பெற்றிருக்கிறது.இந்த நிலையில் அவசர சிகிச்சை மருத்துவம் என்பது என்ன... யாருக்கு, எந்தச் சூழலில் அது அவசியம்... அது உயிரைக் காப்பாற்ற உதவுமா என்று இந்த இதழிலும் விளக்கமாகப் பேசுகிறார் சென்னையைச் சேர்ந்த அவசர சிகிச்சை மருத்துவர் எஸ்.ஜெயராமன்.

காதில் ரத்தம்.... அவசர சிகிச்சையில் வருமா?

தலையில் அடிபட்டதன் அறிகுறியாக காதில், மூக்கில் ரத்தம் வரலாம். மூளையிலுள்ள திரவத்துடன் ரத்தமும் கலந்து காதில் ஒருவித திரவக்கசிவு வரலாம். கண்களைச் சுற்றிலும் கறுப்பாக மாறலாம். காதின் பின்பக்கம் ரத்தக்கட்டு இருக்கலாம். இவையெல்லாம் தலையில் அடிபட்டிருக்கலாம் என்பதற்கான அறிகுறிகளாக இருந்தாலும் சிடி ஸ்கேன் மூலம்தான் அதை உறுதிசெய்ய வேண்டும். இதற்கு அவசர சிகிச்சை மருத்துவரை நாடு வதே பாதுகாப்பானது.

 உங்களுக்காக ஒரு கிளினிக் கைடு
உங்களுக்காக ஒரு கிளினிக் கைடு

எத்தனை மணி நேரத்துக்குள் உயிரை காப்பாற்றலாம்?

‘அஞ்சு நிமிஷம் முன்னாடி கொண்டு வந்திருந்தா உயிரை காப்பாத்தியிருக்கலாம்...’ என கைவிரித்தபடி டாக்டர்கள் பேசும் இந்த வசனத்தை பல சினிமாக்களில் பார்த்திருப் போம்.

ஹார்ட் அட்டாக் வந்தவர்களுக்கு எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக சிகிச்சை தொடங்கப்பட வேண்டும். பக்கவாதம் வந்தவர்களை நான்கரை மணி நேரத்துக்குள் மருத்துவரிடம் அழைத்துவந்தால் கை, கால் அசைவுகளை திரும்பப்பெற வைக்கும் வாய்ப்புகள் அதிகரிக்கும். இறந்தநிலையில் சிலரை கொண்டு வருவார்கள்... அவர்களுக்குத்தான் ஐந்து, பத்து நிமிடங்களுக்கு முன்பே கூட்டி வந்திருந்தால் பிழைக்கவைத்திருக்க முடியும் என்று சொல்லப்படுமே தவிர, அந்த வசனத்தை வேறு மாதிரி புரிந்துகொள்ள வேண்டியதில்லை.

அவசர சிகிச்சை மருத்துவரின் பங்கு என்ன?

அவசர சிகிச்சை மருத்துவப் பிரிவு என்பது 24 மணி நேரமும் இயங்கக்கூடியது. ஒரு மருத்துவமனையில் 24 மணி நேரமும் இதயநோய் மருத்துவரும், நரம்பியல் மருத்துவரும், மற்ற சிறப்பு மருத் துவர்களும் இருக்க வாய்ப்பில்லை. அப்படிப்பட்ட சூழலில்தான் அவசர சிகிச்சை மருத்துவரின் பங்கு அவசிய மாகிறது. அவசர சிகிச்சைக்கு அழைத்து வரப்படும் நபரை சோதித்து, தேவைப்படுகிற டெஸ்ட்டுகளை எடுத்து, தேவைப்பட்டால் துறைசார் மருத்துவரிடம் பேசி, உடனடியாக தேவைப்படுகிற சிகிச்சை களைக் கொடுப்பார் அவசர சிகிச்சை மருத்துவர். அதன் பிறகு அந்தந்தத் துறை மருத்துவருக்குத் தகவல் சொல்லப்படும். அறுவை சிகிச்சையைத் தவிர மற்ற அனைத்து சிகிச்சைகளையும் அவசர சிகிச்சை மருத்து வரால் செய்துவிட முடியும்.

அவசர சிகிச்சை தேவைப்படுகிற தருணங்களில்....

சாலை விபத்தில் ஒருவருக்கு அடிபடுகிறது என வைத்துக்கொள்வோம்... அவரை சுற்றி கூட்டம் சேரக்கூடாது. காற்றோட்டம் அவசியம். விபத்துக்குள்ளான நபரைத் தூக்குவதில் கவனம் வேண்டும். இதில் சின்ன தவறு நிகழ்ந்தால்கூட அந்த நபருக்கு கை, கால்கள் இயங்காமல் போகக்கூடும். சுய நினைவின்றி இருப்போருக்கு வாயில் தண்ணீர் விடக்கூடாது. அது நேரடியாக அவரது நுரையீரலுக்குப் போய் ஆபத்தாக முடியலாம். எனவே ஆம்புலன்ஸுக்கு தகவல் சொல்வது தான் சரியானது.

 உங்களுக்காக ஒரு கிளினிக் கைடு
உங்களுக்காக ஒரு கிளினிக் கைடு

வீட்டில் ஒருவருக்கு நெஞ்சுவலி இருக்கிறது, வலி கை, கால்களுக்குப் பரவுகிறது, கூடவே வியர்வை, வாந்தி இருக்கிறது என்றால் தாமதிக்காமல் ஆம்புலன்ஸை அழைக்க வேண்டும். சுய மருத்துவம் வேண்டாம்.

அடிபட்டு ரத்தம் வந்தால் சுத்தமான துணியால் அடிபட்ட பகுதியை இறுக்கமாகக் கட்ட வேண்டும். மஞ்சள், காபித்தூள் போன்றவற்றை எல்லாம் வைக்கக் கூடாது. மயக்கமாகி விழுவோருக்கு வாயில் தண்ணீர், ஜூஸ் என எதையும் ஊற்றக் கூடாது.

சுவாசக்குழாயில் உணவு மாட்டிக் கொண்டவர்களை, முடிந்தால் இருமச் சொல்லலாம். அதுவே சிக்கிய உணவை வெளியே கொண்டு வந்துவிடும். மற்றபடி அவரை தட்டுவது, தலைகீழாகப் புரட்டுவ தெல்லாம் கூடாது. அவரால் இரும முடியாத சூழலில் ஆம்புலன்ஸை அழைக்க வேண்டும்.

பேசிக் லைஃப் சப்போர்ட் அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டும். விபத்தில் அடிபடு பவரை அணுகுவது முதல் சாப்பிடும்போது தொண்டையில் ஏதேனும் சிக்கி சிரமப்படுபவர் வரை ஒவ்வொருவரையும் எப்படி கையாள வேண்டும் என பேசிக் லைஃப் சப்போர்ட் பயிற்சியில் கற்றுத்தரப்படும்.

 எஸ்.ஜெயராமன்
எஸ்.ஜெயராமன்

மனநல பாதிப்பும் அவசர சிகிச்சையில் வருமா?

சாதாரணமாகவே மனநல பிரச்னைகளுக்கு நம் நாட்டில் பெரிய முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. இளம் வயதினர் பலரும் இரவில் போதுமான அளவு சரியான நேரத்துக்குத் தூங்குவதில்லை. இரண்டு நாள்கள் தூங்காவிட்டாலே யோசிக்கும் திறன் பாதிக்கப்படும். பதற்றம் ஏற்படும். தொடர்ச்சி யாகத் தூக்கம் தொலைத்தால் மனநலம் பாதிக்கப்படலாம்.

‘வீட்ல கோபப்படறான், கைல கிடைக்கிறதை தூக்கிப்போட்டு உடைக்கிறான், சட்டையைக் கிழிச்சுக்கறான்’ என்றெல்லாம் சொல்லிக்கொண்டு பிள்ளைகளை அழைத்து வரும் பெற்றோர்களைப் பார்க்கிறோம். சிலவகை மனநல பாதிப்புகளும் அவசர சிகிச்சையாகக் கருதி அணுகப்பட வேண்டும். இதுபோன்ற பிரச்னைகளோடு வருபவர் களுக்கு மூச்சுப் பயிற்சி, ரிலாக்சேஷன் டெக் னிக்ஸ் எல்லாம் கற்றுத்தரப்படும். குழந்தை களிடம் காணப்படும் ‘அட்டென்ஷன் சீக்கிங் பிஹேவியர், மன அழுத்தம் போன்றவைகூட அவசர சிகிச்சையாக அணுகப்பட வேண்டும்.

ஒவ்வொரு வீட்டிலும் வைத்திருக்க வேண்டிய அவசர சிகிச்சை மருந்துகள்...

பெயின் கில்லர், ஆண்டாசிட் ஜெல், பேண்டேஜ், ஆயின்மென்ட் போன்றவற்றை வைத்திருக்கலாம். எப்போதாவது வரும் வலிக்கு ஒரு பெயின் கில்லர் போடுவதில் தவறில்லை. அதை வழக்கமாகச் செய்பவர் களுக்கு இந்த அட்வைஸ் பொருந்தாது.

மற்றபடி மருத்துவரின் அட்வைஸ் இல்லாமல் எந்த மருந்தையும் வீட்டில் வாங்கிப் பயன்படுத்தவே கூடாது. ஆஸ்பிரின் போன்ற மாத்திரைகளும் இதில் அடக்கம். ஏற்கெனவே இதயநோய் பாதிப்பு உள்ளவராக இருந்தால் அவர் மருத்துவர் சொன்னதன் பேரில் ஆஸ்பிரின் போன்ற மாத்திரைகளை வைத்திருக்கலாம். நெஞ்சுவலிக்கான காரணமே தெரியாமல் இந்த மாத்திரையை வாங்கிப் பயன்படுத்தக் கூடாது. குறிப்பாக குழந்தைகளின் கைகளுக்கு இதுபோன்ற மாத்திரைகள் கிட்டவே கூடாது.

அடுத்த இதழில் காது, மூக்கு, தொண்டை மருத்துவம்...

- அலெர்ட் ஆவோம்...